Skip to main content

ஜெ. மரணத்தில் விலகிய மர்மம்... நக்கீரன் செய்தி உண்மையானது... 

Published on 11/12/2018 | Edited on 12/12/2018
Jayalalitha



ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது அவருக்கு இதயத்தில் உள்ள மைட்ரல் வால்வில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என நக்கீரன் எழுதியது. நக்கீரன் எழுதியதை உண்மை என ஆறுமுகசாமி ஆணையத்தில் சாட்சியம் அளித்த அப்பல்லோ மருத்துவர் டாக்டர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.
 

இந்த மைட்ரல் வால்வு இன்ஃபெக்ஷன் தான் ஜெயலலிதாவை மரணத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு நக்கீரன் இணையதளத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் இருதய மருத்துவர்கள் விசாரணை ஆணையத்தில் ஆஜராகிறார்கள். அவர்கள் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்குவார்கள் என்று எழுதியிருந்தோம். 
 

அந்த மர்மம் இப்பொழுது விலகியுள்ளது. ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட மைட்ரல் வால்வு நோய் தொற்றுக்கு காரணமான பூஞ்சை காளான்களை அகற்றுவதற்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய வேண்டும் என்று அவரை பரிசோதித்த அப்பல்லோ மருத்துவர்களும், மும்பையைச் சேர்ந்த ஒரு மருத்துவரும் கூறியிருந்தனர். 

ஆனால், இதய நோய் மருத்துவ சிசிக்சை நிபுணர் அல்லாத டாக்டர் ரிச்சர்ட் பீலே அவரை ஜெயலலிதாவை வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்துப்போக வேண்டாம் என கூறினாரோ, அதேபோல இருதய அறுவை சிகிச்சை வேண்டாம் என கூறினார். 
 

இதனை அப்பல்லோவின் இருதய சிகிச்சை நிபுணரான டாக்டர் கிரிநாத் கடுமையாக எதிர்த்தார். டாக்டர் கிரிநாத், தான் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் என்றும், ஜெயலலிதாவுக்கு இருதய அறுவை சிகிச்சை தேவைப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டதால் ஜெயலலிதாவுக்கு நான சிகிச்சை அளிக்கவில்லை என ஆணையத்தில் கூறியிருககிறார்.
 

ஆனால் உண்மையில் ஜெயலலிதாவின் மைட்ரல் வால்வு பூஞ்சை காளான் தொற்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என கிரிநாத் உட்பட அனைத்து மருத்துவர்களும் கூறினார்கள். ஆனால் ரிச்சர்ட் பீலே மட்டும் வேண்டாம் என்றார். ரிச்சர்ட் பீலேவின் கருத்தை அப்பல்லோ மருத்துவமனைவும், சசிகலாவும் ஏற்றுக்கொண்டனர். அதனால் ஜெ.வுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை. 

இருதயத்தில் ஏற்பட்ட மைட்ரல் வால்வு பூஞ்சை காளான் நோய் தொற்றால் ஏற்கனவே நுரையீரலில் ஏற்பட்ட pulmonary edema (நுரையிரல் வீக்கம்) என்கிற திரவசேகரிப்பால் அவதிப்பட்டு வந்த ஜெயலலிதாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இறப்பதற்கு முன்பு 3 மணி நேரம் மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட ஜெயலலிதா கடைசியாக இருதய நிறுத்தத்தால் தாக்கப்பட்டார். 

இதைப்பற்றி டாக்டர் ஸ்ரீதர் கூறியபோது, உணர்ச்சிவசப்பட்ட ஆணையத்தின் நீதிபதி ஆறுமுகசாமி, ஜெயவுக்கு ஏற்பட்ட மிட்ரல் வால்வு பூஞ்சை காளான் தாக்குதலுக்கும், இதயத்தில் ஏற்பட்ட லெப்ட் வென்ரிக்கல் நோய்க்கும் ஏற்ற சிகிச்சையான ஆஞ்சியோ கிராம் சிகிச்சை செய்திருந்தால் அவர் உயிருடன் இருந்திருப்பார் அல்லவா என்று கேட்டார்.

