Skip to main content

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த மோடி

Published on 12/02/2018 | Edited on 13/02/2018

 

elec

பாஜக அரசுக்கும் உண்மைக்கும் ரொம்ப தூரம் என்பது கடந்த நான்கு ஆண்டுகால செயல்பாடுகளைப் பார்த்தாலே தெரியும்.

ஆம், வருகிற மே 15 தேதியுடன் மோடி பிரதமராக பதவியேற்று 4 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இந்த நேரத்தில் அவரும் அவருடைய அரசும் கடந்துவந்த பாதையை கொஞ்சம் திரும்பிப் பார்த்தால், மயக்கம்தான் வருகிறது.

உலகை மூன்றுமுறை சுற்றிவருகிற தூரத்துக்கு அவர் வெளிநாட்டுப் பயணங்கள் அமைந்திருக்கின்றன. பிரச்சனைகளில் இருந்து தப்பிப்பதற்கு வெளிநாட்டு பயணத்தை தந்திராமாக பயன்படுத்தும் முதல் பிரதமர் இவர் என்று தெரிந்துவிட்டது. பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்காத, நாடாளுமன்ற விவாதங்களில் கலந்துகொண்டு பதில் அளிக்காத பிரதமராக இவர் இருந்திருக்கிறார்.

தான் பேசிய பிறகு யாரும் பேசாத சமயத்தில் மட்டுமே பேசுவதும், பேசும்போது யாரும் குறுக்கீடு செய்ய முடியாது என்ற உறுதி இருந்தால்தான் இவர் வாயைத் திறப்பார். அதுவும் கைகளை ஆட்டிக்கொண்டு வித்தாரம் பேசுவார்.

ஆனால், அவர் எப்போதும் தற்பெருமை பேசுவதே இல்லை. அதாவது, தற்பெருமை பேசுவதற்கு இவரிடம் பெருமைப்படத்தக்க விஷயங்கள் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதனால்தான, தனக்கு முன் பொறுப்பில் இருந்தவர்களின் குறைகளை மட்டுமே பேசி நாட்களைக் கடத்தும் வித்தையைத் தெரிந்து வைத்திருக்கிறார்.

இதுவரை இந்தியாவுக்கு பிரதமராக பொறுப்பேற்ற அனைவரும் இருக்கிற இந்தியாவை பொலிவேற்ற தங்களால் இயன்றதை செய்திருக்கிறார்கள். ஆனால், இவரோ, இருக்கிற இந்தியாவை சேதப்படுத்தினாலும், இல்லாத பல இந்தியாக்களை பெற்றுப் போடுவதில் கவனமாக இருந்தார்.

அப்படி இவர் பெற்றுப்போட்ட தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா, டிஜிடல் இந்தியா போன்றவற்றின் வளர்ச்சி பாவகரமாய் கிடக்கின்றன. இவை போக, அவர் அறிவித்த பல திட்டங்கள் மக்களை பாடாய் படுத்திக்கொண்டிருக்கின்றன.

இவருடைய அரசு பெட்ரோல் விலையை தினமும் உயர்த்தும் முறையை அறிமுகப்படுத்தியது. அதன்மூலம் பெட்ரோல்விலை கண்ணுக்குத் தெரியாமல் பைசா பைசாவாக ஏற்றப்பட்டு இப்போது லிட்டருக்கு 75 ரூபாய் ஆகிவிட்டது.

எரிவாயு சிலிண்டர் மானியத்தை நேரடியாக தருவதாகச் சொல்லிவிட்டு, இப்போது சிலிண்டர் விலையையும் மாதாமாதம் ஏற்றத் தொடங்கிவிட்டது.

கார்பரேட்டுகளின் கண்ணசைவுக்கு செயல்படும் மோடி அரசு, விவசாயிகளை கோவணத்துடன் டெல்லி வீதியில் அலையவிட்டதுதான் மிச்சம்.

மோடி 2014 தேர்தல் பிரச்சாரத்தின்போது எனக்கொரு 60 மாதங்கள் வாய்ப்புத் தாருங்கள் இந்தியாவை வல்லரசாக்கிக் காட்டுகிறேன் என்று ஆவேசமாக பேசினார். தன்னிடம் ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்தால் ஆண்டுக்கு ஒரு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்றார். அதன்படி இந்நேரம் 4 கோடி பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். ஆனால், வேலையற்றோர் எண்ணிக்கையைத்தான் கோடிக்கணக்கில் அதிகமாக்கி இருக்கிறார்.

நீங்கள் உருவாக்கிய வேலைவாய்ப்புகள் பற்றி கூற முடியுமா என்றால், பக்கோடா விற்பதுகூட வேலை வாய்ப்புதான் என்று கூறுகிறார். இப்போது அவரை இளைஞர்கள் பகோடா பிரதமராக்கி விட்டார்கள்.

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 9 சதவீதம் ஆக்குவேன் என்றார். மன்மோகன்சிங் காலத்தில் எட்டப்பட்டிருந்த 8 சதவீத வளர்ச்சியை 6.8 சதவீதமாக குறைத்ததுதான் இவருடைய இதுவரையான சாதனையாக இருக்கிறது. கேட்டால், 7.5 சதவீதம் ஆக்கிவிடுவோம் என்று சால்ஜாப்பு சொல்கிறார்.

மூன்றாவது பெரிய பொருளாதார நாடு என்ற நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த இந்தியாவை பாகிஸ்தானுக்கும் பின்னால் 62 ஆவது இடத்துக்கு கொண்டுபோய் விட்டிருக்கிறார்.

இவர்தான் இப்படி இவர் பேச்சை நம்பிப் பேசிய மின்துறை அமைச்சர் ரொம்பப் பாவம்.

2016 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் உள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் மின் இணைப்புக் கொடுத்துவிடுவோம் என்றார். அவர் சொன்னதில் தமிழகம் ஏற்கெனவே அந்த இலக்கை எட்டிவிட்டதால், மிச்சமுள்ள இந்தியா மட்டுமே அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பாவம், அவர் அடுத்தடுத்த ஆண்டுகளும் இதையே சொல்லிக்கொண்டிருக்கிறார். இதுவரை கடந்த நான்கு ஆண்டுகளில் எத்தனை கிராமங்களுக்கு மின் இணைப்புக் கொடுத்தார்கள் என்பதையும் சொல்லமாட்டேன் என்கிறார். யாரும் அவரிடம் குறிப்பிட்டு கேட்கவும் மாட்டேன் என்கிறார்கள்.

அதுபோலத்தான், 2018 மே மாதத்திற்குள் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு கொடுத்துவிடுவோம் என்றார். அடுத்து, 2019 ஆம் ஆண்டுக்குள் கொடுத்துவிடுவோம் என்றார். இப்போது என்னடாவென்றால், 2022 ஆம் ஆண்டுக்குள் கொடுத்துவிடுவோம் என்கிறார்.

அதாவது, இன்னொரு 60 மாதம் கொடுங்கள் என்று கேட்கிற லெவலுக்கு வந்திருக்கிறார்கள். முதலில் 60 மாதங்களில் நீங்கள் சாதித்ததை சொல்லுங்கள், பிறகு பார்க்கலாம்.

நான்கு ஆண்டுகளிலேயே வெற்றுப் பில்டப்புக்களால் உருவாக்கப்பட்ட மோடியின் பிம்பம் சிதறத் தொடங்கிவிட்டது. அவர் கத்துகிற கூச்சல் காது கிழிகிறது. இன்னொரு ஐந்தாண்டு தாங்காதுடா சாமீ என்று மக்கள் தெறிக்கிறார்கள்!

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.