நிராகரித்த கள்ளக்காதலனை பழிவாங்க காதலனின் குழந்தையையே கடத்தி படுகொலை செய்த பூவரசி,… கணவனிடம் கள்ளக்காதலை போட்டுக்கொடுத்ததால் கள்ளக்காதலனை வைத்தே தனது குழந்தையை படுகொலைசெய்து பழிதீர்த்த எம்.ஜி.ஆர். நகர் மஞ்சுளா… ஆகியோரின் கொடூரங்களுக்குப் பிறகு ஒட்டுமொத்த தமிழகத்தையும் விவாதமாக்கியிருக்கிறது கள்ளக்காதலனுக்காக இரண்டு குழந்தைகளை பாலில் விஷம் கொடுத்து படுகொலை செய்த குன்றத்தூர் அபிராமியின் கொடூர படுகொலை சம்பவம்.
குழந்தைகள் பாதுகாப்பில் ஈடுபடும் ஹோப் இண்டியா அமைப்பின் நிறுவனத்தலைவர் சத்யபாபு நம்மிடம், “""திருமணமானாலும்கூட வேறொரு துணையை வைத்துக்கொள்வதற்கான உரிமை இருந்தாலும் அதைவிட மிக மிக முக்கியமானது, குழந்தைகளுக்கான வாழ்வுரிமை என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சிறுமி யாசினியை கொடூரமான முறையில் படுகொலை செய்த யஷ்வந்தை யாருமே நியாயப்படுத்தவில்லை. அயனாவரம் சிறுமி பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டாள் என்ற புகாரில்கூட அனைவரும் குற்றம்சாட்டப்பட்ட வர்களுக்கு எதிராகத்தான் இருந்தார்கள். ஆனால், பெண்கள் கொலை செய்வதை மட்டும் பெண்ணுரிமை பாயிண்ட் ஆஃப் வியூவில் நியாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. கொலை… ஆண் செய்தாலும் பெண் செய்தாலும் குற்றம் குற்றம்தான்.
கள்ளக்காதல்களால் பெரும்பாலும் கொலை செய்யப்படுவதும்; பாதிக்கப்படுவதும் குழந்தைகளாகத்தான் இருக்கிறார்கள். காரணம், அவர்கள்தான் தங்களது தொடர்புகளுக்கு மிகவும் இடையூறாக இருப்பதாக கள்ளக்காதலர்கள் நினைக்கிறார்கள். பூவரசியாகட்டும், எம்.ஜி.ஆர். நகர் மஞ்சுளாவாகட்டும், குன்றத்தூர் அபிராமியாக இருக்கட்டும் யாருமே பழிவாங்க தங்களது கணவன்களையோ கள்ளக்காதலன்களையோ கொலை செய்யவில்லை. காரணம், கணவன்களை கொலை செய்துவிட்டால் பொருளாதார பிரச்சனை ஏற்படும். கள்ளக்காதலன்களை கொலை செய்துவிட்டால் தொடர்பை தொடரமுடியாது. மேலும், கள்ளக்காதல் வைத்திருக்கும் ஆணோ பெண்ணோ ஒன்றோடு நின்றுவிடுவதில்லை. கணவன் மனைவிக்குள் இருக்கும் நம்பகத்தன்மையும் ஒப்பந்தமும் கள்ளக்காதலர்களுக்குள் இருப்பதில்லை.
அதனால், இன்னொரு கம்ஃபோர்டபுளான துணை கிடைக்கும்வரை ஆசை தீர பழகிக்கொள்வார்கள். அதைவிட பெட்டராக கிடைத்தால் பிரிந்துவிடுவார்கள். பிரிந்தால் பிரச்சனையாகிவிடும் என்பதால், ஒரே நேரத்தில் பலரிடமும் பழகுபவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில்தான் வீட்டிலிருக்கும் குழந்தைகள் தங்களுக்கு இடையூறாக இருப்பதாக நினைக்கிறார்கள். குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப அமைப்பா, கள்ளக்காதலன் கொடுக்கும் அன்பா என்ற கேள்வி வரும்போது… இரண்டாவது ஆப்ஷனை தேர்ந்தெடுக்கிறவர்கள்தான் குழந்தைகளை கொலை செய்யும் அளவுக்கு போய்விடுகிறார்கள்.
இதற்காக, ஆண்கள் எல்லாம் கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொலை செய்யவில்லை என்று சொல்லமாட்டேன். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு குழந்தைகளால் வரும் இடையூறுகள் எல்லாம் வெளியில் செல்லும் ஆண்களுக்கு இருப்பதில்லை என்பதால்தான் ஆண்கள் கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொலை செய்வதில்லை. வீட்டைவிட்டு ஓடிவருகிற குழந்தைகளை விசாரித்தால் பெரும்பாலும் பெற்றோர்களின் தவறான செயல்பாடுகள்தான் காரணங்களாக இருக்கின்றன. ஆனால், குழந்தைக்கு எதிராக இருக்கும் பெற்றோர்களிடமே அப்பிள்ளைகளை அனுப்பக்கூடிய சூழல்தான் உள்ளது. சமூகப் பாதுகாப்புத் துறையானது குழந்தைகளுக்கான தண்டனைத் துறையாக இல்லாமல் உண்மையான பாதுகாப்புத்துறையாக மாறவேண்டும்''’’என்கிறார் அவர்.
குழந்தைகளுக்கான ‘தோழமை’ அமைப்பின் தேவநேயனோ, “""18 வயதிலேயே அபிராமிக்கு திருமணம் செய்திருக்கிறார்கள். பாலியல் புரிதலற்ற வயதில் திருமணம் செய்து கொடுத்ததால்தான் குழந்தையையே பலி வாங்கிவிட்டார். பாலியல் பிரச்சனை என்பது புதிரும் அல்ல. புனிதமும் அல்ல. ஆனால், தங்களுக்கு இடையூறாக இருப்பதாக குழந்தைகளை கொன்றுவிட்டுத்தான் அந்த சந்தோஷத்தை பெறவேண்டுமா என்பதை யோசிக்கவேண்டும்'' என்கிறார் அழுத்தமாக.
குழந்தைகளை கொன்றுவிட்டு கோயம்பேட்டிற்குச் சென்று டூவீலரை பார்க் பண்ணும்போது சி.சி.டி.வி. கேமராவில் சிக்கிய அபிராமியை, கள்ளக்காதலன் சுந்தரத்தை வைத்தே நாகர்கோயிலில் மடக்கிய குன்றத்தூர் போலீஸ் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்தியுள்ளது. கணவனுக்கு துரோகம் செய்தாளா இல்லையா என்பதற்கு அபிராமி ஆயிரம் ஆயிரம் காரணங்களைச்சொல்லி தன்மேல் இரக்கத்தையும் தனக்கான சட்டரீதியான நியாயத்தையும் பெற முயற்சிக்கலாம். ஆனால், தனக்கு பாலூட்டிய தாய்தானே என்ற நம்பிக்கையோடு அவள் கொடுத்த பாலை வாங்கிக்குடித்த குழந்தைகளுக்கு செய்த நம்பிக்கை துரோகத்தை என்றைக்குமே நியாயப்படுத்த முடியாது. மன்னிக்கவும் முடியாது. ""அம்மா... நாங்கள் என்ன பாவம் செய்தோம்'' என அந்த பிஞ்சுகளின் குரல் காலம் முழுவதும் அபிராமியை தண்டித்துக் கொண்டே இருக்கும்.