Skip to main content

"இந்த விழிப்புணர்வு அன்றைக்கு இருந்திருந்தால் ராஜாகண்ணு உயிரை காப்பாற்றியிருக்க முடியாவிட்டாலும் பார்வதி.." - நீதிபதி சந்துரு உருக்கம்!

Published on 16/11/2021 | Edited on 16/11/2021

 

dfg

 

'ஜெய்பீம்' திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு, சில வாரங்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியானது. அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல விமர்சனத்தைப் பெற்றுள்ள இந்த திரைப்படத்திற்கு சிலர் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில், இந்த வழக்கில் ராஜாக்கண்ணு மனைவிக்காக நிஜத்தில் வாதாடிய முன்னாள் நீதிபதி சந்துருவிடம் இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகளை நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு. 


‘ஜெய்பீம்’ படம் 90களில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு நல்ல விமர்சனங்களை பலரும் தெரிவித்துவருகிறார்கள். பல செய்திகளில் உங்கள் படங்கள் வரும்போது சிறுவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் இவர்தானே உண்மையான ரியல் ஹீரோ என்று கேட்கிறார்கள். இதை எப்படி உணர்கிறீர்கள், பெருமையாக இருப்பதாக நினைக்கிறீர்களா? 

 

நான் அதை அந்த மாதிரி பார்க்கவில்லை. நாம் நடத்திய வழக்கு நிறைய இருக்கு. அதில் ஒரு பழங்குடியின மக்கள் தொடர்பான வழக்கை திரைப்படமாக எடுத்துள்ளார்கள். அதில் சூர்யா போன்ற பெரிய நடிகரும் சேர்ந்து நடிக்கும்போது அதன் வீச்சு இன்னும் அதிகமாக இருக்கிறது. நாம் சொல்லக்கூடிய கருத்து திரைப்படம் மூலம் மக்களுக்குப் போய் சேருகிறது என்பது மட்டுமே நமக்கு சந்சோஷம். 70 வயது மேல் எனக்கு என்ன புகழ் வரப்போகிறது. வழக்கறிஞராக பணியாற்றியுள்ளோம், நீதிபதியாக இருந்துவிட்டோம், பென்சன் வாங்கிக்கொண்டு வீட்டில் இருக்கிறோம். எனவே நான் இதை அப்படித்தான் பார்க்கிறேன், தனிப்பட்ட பெருமை என்று இதில் கூறுவதற்கு எதுவுமில்லை. இதில் எந்த ஒரு தனிப்பட்ட சாகசமும் இல்லை. படத்தின் இயக்குநர் கூட தனிப்பட ஹீரோயிசம் தெரியக்கூடாது என்பதற்காக படத்தைக் கவனமாக எடுத்துள்ளார். இன்றைக்கு எனக்கு உலகம் முழுவதிலும் இருந்து லெட்டர் வருகிறது. இந்த மாதிரி ஒரு மக்கள் இருப்பதைக் கூட நாங்கள் தெரியாமல் விட்டுவிட்டோம். நாங்கள் அவர்களுக்கு ஏதாவது செய்யலாமா என்று கேட்கிறார்கள். இதுதான் இந்தப் படத்தின் வெற்றியாக நாம் பார்க்க வேண்டியுள்ளது. 


இன்றைக்கு சாத்தான்குளம் விவகாரத்தில் காவல்துறையின் நடவடிக்கைகளை சமூகவலைதளங்களின் வாயிலாக நாம் தொடர்ந்து பார்த்துவந்தோம். அதன் மூலம் இந்த விவகாரத்தில் அனைத்து மக்களுக்கும் இது ஒரு அத்துமீறல் என்ற விழுப்புணர்வு இயல்பாகவே தெரியவந்தது. ஆனால் இந்த சம்பவம் நடைபெற்ற காலத்தில் அத்தகைய விழிப்புணர்வு ஏற்பட வாய்ப்பில்லாமல் போய்விட்டதாக கருதுகிறீர்களா? 

