Skip to main content

குடிப்பழக்கத்தை நிறுத்த கவுன்சிலிங்கில் புதிய முறை - ஜெய் ஜென்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 Manangal Manithargal Kathaikal JayZen Interview

 

கவுன்சிலிங் கொடுக்கும்போது தான் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்து நம்மோடு ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

கவுன்சிலிங் கொடுப்பதற்காக நிறுவனங்களுக்கு நாம் செல்லும்போது, அங்கு தனி நபர்களும் நம்மிடம் கவுன்சிலிங் பெற வருவார்கள். அப்படி ஒரு மனிதர் என்னிடம் வந்தார். அவருக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்று குடி. இன்னொன்று சிகரெட். இரண்டும் தவறு என்று தெரிந்தும் தான் செய்து வருவதாகவும், எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதற்காக ஏன் அவர் கவலைப்படுகிறார் என்று கேட்டபோது, இதனால் தனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என்றும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார்.

 

குடியால் வீட்டுக்கு நிதானம் இல்லாமலும் அவர் வந்துள்ளார். ஆனாலும் குடிப்பது தொடர்ந்தே வந்திருக்கிறது. எதார்த்தமாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் பின்பு மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இதை ஒரு வாழ்வியலாகவே பலர் மாற்றி வைத்துள்ளனர். ஒரு விஷயத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியவில்லையே என்பதுதான் தன்னுடைய குற்ற உணர்ச்சி என்று அவர் கூறினார். இதில் நீங்கள் நிச்சயம் தோற்பீர்கள், உங்களால் குடியை நிறுத்த முடியாது என்று அவரை வேண்டுமென்றே உசுப்பேற்றினேன். அவருக்கு கோபம் வந்தது. தன்னால் குடியை நிறுத்த முடியும் என்று அவர் கூறினார். 

 

இரண்டு வாரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வந்தது. கடந்த 14 நாட்களில் 4 நாட்கள் தான் குடிக்கவில்லை என்று கூறினார். மீதி 10 நாட்கள் குடித்தீர்களே என்று மீண்டும் அவரை உசுப்பேற்றினேன். குடும்பத்தில், தொழிலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று இயல்பாகவே அவர் விரும்பினார். மூன்று மாதம் கழித்து அவர் மீண்டும் பேசினார். அப்போதும் அவர் குடியை முழுமையாக நிறுத்தவில்லை. 7 வருடங்கள் கழித்து சமீபத்தில் அவரை சந்தித்தேன். இப்போது அவர் குடியை சுத்தமாக நிறுத்திவிட்டார். என்னுடைய டெக்னிக் பலித்தது. குடியை நிறுத்திய பிறகு குடும்பம் எவ்வளவு அழகானது என்பது புரிந்தது என்று கூறினார். குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஒரு போதை தான் என்பதை அவர் உணர்ந்தார்.

 

இது அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. இதுபோன்று பலர் மாறியிருக்கின்றனர். குடியால் பலருடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெயர் கெட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் மீள வேண்டும்.

 

 

Next Story

ஈகோவால் விரக்தி; காசிக்கு போகத் திட்டமிட்ட முதியவர் - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 24

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
jay-zen-manangal-vs-manithargal- 24

தான் சந்தித்த பல்வேறு கவுன்சிலிங்கில் பல வகையான மனிதர்களை குறித்தும், அவர் கவுன்சிலிங்க் கொடுத்த விதம் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

ஐம்பது வயது நபர் ஒருவர் என்னை பார்க்க வந்தார். பொதுவாக கவுன்சிலிங் என்று வருபவர்கள் நேரடியாக தனக்கிருக்கும் பிரச்சனையை சொல்லி ஆரம்பிப்பார்கள். ஆனால் இவரோ சும்மா பேசலாம் என்று வந்தேன் என்று சாதாரணமாகச் சொன்னார். பிறகு மெல்ல பேச்சு கொடுக்க கொடுக்க தன்னைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார். அவர் வாழ்க்கையில் எதுவெல்லாம் முக்கியமானதோ அது அனைத்தும் தோல்வியாக இருந்திருக்கிறது. சிறு வயதில் பிடித்த படிப்பை படிக்க முடியவில்லை, திருமணமான பிறகு மனைவி விட்டுச் சென்று பல வருடம் கழித்து மீண்டும் வந்து வாழ்கிறார், அதில் சில சிக்கல்கள்.

