Skip to main content

“ஆளுநருக்கு கலைஞரின் அரை சதவீத அறிவு கூட இல்லை..” - கே. பாலகிருஷ்ணன் தாக்கு 

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

K. Balakrishnan speech at Kalaignar's 100 year celebration

 

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழா கொண்டாட்டம் சென்னை பெரம்பூர் பின்னி மில் பகுதியில் நடைபெற்றது. இதில் திமுக அமைச்சர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  

 

இவ்விழாவில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், “கலைஞர் நூற்றாண்டு விழாவாக மட்டுமல்லாமல் இந்த ஆண்டு முழுவதும் தமிழகத்திலுள்ள பட்டி தொட்டியெல்லாம் கலைஞர் செய்த மாபெரும் சாதனைகளை விளக்குவதைப் பற்றி நமது முதல்வர் திட்டமிட்டிருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலே எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

 

கலைஞர் எந்த கொள்கைகளையும், கோட்பாடுகளையும் இந்தியாவில் நிலை நிறுத்த விரும்பினாரோ அதை மக்களுக்கு நினைவூட்டும் விழாவாகவும் இந்த கலைஞர் நூற்றாண்டு விழா இருக்கிறது. 

 

K. Balakrishnan speech at Kalaignar's 100 year celebration

 

கலைஞர் சிறு வயதில் செய்த சாதனைகள் நம்மை வியக்க வைக்கிறது. ‘ஃப்ரண்ட் லைன்’ என்ற ஆங்கில பத்திரிகை கலைஞரை பற்றி ஒரு சிறப்பு இதழ் வெளியிட்டிருந்தது.  அந்த இதழில் உள்ள கட்டுரையில், தனது 13 வயதிலேயே ‘செல்ல சந்திரா’ என்ற சரித்திர நாவலை தமிழில் எழுதியவர் டாக்டர். கலைஞர் தான் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அந்த கட்டுரையை படித்தபோது நான் அதிர்ந்து போனேன். எப்படி தனது 13 வயதில் நாவலை எழுத முடியும்? ஏதாவது இட்டுக்கட்டி எழுதியிருப்பார்கள் என்று எண்ணி அந்த கட்டுரையின் ஆசிரியரை தொடர்பு கொண்டு, நமது இந்து பத்திரிகையின் ஆசிரியர் ஏ.எஸ். பன்னீர்செல்வம் கலைஞரை பற்றி ஆய்வு நூல் வெளியிட்டிருக்கையில் இப்படி எழுதி இருக்கிறீர்களே இது உண்மையா என்று கேட்டபோது, அந்த கட்டுரையின் ஆசிரியர் இது நூற்றுக்கு நூறு உண்மை என்று கூறினார். 

 

அந்த செல்ல சந்திரா என்ற நாவல் தற்போது  திமுகவின் அலுவலகமாக இருக்கக்கூடிய அண்ணா அறிவாலயத்தில் அரை பக்க நூலாக இருக்கிறது. முழு நூல் கிடைக்காத காரணத்தினாலேயே அந்த நூலை பதிப்பிடம் செய்யவில்லை என்று அந்த ஆசிரியர் கூறினார். 

 

இந்த நாவலுக்கு கலைஞர் முன்னுரையும் எழுதியுள்ளார். அந்த முன்னுரையில், “இன்றைய திராவிட நாடு அதன் கலைகளையும் நாகரிகத்தையும் இழந்து சாதிய மூட நம்பிக்கைகளில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழை ஒழிக்க சதி வேலை நடந்து கொண்டிருக்கிறது. தமிழ், மலையாளம், கன்னடா, தெலுங்கு, துளு ஆகிய திராவிட மொழிகளில் பழம்பெருமைமிக்க தமிழை அழிக்க விரும்புகிறார்கள். திராவிடர்கள் விழித்து எழ வேண்டிய நேரம் இது" என்று குறிப்பிட்டிருக்கிறார் என்று அந்தக் கட்டுரையின் ஆசிரியர் கூறி இருந்தார். அதுமட்டுமல்லாமல், அந்த நாவலில் எந்த ஒரு எழுத்து பிழையும், இலக்கண பிழையும் இல்லை என்று அந்த ஆசிரியர் அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.  

