Skip to main content

கால்வாய் வெட்டி கல் பாலம் அமைத்துக் கொடுத்த கண்ணப்பர் தம்பிரான்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

Kannapar Thambiran who built the canal and the stone bridge

 

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் (திருப்பெருந்துறை) குளத்துக்குடியிருப்பு கிராமத்தில் பழமையான பாலம் இருப்பது குறித்து முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பூமி. ஞானசிவம் அளித்த தகவலின் பேரில் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் ஆ. மணிகண்டன், தலைவர் கரு. ராசேந்திரன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டு பாலத்திலிருந்த கல்வெட்டை படியெடுத்தனர். அப்போது திருவாவடுதுறை ஆதீனத்தின் காறுபாறாக இருந்த கண்ணப்ப தம்பிரான் உத்தரவுப்படி பாலம் கட்டப்பட்டது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

 

இதுகுறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் மங்கனூர் ஆ. மணிகண்டன் கூறியதாவது, “திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் திருப்பெருந்துறை எனும் ஆவுடையார்கோவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தலமாகும். ஆதீனத்தின் பதினேழாவது பட்டமாக இருந்த அம்பலவான தேசிகர் காலத்தில் காறுபாறாக இருந்த கண்ணப்ப தம்பிரான் 1889 வருடம் ஆகஸ்டு மாதம் மக்களின் விவசாய பயன்பாட்டிற்காக, வெள்ளாற்றிலிருந்து வாத்தலையை (சிறு கால்வாய்) வெட்டி ஆவுடையார்கோவில் பெரிய கண்மாய்க்கு நீரைக் கொண்டு வந்துள்ளார்.

 

இடையில் குளத்துக்குடியிருப்பு கிராம மக்கள் வயல்களுக்கும், திருப்பெருந்துறைக்கும் சென்று வருவதற்கு கல் பாலத்தையும், பாலத்திலேயே சிறப்பான பலகை அடைப்பு முறையில் நீரின் போக்கை கட்டுப்படுத்துவதற்கு கலிங்கு அமைப்பையும் ஏற்படுத்தியுள்ளார். போக்குவரத்து மற்றும் நீர் மேலாண்மை ஆகிய இரு தேவைகளையும் உணர்ந்து ஒரே கட்டுமானத்தில் இதனை நிறைவேற்றியுள்ளார்.  இது முழுக்க கருங்கல், செங்கல், சுண்ணாம்பு கொண்டு கட்டப்பட்ட ஒரு கட்டுமானமாக உள்ளது.

 

கல்வெட்டு : 


மூன்றரை அடி உயரம், ஒன்றரை அடி அகலத்துடன் உள்ள பலகைக் கல்லில், 14 வரிகளில்.. “சிவமயம் 1889 வருசம் ஆகஸ்டு மீ. விரோதி வருசம் ஆவணி மீம் இந்த வாத்தலையும் வெட்டியிந்த கலுங்கு வேலையும் ட்றஸ்ட்டி கண்ணப்ப தம்பிரான் அவர்கள் உத்திரவுபடி கட்டி முடித்தது” என்று பாலத்தின் உட்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கல்வெட்டில் தகவலாக பொறிக்கப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் வெள்ளாற்று (காட்டாறு) தண்ணீரை அணைக்கட்டி தேக்கி சுமார் 2 கி.மீ தூரம் வாத்தலை வெட்டி சுமார் 500 ஏக்கர் பரப்பளவுள்ள பெரிய குளம் கண்மாயில் தண்ணீரை நிரப்பி விவசாயம் செழிக்கச் செய்துள்ளார். அந்தப் பாலத்தில் செல்லும் கிராம மக்கள் அந்த இடத்தில் கடவுள் வழிபாடாக நினைத்து சிதறு தேங்காய் உடைத்துச் செல்வதை இன்றும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

 

கண்ணப்ப தம்பிரான் :


திருவாவடுதுறை ஆதீனத்தின் முதல் பட்டமேற்று நமசிவாய தேசிகர் என்பவர் 15 ஆம் நூற்றாண்டில் ஆதீனத்தை தொடங்கியுள்ளார். கண்ணப்ப தம்பிரான் 16, 17 தேசிகர் காலத்தில் வாழ்ந்துள்ளார். வேணுவன லிங்க தம்பிரான் பெரிய காறுபாறாக இருந்தபோது இவர் காறுபாறாக இருந்துள்ளார். 

 

22.10.1887 ஆம் ஆண்டு வேணுவன லிங்கனார் விருப்பப்படி திருவாவடுதுறை ஆதீன மடத்தில், சேற்றூர் மற்றும் சிவகிரி ஜெமீன்தார்கள் கொடுத்த தேக்கு மரத்தைக் கொண்டு புதுமையான கட்டுமான முறையில் கொலு மண்டபத்தை அமைத்தார். இதற்கு வேணுவன லிங்க விலாசம் என பெயரும் இட்டார். ஆவுடையார்கோவில் திருப்பணியிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். இதன் மூலம் இவர் கட்டுமான நுட்பத்தில் தேர்ந்த அறிவு பெற்றிருந்தவர் என அறிய முடிகிறது. 