 

சாத்தான்குளம் விவகாரத்தில் ஊடகங்கள் பெரிய பங்காற்றின. அந்த சம்பவம் தொடர்பான செய்திகளை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்லப்பட அது காரணமாக இருந்தது. ஆனால் 93ம் ஆண்டு இந்த அளவுக்கு விழிப்புணர்வு என்பது கிடையாது. இந்த இரண்டு விவகாரத்திலும் அடித்து, உதைத்து, சாகடித்தது எல்லாம் ஒன்றாக இருந்தாலும் மக்களுக்கு இந்த வேகத்தில் புரிய அந்த காலத்தில் தகவல் தொடர்பு இந்த பெரிய அளவில் இல்லை. ராஜக்கண்ணு, பார்வதி ஆகிய இரண்டு பேரும் ஊரில் இருந்து ஒதுங்கி வாழ்ந்துவந்தார்கள். இவர்களுக்கென்று எந்த சொத்து பத்தோ கிடையாது. குடியிருக்க வீடு இல்லை. ஆனால் சாத்தான் குளத்தில் இறந்தவர்கள்,  அங்கு அவர்களை சார்ந்த மக்கள் அதிகப்படியான வசிக்கும் பகுதியாகும். உடனடியாக அது இந்தியா முழுவதும் பேசப்பட்டது. இதுபோன்ற நிறைய காரணங்கள் ராஜாக்கண்ணு வழக்கில் இருந்தது. இந்த வழக்கில் நான் முதலில் சிபிஐ விசாரணைதான் நீதிபதியிடம் கேட்டேன். அவர்கள் ஐஜி பெருமாள் சாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தார்கள். இந்த விழிப்புணர்வு அன்றைக்கு இருந்திருந்தால் ராஜாக்கண்ணு உயிரைக் காப்பாற்றியிருக்க முடியாவிட்டாலும் பார்வதி இந்த அளவுக்குப் போராடியிருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. 

 

இந்த வழக்கை முதலில் நீங்கள் கேட்கும்போது உங்களின் மனநிலை என்னவாக இருந்தது. காவல்துறையின் அடக்குமுறைகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தீர்களா? 

 

இந்த வழக்கு என்னிடம் வரும்போது பார்வதிக்கு அவரது கணவரைப் பற்றிய எந்த விவரமும் தெரியாது. ‘காவல்துறை என் கணவரை அழைத்துச் சென்றார்கள். அடுத்த நாள் சாப்பாடு எடுத்துக்கொண்டு போனேன். ஆனால் காவல் நிலையத்தில் நான் பாத்திரத்தை எங்கே வைத்தேனோ அங்கேயே அடுத்த நாளும் இருந்தது. பிறகு அடுத்த நாள் நான் தங்கிருந்த இடத்துக்குப் போலீசார் வந்து உன் புருஷன் ஓடிபோயிட்டான் என்று சொல்லிவிட்டு சென்றார்கள்’ என்றுதான் பார்வதி என்னிடம் கூறினார். இந்த அடிப்படை தகவலை மட்டும் வைத்துக்கொண்டுதான் இந்த வழக்கை நாங்கள் ஆரம்பித்தோம். காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்ட ஒருவர் காணாமல் போகிறார் என்றால் அதற்கு யார் பதில் சொல்ல வேண்டும். நிச்சயமாக காவல்துறையினர்தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். எனவே நாங்கள் ரிட் பெட்டிஷன் போட்டு அவரை ஆஜர்ப்படுத்த கோரினோம். அந்த மனுவுக்குப் பதிலளித்த அன்றைய கடலூர் காவல்துறை கண்காணிப்பாளர், ராஜாக்கண்ணு காவல் நிலையத்தில் இருந்து தப்பித்துச் சென்றதாகவும், நெய்வேலியில் ஒரு மருத்துவரிடம் வைத்தியம் பார்த்ததாகவும், கேரளாவில் ஒரு கடையில் குளிர்பானம் குடித்ததாகவும், அவரை நாங்கள் தற்போது தீவிரமாக தேடி வருவதாகவும் குறிப்பிட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். 

