Skip to main content

தாழ்த்தப்பட்ட மக்களை சீண்டிப் பார்க்கும் மோடி அரசு!

Published on 03/04/2018 | Edited on 03/04/2018

நான்கு ஆண்டு ஆட்சி முடிவில் தாழ்த்தப்பட்ட மக்களை சீண்டிப் பார்த்துள்ளது மோடி அரசு. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் மீதான வன்கொடுமைகளான இழிவாகப் பேசுதல், புறக்கணித்தல், பாகுபாடு செய்தல் என ஆதிக்க சாதியினர் உள்ளிட்ட பிறரால் செய்யப்படும்  பல்வேறு விதமான இழிவுகளை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்து 1989ல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று தலித் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை எழுப்பியுள்ளது.

 

dalit protestஇந்த வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக மகாராஷ்டிராவில் சுபாஸ் காசிநாத் மகாஜன் என்பவர் தொடுத்த வழக்கில் உச்சநீதி மன்ற நீதிபதிகளான ஏ.கே.கோயல் மற்றும் யூ.யூ.லலித் ஆகியோர் இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் பலர் பாதிக்கப்படுவதாகவும் கூறி விசாரணை செய்து அதன்பின் வழக்கு பதிவு செய்யுமாறு தீர்ப்பளித்து உள்ளனர். 

நீதித் துறையில் அரசின், ஆளும் கட்சியின் குறுக்கீடு இருப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளே மக்கள் மன்றத்தை நாடும் நிலையில் வன்கொடுமைக்கான இச்சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் தீர்ப்பாகவும் இதன் பின்னணியில் இருக்கும் அரசியலையும் தலித் மக்கள் சந்தேகத்தோடும் கொந்தளிப்போடும் கவனித்தனர். நினைத்தது போலவே இத்தீர்ப்பைக் குறித்து மத்திய ஆளும் பிஜேபி அரசு மௌனம் காத்த நிலையில் நாடு முழுவதும் தலித் அமைப்புகள், கட்சிகள் சார்பாக ஏப்ரல் 2ஆம் தேதி பந்த் அழைப்பு விடுத்தன.
 

dalit protest 4தமிழகத்தில் DYFI, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பல கட்சிகள் இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டமும் அறிக்கைகளும் செய்தன.  தற்போது காவிரி பிரச்சனை ஸ்டெர்லைட் என வேறு பக்கம் தீவிரமான நிலையில் வட இந்தியாவில் பெரும் கலவரத்தோடு பந்த் நடந்துள்ளது. பல இடங்களில் ரயில்கள் மறிக்கப்பட்டன. 
 

dalit protest2உத்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப், பீஹார் மாநிலங்களில் உக்கிரமாக ஆரம்பித்த பந்த்தில் தலித் மக்கள் திரளாக கலந்து கொண்டனர். வழக்கம் போல தலித் பேரணிகளின் நடுவே கல்லெறிந்தும் கலவரம் செய்தும் வன்முறையில் கொண்டு போய் நிறுத்தின சில ஆதிக்க சாதி அமைப்புகள். ராஜஸ்தானில் பார்ட்மீர் மாவட்டத்தில் கர்னி சேனா என்ற அமைப்புக்கும் தலித்களுக்குமிடையே மோதல் நிகழ்ந்து நூற்றுக்கணக்கானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கர்னி சேனா,  'ராஜ்புத்' எனும் ஆதிக்க சாதி அமைப்பு என்று தெரிய வருகிறது. ஜோத்பூரில் மாலி எனும் ஆதிக்க சாதியினர் தாக்குதலில் தலித் ஒருவரின் கால் வெட்டப்பட்டது.

இது போன்ற மோதல்கள் வட மாநிலங்களில் பரவிய நிலையில் ஆழ்வர் மாவட்டத்தில் காவல் நிலையத்துக்கு  தீவைக்கப்பட்டது. மத்திய பிரதேசத்தில் மட்டும் 6 பேர் பலியான நிலையில் உத்திரப்பிரதேசத்தில் இருவர்   ராஜஸ்தானில் ஒருவர் என 9 பேர் நேற்று இந்தத் தீர்ப்பின் விளைவாகவும் அரசின் மௌனத்தாலும் பலியாகியுள்ளனர். போராட்டம் தீவிரமானதும் மத்திய அரசு அவசரமாக மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த 20ம் தேதி முதல் இன்று வரை ஏன் மௌனமாக இருந்தது என்று மக்கள் வினவுகின்றனர். இதுவரை 9 பேர் பலி என செய்திகள் சொன்னாலும் இதை விட அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.

