Skip to main content

ஆட்டிட்டியூட் என்பது நாம எப்படி சிந்திக்கிறோமோ அப்படி அமைவதுதானா..?

Body

வெற்றிக்கான மனநிலையை எங்கே சொல்லிக் கொடுப்பாங்க? நம்ம வீட்டிலேயே அதற்கான பாடம் ஆரம்பிக்கிறது. வீட்டில் ஒரு குழந்தை தவழ்ந்து தவழ்ந்து மெல்ல நடக்க ஆரம்பிக்கிறதென்றால் குடும்பத்தில் உள்ள எல்லோருமே, "அப்படித்தான் ராசா... அப்படித்தான் செல்லம்' என்று பாசிட்டிவ்வாக ஊக்கப்படுத்துவார்கள். இரண்டு தடவை அது தடுமாறி கீழே விழுந்தாலும், "ஒண்ணுமில்லம்மா. உன்னைத் தள்ளிவிட்ட தரையை அடிச்சிடலாம்' என்று சொல்லி, வேடிக்கைக்காக தரையை தங்கள் கையால் அடிப்பதுபோல பாவனை செய்வார்கள்; குழந்தை சிரிக்கும். அதன் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் விதத்தில், கைப்பிடித்து நடக்கக் கற்றுக் கொடுப்பார்கள். இந்த பாசிட்டிவ் ஆட்டிட்டியூட் எல்லா நேரத்திலும் எல்லோருக்கும் இருப்பதில்லை. அதே குழந்தை கொஞ்சம் வளர்ந்து, தானாக நடக்கும்போது வீட்டில் உள்ள ஒரு பாத்திரத்தை எடுத்து வந்தால், "பார்த்து... பார்த்து... கீழே போட்டு உடைச்சிடாதே' என்று சொல்வதுதான் நம்முடைய வழக்கமாக இருக்கிறது. நமக்குள்ள பயம், அதீத அக்கறை இதையெல்லாம் குழந்தைகளிடம் காட்டும் வழக்கம் நம் பண்பாட்டிலேயே ஊறிப்போயிருக்கிறது. இந்த மனநிலை என்பது குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதை விட பயத்தையும், குறுகிய மனப்பான்மையையும் வளர்த்துவிடும்.

 

nkநாம் நம்மை சார்ந்தே  எல்லா விஷயங்களையும் பார்க்கும்போது அது குறுகிய மனப்பான்மையாக ஆகிவிடுகிறது. நம்முடைய சுயநலத்தை வளர்த்துக் கொண்டே போவது நல்ல ஆட்டிட்டியூட் கிடையாது. நாம் எல்லோருமே ஏதோ ஒரு வயதில் கவர்மெண்ட் பஸ்ஸில் போயிருப்போம். இப்பவும் போகிறவர்கள் இருப்போம். ஒரு ஐந்தாறு வயது இருக்கும்போது அம்மாவுடன் பஸ்ஸில் போயிருப்போம். நாம் உட்கார்ந்திருக்கும் இடத்தில் கொஞ்சம் இடம் இருக்கும். அப்போது புதுசா ஒருத்தர் பஸ்ஸில் ஏறுவார். சீட் தேடுவார். நமக்குப் பக்கத்திலே இருக்கிற சீட்டை ஒதுக்கிக் கொடுக்கலாம்னு நினைச்சா, அம்மா நம்ம தொடையிலே கிள்ளி, "நல்லா வசதியா உட்காரு' என்பார். நம் சீட்டை யாருக்கும் தரக்கூடாது என்கிற மனநிலை நமக்கு இருக்குது. அதைத்தான் பெரும்பாலும் வளர்க்குறாங்க. எல்லோரும் இப்படின்னு நான் சொல்லவில்லை. தன்னுடைய இடத்தை வயசானவங்களுக்கும் உடம்பு முடியாதவர்களுக்கும் விட்டுக் கொடுத்து, பிள்ளைகளுக்கு நல்ல  விஷயங்களைக் கற்றுக்கொடுக்கிற பெற்றோரும் இருக்காங்க.