அதற்கு பதில் அளித்த சிவக்குமார், ஜெ,வுக்கு ஆஞ்சியோ கிராம் அறுவை சிகிச்சை செய்யவில்லை என்பதை நினைத்து நான் வருத்தப்படுகிறேன் என ஆணையத்திலேயே கதறி அழுதுள்ளார். சாதாரணமாக இதயத்தில் சிறிய பிரச்சனை ஏற்பட்டால் கூட சாதாரண மனிதர்களுக்கே ஆஞ்சியோ சிகிச்சை செய்வது வழக்கம். இதய நோயில் மிக எளியதும், அடிப்படை சிகிச்சைகளிலும் ஒன்றுமான ஆஞ்சியோ கிராமை செய்யாமல் விட்டது ஏன். 
 

ஆஞ்சியோ கிராம் செய்ய வேண்டும் என கிரிநாத் உள்பட பல டாக்டர்கள் குறிப்பிட்டபோதும், ரிச்சர்ட் பீலே ஏன் தடுத்தார். ரிச்சர்ட் பீலே சசிகலா சொல்லித்தான் செய்தாரா? அப்பொழுது சசிகலாவின் கருத்து கேட்கப்பட்டதா? ரிச்சர்ட் பீலேவும் சசிகலாவும் அப்பல்லோவும் ஒரு சாதாரண ஆஞ்சியோ கிராம் அறுவை சிகிச்சைக் கூட செய்யாமல் ஜெ.வை மரணத்திற்கு உள்ளாக்கியது எப்படி? ஜெ.வின் மரணத்திற்கு காரணம் இந்த 3 பேரும்தானா என்கிற கேள்வி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் எழுந்துள்ளது. 
 

ஜெ.வுக்கு இதயத்தில் ஏற்பட்ட நோயையும் அதற்கு அறுவை சிகிக்சை வேண்டும் எனவும் டாக்டர் கிரிநாத் போன்றவர்கள் போராடியதை நக்கீரன் பதிவு செய்துள்ளது. அந்த உண்மைகள் இப்பொழுது வெளிவர தொடங்கியுள்ளது. 
 

 

 

 

Next Story

மீன்வளப் பல்கலைக்கழகம்; ஜெயலலிதாவின் பெயரை நிராகரித்த குடியரசுத்தலைவர்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
President rejects Jayalalitha name for Fisheries University

நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டார்.

நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியின் போது நாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகு நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று  சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஓப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 4 ஆண்டுக்கும் மேல் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கிடப்பில் போடப்பட்ட 10 மசோதாக்களுடன் ஜெயலலிதா பெயர்மாற்றம் தொடர்பான மசோதவையும் திருப்பி அனுப்பியிருந்தார். இதையடுத்து தமிழக அரசு மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் வைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்த நிலையில் நாகப்பட்டினம் மீன்வளப் பல்கலைகழகத்திற்கு ஜெயலலிதா பெயர் மாற்றம் தொடர்பான பரிந்துரையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரிப்பதாக அறிவித்துள்ளார்.

Next Story

களேபரமான அதிமுக பயிற்சி வகுப்பு; இ.பி.எஸுக்கு எதிராக கலகக் குரலெழுப்பும் பேச்சாளர்கள்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
AIADMK speakers raising their voices against Edappadi Palaniswami

ஒரு இயக்கமோ அல்லது ஒரு நிறுவனமோ ஆலமரம் போன்று ஓங்கி உயர்ந்து நிற்பதற்கு மூலக் காரணமே, மண்ணில் வேர் பரப்பி நிற்கும் சல்லி வேர்களே. இயக்கங்களின் பேச்சாளர்களே அந்த சல்லி வேர்கள். பிரச்சாரங்களில் பேசிப் பேசித்தான் ஒரு கட்சி வளரும் என்பதை தெளிவாக உயர்ந்த அறிஞர் அண்ணா, கலைஞர், தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் வரை அறிந்து கொண்ட தலைவர்கள், கழகத்தின் பேச்சாளர்களுக்கு இன்றளவும் ஊக்கம் கொடுத்து வருகின்றனர். தந்தை பெரியார் கூட தனக்கான பிரச்சாரத்தின் பீரங்கியாகவே தன்னை மாற்றிக் கொண்டார்.

