கவிஞர்கள் அனைவருக்கும் காதல் அனுபவம் இருந்திருக்குமா என்பது தெரியாது. ஆனால், காதல் கொண்ட அனைவரும் கவித்துவ அனுபவம் பெற்றவர்களாக இருப்பார்கள்.
“நீ சிறுவனாக என் வீட்டுக்கு வரும்போதே உன்னை எனக்குத் தெரியும்” என்று ஒரு காதலி தன் காதலனிடம் கூறினால் எப்படி இருக்கும்?
ஆம், மாமேதை கார்ல் மார்க்ஸிடம் அவருடைய காதலி ஜென்னி இப்படிக் கூறியிருக்கிறாள். மார்க்ஸை விட ஜென்னி நான்கு வயது மூத்தவள்.
கார்ல் மார்க்ஸின் குடும்பமும், ஜென்னியின் குடும்பமும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்தனர். குழந்தை பருவத்திலிருந்தே மார்க்ஸை அறிந்தவர் ஜென்னி. அனேகமாய் மார்கஸை குழந்தையாக தூக்கிக் கொஞ்சிக்கூட இருந்திருக்கலாம்.
இருவருமே இலக்கியம், தத்துவம் குறித்து விவாதிப்பார்கள். ஜென்னியின் அப்பாகூட மார்க்ஸுடன் நடைப்பயிற்சியின்போது இலக்கியம் தத்துவம் குறித்து விவாதம் செய்திருக்கிறார்.
இரண்டு குடும்பத்தினரும் சேர்ந்து ஜென்னிக்கும் மார்க்ஸுக்கும் 1836 ஆம் ஆண்டு திருமணம் நிச்சயம் செய்தார்கள். அதன்பிறகும் மார்கஸ் படிக்கச் சென்றார்.
23 வயதில் மார்க்ஸ் தத்துவ ஞானத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். ஆனால், அதுகுறித்தெல்லாம் அவர் கவுரவப்பட்டுக் கொள்ளவில்லை. அவர் அரசியலில் ஈடுபடவே விரும்பினார்.
மார்க்ஸை உதவாக்கரை என்று அவருடைய தாயாரே தீர்மானிக்கிற அளவுக்கு நிலைமை இருந்தது. தனது தந்தை வழியில் கிடைத்த சொத்தை தனது மகனுக்குக் கொடுக்க அவர் மறுத்தார்.
ஜென்னியுடன் குடும்பம் நடத்த வருமானம் இல்லாத நிலையில், தனது காதல் நிறைவேறாமல் போய்விடுமோ என்றுகூட மார்க்ஸ் நினைத்தார். ஆனால், அது அவரை முடக்கிவிடவில்லை.
ட்ரையர் நகரிலேயே மிக அழகான பெண் என்று மார்க்ஸ் கருதிய ஜென்னியை 1843 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.
மார்க்ஸின் மூளையை மனிதகுல மேன்மைக்காக மட்டுமே சிந்திக்க அனுமதித்த மிகச்சிறந்த பெண்மணியாக ஜென்னி இருந்தார். கஷ்டங்கள் எதுவும் மார்க்ஸை அணுகாதபடி தன்னையே வேலியாக போட்டிருந்தார் ஜென்னி.
மார்க்ஸின் மனைவியாகவும், செயலாளராகவும் ஜென்னி இருந்திருக்காவிட்டால், உலகம் மார்க்ஸின் மேதைமையை அனுபவித்திருக்க முடியாது.
7 குழந்தைகளை பெற்ற ஜென்னி, கடைசிக் குழந்தைக்கு மார்பிலிருந்து ரத்தத்தையே கொடுக்க முடிந்தது. லிவர் கேன்சரில் பாதிக்கப்பட்ட ஜென்னி 1881 ஆம் ஆண்டு தனது தோழனைவிட்டு பிரிந்தார். இரண்டு ஆண்டுகள் கூட ஜென்னி இல்லாமல் மார்க்ஸால் வாழ முடியவில்லை.
இருவரின் குடும்ப வாழ்க்கை கட்சி வாழ்க்கைக்கும், இருவரின் காதலுக்கும் சாட்சியாக மார்க்ஸ் எழுதிய கடிதம் பதிவாகி இருக்கிறது…
ஜென்னி மார்க்ஸ்
மார்க்சும் ஜென்னியும் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த தம்பதிகள் என்பது அவர்களை நன்கறிந்த எல்லோருடைய கருத்தாகும். துன்பங்களோ, சோதனைகளோ அவர்களுடைய காதலை பலவீனப்படுத்தவில்லை. அதற்கு மாறாக, துன்பம் அவர்களுடைய அன்பை வலுப்படுத்தியது. அவர் மாணவப் பருவத்திலிருந்ததைப் போலவே முதிர்ச்சிக் காலத்தின் போதும் ஜென்னியை மென்மையாக, தீவிரமாகக் காதலித்தார்.
