Skip to main content

உயிரிழந்த நகைக் கொள்ளையன் முருகன் பிடிபட்ட மர்மம்!

Published on 27/10/2020 | Edited on 27/10/2020

 

murugan

 

பிரபல நகைக் கொள்ளையன் முருகன் கைது செய்யப்பட்டு கர்நாடக மாநிலம் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். உடல்நலக் குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முருகன், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தான். நகைக் கொள்ளையில் ஈடுபட்ட முருகன் எப்படி சிக்கினான் எனக் கடந்த 2019 அக்டோபரில், நக்கீரன் இதழில் வெளியான கட்டுரை :- 

 

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சுரேஷ், கடந்த 10 -ஆம் தேதி திருவண்ணாமலை செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்தான். இவனிடம் நடத்திய விசாரணையில், லலிதாவில் கொள்ளையடித்த, 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளையும் திருச்சி-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் நருங்குழி நகர்ப் பகுதியில் முருகன் தங்கியிருந்த வீட்டில் வைத்து, பங்கு பிரித்துக்கொண்டது தெரிய வந்தது. அதே நேரம், இந்த கொள்ளை தொடர்பாக தேடப்பட்டு வந்த சுரேஷின் மாமன் முருகன், பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக தகவல் வர, தனிப்படையினர் அங்கு விரைந்தனர். ஆனால், அடுத்த நாள் காலை பெங்களூரு சிட்டி சிவில் 11-வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் குற்றவியல் நீதிமன்றத்தில் வேறொரு திருட்டு வழக்கில் முருகன் சரணடைந்தான்.

 

பெங்களூரு பனஸ்வாடி பகுதியில் நடந்த கொள்ளை வழக்கில் சரணடைந்தவன், பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டான்.

 

சிறையிலடைக்கப்பட்ட முருகனை பெங்களூரு பொம்மனஹள்ளி போலீஸார், 9 கிலோ நகைக் கொள்ளை வழக்கில் 6 நாட்கள் விசாரணைக்கு எடுத்து இரவோடு இரவாக திருச்சி அழைத்து வந்தனர்.

 

லோக்கல் போலீஸாருக்கு எவ்விதத் தகவலும் கொடுக்காமல் வந்த பெங்களூரு போலீசார், முருகன் காட்டிய இடத்தில் 12 கிலோ தங்க நகைகளை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தனர்.

 

இத்தகவல் அறிந்து பெரம்பலூர் போலீஸார் அலர்ட் செய்யப்பட்டார்கள். வேப்பந்தட்டை அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் அரும்பாவூர் காவல் ஆய்வாளர் கலா தலைமையிலான போலீஸார் விரட்டிச் சென்று காரை மடக்கினர். இனோவா காரின் டிக்கியில், கொள்ளையன் முருகனும், 12 கிலோ தங்க நகையும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அடுத்து அவர்களைப் பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்திற்கு அழைத்து வந்த போலீஸார், பெரம்பலூர் எஸ்.பி நிஷா பார்த்திபன், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் மயில்வாகனன், பெரம்பலூர் டி.எஸ்.பி கோபால்ராஜ் ஆகியோர் தலைமையில் விசாரணை நடத்தினர்.

 

விசாரணையில், "திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்ததும் நாங்கள் தான்'' என்று ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்திருக்கிறான். மேலும், "பஞ்சாப் வங்கியில் 6 பேர் சேர்ந்து கொள்ளையடித்தோம். வங்கியில் நாங்கள் எதிர்பார்த்த நகை கிடைக்கவில்லை என்பதால் லலிதா ஜுவல்லரியை குறிவைத்தோம். லலிதா கொள்ளையில் நானும் கணேஷ் என்பவனும்தான் உள்ளே சென்றோம். அந்த வகையில் எனக்கு 12 கிலோ தங்கம், ஒரு கிலோ வைர நகைகளை எடுத்துக் கொண்டு, சுரேஷுக்கு ஆறு கிலோ தங்க நகை கொடுத்தேன். மீதம் இருந்த நகைகளை உடன் வந்த மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த கணேஷ், சதீஷ்குமாருக்கு கொடுத்தேன்'’ என்று சொல்லியிருக்கிறான். முருகன் கொடுத்த தகவலின்படி, மதுரை வாடிப்பட்டி, குருவித்துறை, அம்பலக்கார தெருவைச்சேர்ந்த கணேசனை கைது செய்த போலீசார், 6 கிலோ நகைகளைக் கைப்பற்றினர்.

