Skip to main content

எழுதும்போது நினைக்கவேயில்லை, ஆனால் எஸ்.பி.பி. இறந்தபோது எல்லோருமே என் வரிகளை பகிர்ந்தாங்க! - கவிஞர் முத்துலிங்கம்

Published on 01/10/2020 | Edited on 03/10/2020
பர

 

 

பிரபல பாடகர் எஸ்.பி.பி செப்டம்பர் 25 ஆம் தேதி காலமானார். அவருடைய மறைவிற்கு இந்திய பிரதமர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். தாமரைப்பாக்கத்திலுள்ள அவரது பண்ணையில் எஸ்பிபி நல்லடக்கம் செய்யப்பட்டார். அவரின் இறப்பை ரசிகர்கள் அவ்வளவு எளிதாக கடக்க முடியவில்லை. தாயின் தாலாட்டாக இருந்த அவரின் பாடல்களை, இனி யார் பாடுவார் என்ற ஏக்கம் இசையை அறிந்த அனைவரையும் சூழ்ந்து நின்றது. இசை தாயின் தலைமகனை இழந்த சோகத்தில் அவருடைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அதில் நிச்சயம் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் அவருடன் பணியாற்றி பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம் அவர்களிடம் எஸ்பிபி தொடர்பாக சில கேள்விகளை நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவருக்கே உரிய பாங்கில் பதில் அளித்தார், அவை பின்வருமாறு,

 

மூன்று தலைமுறைகளாக தமிழ் சினிமாவில் பாட்டெழுதி வருகிறீர்கள். பல இயக்குநர்கள், பாடகர்கள், இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றி வந்துள்ளீர்கள். அண்மையில் பாடகர் எஸ்பிபி உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளார். அவரின் இந்த இழப்பை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அவரோடு பணியாற்றிய அனுபவத்தை பற்றி கூறுங்கள்? 

 

எஸ்பிபி-யின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாது. இது வெறும் வாய் வார்த்தைக்காக கூறுவது அன்று. நெஞ்சத்தில் இருந்து வரும் வார்த்தை. எத்தனை பேருக்கு அரசு மரியாதையோடு இறுதி மரியாதை கிடைக்கும் என்று யோசித்து பார்த்தாலே இதற்கான விடை கிடைக்கும். அத்தனை ஈடுசெய்ய முடியாத கலைஞன் தான் எஸ்பிபி அவர்கள். பெரும்பாலும் பாடகர்கள் இசை அமைப்பாளர் மற்றும் இயக்குநர்களுடன் மட்டுமே பயணிக்க வாய்ப்பு கிடைக்கும். சில பேருக்கு மட்டுமே பாடகர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது நிஜம். உண்மையிலேயே எஸ்பி பாலசுப்ரமணியன் பாராட்ட பட வேண்டியவர். கிட்டதட்ட 40,000 பாடல்களை நாட்டின் பல்வேறு மொழிகளில் அவர் பாடியுள்ளார். இது அவ்வளவு எளிதில் யாரும் செய்ய முடியாத ஒன்று. 6 முறை தேசிய விருது பெற்றுள்ளார். மாநில அரசுகளிடம் இருந்து விருது வாங்கி இருக்கிறார். ஆந்திர அரசிடம் 25 முறை நந்தி விருதை வாங்கியுள்ளார். உலகம் முழுவதும் அவரின் ரசிகர்கள் இருக்கிறார்கள். 

 

நடிகர்களுக்கு ஏற்றவாறு பாடுவது, பேசுவது, சிணுங்குவது போன்ற ஆற்றல் பெற்ற பாடகர் அவர் ஒருவர் மட்டும் தான். அந்த வகையில் அவரின் இழப்பு நடிகர்களுக்கும் பேரிழப்புதான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதனால் தான் அவருக்கு பிரதமர் முதல் மாநில முதல்வர்கள் வரை அனைவரும் அவரின் இறப்புக்கு வருத்தம் தெரிவித்தனர். இதுவரை ஒரு பாடகருக்கு அரசாங்க மரியாதையை தமிழக அரசு கொடுத்து பார்த்துள்ளீர்களா? அதுவே அவரின் ஆளுமைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக நான் இதனை பார்க்கிறேன். புதுச்சேரியில் பிரபஞ்சன் மறைவுக்கு அந்த மாநில அரசு அரசு மரியாதையை செய்தது. அதற்கு பிறகு தமிழக அரசு தற்போது செய்துள்ளது. இது பாராட்டப்பட வேண்டிய ஒன்றாக நான் கருதுகிறேன். 

 

என்னுடைய பாடல்களை நிறைய முறை அவர் பாடி இருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை அவர் நிச்சயம் அவர் பாடியிருப்பார். ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் நான் இரண்டு பாடல்களை எழுதியிருந்தன். ‘ராக தீபம் ஏற்றும் வேளையில்’ என்ற என்னுடைய பாடலை அவர் மிக அழகாக பாடியிருந்தார். நான் இந்த ஆண்டில் பாடிய பாடல்களில் இது மிகவும் சிறந்த பாடல் என்று அப்போது அவர் தொலைக்காட்சி பேட்டிகளில் தெரிவித்திருந்தார். அடுத்து ‘உதய கீதம்’ என்ற படத்தில் நான் ஒரு பாடலை எழுதி இருந்தேன். அவருடைய இறப்பின் போது நிறைய பேர் அந்த பாடலைத்தான் சமூக ஊடகங்களில் இரங்கலாக தெரிவித்தார்கள். ‘இந்த தேகம் மறைந்தாலும் இசையாக வருவேன்’ என்று அந்த பாடலை எழுதி இருப்பேன். அதையே மக்கள் அனைவரும் அவர் இறந்தபோது ஞாபகப்படுத்தினார்கள். எழுதும்போது நான் எதை நினைத்து எழுதவில்லை. ஆனால் தற்போது அவருக்கு இந்த பாடல் முழுவதுமாக பொருந்துகிறது. 
 