24 வயதில் இருக்கும் மகனிடம் சீரான உறவுமுறை இல்லை. மகளோ எவ்வளவு சொல்லியும் கேக்காமல் காதல் திருமணம் செய்து கொண்டு அங்கு மீண்டும் சில பிரச்சனைகள், மேலும் நிதி ரீதியாகவும் நிறைய பிரச்சனைகள். இப்போது அவர் என் தேவையே குடும்பத்திற்கு தேவைப்படவில்லை. எனவே எல்லாரையும் அழைத்து சொல்லிவிட்டு கண் காணாத இடத்திற்கோ அல்லது காசிக்கு சென்றிடலாம் என்று இருக்கிறேன் என்று  இயல்பாக ஆனால் விரக்தி கலந்து கூறினார்.

நான் எடுத்த முடிவு சரியா தவறா என்று உங்களிடம் கேட்க வரவில்லை.  ஆனால் நான் எடுத்த முடிவிற்கு வேறு பக்கம் இருக்கும் என்று சும்மா பேச வந்திருக்கிறேன் என்று மிகவும் தெளிவாக இருந்தார். நானும் அவர் போக்கிலேயே, சரி காசிக்கு போகலாம் என்றால் டிக்கெட் எடுத்தாச்சா, அங்கு போய் என்னவெல்லாம் செய்யப் போகிறீர்கள் என்று பொதுவாக பேசிவிட்டு, கண் காணாத இடத்திற்கு என்று சொன்னீர்களே அப்படி என்றால் என்ன, யார் உங்களுக்கு காசி போய்வர ஐடியா கொடுத்தது என்று கேட்டேன். அவரை பொறுத்தவரை தன்னை சுற்றி இருக்கும் பிரச்சனைகளிடம் இருந்து வெளிவர வேண்டும் என்றும், தன்னை யாருமே மதிக்கவில்லை என்பதுதான் அவருக்கு இப்படி கண் காணாத இடத்திற்கு போக தோன்றி இருக்கிறது.

நான் அவரிடம் சற்று கடினமாக பேசப் போகிறேன் என்று தொடங்கி, நீங்கள் ஒரு ஈகோயிஸ்டிக் பெர்சன் தான் சார் என்றேன். இங்கு யாரும் உங்களை மதிப்பதில்லை, பொருட்படுத்துவதில்லை என்று காசிக்கு போகிறீர்கள். ஆனால் காசிக்கு சென்றால் அங்கு யாரையுமே உங்களுக்கு தெரியாது. சாப்பாடு என்று கேட்டால் யாரோ ஒருவர் உணவு கொடுப்பர். இது போலவே நகர வாழ்க்கையில் நீங்கள் வாழ நினைப்பது ஈகோயிஸ்டிக் தான் என்று அவரிடம் சொன்னேன். மேலும் நீங்கள் எல்லாரிடமும் தான் செய்வது சரி என்று ஒத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

நான் என் மனைவிக்கு, மகனுக்கு, மகளுக்கு  நல்லது தானே செய்தேன் என்று அனைவரும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் நல்லவராகவே இருக்கலாம். ஆனால் உலகம் அப்படி ஏற்றுக் கொள்ளாது, உங்களை வேறு மாதிரியாகத்தான் பார்க்கும். இதுவரை நீங்கள் பார்க்காத இடத்தில் இயல்பாக வாழ்ந்து விட முடியும் என்று எப்படி நினைக்கிறீர்கள். உங்கள் மனைவி, உங்கள் மகன், மகள் என்பவர்களிடமே உங்களால் சரியாக வாழ முடியவில்லை என்று சிந்தனை இருக்கிறது. ஆனால் மற்றவர்கள் கூறியதை வைத்தும், சினிமாவில் பார்த்ததை வைத்தும் காசிக்கு சென்றால் சிறப்பாக வாழ்ந்திட முடியும் என்று நினைப்பது போலியான பாசிடிவிட்டி தானே. 