 

தமிழக போலீஸ் தொடர்ச்சியாக முருகனை விரட்டிய நிலையில் பெங்களூவில் சரணடைந்த அன்றே 6 நாள் கஸ்டடி கொடுக்கப்பட்டு அன்றைக்கு இரவே யாருக்கும் தெரியாமல் 'பிரஸ்' வண்டியில் கர்நாடக போலீஸார் ரகசியமாக மொத்த நகையையும் அள்ளிச் சென்றது ஏன்? திருடப்பட்ட நகைகள் திருச்சி நகைகள் என்று தெரிந்தும் கர்நாடக போலீஸ் அதை யாருக்கும் தெரியாமல் கொண்டு சென்றது ஏன் என்கிற கேள்வி பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

cnc

 

இது குறித்து நாம் விசாரித்தபோது, "பெங்களூருவில் முருகன் மீது 83 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவ்வழக்குகளை விசாரிக்க ஹரிசங்கர் என்கிற அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அவருக்கே முருகனை கஸ்டடி எடுத்து திருச்சிக்கு அழைத்து வந்த விசயம் எதுவும் தெரியவில்லை.

 

பெங்களூரு போலீசார் இதற்கு முன்பு, முருகனை 90 நாள் கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தியபோது, ஒரு உயரதிகாரிக்கு 1 கிலோ நகை கொடுத்து சமாளித்துள்ளான். அதே போன்று தற்போது தமிழகத்தில் திருடிய நகைகளை கொண்டுபோய் பெங்களூரு போலீசுக்கு கொடுத்து தன்னை பாதுகாத்துக் கொள்ள நினைத்துத்தான் சரண்டர், கஸ்டடி நாடகமாடியுள்ளான் என்கிறார்கள்.

 

தமிழக போலீஸ் பெங்களூருவில் முருகனை கஸ்டடி கேட்டு பெட்டிசன் கொடுக்கவிருக்கிறது. தமிழக போலீசிடம் முருகன் ஒப்படைக்கப்பட்டால், "இதுநாள் வரை நடந்த அத்தனை திருட்டுகளின் கதைகளும் வெளியேவரும். கொள்ளையடித்த பணத்தில் சினிமா படங்கள் எடுத்தது முதல், பெரிய பெரிய அதிகாரிகளுக்குப் பங்கு கொடுத்தது எல்லாம் அம்பலமானால் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. பலரும் இதிலிருந்து தப்பித்துக்கொள்ள என்ன வழி இருக்கிறது என்று விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தப்பிப்பதற்கான முயற்சியில், முருகன் உயிருக்கு ஆபத்து நேரலாம்'' என்று கூறுகிறார்கள்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலிக்கு சரமாரி கத்திகுத்து; காதலன் வெறிச்செயல்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 lover stabbed his girlfriend who forced her to marry him

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வருபவர் ஆதித்யா சிங்(27). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவரும் இவர்' அதே பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அப்போது உடற்பயிற்சி கூடத்திற்கு இளம் பெண் ஒருவரும் வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆதித்யா சிங்கிற்கும் அந்தப் பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில், இந்தப் பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆதித்யா சிங் அந்தப் பெண்ணுடன் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஆதித்யா சிங்கை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனை ஆதித்சிங் மறுத்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மறுபடியும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண் ஆதித்யா சிங்கிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் வழக்கம் போல மறுத்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்கு வாதம் முற்றிய நிலையில் ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணை ஆதித்யா சிங், கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளார். பின்பு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.

அப்போது, அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு உள்ளே வந்து பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில்  காதலிப்பதாக கூறி  ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ஆதித்யா சிங்கை தேடி வருகின்றனர்.

Next Story

துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளை; சென்னையில் பரபரப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
avadi Jewelry incident Sensation in Chennai

துப்பாக்கி முனையில் ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

சென்னையை அடுத்துள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் ‘கிருஷ்ணா ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நகைக்கடைக்கு 4 மர்ம நபர்கள் காரில் வந்துள்ளனர். இவர்கள் 4 பேரும் பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டு துப்பாக்கி முனையில் நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு நகைக்கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.