Skip to main content

கவிஞரைக் கடத்திய கவிஞர்!

கவிக்கோ அப்துல்ரகுமானை அறியாதவர்கள் இருக்க முடியாது. தமிழின் தலைசிறந்த தத்துவச் சிந்தனையாளரான அவர், உலக இலக்கியஙக்ளைக் கற்றவர். உலகின் புகழ்பெற்ற கவிதை வடிவங்களைத் தமிழில் அறிமுகப்படுத்திய பெருமையும் அவருக்கே உண்டு. கஜலின் காதலரான அவரால்தான் இன்று தமிழ்க் கவிஞர்கள் பலரும், கஜலின் தாக்கத்தில் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். 'கற்பனைகள் / என்னிடமிருந்து / என்னை /  இழுத்துச்செல்கின்றன. /- என்றெல்லாம் எழுதிய, கற்பனைக்கு எட்டாத கற்பனையாளர். இவரைக் கவிஞர்களின் கவிஞர் என்று சொல்லலாம். அவரோடு அவரது கடைக்காலங்களில் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. 


கவிக்கோ கவிதையால் மட்டுமல்ல; தனிமனிதப் பண்பிலும் சிகரம் போன்றவர். சக கவிஞர்களின் மீது கொஞ்சமும் பொறாமை கொள்ளாதவர். சக இலக்கியவாதிகளையும் பேரன்பால் நனைத்தவர். அப்படிப்பட்ட அவர் ஒரு கவிஞரைக் கடத்தினார். கடத்தப்பட்டவரும் சாதாரணமானவரல்ல. அந்தக் கடத்தல் அராஜகக் கடத்தல் அல்ல; அன்புக் கடத்தல். அந்த நாள் அடிக்கடி என் நினைவில் சுழன்று இதயத்தை ஈரப்படுத்திக்கொண்டே இருக்கிறது.

kaviko abdul rahman story


ஒருநாள் இரவு கவிக்கோ கைபேசியில் வந்தார். பேச்சுவாக்கில், “இன்று கவிஞர் மு.மேத்தாவின் 70 ஆவது பிறந்தநாள். அவரை நேரில் சென்று வாழ்த்தினேன்” என்றேன். ”அப்படியா? என்றவர், ”நானும் வாழ்த்தவேண்டுமே” என்றார்.”கைபேசியில் அவரை அழைத்து வாழ்த்துங்கள் என்றேன்”. “இல்லை, நேரில் வாழ்த்தவேண்டும். நீங்களும் வாருங்கள்” என்றார். அப்போது மணி இரவு மணி 8-ஐ கடந்துவிடிருந்தது.“இந்த நேரத்தில் நான் கிளம்பி வரவேண்டுமா?”- என்று தயங்கிய என்னை, வற்புறுத்தி அழைத்தார். நான் கவிக்கோவின் திருவான்மியூர் கடற்கரைச் சாலை இல்லத்திற்குப் போய்ச் சேர்ந்தபோது இரவு மணி 9.45.
 

கவிக்கோ உற்சாகமாகக் காத்திருந்தார். அவரது பேரனான டாக்டர் அசீமைக் கார் ஓட்டச் சொன்னார். பெசன்ட் நகர் ராஜராஜன் சாலையில் இருக்கும் மு.மேத்தாவின் இல்லத்திற்குச் சென்றோம். போகும் போதே கவிக்கோ வந்துகொண்டிருக்கிறார் என்று அவருக்குத் தகவல் கொடுத்தேன். இந்த நேரத்திலா? என்று மேத்தா தயங்கினார். ஏனெனில் அண்மையில்தான் அவர் இதய அறுவை சிகிச்சையை முடித்திருந்தார்.

kaviko abdul rahman story

(ஆரூர் தமிழ்நாடன்)

எனினும் வாசலில் காத்திருந்த மேத்தா, கவிக்கோவை வரவேற்றுவிட்டு, ’அண்ணே, இதற்காக இவ்வளவு தூரம் வரவேண்டுமா? உங்கள் வாழ்த்தில் மகிழ்கிறேன்” என்றார். கவிக்கோ அவரை விடவில்லை. ”காரில் ஏறுங்கள் மேத்தா” என்றார். “எங்கே?” என மேத்தா கேட்க, ”அப்படியே ஒரு ரவுண்ட் பேசிக்கொண்டே போய் வருவோம்” என்றார் கவிக்கோ. அவரது வற்புறுத்தலில், வேறு வழியின்றி மேத்தா காரில் ஏறிக்கொண்டார். 

இப்படி அந்த இரவு நேரத்தில் கவிஞர் மேத்தாவை அன்பாகக் கடத்திய கவிக்கோ, காரை நேராக பெசன்ட் நகரில் இருக்கும் கேரள ஓட்டல் ஒன்றிற்கு விடச்சொன்னார். நாங்கள் மறுத்தும் கேளாமல் விதவிதமாக  அங்கே  உணவுவகைகளை வரவழைத்தார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு சாப்பாட்டில் மிகுந்த கட்டுப்பாட்டைக்  கடைபிடித்து வந்த மேத்தா, கவிக்கோவின் உபசரிப்பில் மிரண்டுபோனார். எனினும் கவிக்கோ விடவில்லை. தன் அன்பால் எங்களை உபசரித்துத்  திக்கு முக்காட வைத்தார்.
 

பின்னர், கடற்கரையோரம் காரை நிறுத்தச் செய்து, கொஞ்ச நேரம் இதயம் குளிர இலக்கியம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, மேத்தாவை, அவரது வீட்டில் கொண்டுபோய்ச் சேர்ந்தபோது நள்ளிரவு 12 மணியைத் தாண்டிவிட்டது. ஒரு சக கவிஞனைப் பேரன்பின்  மிகுதியால் இரவில் கடத்தில் சென்று, அவரது பிறந்தநாளைக் கொண்டாடிய கவிக்கோவின் மாண்பை, எண்ணிப் பார்த்தால், இதயத்தை ஏக்கம் வந்து தாக்குகிறது. இப்படியொரு கவிஞரை எப்போது பார்ப்பது?

  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...