இதே தத்துவத்தைப் புரிந்து கொண்ட எம்.ஜி.ஆரும் அ.தி.மு.க. தொடங்கியதும் தன் கட்சியின் பேச்சாளர்களை வகைப் படுத்திக்கொண்டார். அவரைத் தொடர்ந்து ஜெயலலிதாவும் கட்சிப் பேச்சாளர்களை தலைமைக் கழகப் பேச்சாளர்களாகத் தேர்வு செய்து அதில் நட்சத்திரப் பேச்சாளர்கள், மற்றும் ஏ.பி.சி. கிரேடுகள் என்று நான்கு வகையாக்கிக் கொண்டார். பின்பு அவர்களுக்கான பிரச்சாரக் கூட்டங்களை கட்சி நிர்வாகிகளின் மூலமாக மேற்கொள்ள வைத்து, அதற்கான சன்மானமும் நிரந்தரமாக கிடைக்க வகை செய்ததுடன், ஒவ்வொரு வருடமும் அத்தனை தலைமைக் கழகப் பேச்சாளர்களையும் வரவழைத்து அவர்களின் கிரேடுகளுக்கு ஏற்ப கனமான தொகையினை அன்பளிப்பாகவும் வழங்குவதை தவறாமல் மேற்கொண்டார்.

இதனால் தங்களின் வாழ்வாதாரம் ஆரோக்கியமாக இருந்ததாக தெரிவிக்கிற அ.தி.மு.க.வின் பேச்சாளர்களில் சிலர், “ஜெயலலிதா காலமான பின்பு எடப்பாடி ஆட்சியில் எங்களுக்கான பொதுக் கூட்டங்களுக்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படவில்லை. ஜெயலலிதா கவனித்ததைப் போன்று எடப்பாடி தங்களைக் கவனிக்காததால் கடந்த ஐந்து வருடத்தில் எங்களின் குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிட்டது. வறுமையில் கட்சியின் கவனிப்பாரின்றி பல பேச்சாளர்கள் மரணமடைந்து விட்டனர். ஆனால், தற்போது எம்.பி.தேர்தல் வருவதால் வேறு வழியின்றி தேர்தலுக்காக எடப்பாடி எங்களின் பக்கம் திரும்பியுள்ளார்” என்றவர்கள் தலைமையின் பயிற்சியில் நடந்தவைகளை விவரித்தார்கள்.

எடப்பாடியின் உத்தரவுப்படி அ.தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளரான தம்பிதுரை, கட்சியின் தலைமைக் கழகத்தின் நட்சத்திர பேச்சாளர்கள், 2ஆம் மற்றும் 3ஆம் கட்ட பேச்சாளர்கள் அனைவரும் எம்.பி. தேர்தலை முன்னிட்டு தங்களுக்கான முறைப்படியான கட்சி பயிற்சி பாசறைக் கூட்டம் மார்ச் 01 அன்று சென்னை எழும்பூரிலுள்ள ஹோட்டல் இம்பீரியல் சிராஜ்ஜில் நடைபெற இருப்பதால், அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அனைத்துப் பேச்சாளர்களுக்கும் கடிதம் அனுப்பியிருந்தார்.

தேர்தல் நேரம், கட்சித் தலைமையே வரச் சொல்லி அழைப்பு என்பதால், தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பாகவே நமக்கான நல்லதொரு தொகையும், கட்சிக் கூட்டத்திற்கான வாய்ப்பும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரையிலான கட்சியின் பேச்சாளர்கள் சென்னை சென்று வர செலவிற்கானதை வட்டிக்கு கடன் பெற்றும், பொருட்களை ஈடு வைத்தும் கிடைத்த பணத்தில் சென்னை பயிற்சி கூட்டத்திற்கு திரண்டு போயிருக்கிறார்கள்.

அ.தி.மு.க.வின் தலைமைக் கழகப் பேச்சாளர்கள் மொத்தமுள்ள 450 பேர்களில் 350க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் அன்றைய தினம் எழும்பூர் இம்பீரியல் ஹோட்டல் அரங்கில் கூடியிருக்கிறார்கள். அனைவரும் அழைப்பிதழ்படி சரிபார்க்கப்பட்டுள்ளனர். மேடையில் கொள்கை பரப்புச் செயலாளரான தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, கட்சிப் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம், முன்னாள் அமைச்சர் அன்பழகன் பொன்னையன், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், செம்மலை, நடிகரும் டைரக்டருமான கொ.ப.துணை.செ.வான ரவி மரியா, கொ.ப.இணை செ.வான நடிகை விந்தியா, அமைப்பு செ.வான பாப்புலர் முத்தையா, கோபி. காளிதாஸ் என்று பலர் அமர்ந்திருக்க மேடையின் கீழேயோ, அ.தி.மு.க.வின் சீனியர் நட்சத்திரப் பேச்சாளர்கள் குறிப்பாக பேச்சில் ஜாம்பவன்களான நெத்தியடி நாகையன், கடலூர் அன்பழகன், உள்ளிட்ட மூத்த பேச்சாளர்கள், தரையில் அமர்ந்திருந்தார்கள்.