 

கண்ணப்ப தம்பிரான் காசியில் இருந்தபோது காசி மடத்திற்கு வெவ்வேறு காலகட்டங்களில் இடம் வாங்கியுள்ளார். ஆதீனத்தின் சார்பில் தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத ஐயரை ஆதரித்த காரணத்தால் முழு ஈடுபாட்டுடன் சுவடிகளைத் திரட்டி பல நூல்களை பதிப்பித்தார். இவர் கண்ணப்ப தம்பிரானிடம் தமது தேடல் பணிக்காக உதவிகளை பெற்றவர். ஆதீனம் கல்வி, சமூக ஒற்றுமை, பொதுப்பணி, தமிழ் மொழி வளர்ச்சி எனப் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளதையும், ஆன்மீகப் பணியோடு அறப் பணிகளையும் செய்துள்ளதை இப்புதிய கல்வெட்டு சான்று உறுதி செய்கிறது என்றார்.

 

ஆய்வின் போது தொல்லியல் ஆய்வுக் கழக உறுப்பினர் ந.ரமேஷ்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

தேநீர் மொய் விருந்து! தாய்மார்களுக்கு உதவிய சிவக்குமார்!

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

puthukottai tea stall owner helped 11 women in his village

 

கஜா புயலில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உட்பட பல மாவட்டங்களில் கோடிக்கணக்கான மரங்கள், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தது. மின்சாரம் இல்லை தண்ணீர் இல்லை மொத்த விவசாயமும் காணாமல் போய் இருந்த நேரம். விவசாயிகள், பொதுமக்களின் ஒட்டு மொத்த வாழ்வாதாரமும் இழந்து நின்ற நேரத்தில் அரசு, தனியார் உதவிகளை எதிர்நோக்கி இருந்தனர். அப்போது வங்கிகள், சுய உதவிக்குழு கடன், இன்ன பிற கடன்களை கட்ட நெருக்கடி கொடுத்தது. 

 

அப்போது தான், புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் கிராமத்தில் டீ கடைக்காரர் சிவக்குமார், ‘எனது கடையில் டீ குடித்து கடன் வைத்துள்ள வாடிக்கையாளர்களான விவசாயிகள் கஜா புயலின் கோரபிடியில் சிக்கி தவிப்பதால் எனது கடைக்கு தரவேண்டிய கடன் தொகையை ரத்து செய்கிறேன்’ என்று போஸ்டர் எழுதி ஒட்டி சுமார் ரூ.30 ஆயிரம் ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்தார். அதன் பிறகு இவரைக் காரணம் காட்டியே அரசியல் தலைவர்கள் மேடைகளில் பேசினர்.

 

அதன் பிறகு கடந்த கொரோனா காலத்தில் கிராமங்களில் உணவுக்காக தவித்த ஏழ்மை நிலையில் உள்ள பொதுமக்களுக்காக இருப்பவர்களிடம் வாங்கி இல்லாதவர்களுக்கு அரசி, பால் உணவுப் பொருட்களை வழங்கி வந்தார். இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்த போது நிதி திரட்டி வழங்கினார்.

 

தற்போது புதுக்கோட்டை கேப்பரை பகுதியில் பகவான் என்ற பெயரில் தேநீர் கடை நடத்திவரும் சிவக்குமார், கடந்த வாரம் நலிவுற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ டீ அருந்தி மொய் செய்யுங்கள் என்று தேநீர் மொய் விருந்து நடத்தினார். ஒரு நாள் முழுவதும் தேநீர் குடித்தவர்கள் தங்களால் இயன்ற தொகையை மொய் சட்டியில் போட்டுச் சென்றனர். பலர் இணையவழியிலும் பணம் அனுப்பினர். மாலையில் ரூ.62 ஆயிரம் மொய் வசூலாகி இருந்தது. அந்தப் பணத்தில் 12 வெள்ளாடுகள் வாங்கிய சிவக்குமார் அதே பகுதியில் ஆதரவற்ற, மிகவும் பின்தங்கிய நலிவுற்ற குடும்பங்களை தேர்வு செய்து 11 பெண்களை அழைத்து 10 பெண்களுக்கு தலா ஒரு ஆடும், ஒரு பெண்ணுக்கு மட்டும் 2 ஆடுகளும் வழங்கினார். 

