Skip to main content

விவசாயிகளின் மாபெரும் பேரணி வெற்றி! - வழிநடத்திய விஜூ கிருஷ்ணனை தெரியுமா?

Published on 13/03/2018 | Edited on 14/03/2018
march

 

நாட்டையே திரும்பிப் பார்க்கச் செய்திருக்கிறது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற விவசாயிகளின் மாபெரும் பேரணி. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நாசிக் மாவட்டத்தில் சில நூறுபேருடன் தொடங்கிய இந்தப் பேரணி, ஆசாத் மைதானத்தை வந்தடைந்த போது சுமார் 50ஆயிரத்திற்கும் அதிகமாகி இருந்தது. சுமார் 200 கிமீ தூரத்திற்கு நடந்தே மும்பையின் ஆசாத் மைதானத்திற்கு வந்து, அங்கு முகாமிட்டிருந்தனர் விவசாயிகள். தங்களுக்கு உணவளிக்க பாடுபடுபவர்களுக்கு மும்பைவாசிகளும், டப்பாவாலாக்களும் உணவளிக்க முன்வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

 

விவசாயக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட இந்தப் பேரணி, போராடிய விவசாயிகளுக்கு வெற்றியையும், புதிய உத்வேகத்தையும் தந்திருக்கிறது. அவர்களுக்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் மாற்று அரசியலை முன்வைக்கும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் பலருக்கும் இந்த வெற்றி புத்துணர்ச்சியை அளித்திருக்கிறது. ஒருவேளை கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில், மகாராஷ்டிரா சட்டமன்றத்தை முற்றுகையிடும் முடிவில் அமைதியாகக் காத்திருந்தனர். ஆனால், அதற்கு இடம் கொடுக்காத வகையில், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக தேவேந்திர பட்நாவிஸ் அரசு எழுத்துப்பூர்வ வாக்குறுதி அளித்திருக்கிறது.

 

கடந்த பல தசாப்தங்களாக நாடு பார்த்திராத ஒரு மாபெரும் பேரணி வெற்றிபெற்றதற்கு, எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாத வண்ணம் அதில் கலந்துகொண்டவர்கள் கட்டுப்பாட்டோடு செயல்பட்டதே முக்கிய காரணம் என்று சொல்லலாம். இந்தப் பேரணியை வழிநடத்திச் சென்ற விஜூ கிருஷ்ணனைத் தெரியுமா உங்களுக்கு?

 

vijoo

 

டிசம்பர் 20, 1946ஆம் ஆண்டு கேரளாவின் வடக்கில் அப்போது மலபார் என்று அழைக்கப்பட்ட மெட்ராஸின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதியில் உள்ள குக்கிராமமான கரிவெல்லூரில், நிலம், உணவு மற்றும் சுதந்திரம் கோரி கர்ஷாகா சங்கம் எனும் விவசாயிகள் கூட்டணியின் சார்பில் மாபெரும் எழுச்சி உருவானது. இந்த எழுச்சிக்குக் காரணமாக இருந்த திடில் கண்ணன் மற்றும் கீநெரி குன்ஹாம்பு ஆகியோரை மலபார் சிறப்பு காவல்படை சுட்டுக்கொன்றது. சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திலேயே நாட்டின் மாபெரும் விவசாயிகள் எழுச்சி பிறந்த தருணம் அது.

 

சுமார் ஏழு தசாப்தங்களுக்குப் பிறகு அதே குக்கிராமத்தில் இருந்து வந்த விஜூ கிருஷ்ணனின் வழிநடத்தலில்தான் 50ஆயிரம் விவசாயிகளின் மாபெரும் பேரணி வெற்றிபெற்றுள்ளது. விஜூ கிருஷ்ணன் டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக் கழகம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்தவர். தற்போது நடைபெற்ற மாபெரும் பேரணிக்கு வித்திட்ட அகில இந்திய கிசான் சபை என்ற விவசாய சங்கத்தின் இணை செயலாளராக இருக்கிறார். 

 

‘நாடு முழுவதும் விவசாயிகள் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ராஜஸ்தானில் கூட இப்படி ஒரு பேரணி நடைபெற்றது. ஆனால், அதற்கு இப்போது கிடைத்திருப்பதைப் போன்ற ஊடகவெளிச்சம் கிடைக்கவில்லை’ என வருத்தத்துடன் தெரிவிக்கிறார் விஜூ கிருஷ்ணன். மேலும், ‘பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டுமே தங்களது நவ-தாராளமய கொள்கைகளால் விவசாயிகளை துன்பத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. அதிலும் குறிப்பாக பா.ஜ.க. தனது இனவாத செயல்பாடுகளால் வஞ்சிக்கிறது. இந்தப் போராட்டங்கள் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் தொடரும் என்பதே எங்கள் எண்ணம். இந்த வெற்றி எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையையும், அகில இந்திய கிசான் சபையின் வலிமையையும் உயர்த்தித் தந்திருக்கிறது’ என நம்பிக்கை ததும்பும் குரல்களில் சொல்லியிருக்கிறார்.

 

vijoo

 

தகிக்கும் வெயிலில் பாதங்கள் கொப்பளித்து, வெடித்து ரத்தம் வடிந்தும் ஓயாது நடந்து தங்களது உரிமையான வெற்றியை தங்களுக்கே உரியதாக்கி இருக்கிறார்கள் விவசாயிகள். அவர்களின் இந்த வெற்றி முற்றிலும் பாராட்டுக்குரியது. ‘நீங்கள் மலர்களையெல்லாம் வெட்டி வீழ்த்தினாலும், வசந்தம் வருவதை யாராலும் தடுக்க முடியாது’ என்ற பாப்லோ நெருடாவின் கவிதையை உணர்த்துகிறது இந்த வெற்றி.