1856ம் வருடத்தில் ஜென்னி ஜெர்மனிக்குக் குறுகிய காலப் பயணம் சென்றிருந்தாள். அப்பொழுது ஜென்னிக்கு வயது நாற்பத்திரண்டு, பெரிய குடும்பத்தின் தாயாகவும் இருந்தாள். அப்பொழுது மார்க்ஸ் பாசத்துடன் ஜென்னிக்கு எழுதிய கடிதம் கிடைத்திருக்கிறது. அக்கடிதம் மென்மையும் உணர்ச்சியும் இருப்பதுடன் ஆழமான சிந்தனையும் நிறைந்திருக்கிறது. மார்க்சின் ஆளுமைக்கும் காலப் போக்கில் முதுமையடையாத அவருடைய இளமையான காதலுக்கும் அக்கடிதம் அடையாளமாக இருக்கின்றபடியால் அதிலிருந்து நீண்ட மேற்கோளைத் தருவது பொருத்தமே.
“என் அன்பிற்கினியவளே.
“நான் மறுபடியும் உனக்கு எழுதுகிறேன், ஏனென்றால் நான் தனியாக இருக்கிறேன், என்மனதில் நான் உன்னோடு எப்பொழுதும் உரையாடிக் கொண்டிப்பதும் எதை நீ அறிந்துகொள்ள முடியாமல் அல்லது கேட்க முடியாமல் அல்லது எனக்குப் பதிலளிக்க முடியாமலிருப்பதும் என்னை வாட்டுகிறது.... எனக்கு முன்னால் நீ இருப்பதைப் பார்க்கிறேன், நான் உன்னை அன்போடு தொடுகிறேன், தலை முதல் கால்வரை உன்னை முத்தமிடுகிறேன், உனக்கு முன்னால் முழந்தாளிட்டுப் பணிகிறேன், “அன்பே! உன்னைக் காதலிக்கிறேன்” என்று முணுமுணுக்கிறேன்.
ஆம், ஒதேல்லோ நாடகத்தில் வரும் அந்த வெனிஸ் மூர் எக்காலத்திலும் காதலிதததைக் காட்டிலும் அதிகமாக நான் உன்னைக் காதலிக்கிறேன். அது உண்மை. போலியான, உளுத்துப்போன உலகம் எல்லா மனிதர்களையும் போலிகளாக, உளுத்துப்போனவர்களாகப் பார்க்கிறது. என்னை அவதூறு செய்பவர்கள், என் முதுகுக்குப் பின்னால் என்னைத் திட்டுபவர்களில் எவராவது இரண்டாந்தரமான நாடக அரங்கில் முதல் தரமான காதலன் பாத்திரத்தை நடிப்பதற்காக என்னை எப்பொழுதாவது குறை கூறியதுண்டா? ஆனால் அது உண்மையே.
இந்தப் போக்கிரி களுக்கு நகைச்சுவை இருக்குமானால் அவர்கள் ‘உற்பத்தி மற்றும் பரிவர்த்தனை உறவுகளை’ ஒரு பக்கத்திலும், உன் காலடியில் நான் கிடப்பதை மறுபக்கத்திலும் ஓவியமாகத் தீட்டியிருப்பார்கள். இந்தப் படத்தையும் அந்தப் படத்தையும் பாருங்கள் என்று அந்த ஓவியத்துக்குக் கீழே எழுதியிருப்பார்கள். ஆனால் அவர்கள் முட்டாள்தனமான போக்கிரிகள், முட்டாள்களாகவே நீடிப்பார்கள்.
“.... ஒரு கனவில் என்னை விட்டு நீ போய்விட்டால் கூட காலம் அதற்குச் செய்த சேவை என்பதை நான் உடனடியாக அறிந்து கொள்வேன். சூரிய ஒளியும் மழையும செடி வளர்ச்சியடைவதற்கு உதவி செய்வதைப் போன்றதே இது. நீ என்னைப் பிரிந்த உடனே உன்னிடம் நான் கொண்டிருக்கின்ற காதல் அதன் மெய்யான வடிவத்தை, அதாவது பேருருவத்தை அடைகிறது. அதில் என்னுடைய ஆன்மாவில் முழுச் சக்தியும் என்னுடைய இதயத்தின் முழுப் பண்பும் குவிக்கப்பட்டிருக் கின்றன. நான் மறுபடியும் மனிதனாக உணர்கிறேன். ஏனென்றால் ஒரு மாபெரும் உணர்ச்சியை நான் உணர்கிறேன். நவீனக்கல்வி முறையும் பயிற்சியும் நம்மிடத்தில் ஏற்படுத்துகின்ற பல்வகைத் தன்மையும், அகநிலையான மற்றும் புறநிலையான காட்சிகளை நாம் சந்தேகிக்க உபயோகிக்கின்ற ஐயுறவாதமும் நம் அனைவரையும் சிறியவர்களாக, பலவீனமானவர்களாக சிணுங்குபவர்களாக, மன உறுதி இல்லாதவர்களாகச் செய்ய உத்தேசிக்கப்பட்டவை. ஆனால் காதல்-ஃபாயாபாஹின் “வளர்சிதை மாற்றத்தில்” அல்ல. பாட்டாளி வர்க்கத்தின் மீது அல்ல, ஆனால் அன்பு நிறைந்த பெண்ணிடம், உன்னிடம் காதல் கொள்வது ஒரு மனிதனை மறுபடியும் மனிதனாக்குகிறது.