 

அப்போது அவர், “இது வெள்ளாடு ஆத்தா ஒரே நேரத்துல 2, 3 குட்டி  போடும். அடுத்த வருசம் நிறைய குட்டிகளோட உன் குடும்பம் நல்லா வரனும்” என்று சொல்லி ஆடுகளை பெண்களிடம் கொடுத்தார். “நீ நல்லா இருக்கனும் தம்பி” என்று சிவக்குமாரை வாழ்த்திவிட்டு சென்றனர்.

 

இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிலர், ‘போன மாசம் ஒருத்தர் கட்சிக்கொடி பறக்க காவித்துண்டோட வேன்லயே வந்தாரு. கூட்ட நெரிசல் கூட ஏற்பட்டுச்சு. தன் கட்சிக்காரர் கொடுத்த செம்மறிகிடா குட்டிய வாங்கி ஒரு அம்மாட்ட குடுத்து நிறைக குட்டி போடும்னுட்டு போனாரு. ஆனா நம்ம சிவக்குமாரு பரவாயில்ல சொந்த செலவுல மொய் விருந்து நடத்தி பல பேர்கிட்ட வசூல் பண்ணி 10 குடும்பம் வாழ ஆடு வாங்கி குடுத்துட்டார்’ என்று பேசிக் கொண்டனர்.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

44 டன் விதைக் கடலையை முடக்கிய அதிகாரிகள்! 

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

Officials blocked 44 tons of seed peanuts!

 

தமிழ்நாட்டுக்கே கடலை பருப்பு, கடலை எண்ணெய்க்கு விலை வைக்கும் இடமாக உள்ளது புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி. இங்கிருந்துதான் புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் விதைக் கடலை வாங்கிச் செல்கின்றனர். தற்போது பருவமழை பெய்து வருவதால் பல மாவட்ட விவசாயிகளும் விதைக் கடலை வாங்க தினசரி ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

 

சில மாதங்களுக்கு முன்பு வரை ஏராளமான கடைகளில் இங்கு 'தரமான குஜராத், ஆந்திரா விதைக் கடலை' கிடைக்கும் என்று விளம்பர பதாகை வைத்திருந்தவர்கள், அதிகாரிகளின் சில ஆய்வுகளுக்குப் பிறகு விதை என்ற வார்த்தையை மறைத்துவிட்டு ‘தரமான கடலை கிடைக்கும்’ என்றே விளம்பர பதாகை வைத்துள்ளனர். கடந்த சில வாரங்களாக விதைக் கடலை விற்பனை அதிகரித்துள்ள நிலையில், திங்கள் கிழமை புதுக்கோட்டை விதை ஆய்வு துணை இயக்குநர் விநாயகமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் ஆலங்குடி கடலைக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

 

இந்த ஆய்வில் பல கடைகளிலும் இருந்த விதை கடலைகளுக்கு விதைச் சான்று இல்லாமல் இருப்பதும் முளைப்புத்திறன் குறைவாக இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இதுபோல ரூ. 35.20 லட்சம் மதிப்புள்ள சுமார் 43.82 டன் விதைக் கடலைகளை விற்பனை செய்யக் கூடாது என முடக்கி வைத்தனர். தொடர்ந்து விதைச் சான்று பெறாமல் விதைக் கடலை விற்பனை செய்யக்கூடாது என்று கடை உரிமையாளர்களிடம் அறிவுறுத்தியுள்ளனர். இதேபோல கடந்த ஆண்டும் விதைக் கடலை மூட்டைகள் விற்பனை முடக்கப்பட்டது.

 

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, ‘ஆலங்குடி போனால் தரமான விதை கிடைக்கும் என்று நம்பியே பல மாவட்ட விவசாயிகளும் வருகிறோம். ஆனால் இங்கே முளைப்புத்திறன் குறைந்த, விதைச் சான்று பெறாத விதைகள் விற்பதாக அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதே நேரம் ஆய்வு செய்த அதிகாரிகள் தரமான விதை இல்லையென்றால் விற்பனை செய்யக்கூடாது என்று முடக்கியுள்ள 43.82 டன் கடலையும், அதைக் கடைகளில் அப்படியே வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். அதிகாரிகள் சென்ற பிறகு இந்தக் கடலைகளை வியாபாரிகள் என்ன செய்வார்கள் திரும்பவும் எங்களிடமே தரமான விதை என்றுதானே விற்பனை செய்வார்கள். 

 

முடக்கிய விதை என்னாச்சு என்று இதே அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்வதில்லை. இதனால் பாதிக்கப்படுவது எங்களைப் போன்ற விவசாயிகள்தான். முடக்கிய கடலைகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பார்களா என்றால் இல்லை. கடமைக்கு ஆய்வு என்று இல்லாமல் தரமற்ற கடலைகளை அறவைக்கு அனுப்பிவிட்டு தரமான விதைச் சான்று பெற்ற விதைகளை விற்பனை செய்வதை ஆய்வு மூலம் உறுதி செய்ய வேண்டும்’ என்றனர்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்