வணக்கம்,
நான் புளியமரம் பேசுறேன்.. என் இயற்கைக்கு மாறான மரண கதையை கொஞ்சம் கேட்டுட்டு போங்க..
புதுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் மேட்டுப்பட்டி கேட் - ரைஸ் மில் இடைப்பட்ட இடத்தில் கடந்த 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு பாதசாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் நிழல் தரவும் அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு பழம் தரவும், சாலை ஓரமாக என்னை நட்ட நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள், தண்ணீர் ஊற்றி வளர்த்தனர். அப்ப எனக்கு நம்பர் 9. அந்த பகுதியில் யார் வீட்ல நல்லது, கெட்டது நடந்தாலும் என் நிழலில்தான் நிற்பாங்க. இதுவரை லட்சம் பேருக்கு நிழல் கொடுத்திருப்பேன். குழம்பு ருசிக்க பழம் கொடுத்தேன். லட்சக்கணக்கான விதை கொடுத்தேன்.
நான் வளர்ந்தது போல சாலையும் விரிவடையத் தொடங்கியது. அந்தப் பக்கம் நடந்து போறவங்களும், வாகனங்களில் போறவங்களையும் கவர்ந்து இழுக்கிறது மாதிரி கிளைகளைப் பரப்பி பசுமையான பச்சை இலை போர்த்தி வனப்பாக இருந்தேன். அத்தனை பேரும் என்னை பார்க்காமல் போக மாட்டாங்க.. அவ்வளவு அழகா இருப்பேன். எல்லாரும் என்னையே பார்க்கிறதைப் பார்த்த பெரிய பெரிய கடைக்காரங்க, பயிற்சி மையகாரங்க அவங்க கடை விளம்பர பதாகைகளை என் மேல கட்டினாங்க. அது காற்றில் பறந்தது. அப்புறம் ஆணி வச்சு அடிச்சு பதாகை வச்சாங்க. என் மேல ஆணி அடிக்கும் போது எனக்கு வலிக்கும் என்பதை அவங்க மறந்துட்டாங்க. காரணம் அவங்களோட கவர்ச்சியான விளம்பர பதாகையை எல்லாரும் பார்க்கிற மாதிரி வனப்பான மரத்தில் அடிச்சாச்சுன்னு மகிழ்ச்சி. இப்படியே நூற்றுக்கணக்கான ஆணிகள் அடிச்சதுல எனக்கும் வலி தாங்கல.
ஆணிகள் அடிச்சதுல உடலெங்கும் காயம்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாகத் தொடங்கிட்டேன். இப்ப முழுமையாக இல்லன்னாலும் 99% செத்துட்டேன். இப்ப அந்த வழியாக போறவங்க இந்த 9 ம் நம்பர் மரம் பட்டுப் போச்சுன்னு சொல்லிட்டு, என் கிட்டக்கூட ஒதுங்க பயந்து ஓடிப் போறாங்க. நீங்களே சொல்லுங்க நானாக தற்கொலை செய்து கொண்டேனா? இல்லை என்னை கொஞ்சம் கொஞ்சமா ஆணி அடிச்சு கொன்றார்களா? ஆனால், என்னை வச்சு வளர்த்த தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்களுக்கு மட்டும் உண்மை தெரிஞ்சிருக்கு. அதனால தான் இளமையா இருக்கும் போது 9 ம் நம்பர்ல இருந்த என் மீது, இயற்கைக்கு மாறான சந்தேக மரணத்திற்கான ஐபிசி பிரிவு 174 போட்டு, என் மரணம் எப்படி நிகழ்ந்தது என்று விசாரிக்க சொல்லி இருக்காங்க.
மரணத்தின் கடைசி தறுவாயில் ஒரு கோரிக்கை நான் 99% உயிரிழந்துட்டேன். அதனால் என் நிழலில் நின்றவர்கள் கூட இப்ப என்னைப் பார்த்து பயந்து தூரமா போறாங்க. எனக்கே என் மீது சந்தேகம் வந்துடுச்சு. இதுவரை யாருக்கும் சிறு தீங்கும் செய்யாத நான், எந்த நேரத்திலும் என் கிளைகள் உடைஞ்சு விழுந்து சாலையில் போற யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடுவேனோ என்ற அச்சம் எனக்குள்ளும் உள்ளது. அதனால என்னை வளர்த்த தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளே என்னை கருணை கொலை செய்து மற்றவர்களை காப்பாற்றுங்கள். என்னை கருணைக் கொலை செய்வதோடு விட்டுவிடாமல் என்னோட இயற்கைக்கு மாறான மரணத்தை (ஐபிசி 174) முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு நன்றாக விசாரித்து, என்னைப் போன்ற மரக்குழந்தைகளின் மேல் ஆணி அடிப்பதையும், அடியில் குப்பை கொட்டி எரிப்பதையும் தவிர்க்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சாலையோர மரக்குழந்தைகளின் உயிர்களை காப்பாற்ற முடியும். என் மரணமே கடைசியாக இருக்கட்டும், நடவடிக்கை எடுங்கள். என்னை கருணைக் கொலை செய்து அந்த இடத்திலிருந்து அகற்றிய பிறகு, என் நினைவாக என்னைப் போல ஒரு புளிய மரக்குழந்தையை நட்டு வளருங்கள். அந்த மரக்குழந்தை வடிவில் மீண்டும் உங்களுக்கு நிழல் தருகிறேன்.
இதுவரை என் சோகக் கதை கேட்ட உங்க எல்லாருக்கும் நன்றிகள்.
அன்புடன்.. மேட்டுப்பட்டி 9 ம் நம்பர் புளிய மரம்.