sivaji karunanidhi

கட்டுரை : கே. சந்திரசேகரன்

நூற்றாண்டு காலத் தமிழ்ச்சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்புச் சாயல் இல்லாமல் திரைப்பிரபலங்கள் தோன்றியதில்லை. நடிகர்களில் தலைசிறந்தவர் சிவாஜி; நடிப்பின், தமிழ் மொழி உச்சரிப்பின் பல்கலைக்கழகம் அவர். இன்றைய நடிகர்களை ஏதேனும் ஒரு வகையில் பாதித்தவர். தமிழ்ச்சினிமாவில் அவர் ஏற்றுநடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என சொல்லிட முடியும். தேசியமும் தெய்வீகமும் தனது விழிகள் என வாழ்ந்த நடிகர் திலகத்துக்கும், பகுத்தறிவாளரான கலைஞருக்குமான நட்பு என்பது மிகவும் ஆழமானது; ஆத்மார்த்தமானது!

Advertisment

நடிகர் திலகத்தின் நடிப்பின் மூலமும் உச்சரிப்பின் மூலமும் தனது புரட்சிகரமான கருத்துக்களை வார்த்தெடுத்தவர் கலைஞர். சிவாஜியின் நடிப்பால் கலைஞரின் வசனங்கள் உயிர்பெறுகிறதா? கலைஞரின் வசனங்களால் சிவாஜியின் நடிப்பு போற்றப்படுகிறதா? என விவாதிக்கப்படுகிற அளவுக்கு இருவரின் கலைத்துறை பயணமும் ஒரே நேர்கோட்டில் பயணித்தன. சிவாஜியின் உதவியாளராக அவருக்கு அருகிலேயே இருந்து பணி செய்கிற பாக்கியம் எனக்கு கிடைத்திருந்ததால், ஓய்வில் வீட்டில் இருக்கும் போதெல்லாம் பழைய நினைவுகளை எங்களோடு பகிர்ந்து கொள்வார். அந்த நினைவுகளெல்லாம் மிக பசுமையானவை. அதில் கலைஞரைப் பற்றிய அவரது நினைவுகள் மிக ஆழமானவையாக இருக்கும்.

Advertisment

கலைஞரின் வசனங்களையும் அதில் தெறிக்கும் கருத்துகளையும் அடிக்கடி எங்களிடம் பகிர்ந்து கொள்வார் நடிகர் திலகம். அப்படி ஒரு முறை பகிர்ந்துகொண்ட போது, "மனோகரா' படத்தைப் பற்றி சிலாகித்துப் பேசினார். அப்போது, மனோகரா படம் முழுவதும் ஆவேசமாக நான் நடித்திருந்தாலும், கலைஞரின் சரித்திர வசனங்களை பேசியிருந்தாலும் இறுதிக் காட்சியில், "பொறுத்தது போதும் பொங்கி எழு' என்ற ஒரே ஒரு வசனம் பேசி மொத்த கைத்தட்டலையும் கண்ணாம்பாள் தட்டிச்சென்றார். அந்த காட்சியை காணும்போதெல்லாம் ஒரு பெண்ணாக நானிருந்து அந்த காட்சியில் நடித்திருக்கக்கூடாதா என ஏங்கியிருக்கிறேன். அந்தளவுக்கு உணர்ச்சிமிக்க வசனம் அது! இதுதான் கலைஞரின் பேனாவின் வலிமை! எனக்கு மட்டுமல்ல ; என்னோடு நடிக்கும் மற்ற நடிகர்-நடிகைகளுக்கும் கலைஞரின் வசனங்கள் பாராட்டுதல்களை அள்ளித் தரும்!'' என்று பெருமையாக மெய்சிலிர்த்தார் நடிகர் திலகம். இதனை பத்திரிகை பேட்டிகளிலும் பல முறை அவர் சொன்னதுண்டு.

இதில் ஒரு வியப்பு என்னவெனில், திரைப்படமாக "மனோகரா' வருவதற்கு முன்பு மேடை நாடகமாக போடப்பட்டது. அதில் கண்ணம்மா வேடத்தில் சிவாஜிதான் நடித்திருப்பார். மேடை நாடகத்திற்கான வசனத்தை கலைஞர் எழுதியிருக்கவில்லை. அதனால், "பொறுத்தது போதும் பொங்கி எழு' என்கிற வசனமும் அதில் இல்லை. சினிமாவாக மனோகரா எடுக்கப்பட்ட போதுதான் கலைஞரின் பேனா, அந்த உணர்ச்சிகரமான வசனத்தை எழுதியது. அந்த வார்த்தைகள் மீது நடிகர் திலகத்துக்கு ஒரு மயக்கம் இருந்தது!

Advertisment

கலைஞரை எப்போதும் செல்லமாக, முனா கானா என்றுதான் அழைப்பார் சிவாஜி. நீண்ட வருடங்களுக்குப் பிறகு 1989-ல் முதலமைச்சராகிறார் கலைஞர். அவரை சந்திக்க கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்றார் சிவாஜி. அப்போது அவருடன் நானும் சென்றிருந்தேன். கோபாலபுரத்தில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் இருந்தனர். அவர்களைப்பார்த்து, "முனா கானா இருக்கிறாரா?' என சொல்லிக்கொண்டே விறுவிறு என மாடிப்படி ஏறிச் சென்றார் சிவாஜி. சிவாஜி வந்துகொண்டிருக்கிறார் என கலைஞருக்கு தகவல் போய்ச்சேருவதற்குள் கலைஞரின் அறைக்குள் சென்றார். திடீரென சிவாஜியை பார்த்த மாத்திரத்தில் ஆச்சரியப்பட்டவராய், "அடடே வாங்க நடிகர் திலகம்' என சொல்லி சிவாஜியைக் கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டார் கலைஞர். மிக பிஸியான அந்த அலுவல் நேரத்திலும், நட்பு சார்ந்து பல விசயங்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர். கோபாலபுரத்திலிருந்து சிவாஜி புறப்பட்டபோது, கீழே கார் வரை வந்து அனுப்பிவைத்தார் கலைஞர்.