ஆரம்பத்தில் மைக் பிடித்து பேசிய ரவி மரியாவும், நடிகை விந்தியாவும், கட்சிப் பேச்சாளர்கள் நீங்க எப்படி பிரச்சாரம் பண்ணனும்னா எம்.ஜி.ஆர்.பத்தி இப்படி பேசனும், கலைஞர் குடும்பத்தப் பத்தி இந்த மாதிரி பேசனும்னு சொல்லிக் கொண்டே போக, ஆத்திரமான பேச்சாளர்களோ, எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து ஜெயலலிதா அடுத்து எடப்பாடி வரையிலான கட்சியின் தலைமைக் கழக சீனியர் பேச்சாளர்களான நாங்க. எதை எப்புடி பேசணும்னு எங்களுக்குத் தெரியும். யாரு யாருக்கு வகுப்பு எடுக்கிறது. பேச்ச நிறுத்துங்கள் என்று பேச்சாளர்கள் கடுங்குரலெழுப்ப, மைக்கை பிடித்தவர்களோ ஷாக்கில் பேச்சை நிறுத்திக் கொண்டனர். மூத்த பேச்சாளர்களான தங்களுக்கு மேடையில் எல்.கே.ஜி. நிலையிலிருப்பவர்கள் வகுப்பெடுப்பதா என்கிற கடும் கோபம் தான் அமளிக்கு காரணம் என்கிறார்கள்.

எதிரேயுள்ள பேச்சாளர்களின் ஆவேசத்தால் எதிர்ப்பால் மேடையிலுள்ளவர்கள் சற்று யோசிக்க ஆரம்பிக்கவே, தம்பித்துரையோ, வந்திருக்கும் பேச்சாளர்கள் அனைவரும் பசியிலிருப்பதையும், பணத்தை எதிர்பார்த்து வந்திருக்கிறார்கள் என்பதை தெளிவாக உணர்ந்த தம்பித்துரை, “நா பல காலேஜ்க வெச்சிருக்கேம்னு நீங்க நெனைக்கிறீங்க. அது என்னோட கல்லூரிகளல்ல. ஒரு டிரெஸ்ட்டுக்குச் சொந்தமானது. என் வீட்ல வந்து பாருங்க ஒரு பீரோவும் கட்டிலும் தான் இருக்கும். சரஸ்வதி மாதிரி என்ட்ட பணமெல்லாம் கெடையாது. வெறும் ஆளாயிருக்கேன். ஆனா லட்சுமி (பணம் வைத்திருக்கும் கடவுள்) தான் பொருளாளரான திண்டுக்கல் சீனிவாசன். அவர் கஜானாவத் தொறந்தாத்தான் நடக்கும். என்ட்ட ஒன்னுமில்லை என்று பேசியுள்ளார். இதனால் ஆத்திரமான பேச்சாளர்கள் கடும் குரலில் பேச்ச நிறுத்திட்டு தம்பிதுரையை உட்கார சொன்னதும் கூட்டம் அமளியானது.

இதற்கிடையே எல்லை கடந்து ஆத்திரத்தையும், கொதிப்பையும் அடக்கியவாறு மேடையேறிய சீனியர் பேச்சாளரான கடலூர் அன்பழகன் நேராக தம்பிதுரையை நோக்கிச் சென்றவர் தன் கையில் வைத்திருந்த சால்வையை அவருக்கு அணிவித்துவிட்டு யாரும் எதிர்பாராத வகையில் மைக்கை பிடித்தவர், 17 வருஷமா கட்சியில கொ.ப.செ.வா நீங்கயிருக்கீங்க. உங்களால் கட்சி பேச்சாளர்களுக்கு ஒரு பிரோயஜனமுமில்லை. ஆனால் கட்சிய வைச்சி சம்பாரிச்சவுங்களுக்கு எத்தனை கால்லூரிகள் ஏக்கர் கணக்கில் நிலம். யாரெல்லாம் கட்சிய வைத்து சம்பாதிச்சாங்கன்னு எங்ககிட்ட லிஸ்ட் இருக்கு. எடுத்து விடவா? எங்களுக்கு நல்லாவே தெரியும். எல்லோரும் கேட்டுக்குங்க. ஜெயலலிதா இறந்த பிறகு  தலைமை கழகப் பேச்சாளர்களுக்கு எந்த மரியாதையும் கிடையாது. பேச்சாளர்கள் நிலை நெருக்கடி கஷ்டம். எடப்பாடியிலிருந்து கீழ்மட்ட நிர்வாகி வரை எங்களை கண்டுக்கவில்லை.

