Skip to main content

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக உளவுத்துறை மூலம் ஊழல் ரிப்போர்ட் எடுத்த மோடி... அ.தி.மு.க. அரசைத் தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவு!

 

admk


"இந்தியா முழுவதும் கரோனா ஊழல்களை ரகசியமாகச் சேகரித்து வருகிறது மத்திய அரசு. இதற்காக மாநில கவர்னர்களும், மத்திய உளவுத்துறையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, மேற்குவங்கம், மகாராஷ்ட்ரா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் மீது குறி வைத்திருக்கிறார் பிரதமர் மோடி. இதில் தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்கள்தான் பிரதமரின் பிரதான இலக்கு'' என்கிறார்கள் டெல்லியிலுள்ள தமிழக அதிகாரிகள்.
 


ஐந்தாம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் கரோனா வைரஸின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தமிழகம், மகாராஷ்ட்ரா உள்ளிட்ட சில மாநிலங்கள் திணறிக்கொண்டிருக்கின்றன. ஜூன் 1-ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் 1,162 பேருக்கு கரோனா வைரஸ் தாக்கியிருப்பதைத் தமிழக சுகாதாரத் துறையினர் உறுதி செய்திருக்கிறார்கள். அதாவது, தமிழகத்திலுள்ள 72 பரிசோதனை மையங்களில் ஒரே நாளில் டெஸ்ட்டுக்கு உட்படுத்தப்பட்ட 11,377 நபர்களின் ரத்த மாதிரிகளில் 1,162 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐந்தாம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் இந்த நிலையில் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 23,495 ஆக அதிகரித்துள்ளது. ஊரடங்கு முடியும் நாட்களுக்கு ஓரிருநாள் முன்பு ஊரடங்கை நீட்டிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மக்களிடம் பேசும் பிரதமர் மோடி, நான்காம் கட்ட ஊரடங்கு மே 31-ஆம் தேதி முடிவடைந்த சூழலில் ஊரடங்கு குறித்து மக்களிடம் பேசவில்லை. மாறாக, மத்திய உள்துறை அமைச்சர் அமீத்ஷா மூலம், ஜூன் 30 வரை தேசிய பொது முடக்கம் நீட்டிக்கப்படுகிறது; மாநிலங்களில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமா? விலக்கிக்கொள்ள வேண்டுமா? என்பதை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம் என அறிக்கை கொடுத்ததோடு ஒதுங்கி கொண்டார். இதற்குக் காரணம், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகளைத் தீவிரமாகவும் ரகசியமாகவும் கண்காணிக்கத் திட்டமிட்டிருப்பதுதான் என்கின்றன டெல்லி தகவல்கள்.
 

admk


இதுகுறித்து நம்மிடம் பேசிய டெல்லியிலுள்ள தமிழக அதிகாரிகள், "கரோனா விவகாரத்தில் மத்திய அரசு ஒதுக்கிய நிதியும், மாநில அரசு தங்களின் வருவாய்களில் ஒதுக்கிய நிதியும் எந்தளவுக்கு முறையாகச் செலவு செய்யப்பட்டிருக்கிறது? அதில் நடந்துள்ள ஊழல்கள் என்ன? என்பது குறித்து ஒவ்வொரு மாநிலங்களையும் ஆராயத் துவங்கியுள்ளது மத்திய நிதி அமைச்சகம். பிரதமர் அலுவலக மூத்த அதிகாரிகளின் ஆலோசனையின்படியே இந்த ஆய்வுகளை நிதி அமைச்சக அதிகாரிகள் ரகசியமாக நடத்தி வருகின்றனர். இதற்காக மாநில கவர்னர்கள் மற்றும் மத்திய உளவுத் துறையினர் மூலம் தரவுகள் பெறப்படுகின்றன.

"கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 9 ஆயிரம் கோடியும், மருத்துவ உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்காக 3 ஆயிரம் கோடியும் என மொத்தம் 12 ஆயிரம் கோடி நிதி உதவி அளிக்க வேண்டும்'' என மத்திய அரசிடம் கேட்டிருந்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதனை ஆராய்ந்த நிதி அமைச்சக அதிகாரிகள், கோரிக்கை வைக்கப்பட்ட மொத்த நிதியில் சுமார் 55 சதவீதம் கூடுதல் மதிப்பீடாக இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

குறிப்பாக, பி.சி.ஆர். கிட்ஸ்கள், வெண்டிலேட்டர்கள், முகக் கவசங்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு உடைகள் உள்ளிட்ட பல மருத்துவ உபகரணங்களுக்கான எண்ணிக்கையும், அவைகளுக்கான தொகையும் 55 சதவீதம் கூடுதலாகக் காட்டப்பட்டிருந்தது. அதேபோல தடுப்பு நடவடிக்கைகளுக்காகக் கொடுக்கப்பட்ட நிதி புள்ளிவிபரங்களும் கூடுதலாகச் சொல்லப்பட்டிருந்தன. அதனால்தான், 12 ஆயிரம் கோடி கேட்டிருந்த தமிழகத்துக்கு, இதுவரை 2,916 கோடியே 41 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கியிருக்கிறது மத்திய அரசு.
 


அதாவது, கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முதல் கட்டமாக 987 கோடியே 85 லட்ச ரூபாயும், 15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரையின்படி ஏப்ரல் மாதப் பங்கீடாக 1,928 கோடியே 56 லட்ச ரூபாயும் என 2,916 கோடியே 41 லட்சம் ரூபாயை ஒதுக்கியிருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். முதல்வர் எடப்பாடி கேட்டிருந்த 12 ஆயிரம் கோடியில் 45 சதவீதம்தான் உண்மையான மதிப்பீட்டு தொகை என்பதால் அந்த உண்மையான மதிப்பீட்டு தொகையில் 51 சதவீதம் ஒதுக்கப்பட்டது. அந்த வகையில், மத்திய அரசு ஒதுக்கிய 2,900 கோடியையும் எடப்பாடி அரசு முறையாகச் செலவு செய்திருக்கிறதா என்பதை ஆராய்ந்து வருகிறது மத்திய அரசு.
 

admk


மேலும், "தனது சொந்த வருவாய் இனங்களிலிருந்தும், வாங்கப்பட்ட கடன்களிலிருந்தும் கிடைத்த நிதிகள் எந்த வகையில் எடப்பாடி அரசு செலவு செய்துள்ளது என்பதையும் ஆய்வு செய்து வருகிறார்கள். இதில் பல்வேறு ஊழல்கள் நடந்திருப்பதையும் முதல் கட்டமாகக் கண்டறிந்துள்ளது மத்திய அரசு. கரோனா காலம் குறித்து அதிகபட்சம் அடுத்த மாதம் ஜூலையில் ஒரு தெளிவு கிடைத்து விடும். அதன்பிறகு கரோனா நிதி முறைகேடுகள் குறித்து எடப்பாடி அரசுக்கு எதிரான சாட்டையைச் சுழற்ற விருக்கிறார் பிரதமர் மோடி'' எனச் சுட்டிக் காட்டுகின்றனர் டெல்லியிலுள்ள தமிழக அதிகாரிகள்.

