Skip to main content

“என்ன அவமானம் இது..!” மோடியை விளாசும் ஜோதிமணி எம்.பி.

Published on 27/01/2021 | Edited on 27/01/2021

 

MP jothimani about farmers tractor rally issue


மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் பல நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் 11 முறை பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அவற்றில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. விவசாயிகள், குடியரசு தினமான, ஜன.26 அன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவோம் என அறிவித்திருந்தார்கள். அதன்படி நேற்று டிராக்டர் பேரணி நடைபெற்றது. அதில் விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பின் அது கலவரமாக மாறியது.

 

இதில் காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி, தடியடி நடத்தினர். இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி நம்மிடம் பேசியது; “மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானது. இது ஒரு கருப்புச் சட்டம். விவசாயிகளுடன் கலந்துரையாடாமல், அந்நிய முதலாளிகளுக்கும் கார்ப்ரேட்டுகளின் நலனுக்காகவும் கொண்டுவரப்பட்ட சட்டம். இது விவசாயிகளை மட்டுமின்றி பொதுமக்களையும் பாதிக்கும். காரணம், அத்தியாவசியப் பொருள்கள் பாதுகாப்பு சட்டத்தை தற்போது திருத்தியிருக்கிறார்கள். 

 

இச்சட்டத் திருத்தத்திற்கு முன் அத்தியாவசியப் பொருள்களான அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருள்களை யாரும் சேமித்து வைத்துக்கொள்ள முடியாது. உற்பத்தி செய்யும் விவசாயிகள் மட்டுமே சேமித்து வைக்கமுடியும். இவர்களைத் தவிர வேறு யாரேனும் சேமித்து வைத்தால் அது பதுக்கல் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம். ஆனால், தற்போது இந்த அரசு பதுக்கலை சட்டப்பூர்வமாக்குகிறது. இதனால், பெரும் முதலாளிகள், கார்ப்ரேட் நிறுவனங்கள் எவ்வளவு வேண்டுமாயினும் இப்பொருட்களைச் சேமித்து வைத்து செயற்கையான பஞ்சத்தை உருவாக்க முடியும். இதனால் விலைவாசி உயரும், பொதுமக்கள் கஷ்டப்படுவார்கள். இரண்டாவது, இதில் ஈடுபடும் ஒப்பந்த நிறுவனங்கள் அவர்களாக சட்டத் திட்டங்களை எழுதுவார்கள். அதில் இருக்கும் சட்டத் திட்டங்களை நமது விவசாயிகளால் படித்துப் புரிந்துகொள்ள முடியாது. மேலும் அதில், தரம், தகுதி என ஏராளமான நுணுக்கமான வார்த்தைகள் இருக்கிறது. இதில் எதை ஒன்றையும் காட்டி அவர்களால் விளைப்பொருட்களை நிராகரிக்க முடியும். 

 

அவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டதால் வேறு எதுவும் செய்யவும் முடியாது. இதுபோன்ற தருணங்களில் நாம் நீதிமன்றம்தான் செல்ல முடியும். யாருக்குப் பிரச்சனை என்றாலும் நீதிமன்றம் செல்ல அரசியல் சாசன சட்டத்தில் இடம் இருக்கிறது. ஆனால், இந்தச் சட்டம் என்ன சொல்கிறது என்றால், முழுக்க முழுக்க விவசாயிகள் நீதிமன்றம் செல்ல தடை செய்கிறது. விவசாயிகள் துணை வட்டாட்சியரிடம், மாவட்ட ஆட்சித் தலைவரிடம்தான் போக வேண்டும், வேறு யாரிடமும் போக முடியாது எனத் தெளிவாக சொல்லுகிறது. இந்தச் சட்டம். விவசாயிகளின் எல்லா விதமான உரிமைகளையும் பறிக்கிறது. ஒரு சாதி சான்றிதழ் வாங்க வேண்டும் என்றாலுமே நூறு முறை அரசு அலுவலகங்களின் படி ஏறி இறங்க வேண்டியுள்ளது. இவர்கள்தான் விவசாயிகளுக்கு நியாயம் சொல்லப் போகிறார்களா. விவசாயிகள் ஒருமுறை இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டார்கள் என்றால் அவர்களுக்கு சட்டரீதியான தீர்வு என்பதே கிடையாது.

