Skip to main content

இந்தியாவின் முதல் ஸ்டிங் ஆபரேஷன்! பாதுகாப்புத்துறை ஊழல்களை வெளிகொண்டுவந்தது எப்படி? விவரிக்கிறார் பத்திரிகையாளர் மாத்யூ சாமுவேல்...

Published on 31/07/2020 | Edited on 01/08/2020

 

mathew samuel about jaya jaitley sting opeartion

 

அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான என்.டி.ஏ அரசாங்க ஆட்சியின் போது பாதுகாப்புத்துறை தளவாட கொள்முதலில் ஊழல் செய்த குற்றச்சாட்டில் சிக்கிய ஜெயா ஜெட்லி, அப்போதைய மேஜர் ஜெனரல் எஸ்.பி முர்காய் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம். 

 

கடந்த 2000 ஆவது ஆண்டு, பத்திரிகையாளர் மாத்யூ சாமுவேல் மற்றும் தெஹல்கா குழுவினர் மேற்கொண்ட ரகசிய விசாரணை மூலம் வெளியுலகிற்குத் தெரிய வந்த இந்தச் சம்பவம், அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் தனது பதவியிலிருந்து விலகும் அளவுக்குத் தீவிரமடைந்தது. லண்டனைச் சேர்ந்த ஒரு ஆயுத நிறுவனத்தின் பிரதிநிதிகளைப் போல அன்றைய பாதுகாப்புத்துறையுடன் தொடர்பிலிருந்த அனைவரிடமும் இந்த விசாரணையை மேற்கொண்டது தெஹல்கா. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கில் சிக்கிய ஜெயா ஜெட்லி, அப்போதைய மேஜர் ஜெனரல் எஸ்.பி. முர்காய் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம்.

 

 

 

இதுகுறித்து பத்திரிகையாளர் மாத்யூ சாமுவேல் கூறுகையில், "உயர் மட்டத்தில் பாதுகாப்புத்துறையில் நடந்த ஊழல்கள் குறித்து தெஹல்கா அம்பலப்படுத்திய பின்னர், குஜராத்தைச் சேர்ந்த ஒரு பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளர், 14.3.2001 அன்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்கிறார். அதில், மேத்யூ சாமுவேல்  ஒரு அமெரிக்கக் கைக்கூலி எனக் கூறப்பட்டது. அந்த நபர்தான் தற்போது நமது நாட்டின் பிரதமர். அவரது ஆட்சிக் காலத்திலேயே, சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஜெயா ஜெட்லி மற்றும் மேலும் இரண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. .

 

ஒரு கிறிஸ்துமஸ் தினம், டிசம்பர் 25, 2000 அன்று, பாதுகாப்பு அமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நான் எப்படி அந்த ஸ்டிங் ஆபரேஷன் செய்தேன் என்பது இன்றும் நினைவுள்ளது. இது வி.வி.ஐ.பி. வட்டாரமான கிருஷ்ணன் மேனன் மார்க் பகுதியோடு தொடர்புடையது. அப்போது என் உடலில் படக்கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. கேபிள்கள், அனலாக் கேமரா, ரெக்கார்டர், லென்ஸ் மற்றும் ஒரு சுவிட்ச், 1 மணிநேரம் மட்டுமே சார்ஜ் நிற்கும் ஒரு பேட்டரி. இவற்றுடன் பாதுகாப்பு அமைச்சரின் அதிகாரப்பூர்வ குடியிருப்பு வளாகத்தில் நான் நுழைந்தேன். ஜார்ஜ் பெர்னாண்டஸின் சமதா கட்சித் தலைவர் ஜெயா ஜெட்லியை, போலியான ஆயுத நிறுனத்தின் தயாரிப்புகளுக்கான மதிப்பீட்டுக் கடிதம் ஒன்றைப் பெறுவதற்காக ஏற்கனவே சந்தித்திருந்தேன். அப்போது, பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து ஓய்வு பெற்ற மேஜர் எஸ்.பி. முருகுவே மற்றும் ராஜஸ்தான் மாநில சமதா கட்சியின் தலைவர் கோபால் பச்சர்வால் ஆகிய இருவரும் ஜெயா ஜெட்லியைச் சந்திக்க உதவினர். 