கரோனா நிதிகள் குறித்து தமிழக திட்டக் கமிஷன் மற்றும் நிதித்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "கரோனாவில் ஊழல்கள் இல்லையென்று அரசு தரப்பில் மறுக்கவே முடியாது. ஏனெனில், நிறைய ஆதாரங்களைத் திரட்டி வைத்திருக்கிறது மத்திய அரசு. மத்திய அரசு நேரடியாக ஒதுக்கீடு செய்த நிதி தொகை மட்டுமல்லாமல் வருவாய்ப் பற்றாக்குறை மானியத்தையும், தேசிய சுகாதாரத் திட்ட மேலாண்மை நிதியையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசுக்கு அனுமதியளித்துள்ளது மத்திய அரசு. இந்த நிதிகளையும் எடப்பாடி அரசு எந்த வகையில் பயன்படுத்தியது? அதிலுள்ள முறைகேடுகள் என்ன? என்பது குறித்தும் தீவிரமாகக் கண்காணிக்கிறது மத்திய நிதி அமைச்சகம்'' என்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வும் எடப்பாடி அரசின் ஊழல்களைச் சேகரித்து அதனைச் சட்டரீதியாக அம்பலப்படுத்தத் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காகத்தான் சமீபத்தில் நடந்த மா.செ.க்கள் கூட்டத்தில் மாவட்டம் தோறும் எடப்பாடி அரசின் ஊழல் ரெக்கார்டுகளைச் சேகரிக்க தீர்மானம் நிறைவேற்றியதுடன், அது குறித்து மா.செ.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு அழுத்தமாக வலியுறுத்தவும் செய்திருக்கிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கும் தி.மு.க. ஆதரவு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள், கரோனா ஊழல்களை மட்டுமின்றி முக்கியத் துறைகளில் மேற்கொள்ளப்படும் டெண்டர் ஊழல்களுக்கான ஆதாரங்களையும் திரட்டி தி.மு.க. தலைமைக்குத் தெரியப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்தான், கரோனா வைரஸை பரிசோதிக்கும் பி.சி.ஆர். கருவிகளை எடப்பாடி அரசு கொள்முதல் செய்துள்ள எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பிய மு.க.ஸ்டாலின், "கலெக்டர்களுடன் ஆலோசனை செய்த முதல்வர் எடப்பாடி, கரோனா பரிசோதனைகளுக்காக 9.14 லட்சம் பி.ஆர்.ஆர். கருவிகள் கொள்முதல் செய்ததாகவும், தற்போது 1.76 லட்சம் கருவிகள் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். ஆனால், கணக்குப்படி 4.66 லட்சம் பரிசோதனைகள்தான் நடந்துள்ளன.
 

admk


அந்த வகையில், 4.47 லட்சம் கருவிகள் மீதம் இருக்க வேண்டும். முதல்வரின் கூற்றுபடி 1.76 லட்சம் கருவிகள்தான் உள்ளது என எடுத்துக் கொண்டால், மீதமுள்ள 2.71 லட்சம் கருவிகள் எங்கே? கையிருப்பில் உள்ள கருவிகளின் எண்ணிக்கை தவறா? அல்லது பரிசோதனை நடந்ததாகச் சொல்லப்படும் எண்ணிக்கை தவறா?'' என முறைகேடுகளை அம்பலப்படுத்தி காட்டமாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
 

http://onelink.to/nknapp


ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளால் அதிர்ந்துபோன முதல்வர் எடப்பாடி, பி.சி.ஆர். கருவிகள் குறித்து தனக்குப் புள்ளிவிபரம் கொடுத்த தலைமைச் செயலாளர் சண்முகத்தை குடைய, அவரோ, சுகாதாரத்துறை அதிகாரிகள் கொடுத்த புள்ளிவிபரங்களைத்தான் உங்களிடம் கொடுத்ததாகச் சமாளித்திருக்கிறார். அண்மைக் காலமாக, எடப்பாடிக்கும் சண்முகத்துக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கும் நிலையில், தவறான புள்ளி விபரங்கள் தனக்குத் தரப்படுவதாக உயரதிகாரிகள் மீது முதன்முறையாகச் சந்தேகப்பட ஆரம்பித்துள்ளார் எடப்பாடி என்கிறது கோட்டை வட்டாரம். ஆக, எடப்பாடி அரசுக்கு எதிரான ஊழல்களை மத்திய அரசும், தி.மு.க.வும் தீவிரமாகக் கையிலெடுப்பது எடப்பாடியையும் அமைச்சர்களையும் இனிவரும் நாட்கள் அதிரவைக்கும் என்கிறார்கள் உயரதிகாரிகள்.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்