எந்த மாதிரியான மனநிலையை நாம் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கிறோம் என்பது முக்கியமானது. கனடாவில் இதற்காக ஒரு விஞ்ஞானப்பூர்வமான பரிசோதனையே நடந்தது. ஒரே வீட்டில் பிறந்த இரண்டு குழந்தைகளை வேற வேற சூழலில் வளர்த்தாங்க. ஒரு குழந்தைக்கு அன்பான சூழல். எது சரி, எது தப்புன்னு சொல்லிப் புரியவைக்கிற சூழ்நிலை. இன்னொரு பிள்ளைக்கு இதற்கு நேர்மாறான சூழ்நிலை. முதல் குழந்தை, பாசிட்டிவ்வான மனநிலையோடும் இரண்டாவது குழந்தை நெகட்டிவ்வான மனநிலையோடும் வளர்ந்தது. நம்முடைய மனநிலையைத் தீர்மானிப்பதில் நம்ம பெற்றோர், ஃப்ரெண்ட்ஸ், சமுதாயம்னு எல்லோருடைய பங்கும் இருக்கிறது.

 

hlநெகட்டிவ் மனநிலையோடு வளர்ந்தால் அதை மாற்ற முடியாதா? கண்டிப்பாக முடியும். ஆனால் சுலபமாக மாறாது, கொஞ்சம் கஷ்டம். பிராக்டீஸ் செய்தால் நிச்சயம் மாற்ற முடியும். ஆட்டிட்டியூட் என்பது நாம எப்படி சிந்திக்கிறோமோ அப்படி அமைவதுதான்.. அதனால் நம்முடைய சிந்தனையில் மாற்றம் வந்தால், மனநிலையிலும் மாற்றம் வரும். நான் தமிழ்நாடு முழுக்க பல காலேஜ்களுக்குப் போய் பேசிக்கொண்டிருக்கிறேன். இன்ஜினியரிங் காலேஜ், மேனேஜ்மெண்ட் காலேஜ், ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ் இப்படி எல்லா காலேஜ்களுக்கும் போறேன். ரூரல் பகுதியில் உள்ள காலேஜில் உள்ள மாணவர்கள் சிட்டி மாணவர்களைவிட அதிக மார்க் வாங்குகிறார்கள். அதிலே எந்தப் பிரச்சினையும் கிடையாது. ஆனா, வேறு இரண்டு பிரச்சினை அங்கே இருக்கிறது. ஒன்று, கம்யூனிகேஷன் ஸ்கில் என்று சொல்லப்படும் தொடர்பு கொள்ளும் திறமை. தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள், காலேஜ் புரஃபசர்ஸ், மேனேஜ்மெண்ட் ஸ்டாஃப்ஸ் இப்படி பல தரப்பைச் சேர்ந்தவர்களையும் தொடர்புகொள்வதற்கு தைரியமான மனநிலை வேண்டும். அத்துடன், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதும் அவசியம். இது பற்றிய பயம் ரூரல் மாணவர்களிடம் கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறது.

என்னைப் பொறுத்தவரை, அதுகூட ஒரு பிரச்சினை இல்லை. ஆனா, இந்த கம்யூனிகேஷன் ஸ்கில் இல்லை என்பதற்காக அந்த ஸ்டூடண்ட்ஸ்கிட்டே ஏற்படக்கூடிய எண்ணங்கள் இருக்கிறதே.. அது மிகப் பெரிய அளவில் தாழ்வு மனப்பான்மையாக மாறிவிடுகிறது. நெகட்டிவ் ஆட்டிட்டியூட் அவர்களுக்குள் உருவாகிவிடுகிறது. எங்கப்பா மட்டும் மெட்ராஸில் இருந்திருந்தா.. எங்கம்மா மட்டும் படிச்சிருந்தா.. நான் மட்டும் நல்ல காலேஜில் சேர்ந்திருந்தா.. இப்படி எல்லாமே அதாக இருந்திருந்தா.. இதாக இருந்திருந்தா அப்படிங்கிற எண்ணம்தான் அந்த ஸ்டூடண்ட்ஸ்கிட்டே அதிகமாக இருக்கிறது. ஒரு சிம்பிளான கதை. உங்களில் பல பேருக்குத் தெரிந்திருக்கக்கூடிய கதை. ஆனால், ரொம்ப பவர்ஃபுல்லான கதை. அதனால்தான் அதை உங்களுக்குச் சொல்லப் போறேன். பீச்சில், தீம் பார்க்கில் இங்கெல்லாம் கேஸ் பலூன் விற்கிறதை நீங்க பார்த்திருப்பீங்க.