 

mathew samuel about jaya jaitley sting opeartion

 

பாதுகாப்பு அமைச்சரின் இல்லத்தில் ஜெயா ஜெட்லியைச் சந்திக்கச் செல்வதற்கு முன்பு, எனது ஆசிரியர் அனிருத் பஹால், நான் கொண்டு சென்ற பிரீஃப்கேஸ் கேமரா குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், ஜெயா ஜெட்லியின் மருமகனுமான அஜய் ஜடேஜாவுக்குத் தெரியும் என எச்சரித்தார், எனவே வேறு சாதனங்களை எடுத்துச் செல்லும்படி எனக்கு அறிவுறுத்தினார். அவரது கணிப்பு தவறில்லை. பாதுகாப்பு அமைச்சரின் இல்லத்திற்குள் நுழைந்தபோது, ஜெயா ஜெட்லி எந்தவொரு பிரீஃப்கேஸையும் உள்ளே எடுத்துவர அனுமதிக்க மாட்டார் என்று காவலர்கள் கூறிவிட்டனர். அதில் உளவு கேமரா இருக்கும் என அவருக்குப் பலமான சந்தேகம் இருந்துள்ளது. அப்படி இருந்தால் எங்களது உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆதாரமாகக் காட்டப்படும் என அவருக்குத் தெரியும்.

 

mathew samuel

மேத்யூ சாமுவேல்... அன்றும் இன்றும்

 

பின்னர் பெட்டியை வெளியே வைத்துவிட்டு, சுரேந்தர் சுரேகா என்பவர் கொடுத்த தாள் ஒன்றில் இரண்டு லட்ச ரூபாயை மடித்து வைத்துக்கொண்டு உள்ளே சென்றேன். இதற்கிடையில், நான் டை கேமராவை ஆன் செய்து ஜெயா ஜெட்லிக்கு இரண்டு லட்சம் கொடுத்த அந்த நிகழ்வை வெற்றிகரமாகப் பதிவு செய்தேன், பின்னர், பணத்தை கோபால் பச்சர்வாலிடம் ஒப்படைத்ததாக அவர் கூறினார். இது அன்று நடந்த ஒரு முக்கிய நிகழ்வு. பின்னர் நான் அங்கிருந்து எனது அலுவலகத்திற்குத் திரும்பி, எனது ஆசிரியரிடம் ஆதாரங்களை ஒப்படைத்து, நடந்த நிகழ்வுகளை விரிவாக விளக்கினேன்.

 

ஜெயா ஜெட்லியும், வழக்குரைஞர்களும் அதன்பின் எனக்கு எனது குடும்பத்திற்கும் தொல்லை கொடுக்கும் செயல்களிலும் ஈடுபட்டனர். அதிலும் பல மோசமான விஷயங்கள் நடந்தன. மேலும், நான் ஒரு கிராமப்புறத்தைச் சேர்ந்த ஒரு நாகரிகமற்ற நபர் என்றனர். நிச்சயமாக, நான் ஒரு கிராமப்புற கிராம பின்னணியைச் சேர்ந்த ஒரு நபர் தான். எப்போது மக்களுக்காகத் திரைமறைவிலேயே பணியாற்றினேன். இந்த வழக்கின் கடைசி விசாரணை நடைபெற்ற பிப்ரவரி 2020 வரை அவர்களின் இந்த விமர்சனங்கள் தொடர்ந்தன. 

 

                                                     http://onelink.to/nknapp

 

2019 ஆம் ஆண்டில், சாக்கெட் நீதிமன்ற வளாகத்தில் ஜெயா ஜெட்லியிடம் பேச வாய்ப்பு கிடைத்தது. எனது தாயார் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டதைக் காரணம் காட்டி, நீதிமன்ற விசாரணையா இருந்து ஒருமுறை விலக்கு கேட்டதைக் கிண்டல் செய்யும் வகையில் பேச்சைத் தொடங்கினார். அவர், நான் உங்கள் தாயை விட மூத்தவள். இந்த சம்பவம் நடந்திருக்காவிட்டால் நான் இப்போது அமைச்சரவையில் அமைச்சராக இருந்திருப்பேன் என்றார். அதற்கான எனது பதில் எளிதானது, இது ஒரு தொழில்முறை பத்திரிகை வேலை மட்டுமே, உங்களுடனோ அல்லது உங்கள் குடும்பத்தினருடனோ எனக்குத் தனிப்பட்ட விரோதம் இல்லை. குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளை நீங்கள் இப்போது கூட கேட்கலாம், நான் பணத்தை வழங்கும்போது நீங்கள் கூச்சலிட்டு என்னை உங்கள் வளாகத்திலிருந்து வெளியேற்றியிருக்கலாம் நான் திரும்பிச் சென்றிருப்பேன். ஆனால், நீங்கள் அப்படிச் செய்யவில்லை. பிறகு, என்னால்தான் நீங்கள் மாட்டிக்கொண்டீர்கள் என்று என்னை எப்படி குற்றம் சாட்ட முடியும்? எனக் கேட்டேன். அவர் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றார்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