 

dalit protest 3முதலில் இஸ்லாமியர்களை எதிரிகளாக்கி ஓட்டு சம்பாதித்த பிஜேபி அரசியல், தற்போது தலித் மக்களை வன்முறையாளர்களாக முத்திரை குத்தும் விதமாக செயல்படுகிறது என தலித் அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் ஒன்றாக திரளும் விதமான அரசியல் முன்னெடுப்பினை பகுஜன் சமாஜ் கட்சி செய்வதாகவும் அதனை கலைக்கவே இம்மாதிரியான குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் சந்தேகிக்கின்றனர்.

சமூக நீதியின் முன்னோடி மாநிலமான தமிழகம் இந்தப் பிரச்சனையில் போராட்டங்களை முன்னெடுக்காமைக்கு காவிரி பிரச்சனை காரணமாக சொல்லப்பட்டாலும் அனைத்து போராட்டங்களிலும் தலித் மக்கள் கலந்து கொள்ளும் நிலையில் அவர்களுக்கான போராட்டத்தில் யாரும் வராமல் இருப்பது வழக்கமாக உள்ளது என பலர் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் கூறியுள்ளனர்.

 

Next Story

பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை திறப்பு!

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
Puri Jagannath temple treasure room opening

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலோடு ஒடிசா மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை மற்றும் தொலைந்து போனதாகச் சொல்லப்படும் அதன் சாவி குறித்த விவகாரங்களை பாஜக கையில் எடுத்திருந்தது. இது தொடர்பாக ஒடிசாவில் முன்பு ஆட்சி செய்த பிஜு ஜனதா தள கட்சிக்கு எதிராக பாஜக தீவிரமாகப் பரப்புரை செய்தது. இந்த சட்டமன்ற தேர்தலில் வென்று பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும் கடந்த 1978 ஆம் ஆண்டுக்குப் பின் தற்போது வரை பொக்கிஷ அறை திறக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் 46 ஆண்டுகளுக்குப் பின் இன்று (14.07.2024) பூரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையை மீண்டும் திறக்கப்பட்டது. இதனையடுத்து பூரி மாவட்ட ஆட்சியர் உள்பட 11 பேர் கொண்ட குழுவினர் பொக்கிஷ அறைக்குச் சென்று ஆய்வு செய்தனர். அதே சமயம் பொக்கிஷ அறையில் உள்ள நகைகளை மதிப்பிடும் பணி நாளை (15.07.2024) தொடங்க உள்ளது. முன்னதாக பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையில் உள்ள ஆபரணங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கீடு செய்வதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விஷ்வநாத் ராத் தலைமையில் குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

7 மாநில இடைத்தேர்தலிலும் பாஜக கூட்டணிக்கு பின்னடைவு!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
7 state by-election setback for the BJP alliance

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உயிரிழந்தை தொடர்ந்து அந்தத் தொகுதிக்குக் கடந்த 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர். அதோடு 11 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேட்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்திலிருந்தனர். அதிமுக, தேமுதிக ஆகிய இருகட்சிகளும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்திருந்தது.

இந்தத் தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் சூழலில் ஜூலை 10 ஆம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. சரியாகக் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி திமுக வேட்பாளர் 31,151 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.  பாமக வேட்பாளர் அன்புமணி 11,483 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 2,275 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இதேபோன்று விக்கிரவாண்டி தொகுதியையும் சேர்த்து இந்தியாவில் உள்ள 7 மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 13 தொகுதிகளில் 11 சட்டமன்றத் தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.  மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 4 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. அதேபோன்று இமாசல பிரதேசத்தில் 3 தொகுதிகளிலும், உத்தராகண்டில் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. பஞ்சாப்பில் 1 தொகுதியில் ஆம் ஆத்மி முன்னிலையில் வகிக்கிறது. ஆனால், 7 மாநில இடைத்தேர்தலிலும் பாஜக கூட்டணிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.