கலர் கலரான அந்த பலூன்கள் ரொம்ப அழகாக இருக்கும். பெரியவங்களுக்கே அந்த பலூனை ரசிக்க ஆசை இருக்கும். சின்னப் பையன்களைக் கேட்கவா வேணும்? ஒரு பையன், அந்த கேஸ் பலூன் விக்கிறவர்கிட்டே போய் கேள்வி கேட்டான். அந்த பச்ச கலர் பலூனை கட் பண்ணிவிட்டா மேலே பறக்குமா? பறக்கும்னார். அப்புறம், நீலக்கலர் பலூன் பற்றிக் கேட்டான். இப்படியே ஒவ்வொரு பலூனும் பறக்குமான்னு கேட்டான். பலூன் விற்கிறவருக்கு அவன் என்ன கேட்கிறான் என்பது புரிந்துவிட்டது. "இதோ பாரு தம்பி... கலரை வச்சி பலூன் பறக்கிறதில்லை. அதுக்குள்ளே இருக்கிற கேஸ் அளவை வச்சித்தான் அது பறக்குது. எவ்வளவு கேஸ் இருக்குதோ அவ்வளவு உயரத்துக்கு பலூனும் பறக்கும்' என்று அவர் சொன்னதும், அந்தப் பையன் தனக்குப் பிடித்த கலரில் ஒரு பலூனை வாங்கி, ஆசையோடு பறக்க விட்டு வேடிக்கை பார்த்தான்.
 

jஅந்தப் பையனுக்கு அந்த பலூன்காரர் சொன்ன தகவல், நம்ம ஸ்டூடண்ட் ஃப்ரெண்ட்ஸ் எல்லோருக்குமே பொருத்தமாகத்தான் இருக்கும். நாம எந்தளவு திறமையை வளர்த்துக்குறோமோ அந்தளவுக்கு உயர்ந்துகொண்டே போவோம். இதற்காக நம்ம அம்மா-அப்பா அப்படி இல்லையே, நாம இந்த மதத்தில் பிறக்கலையே.. இந்த ஜாதியில் பிறக்கலையேன்னு நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. எங்கே பிறக்கிறோம் என்பது நம் கையில் கிடையாது. வரலாற்றில் சாதனையாளர்களை எடுத்துப் பார்த்தால் அவர்கள் எல்லாத் தடைகளையும் கடக்கக்கூடிய மனநிலை கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள். அந்த மனநிலை, பாசிட்டிவ்வாக இருக்கும். சில பேருக்கு எப்பவுமே நெகட்டிவ் மனநிலைதான். எக்ஸாம் எழுதி முடித்ததும், பரீட்சை பேப்பரையும் அடிஷனல் ஷீட்டுகளையும் வைத்துக் கட்டும்போது 10 முடிச்சுக்கு மேலே போடுவார்கள். எங்கே பேப்பர் தனித்தனியா போயிடுமோங்கிற பயம். ஒரு முடிச்சுக்கு இரண்டு முடிச்சு போடலாம். கல்யாணத்திலேயே மூணு முடிச்சுதான் போடுறோம். எக்ஸாம் பேப்பரில் ஏன் 10 முடிச்சு போடணும். சில பேர் இப்படித்தான் வீட்டைப் பூட்டிய பிறகு, 10 தடவைக்கு மேல் பூட்டை இழுத்து இழுத்து பார்ப்பார்கள். நாம் செய்தது சரியாக இருக்குமா இருக்காதா என்ற எண்ணம் நமக்குள்ளே இருப்பதால் ஏற்படக்கூடிய மனநிலைதான் இது.