பால்கோட் தாக்குதலில் உண்மையாக நடந்தது என்ன? மேத்யூ சாமுவேல் சிறப்பு கட்டுரை...

Published on 09/04/2019 | Edited on 09/04/2019

இந்தியா பாகிஸ்தான் இடையே பால்கோட் பகுதியில் நடைபெற்ற சண்டை குறித்து முன்னணி புலனாய்வு பத்திரிகையாளரான மேத்யூ சாமுவேல்  INDvestigations என்ற இணையதளத்தில் எழுதியிருந்த கட்டுரையின் தமிழாக்கத்தை இந்த தொகுப்பில் காணலாம்.

 

mathew samuel about balkot attack

 

சமீபத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்து வரும் சண்டைகள் மற்றும் பதட்டமான சூழ்நிலைகள் குறித்து அமெரிக்காவின் பென்டகன் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளதாக அந்நாட்டின் பத்திரிகையான 'ஃபாரின்  பாலிசி' தெரிவித்துள்ளது. அதன்படி, பாகிஸ்தான் F 16 ரக விமானங்களை தவறாக பயன்படுத்தியதாக இந்தியா கூறிய புகாரை பென்டகன் சமீபத்தில் விசாரித்ததாக அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க அதிகாரிகள் பாகிஸ்தான் சென்று அங்குள்ள F-16 ரக விமானங்களை கணக்கெடுத்ததாகவும், அதன் முடிவில் பாகிஸ்தானில் F-16 ரக விமானங்களின் எண்ணிக்கை சரியாக இருப்பதாகவும், எந்த பாகிஸ்தான் விமானங்களும் காணாமல் போகவில்லை எனவும் தெரிவித்தது. மேலும் இந்த விவகாரத்தில் இந்திய அதிகாரிகள் முழு உலகையும் தவறாக வழிநடத்தியிருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். 

மிகப்பெரிய வாதத்திற்கான ஒரு தலைப்பு! பொறுமையுடன் படியுங்கள்...

என்னுடைய வீடு இருக்கு அடுக்குமாடி குடியிருப்பில், பல மூத்த பாதுகாப்பு துறை அதிகாரிகள் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். என் குடும்பத்திலும் இந்திய பாதுகாப்பு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பலர் உள்ளனர். என் தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் நீண்ட காலம் இராணுவத்திற்கு சேவை செய்துள்ளனர். 35 ஆண்டுகள் என் தந்தை பாதுகாப்பு படையில் பொதுமக்களுக்காக பணியாற்றினார் என்பது ஒரு சாதாரண விஷயம் அல்ல. இவர்கள் மட்டுமல்லாது எனது உறவினர்களும் இந்திய விமானப் படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளனர். இதுவே பாதுகாப்பு துறையில் எனது குடும்பத்தினரின் பங்கு பற்றிய சுருக்கமான ஒரு உரையாகும்.

1971 ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் என் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலர் ஒரு பகுதியாக இருந்தார்கள் என நான் கூறுகையில், நான் ஏன் இதனை பற்றி பேச ஆர்வமாகவும், பெருமையாகவும் கருதுகிறேன் என வாசகர்கள் நன்கு அறிந்துகொள்ள முடியும்.

இரு வாரங்களுக்கு முன்னர், சில அதிகாரிகள் என்னிடம் வந்து, இந்திய ஊடகங்கள் ஏன் பால்கோட் தாக்குதல் மற்றும் அதன் விளைவுகள் குறித்து உண்மையான தகவல்களை வெளிகொண்டுவந்து கூற ஆர்வம் காட்டவில்லை என கேட்டனர். அப்போது நான் அவர்களிடம், உண்மையில் அங்கு என்ன நடந்தது சொல்லுங்கள்"என கேட்டேன்.

