மாஃபியா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய படத்தின் நாயகன் அருண் விஜய், படம் சம்பந்தமான சுவாரசியமான நிகழ்ச்சிகளை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தி பேசினார். விழாவில் அவர் பேசியதாவது, " திரைத்துறையில் இந்த வருடம் நான் 25-வது வருடத்தில் காலடி எடுத்து வைக்கிறேன். இத்தனை ஆண்டில் நிறைய கற்றுக்கொண்டேன். இதற்கு நான் மட்டுமே காரணம் அல்ல. இங்கே இந்த விழாவுக்கு வந்திருக்கும் பத்திரிகை நண்பர்களும் அதற்கு மிக முக்கிய காரணம். என்னுடைய குறை நிறைகளை எனக்கு சொல்லிக்கொடுத்து என்னை அடுத்த கட்டம் செல்வதற்கு எப்போது உத்வேகமாக அவர்கள் தொடர்ந்து இருந்து வருகிறார்கள். உங்கள் பாதம் தொட்டு வணங்குறேன். இந்த மகிழ்ச்சியான சமயத்தில் மாஃபியா திரைப்படம் வெளியாக இருக்கின்றது. தடம் படத்திற்கு பிறகு ஒரு வருடம் கழித்து இந்த படம் வெளிவர இருக்கிறது. கார்த்திக் மாதிரியான இளம் இயக்குநர்களிடம் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. அவருடைய பார்வை புதிதாக இருந்தது. அவர் கதை சொல்லிய போதே அதுகுறித்த ஈர்ப்பு எனக்கு ஏற்பட்டது. நம்முடைய கதாப்பாத்திரத்தை எப்படி காட்டப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எனக்கே அதிகம் எழுந்தது. இந்த படம் எப்படி இவ்வளவு சீக்கிரம் பண்ண முடிந்தது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்ததுள்ளது. அதற்கு மிக முக்கிய காரணமே இயக்குநர் கார்த்திக்கின் வேலைதான்.
படத்திற்கு தேவையான முன்னேற்பாடுகளை அவ்வளவு நேர்த்தியாக முன் கூட்டியே செய்ததால் தான் படத்தை இவ்வளவு குறுகிய காலத்தில் எடுக்க முடிந்தது. எனக்கே அவர் படத்தை தற்போதுதான் காண்பித்தார். அவ்வளவு வேலைகளையும் முடித்துவிட்டு தற்போது அதை 100 சதவீதம் நல்ல முறையில் கொண்டு வந்துள்ளார். இந்த படத்தை தியேட்டரில் பார்த்தால்தான் அதனுடைய முழு சுவாரசியத்தையும் அறிய முடியும். அந்த மாதிரியான கதைக்களத்தையும், சவுண்ட் சிஸ்டமும் இந்தப் படத்தில் இருக்கும். சில நாட்கள் எல்லாம் இரவு பகல் பாராமல் சூட்டிங் செய்ய வேண்டி இருந்தது. ஆனால் எங்களுக்கு எந்த கஷ்டமும் தெரியவில்லை. எனென்றால் கார்த்தியோட எனர்ஜி லெவல் அந்த மாதிரி இருந்தது. அதனால் எங்களுக்கு இந்த சிரமும் எந்த காட்சியிலும் இல்லாமல் முழு படத்திலும் நடிக்க முடிந்தது. இரவு 2 மணிக்கு சூட்டிங் நடைபெற்றாலும் அப்போது அதே எனர்ஜி லெவலுடனே காட்சிகளை இயக்குநர் எடுத்தார். அதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். லைட் மேன் வரைக்கு அனைவரிடமும் முழு ஒத்துழைப்பு இருந்தது. அவங்களுக்கு எல்லாம் அது தேவையே இல்லை. இருந்தாலும் அனைவரும் அவர்களுடைய பெஸ்டை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிறப்பாக செயல்பட்டார்கள். அதனால்தான் நாங்கள் எந்த இடத்திலும் சோர்வடையாமல் வேலை செய்ய உறுதுணையாக இருந்தது" என்றார்.