மனநிலை என்பது ஒன்று பாசிட்டிவ்வாக இருக்கும். அல்லது நெகட்டிவ்வாக இருக்கும். அதற்கு நியூட்ரல் என்பதே கிடையாது. சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால், நமக்குள்ளேயே ஒரு குரல் கேட்கும். இது முடியும் அல்லது முடியாது என்று அந்தக் குரல் சொல்லும். பாசிட்டிவ் மனநிலையை நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும். டைட்டானிக் படம் பார்த்திருப்பீர்கள். அந்தக் கப்பல் ஒரு பனிப்பாறையில் மோதி உடையும். அவ்வளவு பெரிய பனிப்பாறை இருப்பது மாலுமிகளின் கண்ணுக்குத் தெரியாது. பொதுவாக, 10% பாறைதான் கண்ணுக்குத் தெரியும். மீதி 90% கடல் நீருக்குள்தான் இருக்கும். அதுபோலத்தான் பாஸிட்டிவ் மனநிலையும். 10% ஆக இருக்கும் பாஸிட்டிவ் மனநிலையை 40%, 50%, 60% என்று உயர்த்துவதுதான் சக்ஸஸ். 1954ஆம் ஆண்டு மே 6-ந் தேதி மனிதகுல வரலாற்றில் மறக்க முடியாத நாள். ஏன் தெரியுமா? அந்த நாளுக்கு முதல்நாள் வரை உலகத்தில் இருந்த டாக்டர்களும் மனோதத்துவ நிபுணர்களும் உடற்கல்வி வல்லுநர்களும் ஒரு மைல் தூரத்தை ஒரு மனிதனால் 4 நிமிடங்களுக்கு குறைவாக ஓடி கடக்க முடியாது என்று சொல்லிவந்தனர். ரோஜர் பேனிஸ்டர் என்ற டாக்டர் பொழுதுபோக்காக ஓடக்கூடியவர். அவர் வழக்கமாக 4 நிமிடம் 2 நொடியில் ஒரு மைல் தூரத்தைக் கடப்பார். ஏன் இதில் 3 நொடியைக் குறைத்து 3 நிமிடம் 59 நொடியில் கடக்கமுடியாது என யோசித்தார் முயற்சி செய்தார். மே 6-ந் தேதி, 3 நிமிடம் 59.4 நொடியில் ஒரு மைல் தூரத்தைக் கடந்து உலக சாதனை புரிந்தார். அந்த சாதனையை அறிவிக்கும்போது... ஓடிய நேரம் "3 நிமிடம்... ...' என்று அறிவிப்பாளர் சொல்லி முடிக்கும் முன்பே அப்படி ஒரு கைதட்டல்.

 

kjரோஜர் பெனிஸ்டரின் சாதனை அதிக நாள் நீடிக்கவில்லை. அடுத்த 46வது நாள் இன்னொருவர் 3 நிமிடம் 57 நொடிகளில் ஒரு மைல் தூரத்தை ஓடிக் கடந்தார். அந்த 1954ஆம் ஆண்டில் மட்டும் 38 தடகளவீரர்கள் 4 நிமிடங்களுக்குக் குறைவாக ஓடினார்கள். அவர்கள் அதற்கு முன்பும் ஓடிக்கொண்டிருந்தவர்கள்தான். ஆனால், இப்போது மட்டும் எப்படி அவர்களால் 4 நிமிடங்களுக்குள்ளாக ஓட முடிந்தது. அங்குதான் இருக்கிறது ஆட்டிட்டியூட்... வெற்றிகரமான மனநிலை. டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். சைக்யாட்ரிஸ்ட் சொல்லிவிட்டார்கள். ஃபிசியாலஜிஸ்ட் சொல்லிவிட்டார்கள் என்று அவர்கள் மனது அதுவரை ஒரே விஷயத்தை நம்பியிருந்தது. என்னதான் வேகமாக ஓடினாலும் ஒரு மைல் தூரத்தை 4 நிமிடங்களில் கடக்க முடியாது என நம்பியது. டாக்டர் ரோஜர் அந்த நம்பிக்கையை மாற்றியதும், ஒவ்வொருவருக்குள்ளும் இருந்த ஆற்றல், நம்பிக்கையாக வெளிப்பட ஆரம்பித்தது. 38 பேர் அதற்கானத் திறமையையும் ஆற்றலையும் மனதிலும் உடலிலும் வைத்திருந்தார்கள். அவர்கள் சாதனையாளரானார்கள். உங்களுக்குள் சாதகமான மனநிலை வளர்ந்தால், உங்களைச் சுற்றி இருக்கிற எல்லோருமே உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உங்களின் வெற்றிப்படிக்கட்டு ஒரு எஸ்கலேட்டர் போல நகர்ந்து தானாக உங்களை மேலே கொண்டு செல்லும்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்