உண்மையான நிகழ்வுகள் மட்டுமே விவரிக்கப்பட்டிருந்தால், உயர் முடிவுகளை எடுக்கும் அந்த அதிகாரிகளுக்கு அவர்கள் பெற்ற தவறான ஆலோசனை பற்றி மறுபரிசீலனை செய்ய ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் அவர்களால் அந்த உண்மையை ஜீரணித்திருந்திருக்க முடியாது. மேலும் இத்தகைய கடினமான விஷயங்களைச் சரியான வழி வரைபடத்துடன் மட்டுமே செயல்படுத்த முடியும் என அறிந்திருப்பார்கள்.

நான் பேசிய அதிகாரி என்னிடம், "நமது MI-17-V5 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது எப்படி தெரியுமா"என கேட்டார். சில ஊடகங்கள் இதற்கு காரணம் நம்முடைய தவறுதான் என கூறின. நம்முடைய வான் படையின் ஏவுகணையே தவறாக நமது ஹெலிகாப்டரை தாக்கிவிட்டது என ஊடகங்கள் குறிப்பிட்டன. அது உண்மையா? என நான் கேட்டேன்.

"நமது ஹெலிகாப்டர் பாகிஸ்தான் நாட்டின்  F-16 ரக போர் விமானத்திலிருந்து வந்த ஏவுகணையாலேயே சுடப்பட்டது. அதில் நம்முடைய துணிச்சலான 7 வீரர்களை நாம் இழந்துவிட்டோம்" என அந்த அதிகாரி என்னிடம் விளக்கினார்.

மேலும் பேசிய அவர், அதன் பிறகு போர் விமானத்தில் இருந்து ஒரு பைலட் வெளியே குதிக்கும் வீடியோ ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டது. அது பாகிஸ்தான் பைலட் தப்பி சென்ற காட்சி என மக்களிடையே எண்ணம் பரவலாக இருந்தது. ஆனால் இதுகுறித்து அதிகாரி ஒருவர் என்னிடம் கூறியபோது, வீடியோவில் காணப்பட்டவர் வேறு யாரும் இல்லை, இந்தியாவின் விங் கமாண்டர் அபிநந்தன் தான் என கூறினார். இப்படி ஒரு முட்டாள்தனம் எப்படி பரப்பப்பட்டது என்று அந்த அதிகாரியை நான் கேட்டேன்?

அதற்கு பதிலளித்த அந்த அதிகாரி, "எந்தவொரு திட்டமிடலும் இன்றி நாங்கள் அந்த பாலகோட் தாக்குதலை நடத்தினோம். இந்த தாக்குதலுக்கு பின் அவர்களிடமிருந்து எந்த நேரத்திலும் பதில் தாக்குதல் வரும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால் நங்கள் முழுமையாக தயாராவதற்கு, அதிக நேரம் தேவைப்படும். அப்படி தயாரானால் தான் நாம் எல்லா வகையிலும் சரியாக பாதுகாக்க முடியும். இப்படி ஒரு அவசர நடவடிக்கையை எடுக்க நமது பிரதமருக்கு அறிவுறுத்தியது யார் என்பது குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும். ஊடகங்கள் தான் சரியான களநிலவரத்தையும், பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் பாகிஸ்தான் நாட்டின்  F-16 விமானம் இந்திய ஹெலிகாப்டரை சுட பயன்படுத்திய ஏவுகணை பாகங்களை வைத்துக்கொண்டு அது பாகிஸ்தான் விமானத்தின் பாகங்கள் என கூறும் மூத்த அதிகாரிகளை பற்றியும் எடுத்து கூறவேண்டும். இத்தகைய தவறான செயல்கள் (தாக்குதல்கள்) நம் பலவீனத்தை பற்றி நம் எதிரிகள் அறிந்துகொள்ளவே வாய்ப்பாக அமையும் என கூறி உரையாடலை முடித்துக்கொண்டார் அந்த அதிகாரி.

பாகிஸ்தானின் எதிர் தாக்குதலுக்குப் பிறகு, ஏன் இந்த ஆலோசகர்கள் யாரும் மீண்டும் பிரதமருக்கு இந்தியா  வேண்டும் என எந்த அறிவுரையும் கூறவில்லை?