 

Next Story

எஸ்.பி.பி.யின் தாய்ப் பாசம்!

Published on 25/09/2020 | Edited on 25/09/2020

 

SBP's -Parent- Affection

 

எஸ்.பி.பி.யின் முழுப்பெயர் ஸ்ரீபதி பண்டிதாரத்ல பாலசுப்ரமணியம் என்பதாகும். இதன் சுருக்கமே எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்றாகி, பின்னர் எஸ்.பி.பி.யாகிவிட்டது. 1946 ஜூன் 4-ல்  ஆந்திர மாநில எல்லையோர கிராமமான கொணாடம்பேட்டையில் பிறந்த அவரது அப்பா, சாம்பமூர்த்தி புகழ்பெற்ற ஹரிகதா கலைஞராகத் திகழ்ந்திருக்கிறார். ஊர் ஊராகச் சென்று கதா காலட்சேபத்தை நடத்திவந்த அவரது பாடல்களைக் கேட்டுக் கேட்டுதான், எஸ்.பி.பி., தனது இசையார்வத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார். தன் அப்பாவை, இசை குருவாகவும் அவர் ஏற்றுக்கொண்டதால், அப்பா மீது அவருக்கு அலாதியான பக்தி. அதனால், ஆந்திர மாநிலம் நெல்லூரில் தனது அப்பா சாம்பமூர்த்திக்கு சிலை ஒன்றையும் வைத்திருக்கிறார் பாலு.   


அதேபோல், தான் பிறந்த கிராமமான கொணாடம்பேட்டை மீதும் தீராக் காதல்கொண்ட  பாலு, ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அங்கே செல்வாராம். இந்தக் கிராமத்தில் இருக்கும் பிள்ளையார் கோயிலில்தான், எஸ்.பி.பி. பெற்றோரின் திருமணம் நடந்ததாம். அதை  அந்த  கிராமத்துக்காரர்களிடம் சொல்லிச் சொல்லி மகிழ்வாராம் பாலு. மேலும், தான் பிறந்த கிராமத்துக்குக் கழிவறை வசதிகளைச் செய்துகொடுத்ததோடு, அக்கிராமப் பிள்ளைகளின் கல்விக்காக பள்ளிக் கூடத்தையும், தன் சொந்த செலவில் கட்டிக் கொடுத்திருக்கிறாராம் எஸ்.பி.பி. அந்த கிராமம் எஸ்.பி.பி.,யின் அன்பு மழையில் கடைசிவரை நனைந்து பல நலத்திட்ட உதவிகளால் மகிழ்ந்திருக்கிறது. எஸ்.பி.பி. மறைவுச் செய்தியால், இப்போது கொணோடம்பேட்டை கிராமமே சோகம் சூழ்ந்த பகுதியாகக் காட்சியளிக்கிறது. 

 

சின்ன வயதிலிருந்தே எஸ்.பி.பி., அம்மா சகுந்தலாவின் செல்லப்பிள்ளையாம். மகன் காலப்போக்கில் புகழின் உச்சியில் ஏறிக்கொண்டிருந்த நிலையில், மகனின் புகழ்கண்டு அவர் மகிழ்ந்தாலும், மகனுடன் அதிகநேரம் இருக்க முடியவில்லையே என்று கலங்குவாராம். இதனால் பாலு, தான் எங்கிருந்தாலும் அடிக்கடி ஃபோன் போட்டு அம்மாவை விசாரிப்பாரம். வயது முதிர்ந்த நிலையில் மகள் சைலஜாவுடன் ஆந்திர மாநில நெல்லூரில் வசித்துவந்த சகுந்தலா அம்மாள், கடந்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதிதான் முதுமை காரணமாக மரணமடைந்தார். அந்த நேரத்தில் லண்டனில் இருந்த எஸ்.பி.பி தகவல் கேள்விப்பட்டதும், தனது அத்தனை நிகழ்சிகளையும் ரத்துசெய்துவிட்டு, நெல்லூருக்குப் பறந்துவந்து, அம்மாவின் உடலைப் பார்த்துக் கண்ணீர் விட்டிருக்கிறார். அம்மா இறந்த ஒன்றரை வருடத்தில் எஸ்.பி.பி.யும் மரணத்தைத் தழுவிவிட்டார்.

 

 

 

Next Story

எஸ்.பி.பி-க்காக சபரிமலையில் சிறப்பு பிரார்த்தனை! 

Published on 21/08/2020 | Edited on 21/08/2020
spb

 

 

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார். இதையடுத்து அவர் பூரண நலம்பெற வேண்டி பல்வேறு பிரபலங்கள் பிரார்த்தனை செய்வதாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள். அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தினமும் எஸ்.பி.பியின் உடல்நலம் குறித்து வீடியோ பதிவுகள் மூலம் தெரிவித்து வரும் நிலையில், இயக்குனர் பாரதிராஜா எஸ்.பி.பி உடல்நலம் குணமாக வேண்டி நேற்று மாலை 6 மணிக்கு எஸ்.பி.பி பாடலை ஒலிக்கச்செய்து கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்தார். 

 

இதை ஆதரிக்கும் வகையில் திரைப்பிரபலங்கள் பலரும் கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து நேற்று மாலை 6 மணிக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வீடுகள், கோயில்கள் என அனைத்திலுமே எஸ்.பி.பிக்காக பிரார்த்தனை செய்தார்கள். இந்நிலையில் சபரிமலைக் கோவிலில் எஸ்.பி.பி. விரைவில் குணமடைய வேண்டி உஷா பூஜை செய்யப்பட்டு சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.