அவரும் சிரித்து, சரியாக பிடித்துவிட்டீர்கள் என்று ஒத்துக்கொண்டார். மேலும் இயற்கை இது தான். உங்கள் மனைவி, மகள், மகன் என்று உங்களுக்கு என்று தெரிந்தே அங்கீகரித்திருக்கிறது. அதை நீங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றேன். என்னவோ புரிந்தும் புரியாதது போல இருந்தார். நான் இப்படி இருக்கிறேன். எல்லாரும் தன்னை போலவே இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அதுதான் உங்களை காசிக்கு செல்ல நகர்த்துகிறது. கண்டிப்பாக நீங்கள் காசிக்கு போனாலும், இருப்பவர்களிலே நல்ல சாமியார் நான்தான் வேறு யாரும் இல்லை என்று தான் சொல்வீர்கள் என்று சிரித்துக் கொண்டே சொன்னேன். அவரும் சிரித்துவிட்டு சரி என்று கிளம்பினார். இரண்டு வாரம் கழித்து பேசுகையில், அவர் என்னிடம் நான் காசிக்கு போகவில்லை என்று அன்றே உங்களுக்கு தெரிந்திருக்கும். இருந்தாலும் சொல்கிறேன் நான் போகவில்லை என்று இயல்பாக சொன்னார். 

Next Story

குளிர்பானத்தில் மயக்க மருந்து; வட இந்திய பெண்ணுக்கு நடந்தது என்ன? - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 23

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
jay-zen-manangal-vs-manithargal- 23

வேலைக்காக இடம் பெயர்ந்த வடமாநில பெண்ணுக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பதினெட்டு வயதுள்ள பெண் அவர். படித்து முடித்து பியூட்டீஷியன் கோர்ஸ் முடித்து, இங்கு நம் தமிழ்நாட்டில் ஒரு அழகு நிலையத்தில், குறிப்பாக பெண்களுக்கு முடி திருத்தும் பகுதியில் வேலை பார்த்து வந்திருக்கிறார். அவர் என்னிடம் கவுன்சிலிங்கிற்கு வந்து இரண்டு பிரச்சனைகளை முன்வைக்கிறார். ஒன்று, ஒருநாள் அவர் சலூனில் முடி திருத்தும் வேலையை செய்து முடிக்க இரவு நெடுநேரம் ஆகிவிடுகிறது. வீட்டிற்கு செல்ல தயாராகும் போது, யாரோ ஒருவர் இவரது பருகும் பானத்தில், எதையோ கலந்துவிட்டதாக எண்ணுகிறார். ஏனென்றால் காலை விழித்தபோது அதே பார்லரில் எழுகிறார். 

மேலும் தன்னையும் மீறி ஏதோ ஒரு அநீதி நடந்துவிட்டது என உணர்வுப்பூர்வமாக எண்ணுகிறார். தன்னுடைய மேலாளரோ அல்லது கூட பணிபுரியும் எட்டு வடமாநிலத்தவரில் ஒரு நபரோதான் தனக்கு இதை செய்திருக்க வேண்டும் என நினைக்கிறார். ஆனால் மருத்துவப்பூர்வமாக உடலை பரிசோதனை செய்து பார்த்ததில் எதுவும் ஆகவில்லை  என்றே தான் தெரிகிறது. ஆதாரமும் எதுவுமில்லை. இருந்தாலும் இவருக்கு வேலை சார்ந்த இடத்தில ஒரு இனம் புரியாத பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இரண்டாவதாக, இவருக்கு இந்த ஊர் மக்கள் இயல்பும் உடையணியும் பழக்கம், உணவு முறை, வாழ்க்கை முறை எதுவுமே ஒத்து வரவில்லை ஒட்டவும் முடியவில்லை.