இதற்கிடையில், பாகிஸ்தான் துருப்புக்கள் இந்திய எல்லைக்கு அருகே பறந்து சென்றன. நம்மிடம் வான் ஏவுகணைகளும் இருந்தன. ஆனால் ஏன் இந்திய ராணுவத்திற்கு பதில் தாக்குதல் நடத்த அனுமதி தரப்படவில்லை. பாகிஸ்தான் செய்தது போல ஏன் நம்மால் திருப்பி தாக்க முடியவில்லை?   நமது திறமையுள்ள படையை அமைதி காக்க செய்வதன் மூலம் பாகிஸ்தானுக்கு நாம் என்ன பதில் கொடுக்க விரும்பிகிறோம். தாக்குதல் நடந்த 24 மணி நேரத்தில் நாம் அவர்களது எல்லை பகுதியில் ஊடுருவி அவர்கள் நாட்டில் தாக்குதல் நடத்தினோம். ஆனால் அதற்கு அவர்கள் நடத்திய பதில் தாக்குதலில் நமது துணிச்சல் மிகு வீரர்களை இழந்தோம். அதன்பின்னர் வந்த நெருக்கடியை நாம் அப்படியே விட்டுவிட்டோம்.  குறைந்த பட்சம் ஒரு கௌரவமான எதிர் தாக்குதல் நடத்தவாவது நமது படையினருக்கு நாம் ஒரு வாய்ப்பு வழங்கியிருக்கு வேண்டும். இந்த விவகாரத்தில் எங்கு தவறு நடந்தது என்பதை பற்றி கண்டறிய உயர்மட்ட விசாரணை குழு ஒன்றை அமைக்க வேண்டும் என நான் நமது பிரதமரிடம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

நாரதா நியூஸ் நிறுவனத்தின் நிறுவனர் மாத்யூ சாமுவேல். (புகழ்பெற்ற இந்திய புலனாய்வு பத்திரிகையாளர்)

 

 

Next Story

கோககோலாவை இந்தியாவிலிருந்து விரட்டியடித்த பெர்ணான்டஸ்!

Published on 30/01/2019 | Edited on 30/01/2019
amit george

 
சராசரி இந்தியனின் அழுக்குப் படிந்த கதர் உடையணிந்த எளிமையான தோற்றத்துடன் இருப்பார். மத்திய அமைச்சராக இருந்தபோதுகூட அவருடைய உடைகளை அவரே துவைத்து அணிவார். அமைச்சராக இருந்தாலும் நவீன வசதிகள் எதுவும் அவருடைய வீட்டில் இருக்காது.
 

அப்படிப்பட்ட பெர்ணான்டஸ் தனது 88 ஆவது வயதில் மரணத்தை தழுவியிருக்கிறார். கர்நாடக மாநிலம் மங்களூரில் கத்தோலிக்க கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்த பெர்ணான்டஸ் பள்ளியில் சில காலம் படித்துவிட்டு, பாதிரியார் ஆவதற்கான பயிற்சிக்கு அனுப்பப்பட்டார். ஆனால், அவர் பாதிரியார் ஆகவில்லை.
 

1949 ஆம் ஆண்டு வேலை தேடி மும்பை வந்தார். மிகவும் கஷ்டப்பட்ட பெர்ணான்டஸ் தெருக்களில் படுத்துறங்கும் நிலை ஏற்பட்டது. ஒரு பத்திரிகையில் பிழை திருத்துநராக வேலை கிடைத்தது.
 

“நான் மும்பைக்கு வந்த சமயத்தில் கடற்கரையோர பெஞ்ச்சுகளில் தூங்குவேன். நள்ளிரவு போலீஸ்காரர்கள் வந்து என்னை எழுப்பி வேறுபக்கம் போகச் சொல்வார்கள்” என்று பெர்ணான்டஸ் கூறியிருக்கிறார்.
 

வேலை கிடைத்த பிறகு, புகழ்பெற்ற சோசஸிஸ்ட் தலைவர் ராம்மனோகர் லோகியாவையும், புகழ்பெற்ற தொழிற்சங்கத் தலைவர் பிளாசிட் டி மெல்லோவையும் சந்தித்தார். அவர்கள் இருவரும் பெர்ணான்டஸ் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். அதன்பின்னர் அவர் சோசலிஸ்ட் தொழிற்சங்க இயக்கத்தில் இணைந்தார்.
 