 

மூன்றாவது இதில் குறைந்தபட்ச ஆதரவு விலை எனும் வார்த்தையே இல்லை. அதனை இதுவரை அரசு திருத்தச் சட்டத்தில் போட மறுக்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை இருப்பதால்தான், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்து இலவச அரிசி போன்றவை, அன்று காங்கிரஸ் அரசு கொண்டுவந்த உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளுக்கு வருகிறது. அரசாங்கம் கொள்முதலையே செய்யவில்லை என்றால் எப்படி பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு வரும். அப்போது ரேஷன் கடைகளையே ஒழிக்க முயற்சிக்கிறார்கள். இங்கு போராடும் விவசாயிகள் தங்களுக்காக மட்டுமின்றி தேசத்திற்காகவும் போராடுகிறார்கள். ரொம்ப நியாயமான வழியில் பல நாட்களாக போராடிவிட்டனர். இப்பவும் அவர்கள் நியாயமான வழியில்தான் போராடுகிறார்கள். அரசாங்கம் அவர்கள் பேச்சைக் கேட்க மறுக்கிறது. இது ஒரு கொடுங்கோன்மை அரசாக இருக்கிறது. 

 

செங்கோட்டையில் கொடியேற்றியது பா.ஜ.க.வின் நபர் என செய்தியும், அந்த நபரின் படமும் வந்திருக்கிறது. பா.ஜ.க.வின் குண்டர்களை ஏவிவிட்டு போராட்டத்தில் கலகமும் குழப்பும் விளைவிக்கிறார்கள். வன்முறை எப்போதும் தீர்வாகாது. வன்முறையில் எந்தத் தரப்பினர் காயம்பட்டாலும், அது ராகுல்காந்தி சொல்வதுபோல் இழப்பு தேசத்திற்குத்தான். இதுவரை விவசாயிகள் அமைதியாகத்தான் போராடியிருக்கிறார்கள். டெல்லியில் பா.ஜ.க.தான் வன்முறையை கட்டவிழ்த்துள்ளது. 

 

இந்தியாவில் இருக்கும் விவசாயிகளுக்கு அறிவில்லை, முட்டாள்தனமாக இருக்கிறார்கள், காங்கிரஸ் தூண்டிவிட்டுத்தான் அவர்கள் கேட்பார்கள் என பா.ஜ.க. சொல்ல வருகிறதா அல்லது. அறிவெல்லாம் விவசாயிகளுக்கு கிடையாது, பா.ஜ.க.தான் மொத்த குத்தகைக்கு எடுத்திருக்கிறது என சொல்ல வருகிறார்களா. இதுவெல்லாம் அநாகரிகமான குற்றச்சாட்டு. விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி களத்தில் நிற்கும். கரூரில் விவசாயிகளுக்காக ஒரு கூட்டத்தை நாங்கள் நடத்தினோம் அதில் ராகுல்காந்தி கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்தில் விவசாயிகள் இந்த சட்டத்திற்கு எதிராக பொங்கியெழுந்துவிட்டனர், குறிப்பாக பெண் விவசாயிகள். ஒரு நாடே, விவசாயிகள் எல்லாம் ஒரு சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும்போது அரசியல் கட்சிகள் எதற்கு இருக்கிறது. அப்படியே விவசாயிகளைக் கைகழுவி விடமுடியுமா? காங்கிரஸ் கட்சியின் கடமை விவசாயிகள் பக்கம் நிற்கவேண்டியது. அதனை நாங்கள் செய்கிறோம். ஆனால், வன்முறையை பா.ஜ.க.தான் தூண்டுகிறது. 
 


இன்று விவசாயிகள் எல்லை மீறியாதாக சொல்கிறார்கள். இதற்கு முன்னதாக விவசாயிகள் அமைதியாக ரோட்டில் உட்கார்ந்திருந்தபோது, அவர்களை காலிஸ்தானிகள், தீவிரவாதிகள் என இந்த அரசாங்கம் சொல்லவில்லையா?
 


இந்திய மண்ணில் கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக சீன ராணுவத்தினர் சீனர்களைக் கொண்டுவந்து வீடு கட்டி குடியமர்த்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக சீனா எனும் வார்த்தையை உச்சரிக்க பயப்படும், அவர்கள் மீது தாக்குதலை தொடுக்க முடியாத  அளவிற்கு கோழைத்தனமான பிரதமர். சொந்த நாட்டின் மக்களுக்கு எதிராக இவர்கள் களத்தில் நிற்கிறார்கள். என்ன அவமானம் இது. ஆக அரசு உடனடியாக இந்தக் கருப்புச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் குரலாக ஒலிக்கும்” என்றார் ஜோதிமணி.   

 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.