பொதுவாகவே வடகிழக்கு மக்களின் உணவு வகைகளும், அளவும் மிக குறைவு. அவர்களின் உடலமைப்பும் மிகச் சிறியதாக தான் காணப்படுகிறது. அவர்களின் வாழ்க்கை முறையும் படிப்பு முதன்மையாக அல்லாது அளவான உணவு, இயற்கை, விவசாயம் என்று குறுகிய வட்டம் உடையது. எனவே அந்த பெண்மணிக்கு நம் தமிழர்களின் பல்வேறு உணவு வகைகள், உண்ணும் பழக்கம், உடைகளின் பல்வேறு வகைகள், என்பதை பார்க்க ரொம்ப மிரட்சியாக இருந்தது. அவர் ஏற்கனவே டெல்லி, கொல்கத்தா என்று சென்று, குறிப்பாக மும்பையின் மக்கள் தொகையைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டு பேசினார்.

அவருக்கு  நம் ஊரில் அதிகாலை எழுந்து மாணவர்கள் டியூஷன் செல்வது பார்க்க மிக ஆச்சார்யமாக இருக்கிறது. மேலும் அவர் நம் ஊர்களில் படிப்பிற்கு தரும் முக்கியத்துவம் பார்த்து தன் வருங்கால குழந்தைகளை இங்கேயே படிக்க வைத்து வளர்க்கவே பிரியப்படுகிறார். ஆனால் நம் வாழ்க்கை முறையும், நம் இன மனிதர்களை பார்ப்பதே அவருக்கு மிக பயமாக இருந்திருக்கிறது. வடகிழக்கு ஊர்களையம், மலைகளையும் தாண்டி அதிகம் வெளியே செல்லாததால் இங்கு பரந்திருக்கும் வாழ்க்கை முறை அவரை மிகவும் பாதித்து இருக்கிறது. இது ஒரு இலகுவான கவுன்சிலிங்காக இருந்தது. நான் அவரிடம்  மெல்ல எடுத்து கூறினேன். படிப்பு சார்ந்த சமூகமாக இங்கு இந்தியாவில் குறிப்பாக தமிழகம் இருக்கிறது. இங்கு படிப்பு மூலமாக உலகம் முழுக்க தொடர்பான ஆட்களை பிடிக்கலாம். நீங்கள் எப்படி ஒரு வேலைக்காக இங்கு வந்தீர்களோ, அப்படியே நாளை உங்கள் குழந்தைகள் வெளிநாடுகளுக்கு படிப்பதன் மூலமாக எதிர்காலம் அமையும். அதேபோல் ஏதோ ஒன்று நடந்து விடும் என்று பயப்படும் உங்கள் மனம், இங்கு இல்லை நீங்கள் உங்கள் சொந்த கிராமத்திலிருந்து எங்கு சென்றிருந்தாலும் வரும் என்றெல்லாம் பேசி தெளிவுபடுத்தினேன். 

மேலும் அந்த ஒரு நாள் பார்லரில் ஏற்பட்ட அனுபவத்திற்கு ஆதாரமே இல்லை என்பதால், அதை நினைத்து தேவையில்லாமல் குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை. இது முழுக்க முழுக்க புது இடத்தினால் வந்திருக்கும் குழப்பம். அவரும் நன்கு தெளிவு அடைந்து இப்போது சொந்தமாக பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார். தனக்கு வரும் கஷ்டமர்சிடம் இருந்தே நன்றாக தமிழ் கற்றுக்கொண்டு, கோயம்புத்தூரில் திருமணம் ஆகி இப்போது அவருக்கு  இரட்டை குழந்தைகள் இருக்கின்றது.