தொழிற்சங்கத் தலைவராக வளரத் தொடங்கினார். 1950களில் மும்பை தொழிற்சங்க இயக்கத்தில் முக்கியத் தலைவராக உயர்ந்தார். மும்பை தொழிலாளர்களை தொழிற்சங்க மயமாக்கியதில் இவருடைய பங்கு மிகவும் முக்கியமானது. தொழிலாளர் மத்தியில் விரைவாக புகழ்பெறத் தொடங்கிய இவருக்கு தொழில் நிறுவனங்களின் எதிர்ப்பு மிகப்பெரிய சவாலாக இருந்தது. முதலாளிகளின் கூலிப்படையுடன் பல நேரம் சண்டையிட வேண்டியிருந்தது. இந்த மோதல்களில் பல முறை சிறை சென்றிருக்கிறார். மும்பை மாநகராட்சியில் உறுப்பினராக 1961 முதல் 68 வரை பொறுப்பு வகித்து, தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவதை கண்டித்து குரல் எழுப்பியிருக்கிறார்.
 

1967 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சம்யுக்த சோசலிஸ்ட் கட்சி வேட்பாளராக தெற்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸின் செல்வாக்குப்பெற்ற தலைவரான எஸ்.கே.படீலை தோற்கடித்தார். அத்தோடு படீலின் 20 ஆண்டு அரசியல் முடிவுக்கு வந்தது. இந்த வெற்றிக்கு பிறகுதான் ஜயண்ட் கில்லர் என்ற பட்டம் அவருக்கு கிடைத்தது.
 

இவருடைய செயல்பாடுகள் இவருடைய வளர்ச்சிக்கு உதவியாக இருந்தன. 1969 ஆம் ஆண்டு இவர் சம்யுக்த சோசலிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். 1973 ஆம் ஆண்டு கட்சியின் தலைவராகவே தேர்வு செய்யப்பட்டார்.
 

george


கட்சித்தலைவராக பொறுப்பேற்ற பிறகு 1974 ஆம் ஆண்டு அகில இந்திய அளவில் ரயில்வே போராட்டத்தை தலைமையேற்று நடத்தினார். 1947 ஆம் ஆண்டு முதல் 1974 வரை ரயில்வே ஊழியர்களுக்காக மூன்று சம்பளக் கமிஷன்கள் அமைக்கப்பட்டு பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டன. ஆனால், ஊழியர்களின் வாழ்வாதாரத்தை அரசு கண்டுகொள்ளவே இல்லை. இதையடுத்தே, ரயில்வே போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு, எல்லா எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டன. 1974 மே மாதம் 8 ஆம் தேதி தொடங்கிய இந்த போராட்டம் இந்தியாவையே நிலைகுலையச் செய்தது.
 

ஆனால், அன்றைய இந்திரா தலைமையிலான மத்திய அரசு மிகக் கொடூரமான அடக்குமுறையை தொழிலாளர்கள் மீது ஏவியது. ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 20 நாட்கள் தொடர்ந்த போராட்டம் குறித்து பல்வேறு கட்சித் தலைவர்கள் வேறுபட்ட குரலில் பேசத் தொடங்கியதால் கைவிடப்பட்டது.
 

இந்திரா அரசுக்கு எதிரான இந்த போராட்டம்தான் அவருடைய ஆத்திரத்தை அதிகப்படுத்த காரணமாகியது. ஏனெனில் முந்தைய வேலைநிறுத்தங்கள் அனைத்தும் கம்பெனிகளையும் தொழிற்சாலைகளையும் குறியாக வைத்து நடத்தப்பட்டன. ஆனால், ரயில்வே போராட்டம் அரசுக்கு எதிராக நடத்தப்பட்டது. ரயில்வே வேலைநிறுத்தம் ஏற்படுத்திய பாதிப்பு அரசாங்கத்தை நேரடியாகவே பாதித்தது.
 

இந்திரா காந்தி நெருக்கடி நிலையை பிரகடனம் செய்வதற்கு முதல் காரணமே இந்த வெற்றிகரமான போராட்டம்தான். எதிர்க்க முடியாத தலைவராக தன்னை எண்ணிக்கொண்டிருந்த இந்திராவை நிலைகுலையச் செய்தது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை.
 