தலைமை அறிவிச்ச கூட்டத்த எந்த ஒரு மா.செ. ந.செ. ஒ.செ. கூட நடத்துறதில்ல. அப்படியே கூட்டம் போட்டாலும் மேடைக்கு வந்த மா.செ. 10 நிமிசத்தில் கூட்டத்த முடிச்சிட்டு கிளம்பிடுறாங்க. ஒரு கூட்டம் பேச ஏற்பாடு. அந்த மா.செ. எனக்கு போன் பண்ணி அண்ணே நீங்க வந்தூருங்க வராம இருந்துராதீங்க, ஊருக்கு வந்ததும் எனக்கு போன் பண்ணுங்க என்று சொன்னார். நானும் பேசினா கூலி கிடைக்கும் என்று கடனுக்கு 3000 ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு அந்த ஊருக்கு போய் பஸ் ஸ்டாப்ல இறங்கிட்டு அந்த மா.செ.க்கு போன் பண்ணேன். அவர் வந்ததும் சாப்டிங்களான்னு கேட்டு டிரைவர்ட்ட நூறு ரூபாய குடுத்து அவுங்களுக்கு சைவச் சாப்பாடு வாங்கிக் குடுன்னு சொன்னார்.

பின்பு உடனே, என்கிட்ட, நோட்டீஸ் அடிச்சாச்சு மேடை போட்டாச்சு சீரியல் பல்பு போட்டு மைக் கட்டியாச்சு. கூட்டத்துக்கு ரெடியா சேர்களும் போட்டாச்சு. ஆனா கூட்ட மேடைக்கிப் பக்கத்துல ஒரு வீட்ல துக்க சம்பவமாயிருச்சி. கூட்டம் நடத்த முடியாத நெலமையாயிருச்சு. என்ன செய்ய. அதனால இந்தாங்க புடிங்கன்னு ஒரு கவர்ல மூவாயிரம் ரூபாயப் போட்டுக்குடுத்து ஊர் போய் சேருங்கன்னு சொல்லிட்டாரு. எனக்கு பக்குன்னு ஆயிருச்சி. அப்புறமா அந்தப் பகுதி ந.செ. ஒ.செ. கட்சிக்காரங்க கிட்ட இதப் பத்தி விசாரிச்சா நீங்க சொன்ன மாதிரி பொதுக் கூட்ட மேடையும் போடல எந்த வீட்லயும் எழவு விழலன்னு சொன்னதக் கேட்டு ஆடிப் போனேம். கட்சியில் இப்படித்தான் நடக்கு என ஆவேசத்தைக் கொட்டி முடித்திருக்கிறார் கடலூர் அன்பழகன்.

இதற்கிடையே அன்பழகன் என்னைய ஒருமைல பேசிட்டார்னு தம்பித்துரை தலைமை கழகச் செ. மகாலிங்கத்திற்கு போனில் தகவல் சொல்லி புலம்ப, அதை அன்பழகனிடம் மகாலிங்கம் கேட்க, நான் யாரையும் ஒருமையில பேசல. நடந்த உண்மையைச் சொன்னேன் என்று லைனை துண்டித்திருக்கிறார். அரங்க நிலவரம், பேச்சாளர்களின் கொதிப்புகளை நோட்டமிட்ட எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம், கட்சியின் பேச்சாளர்கள் ரொம்பவும் கஷ்டப்படுகிறார்கள். நாம அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு நழுவிக் கொண்டார்.