 

தனது 13 வயதில் திராவிடத்தை பற்றியும், திராவிட இயக்கத்தை பற்றியும் புரிந்து கொண்டிருக்கின்ற தனி வார்ப்பாக தான் கலைஞர் இருந்திருக்கிறார். ஆனால், இன்று சென்னையில் ஆளுநர் மாளிகையில் அமர்ந்திருக்கிற ஆளுநருக்கு, கலைஞரின் அரை சதவீத அறிவு கூட இல்லையே என்பது தான் வேதனையாக இருக்கிறது. தமிழை பற்றியும், திராவிடத்தை பற்றியும் தெரியாமல் அரசாங்கத்தின் மாளிகையில் அமர்ந்து கொண்டு எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் எதை வேண்டுமானாலும் பேச முடியுமா?   

 

கலைஞர், 13 வயதிலே எப்படிப்பட்ட கொள்கைகளை தூக்கி நிறுத்த விரும்பினாரோ, அந்த கொள்கைகளுக்கு எல்லாம் சாவு மணி அடிக்கும் வகையில் இன்றைக்கு சனாதன சக்திகள் இந்தியாவில் வேகமாக பணியாற்றி கொண்டிருக்கின்றன. அந்த சனாதன சக்திகள் ஏவப்பட்ட அம்பாகத்தான் நமது ஆளுநர் செயல்பட்டு வருகிறார்” என்று கூறினார்.

 

 

 

Next Story

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரின் சகோதரர் மறைவு; அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி!

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
State Secretary of the Marxist Party Bro Tribute to political party leaders

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத்தின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணனின் தம்பி கே. ராதாகிருஷ்ணன் (வயது 66). இவர் சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட திடல்வெளி பகுதியில் வசித்து வந்தார். இவர் உடல் நலக்குறைவால் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று (09.07.2024) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதனை அறிந்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், முதல்வரின் தனிச் செயலாளர் தினேஷ், திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு கே. பாலகிருஷ்ணனுக்கு ஆறுதல் கூறினார்கள்.

மேலும் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் உ. வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் எம். குணசேகரன் கே சாமுவேல்ராஜ், விக்கிரவாண்டி தொகுதி முன்னாள் சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராமமூர்த்தி, சிபிஎம் கீழ் வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, கடலூர் மாவட்ட செயலாளர் கோ.மாதவன், தஞ்சை மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், விழுப்புரம் சுப்பிரமணியன், நாகப்பட்டினம் மாரிமுத்து, மயிலாடுதுறை சீனிவாசன், திருவாரூர் சுந்தரமூர்த்தி, கள்ளக்குறிச்சி ஜெய்சங்கர், மாதர் சங்க மாநிலத் தலைவர் வாலண்டினா, மாநில குழு உறுப்பினர் சுகந்தி. தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில தலைவர் செல்லக்கண்ணு, கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம் உதயகுமார் மருதவாணன் ராமச்சந்திரன் திருவரசு சுப்புராயன் ராஜேஷ் கண்ணன், தேன்மொழி ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களது ஆறுதல்களைத் தெரிவித்தனர். 

State Secretary of the Marxist Party Bro Tribute to political party leaders

அதே போன்று திமுக முன்னாள் எம்எல்ஏ சரவணன், கடலூர் கிழக்கு மாவட்டக் கழக பொருளாளர் கதிரவன், கடலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இள.புகழேந்தி, அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் பழனி, உள்ளிட்ட கட்சியினர். அதிமுக முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே ஏ பாண்டியன் குமராட்சி ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி மற்றும் கட்சியினர்.  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், தெற்கு மாவட்ட தலைவர் செந்தில்நாதன், மாநில செயலாளர் சித்தார்தன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் தொகுதி எம்பி ரவிக்குமார், காட்டுமன்னார்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன், மாவட்ட செயலாளர் அரங்க. தமிழ் ஒளி, மேற்கு மாவட்ட செயலாளர் மணவாளன், முன்னாள் மாவட்ட செயலாளர் பால.அறவாழி, செல்லப்பன் ஆகியோர் தங்களது ஆறுதல்களைத் தெரிவித்தனர்.