ரயில்வே ஸ்டிரைக் முடிந்து ஒரே ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார் இந்திரா. அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்களும், பத்திரிகையாளர்கள், இந்திராவின் எதிரிகள் என எல்லோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். போலீஸ் பிடியில் சிக்காத தலைவர்களில் பெர்ணான்டஸ் முக்கியமானவர். அவரைக் கண்டுபிடிக்க முடியாத போலீஸ், அவருடைய தம்பி லாரன்ஸ் பெர்ணான்டஸை  கைது செய்து சித்திரவதை செய்தனர். பெர்ணான்டஸின் பெண் நண்பராக இருந்த ஸ்நேகலதா ரெட்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆஸ்த்துமா நோயாளியான அவர், நோய் தீவிரமடைந்ததால் விடுவிக்கப்பட்டார். ஆனால், சிறையில் அவருக்கு சரிவர மருத்துவ வசதி செய்து கொடுக்காததால் வெளியில் வந்த சில நாட்களில் இறந்தார்.
 

இதற்கிடையே 1975 ஆம் ஆண்டு பரோடா வந்த பெர்ணான்டஸ் அங்கு தனது நண்பர்களுடன் சேர்ந்து, வெடிகுண்டுகளைத் தயார் செய்து, இந்திராவின் பொதுக்கூட்டத்தை சீர்குலைக்கும் வகையில் வெடிக்கச் செய்தார் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. அரசு அலுவலகக் கட்டிடங்களை தகர்க்கவும், ரயில்வே தண்டவாளங்களை தகர்க்கவும் அவர் சதித்திட்டம் தீட்டி செயல்பட்டதாக மத்திய அரசு அவர் மீது குற்றம்சாட்டியது.
 

மாறுவேடங்களில் பயணித்த பெர்ணான்டஸ், தமிழகத்தில் அப்போதிருந்த திமுக அரசாங்கத்தின் ஆதரவோடு, கலைஞரின் பாதுகாப்பில் சில மாதங்கள் தங்கியிருந்தார். அவரை பாதுகாக்கும் பொறுப்பை சேலம் மாவட்ட திமுக செயலாளர் வீரபாண்டி ஆறுமுகம் ஏற்றிருந்தார் என்று சொல்லப்படுவதுண்டு.
 

ஏனென்றால், நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட போதும் தமிழ்நாட்டில் திமுக அரசாங்கம்தான் கலைக்கப்படாமல் இருந்தது. இந்தியாவிலேயே சுதந்திரக் காற்று சுவாசிக்க முடிகிற மாநிலமாக தமிழகம் மட்டுமே இருந்தது.
 

1976 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழகத்தில் திமுக அரசு கலைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பெர்ணான்டஸ் கொல்கத்தாவில் 1976 ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அவரை சிறையில் சித்திரவதை செய்யக்கூடாது என்று ஜெர்மனி, நார்வே, ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் இந்திரா அரசை வலியுறுத்தினார்கள். இதையடுத்து, திகார் சிறைக்கு மாற்றப்பட்ட பெர்ணான்டஸ் மற்றும் அவருடைய நண்பர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்று கூறப்பட்டது.
 

1977 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நெருக்கடி நிலை விலக்கிக் கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து 1977 மார்ச் மாதம் 21 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து உருவாக்கிய ஜனதாக் கட்சி தேர்தலில் வெற்றிபெற்றது. திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெர்ணான்டஸ் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முஸாபர்பூர் தொகுதியில் வெற்றிபெற்றார். மொரார்ஜி தலைமையில் அமைந்த ஜனதா அரசில் பெர்ணான்டஸ் தொழில்துறை அமைச்சாராக பொறுப்பேற்றார்.  
 