 

ஆனால் நாங்கள் அதை நம்பவில்லை. அப்படியென்றால் அவருடன் கைது செய்யப்பட்ட ராஜாக்கண்ணு அக்கா மகன்கள் எங்கே என்ற கேள்விக்கு அவர்களால் சரியான பதில் அளிக்க முடியவில்லை. எனவே அவர்கள் இருவரும் வந்தால்தான் இந்த விவகாரத்தில் முழுமையான தகவல் கிடைக்கும் என்று அவர்களைத் தேடினோம். கேரளாவில் அவர்கள் இருப்பதை உறுதிசெய்து, எங்கள் அலுவலகத்துக்கு அழைத்து வந்து அவர்களிடம் வாக்குமூலம் வாங்கினோம். அதை அன்றைக்கு நீதிபதிகளாக இருந்த மிஸ்ரா படித்து அதிர்ச்சியடைந்தார். காவல்துறை சொல்வதை அப்படியே நம்ப கூடாது என்று முதல்முறையாக நீதிமன்றம் அப்போது உணர்ந்த தருணம் அது. நாங்கள் சிபிஐ விசாரணை கேட்ட நிலையில், அவர்கள் தமிழ்நாடு காவல்துறையில் இத்தனை அதிகாரிகள் இருக்கிறார்கள், அவர்களில் ஒருவரைக் கூறுங்கள் என்றார்கள். அரசு தரப்புக்கும் ஐஜி பெருமாள்சாமியை நியமிக்க விரும்பியதால் அவரை விசாரணை அதிகாரியாக நீதிமன்றம் நியமித்தது. இப்படியாக இந்த வழக்கில் நீதி கிடைக்கப்பெற்றது. 

 

 

Next Story

கார்த்திக் சுப்புராஜுடன் கூட்டணி வைத்த சூர்யா - வெளியான சர்ப்ரைஸ் அறிவிப்பு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
karthick subburaj directing suriyas 44th film

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சமீபத்தில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற ஏப்ரலில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படத்தை தொடர்ந்து தனது 43வது படத்திற்காக சுதா கொங்கராவுடன் கூட்டணி வைத்துள்ளார். துல்கர் சல்மான், நஸ்ரியா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் வெளியான அறிவிப்பு வீடியோவில், படத்தின் தலைப்பு மறைக்கப்பட்டு  'புறநானூறு' என்ற டேக் லைன் மட்டும் இடம் பெற்றிருந்தது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ள நிலையில் அவருக்கு 100வது படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் மதுரையில் உள்ள கல்லூரியில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் சூர்யா நடிக்கும் அடுத்த பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. சூர்யாவின் 44ஆவது படமாக உருவாகும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். சூர்யாவின் 2டி நிறுவனமும் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. யாரும் எதிர்பாராத சர்ப்ரைஸாக இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளார்கள். ஏற்கெனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தை சூர்யா கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் சுப்புராஜ், கடைசியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விஜய்யை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது . ஆனால் தற்போது சூர்யாவுடன் திடேரென்று கைகோர்த்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Next Story

ரீ ரிலீஸுக்கு தயாராகும் சூர்யா படம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
anjaan re release update

வெற்றி பெற்ற பழைய படங்களை மீண்டும் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ரீ ரிலீஸ் செய்யப்படுவது நீண்ட காலமாக இருந்து வருகிறது. சமீப காலமாக ரீ ரிலீஸ் செய்யும் படங்கள் அதிகரித்து வருகின்றன. எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி தற்போது இருக்கும் முன்னணி நடிகர்கள் படங்கள் வரை தொடர்ந்து ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றது. 

அந்த வகையில் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான பையா படம் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அப்போது படம் முடிந்ததும் இயக்குநர் லிங்குசாமி திரையரங்கிற்கு வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். 

anjaan re release update

அப்போது அவர், அஞ்சான் படத்தை ரீ எடிட் செய்துள்ளதாகவும் அதை மீண்டும் திரையரங்கில் ரீ ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் அஞ்சான். லிங்குசாமியே தயாரித்திருந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகரக்ள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி பின்பு கலைவையான விமர்சனத்தையே பெற்றது குறிப்பிடத்தக்கது.