kalaignar with nadigar thilagam

சரித்திர கதாநாயகர்கள், விடுதலைப் போராட்ட தலைவர்கள் எல்லாம் எப்படி இருப்பார்கள்? என எதிர்கால தலைமுறையினர் கேள்வி கேட்டால், அதற்கு சிவாஜிதான் பதிலாக இருப்பார் என கலைஞர் சொல்வதாக மனம்திறந்து பேசுவார் சிவாஜி. கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மாள், தனக்கும் தாய் தான் என்று அடிக்கடி குறிப்பிடுவார். இதனை வெறும் வாய் வார்த்தையளவில் மட்டும் அவர் குறிப்பிடவில்லை. தனது சுயசரிதையில் அழுத்தமாக அதனைப் பதிவுசெய்திருப்பார் நடிகர் திலகம். அதனால்தான் சிவாஜி, தனது புதல்வர்களிடம், கலைஞரை பெரியப்பா என்று அழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியவர். அந்த அளவுக்கு கலைஞருடன் நட்பையும் தாண்டி, குடும்ப உறவினராகவும் இருந்தார் சிவாஜி. தி.மு.க.விலிருந்து சிவாஜி விலகிய பிறகு அரசியல்ரீதியாக கலைஞருக்கும் சிவாஜிக்கும் கருத்து வேறுபாடுகள் உருவாகியிருந்தாலும் அவர்களின் நட்பில், உறவில் எந்த விரிசலும் எப்போதும் ஏற்பட்டதில்லை.

தமிழ்த் திரையுலகம் சார்பில் 1998 நவம்பரில் கலைஞருக்கு பவளவிழா எடுக்கப்பட்டது. நேரு உள்விளை யாட்டரங்கில் நடந்த விழாவில் தமிழ்த்திரை உலகமே திரண்டிருந்தது. விழாவுக்கு தலைமையேற்றிருந்தவர் சிவாஜி. விழாவில் பேசிய நடிகர் திலகம், ""தாயே! தமிழே! உன் தலைமகனை, என் அருமை நண்பனை, இந்த நாட்டின் சிறந்த அறிவாளியைப் பற்றி என்ன பேசுவது? எதைப் பேசுவது? உங்களைப் பற்றி (கலைஞரை) பேசினால் அதில் நானும் கலந்திருப்பேனே! அது, என்னையே நான் புகழ்ந்து கொள்வது போலாகாதா? உங்களால் தமிழ் இன்னும் வளர வேண்டும். இன்னும் நிறைய நீங்கள் எழுத வேண்டும். வயதானாலும் உங்கள் வசனத்தை நான் பேசி நடிக்க வேண்டும். நண்பா, என்னுடைய ஆயுளில் இரண்டாண்டுகளை எடுத்துக்கொண்டு நீ இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து தமிழகத்துக்கு சேவை செய்ய வேண்டும்!'' என்று உருக்கமாகப் பேசியது இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்க வைக்கும். கலைஞருடனான நட்பின் ஆழத்தை தமிழ்த்திரையுலகத்திற்கு சிவாஜி புரிய வைத்த தருணம் அது.

2006 தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிவாஜிக்கு சிலையும் மணிமண்டபமும் அமைப்போம்' என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தார் கலைஞர். இதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, ஏப்ரல் 3-ஆம் தேதி (2006), சிவாஜி சமூக நலப் பேரவை நிர்வாகிகளுடன் கலைஞரை சந்தித்து நன்றி தெரிவித்தோம். அப்போது கலைஞர், கழகத்தை (தி.மு.க.) வளர்த்தவர்களின் பட்டியலில் சிவாஜியின் படத்தை கருவூலத்தில் வைத்திருக்கிறேன். என் ஆருயிர் நண்பன் சிவாஜிக்கு நான் சிலை வைக்காமல் வேறு யார் சிலை வைப்பார்கள்?' என்று அவர் கூறிய வார்த்தைகள் சாதாரணமானதல்ல!

அதேபோல, ஆட்சிக்கு வந்த கலைஞர், முதல் பட்ஜெட் உரையிலேயே, சென்னை கடற்கரை சாலையில் சிவாஜிக்கு சிலை அமைக்கப்படும் என அறிவித்து, அதன்படி சிவாஜியின் முழு உருவ வெண்கலச் சிலையை அமைத்தார். இந்த சிலைக்கு எதிராக நடத்தப்பட்ட பல்வேறு இன்னல்களையும் சட்டரீதியாக உடைத்தெறிந்து சிலையை நிறுவினார் கலைஞர். சிவாஜியின் நினைவுதினமான ஜூலை 21-ஆம் தேதி சிலையை திறந்து வைத்துப் பேசிய கலைஞர், தனக்கும் சிவாஜிக்குமான நட்பைப் பற்றி விவரித்த ஒவ்வொரு வார்த்தையும் உருக்கமாக இருந்தது. அந்த உருக்கமான பேச்சில், "எனது நண்பன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்' என்று கலைஞர் உணர்ச்சிவயப்பட்டபோது அவரது கண்கள் கண்ணீரைச் சிந்தியது. கலைஞருக்கும் சிவாஜிக்குமான நட்பின் புனிதத்தை உணர்த்தியது அந்த கண்ணீர்!