ge


இவருடைய பதவிக் காலத்தில்தான் இந்தியாவில் இயங்கிவந்த பன்னாட்டு வர்த்தக நிறுவனமான ஐபிஎம்மையும், கோககோலா நிறுவனத்தையும் இந்தியாவிலிருந்து விரட்டி அடித்தார். தனது தொகுதியில் ஒரு தொலைநோக்கி மையத்தையும், காந்தி பெயரில் அனல் மின் திட்டத்தையும் தொடங்கினார். ஜனதா கட்சியில் இணைந்த பிறகும் ஜனசங்கத் தலைவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதை பெர்ணான்டஸ் கடுமையாக கண்டித்து பேசினார். அவரைத் தொடர்ந்து பலரும் இதுகுறித்து பேசினர். இதையடுத்து ஜனதா கட்சியிலிருந்து ஜனசங் விலகியது. பிறகுதான் அந்தக் கட்சி தனது பெயரை பாரிதிய ஜனதா கட்சி என்று மாற்றியது. 1979ல் ஜனதா கட்சி அரசு கவிழ்ந்தது. 1980 ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் வெற்றி பெற்று இந்திரா பிரதமராக பொறுப்பேற்றார். பெர்ணான்டஸ் முஸாபர்பூரில் மீண்டும் வெற்றி பெற்றார். 1984ல் பெங்களூர் வடக்குத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1989லும் 1991லும்  முஸாபர்பூரிலேயே போட்டியிட்டு வென்றார். 1989 ஆம் ஆண்டு அமைந்த வி.பி.சிங் தலைமையிலான அரசில் ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றார். அந்த சமயத்தில்தான் கொங்கன் ரயில் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தினார். மங்களூரையும் மும்பையையும் ரயில் பாதையுடன் இணைத்தார். விடுதலைக்குப் பிறகு இந்திய அரசாங்கம் செயல்படுத்தி முதல் ரயில் பாதை இதுதான். அதுமட்டுமின்றி, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட மீட்டர் கேஜ் ரயில் பாதை மாற்றப்படாமலேயே கிடந்தது. முதன்முறையாக கலைஞர் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில்தான் ரயில் பாதைகளை அகல ரயில் பாதைகளாக மாற்ற பெர்ணான்டஸ் உத்தரவிட்டார்.
 

வி.பி.சிங் அரசு கவிழ்க்கப்பட்டவுடன், ஜனதாதளம் பல கூறுகளாக உடைந்தது. அதையடுத்து 1994 ஆம் ஆண்டு சமதா கட்சி என்ற பெயரில் சொந்தக் கட்சியை தொடங்கினார் பெர்ணான்டஸ். காலத்தின் கொடுமை என்னவென்றால், எந்த பாஜகவை ஜனதா கட்சியிலிருந்து வெளியேற்ற காரணமாக இருந்தாரோ அந்த கட்சியுடன் 1996 ஆம் ஆண்டு கைகோர்த்தார். ஆனால், வாஜ்பாய் ஆட்சி அமைக்க முடியாமல் ராஜினாமா செய்ததும், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தார். 1998 ஆம் ஆண்டு அதிமுக ஆதரவுடன் 13 மாதங்கள் மட்டுமே அமைந்த வாஜ்பாய் அமைச்சரவையிலும், 1999 ஆம் ஆண்டு திமுக ஆதரவுடன் அமைந்த வாஜ்பாய் அமைச்சரவையிலும் பெர்ணான்டஸ் இடம்பெற்றார்.
 

வாஜ்பாய் அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த சமயத்தில்தான், பொக்ரான் அணுகுண்டு வெடிக்கப்பட்டது என்று பெருமையாக பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால், அந்த அணுகுண்டு, நரசிம்மராவ் காலத்தில் தயாரிக்கப்பட்டு, தேவகவுடா காலத்தில் வெடிக்க மறுக்கப்பட்ட அணுகுண்டு ஆகும். அதன் தயாரிப்பு பணியில் பங்கேற்றிருந்த அப்துல்கலாமின் யோசனையால் அந்த அணுகுண்டை வெடிக்க வாஜ்பாய் ஒப்புதல் கொடுத்தார் என்பதுதான் உண்மை. அதனால் வாஜ்பாய் அரசுக்கு பெருமை கிடைத்தது என்றாலும், பாகிஸ்தான் அதுவரை மறைத்து வைத்திருந்த தனது அணுகுண்டை வெடித்து அதன் பலத்தை வெளிப்படுத்த வாய்ப்பளித்துவிட்டதாக விவாதம் கிளம்பியது.
 

அதுபோலத்தான், கார்கில் போரில் வாஜ்பாய் மற்றும் பெர்ணான்டஸின் பங்கையும் சிலாகித்து பேசப்படுவதுண்டு. ஆனால், கார்கில் மலை உச்சியை பாகிஸ்தான் வீரர்கள் எப்படி ஆக்கிரமித்தார்கள் என்ற விவரமும், அந்த போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வாங்கப்பட்ட சவப்பெட்டிகளில்கூட ஊழல் நடைபெற்றதாக வெளியான செய்திகளும் சர்ச்சைக்குரியவையாக தொடர்கின்றன.
 

எல்லாவற்றையும் மீறி, எல்லாவகையிலும் தான் ஒரு அப்பழுக்கற்ற சோசலிஸ்ட் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ளும் வகையில் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்தார் பெர்ணான்டஸ்.