“அன்பே, நீ சிரிக்கலாம்; நான் திடீரென்று பிரசங்கத்தில் இறங்கிவிட்டது ஏன் என்று கேட்கலாம். ஆனால் உன்னுடைய இனிமை நிறைந்த தூய்மையான இதயத்தை என் இதயத்துடன் சேர்த்து அணைக்கிறேன். நான் மௌனமாக இருப்பேன். ஒரு வார்த்தை கூடப் பேசமாட்டேன். என் உதடுகளினால் உன்னை முத்தமிட இயலாதபடியால் என்னுடைய நாக்கினால்தான் உன்னை முத்தமிடுவேன், வார்த்தைகளைத்தான் கொட்டுவேன். நான் கவிதை கூட எழுதுவேன் என்பது மெய்யே....
“உலகத்தில் பல பெண்கள் இருக்கிறார்கள், அவர்களில் சிலர் அழகானவர்கள் என்பது உண்மையே, ஆனால் ஒவ்வொரு அசைவிலும் ஒவ்வொரு சுருக்கத்திலும் என்னுடைய வாழ்க் கையின் மிகவும் சிறந்த, மிகவும் இனிமையான நினைவுகளைத் தூண்டுகின்ற அந்த முகத்தை நான் மறுபடியும் எங்கே காண்பேன்? உன்னுடைய இனிய முகத்தில் என்னுடைய முடிவில்லாத துயரங்களை, ஈடு செய்யப்பட்ட முடியாத இழப்புக்களை (மார்க்சின் மகன் ஏட்கார் இறந்துவிட்டத்தைப் பற்றிய குறிப்பு -ப-ர்) நான் காண்கிறேன்; உன்னுடைய இனிய முகத்தை நான் முத்தமிடுகின்ற பொழுது நான் துயரங்களை முத்தமிட்டு விரட்டுகிறேன். ‘அவளுடைய கரங்களில் புதைந்து, அவளுடைய முத்தங்களில் புத்துயிர் பெற்று’-அதாவது உன்னுடைய கரங்களில், உன்னுடைய முத்தங்களின் மூலம்; நான் பிராமணர்களுக்கும் பிதகோரசுக்கும் மறு பிறவியைப் பற்றி போதிப்பேன், கிறிஸ்துவ சமயத்துக்குத் திருமீட்டெழுச்சியைப் பற்றி அதன் போதனையைத் தருவேன்.”
குடும்பத் துன்பங்களின் சுமைகள் எப்படி இருந்தபோதிலும் மார்க்சின் விஞ்ஞான மற்றும் அரசியல் பணியில் ஜென்னி அலுப்படையாமல் உதவி செய்தாள். பல வருட காலம் ஜென்னியே மார்க்சின் காரியதரிசிப் பொறுப்பில் பணியாற்றினாள், அவருடைய நூல்களைப் பிரதியெடுத்தாள், கட்சிப் பணிகளில் அவருடைய “பிஆர்ஓ”வாக இருந்தாள், சர்வதேசத் தொழிலாளர் இயக்கத்தைச் சேர்ந்த பல பிரமுகர்களுடன் அவள் கடிதத் தொடர்பு வைத்திருந்தாள்; அந்த இயக்கம் சம்பந்தப்பட்ட எல்லாவற்றிலும் அவள் அக்கறை காட்டி வந்தாள். அவள் தன்னைக் கட்சியின் ஊழியன் என்று பெருமயாகக் கருதினாள். ஜென்னிலஸ்ஸாலுக்கு எழுதிய கடிதத்தில் நகைச்சுவை மிளிர்கிறது…
“அவரசமாக இந்தச் சிறு குறிப்பை எழுதுவதற்காக மன்னியுங்கள். என் தலையில் எவ்வளவோ கிடக்கிறது. செய்ய வேண்டிய கைவேலையும் ஏராளம். மேலும் இன்று நகரத்திற்கும் போக வேண்டும். எனவே இரண்டு அல்லது மூன்று மணி நேரம் சுறுசுறுப்பாக அலைந்து கொண்டிப்பேன். நான் கட்சியின் இயங்கும் பகுதியில் இன்னும் இருக்கிறேன். அது முன்னே செல்கின்ற, மைல் கணக்கில் நடக்கின்ற கட்சி, மற்றவை எப்படி இருந்தாலும் நான் நல்ல கட்சிக்காரி அல்லது ஓடிக் கொண்டிருப்பவள், உங்களுக்குப் பிடித்தமானபடி வைத்துக் கொள்ளுங்கள்.”