மேலும் தேமுதிக மாநில துணை பொதுச் செயலாளர் உமாநாத், மாவட்ட அவை தலைவர் பாலு, துணை செயலாளர் பானுச்சந்தர், பாட்டாளி மக்கள் கட்சியின் வன்னியர் சங்க மாநில தலைவர் பு.த அருள்மொழி, விவசாய அணி மாநில துணை செயலாளர் சஞ்சீவி, உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மணிவாசகம் வட்ட செயலாளர் தமிம்முன் அன்சாரி, மாவட்ட துணை செயலாளர் சேகர், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்ட கட்சியினர், மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிம்முன் அன்சாரி, மாநில துணை செயலாளர்கள் நெய்வேலி இப்ராகிம், அமித் ஜாபர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில செயலாளர் ஏ வி சிங்காரவேல். உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு அவரது உடலுக்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து மாலையில் அதே பகுதியில் உள்ள இடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

Next Story

இரா.சம்பந்தன் மறைவு - முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
r Sampanthan passed away Chief Minister MK Stalin obituary

இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எம்.பி.யுமான இரா.சம்பந்தன் (வயது 91) காலமானார். உடல்நலக்குறைவால் கொழும்பு தனியார் மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்படிருந்த நிலையில் இரா.சம்பந்தன் உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இலங்கைத் தமிழர்களின் முதுபெரும் அரசியல் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயா மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

தமிழர்கள் மட்டுமல்லாது சிங்களவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் மரியாதையைப் பெற்ற அரும்பெரும் தலைவராகத் திகழ்ந்தவர் சம்பந்தன். இறுதிமூச்சு வரையிலும் தமிழ்மக்களின் நலனுக்காகவே சிந்தித்தார். செயல்பட்டார். நாடாளுமன்றவாதியாக அரைநூற்றாண்டு காலம் அவர் ஆற்றிய பங்களிப்புகள் இலங்கையின் அரசியலில் பாரதூரமான தாக்கத்தைச் செலுத்தி வந்தன. இலங்கைத் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுக்காக மிக நீண்டகாலம் அறவழியில் சம்பந்தன் போராடி வந்தார். இந்தியாவோடும் தமிழ்நாட்டுடனும் மிகச் சிறந்த நட்புறவை சம்பந்தன் அவர்கள் பேணி வந்தார். கலைஞரின் நண்பராகவும், இலங்கைத் தமிழ் மக்களின் பிரதிநிதியாகவும் பல முறை அவரைச் சந்தித்து மிகவும் முக்கியமான அரசியல் விவகாரங்கள் குறித்து சம்பந்தன் ஆலோசித்துள்ளார். 

r Sampanthan passed away Chief Minister MK Stalin obituary

2015ஆம் ஆண்டில் சம்பந்தன் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ‘எனது அருமை நண்பர் நாவலர் அமிர்தலிங்கத்திற்குப் பிறகு, தமிழர் ஒருவர் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக ஆகியுள்ளது மகிழ்ச்சிக்குரியது. இலங்கைத் தமிழர்கள் அனைவரும், தங்கள் வாழ்வில் விடிவுகாலம் ஏற்படாதா என்று நீண்ட நாட்களாக எதிர்நோக்கியிருக்கும் வேளையில், எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நமக்கெல்லாம் ஓர் நம்பிக்கையைத் தருகிறது’ என்று கலைஞர் வாழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

2016ஆம் ஆண்டு 13ஆவது முறையாகத் கலைஞர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது சம்பந்தனும், ‘இதுவொரு சாதாரண சாதனையல்ல. எல்லோராலும் பாராட்டப்பட வேண்டிய ஒரு சாதனையாகும். இலங்கைத் தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு ஒரு நியாயமான, நிரந்தரமான அரசியல் தீர்வைப் பெறுவதற்கு உங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பு தொடர வேண்டும்’ என வாழ்த்து தெரிவித்திருந்தார். ஈழத்தந்தை செல்வா, நாவலர் அமிர்தலிங்கம் ஆகியோருக்குப் பிறகு இலங்கை அரசியலில் மிகவும் போற்றத்தக்க தலைவராக விளங்கிய சம்பந்தனின் இடத்தை இலங்கை அரசியலில் எவராலும் எளிதில் ஈடுசெய்ய முடியாதது. அவரது மறைவு இலங்கைத் தமிழ் மக்கள் மட்டுமின்றி, உலகெங்கிலும் வாழும் தமிழ்ச் சொந்தங்களுக்கும் பேரிழப்பாகும். 

r Sampanthan passed away Chief Minister MK Stalin obituary

இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்த மாபெரும் அரசியல் ஆளுமையான சம்பந்தனை இழந்து தவிக்கும் அவரது அமைப்பினருக்கும் இலங்கைத் தமிழ் உறவுகளுக்கும் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.