பின்பு பேசிய அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனோ, இந்த இயக்கம் கட்சிப் பேச்சாளர்களால் பேசிப் பேசி வளர்க்கப்பட்ட இயக்கம். தலைமைக் கழகப் பேச்சாளர்களுக்கு மரியாதையில்லை. நீங்க ஒவ்வொருத்தரும் இங்க கௌம்பி வர வட்டிக்கு கடன் வாங்கியும், இருக்குற செயின் மோதிரத்தையும் அடமானமா வைத்தும்  கஷ்டப்பட்டு இங்க வந்தது என்குத் தெரியும். நான் உங்களுக்கு ஏதாவது பண்ணனும். என்ன பண்ணன்னு தெரியல. உங்கள நெனைச்சா எனக்குப் பாவமாயிருக்கு என வேதனையைக் கொட்டிவிட்டுச் சென்றார்.

குழப்பத்திற்கிடையே மைக் பிடித்த கட்சியின் பொருளாளரான திண்டுக்கல் சீனிவாசனோ, எனக்கு எல்லா விபரமும் தெரியும். நான் எடப்பாடிட்ட பேசிட்டு வந்திட்டேன். நான் முதலமைச்சரா வந்தால் உங்க வாழ்க்கைல ஒளி ஏத்திவைக்கிறேன் என்று சொல்லிருக்காருன்னு சொல்ல, கீழே இருந்த அத்தனை பேச்சாளர்களுக்கும் சுரீர் என்று பற்றிக்கொண்ட வேதனையும் பொறுமையும் எல்லை தாண்ட, யோவ் இப்ப நாங்க இருட்ல உக்காந்திருக்கோம்யா. என்னைக்கி அவரு முதலமைச்சராகி எங்க வாழ்க்கைல ஒளி ஏத்தி வைக்க. அதென்ன நடக்குற காரியமா? என கத்திக் குரலெழுப்ப மிரண்டு போன திண்டுக்கல் சீனிவாசனோ ஓசையின்றி வெளியேறியிருக்கிறார் அவரைத் தொடர்ந்து நிலவரம் கலவரமாவது கண்டு பீதியான பொன்னையனோ பேசாமல் இடத்தைக் காலி செய்திருக்கிறார். இதே போன்று மேடையிலுள்ள அத்தனை பேர்களும் அடுத்தவர்களுக்குத் தெரியாமல் வெளியேறிக் காரில் பறந்திருக்கிறார்கள்.

கட்சிப் பேச்சாளர்களோ வேதனையில், ஜெயலலிதா இருக்குறவரைக்கும் எங்க குடும்ப வண்டி சீரா ஓடிச்சி. ஒவ்வொரு வருஷமும் தலைமைக் கழகப் பேச்சாளர்கள நட்சத்திரப் பேச்சாளர்க, கிரேடு 1, 2, 3 ன்னு பிரிச்சு 3 லட்சம் 2½, 2, 1½, லட்சம்னு வகைகளா குடுத்தனுப்புவாக. ஆட்சியில நல்லா சம்பாரிச்சவுங்க, ருசிகண்ட எடப்பாடி உட்பட அத்தன பேரும் எங்களப் புலம்ப வைச்சுட்டாங்க. வெறுங்கையக் காட்டிட்டாங்க. எங்கள அனாதையா விட்டுட்டாங்க, அடிவயிறு கொதிக்க சாபமிட்டுச் சொல்றோம். எங்களுக்கு பணம் கொடுக்கலைன்னா தேர்தல் முடிஞ்ச மறு நிமிஷம் எடப்பாடிய மாத்தணும்னு நாங்க அத்தனபேரும் குரல் குடுப்போம். போராடுவோம் என ஓங்கிச் சொல்லி விட்டுக் கிளம்பியிருக்கிறார்கள் என்றனர் விரிவாக.

தலைமைக் கழகப் பேச்சாளர்களின் இந்தக் கலகக் குரல் எடப்பாடிக்குப் பெரும் தலைவலியைக் கிளப்பியிருக்கிறதாம். தலைமைக்கழகப் பேச்சாளர்களுக்குக் கூட்டத்தில் நடத்தப்பட்ட அநீதி அத்தனையும் சசிகலாவிற்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளதாம். அதையடுத்து அந்தப் பேச்சாளர்களை தன் பக்கம் கொண்டுவர நம்பிக்கையானவர் மூலம் வலைவீசியிருக்கிறாராம் சசிகலா.