Skip to main content

கட்டண வசூலை நன்கொடையாகக் காட்டி வரி ஏய்ப்பில் ஈடுபடும் ஈஷா ஃபவுண்டேஷன்!

Published on 25/05/2021 | Edited on 25/05/2021

 

Isha Foundation involved in tax evasion!

 

கோவையில் இயங்கிவரும் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தின்மீது, மலைப்பகுதிகளைச் சட்டத்துக்குப் புறம்பாக வளைத்துக் கட்டடங்களைக் கட்டியது. யானையின் வழித்தடங்களை மறித்து, கட்டடங்களையும், சுற்றுச்சுவர்களையும் கட்டியது உட்படப் பல்வேறு வழக்குகள், விவகாரங்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் தாண்டி, இந்த ஈஷா நிறுவனம் குவிக்கும் கோடிக்கணக்கான வருமானத்தில் நடத்திவரும் வரி ஏய்ப்புகள் குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன.

 

இந்நிறுவனத்தின் வரி ஏய்ப்பின் அடிப்படை சூத்திரம், வணிகரீதியாகப் பெறப்படும் தொகையை, நன்கொடை ரசீதாகக் கணக்கில் காட்டி வரிச்சலுகை பெறுவதாகும். கடந்த 2018ஆம் ஆண்டில் 56.43 கோடி ரூபாயை வருமானமாகக் காட்டியுள்ள ஈஷா ஃபவுண்டேஷன், தனது வருமானத்தில் 35.81 கோடி ரூபாயை அன்பளிப்பு என்ற வகையில் கணக்கில் காட்டியுள்ளது. இப்படி நன்கொடையாகக் காட்டப்பட்டுள்ள தொகைக்கு இந்திய வருமான வரிச்சட்டம் 80G பிரிவின்படி வரிவிலக்கு பெற்றுள்ளது.

 

Isha Foundation involved in tax evasion!

 

ஈஷா யோகா நிறுவனத்தின் சார்பாக யோகா, மாதாந்திர, வருடாந்திர, சிறப்பு நிகழ்ச்சிகள், ஆன்மீகப் பயணம், மரக்கன்று நடும் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இவை ஒவ்வொன்றுக்கும் பல்வேறு கட்டண முறைகள் இருக்கின்றன. ஜக்கி வாசுதேவின் விளம்பரங்கள், பாப்புலாரிட்டிக்கு மயங்கி, உள்நாடு, வெளிநாடு என உலகம் முழுவதுமிருந்தும் பலரும் ஆன்மீக நம்பிக்கையோடு இந்நிறுவனத்துடன் இணைந்து பணத்தை ஆயிரங்களில், லட்சங்களில், கோடிகளில் கொட்டுகிறார்கள். ஆனால் இவற்றுக்கெல்லாம் முறையான ரசீதுகள் வழங்கப்படுவதில்லை. சிலவற்றுக்கு இவர்களாகவே ஒரு தொகையை எழுதி, நன்கொடையாகக் கணக்கில் காட்டுகிறார்கள். ஜக்கியின் பக்தர்களாக இருப்பவர்களுக்கு இதெல்லாம் ஒரு விஷயமாகத் தோன்றுவதில்லை. பாதிக்கப்பட்டவர்களில் சிலர் மட்டும் இதில் நடக்கும் மோசடிகளைப் புரிந்துகொண்டு கேள்வியெழுப்புவது, வழக்கு தொடுப்பதென, இங்கே நடைபெறும் மோசடிகளை வெளியுலகுக்குக் கொண்டுவந்துள்ளனர்.

 

‘காவேரி கூக்குரல்’ என்ற பெயரில் காவிரி ஆற்றுப்படுகையில் 242 கோடி மரங்களை நடப்போவதாக ஒரு பிரச்சாரத்தை ஜக்கி வாசுதேவ் முன்னெடுத்தது நினைவிருக்கிறதா? உண்மையிலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக மரக்கன்று நடுபவர்கள், சத்தமில்லாமல் அந்த சேவையைச் செய்துவருகிறார்கள். ஆனால் இந்த ஜக்கி போன்ற கார்ப்பரேட்டுகள் இதை மிகப்பெரிய பிசினஸாகப் பார்க்கிறார்கள். "கர்நாடகாவிலுள்ள தலைக்காவேரியிலிருந்து தமிழ்நாட்டின் திருவாரூர் வரை  மொத்தம் 639 கிமீ தூரத்துக்கு, காவிரி நதிப்படுகையில் 242 கோடி மரக்கன்றுகளை நட்டு வளர்த்தால், 9 முதல் 12 டிரில்லியன் லிட்டர் தண்ணீரைச் சேமிக்க முடியும். இத்திட்டத்தை விவசாயிகளே பங்கெடுத்து செயல்படுத்த வேண்டும். அதற்கான மரக்கன்றுகளை ஈஷா ஃபவுண்டேஷனில் கன்று ஒன்றுக்கு 42 ரூபாய் விலைக்கு வாங்கலாம்" என்று ஒரு திட்டத்தைப் பிரபலங்களின் துணையோடு விளம்பரப்படுத்தினார். இதில் நடப்படும் மரங்களின் விளைச்சலிலிருந்து கார்ப்பரேட் நிறுவனங்களையும் இணைத்து வியாபாரம் செய்யும் உத்தியையும் குறிப்பிட்டார். அதன்படி இது, மறைமுகமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வணிக முயற்சியென்பதை விவரமானவர்கள் மட்டும் புரிந்துகொள்ள, மற்றவர்கள் பசுமைப்புரட்சியாக நம்பி, மரக்கன்றுகளை ஈஷா ஃபவுண்டேஷன் மூலம் வாங்குவதற்குப் பணம் செலுத்தினார்கள்.

 

Isha Foundation involved in tax evasion!

 

திண்டுக்கல்லைச் சேர்ந்த இயற்கை விவசாயியான நாகப்பன் கௌதம் என்பவர், "மதுரையிலுள்ள ஈஷா மையத்திலிருந்து 8,000 ரூபாய்க்கு ஒரு முறையும், தலா 3,000 ரூபாய்க்கு இருமுறையும் மரக்கன்றுகளை வாங்கியிருக்கிறார். ஆனால் அதற்கு ஈஷா மையத்திலிருந்து எவ்வித ரசீதும் தரப்படவில்லை. அவரும் கேட்கவில்லை. அடுத்த 4 மாதங்கழித்து, ஈஷா மையத்திற்கு நாகப்பன் 1,242 ரூபாய் நன்கொடை அளித்ததாக ஒரு ரசீதை ஈஷா மையம் அனுப்பியிருக்கிறது. முழுக்க முழுக்க வணிகமாகச் செலுத்திய தொகையில் சிறு பகுதியை மட்டும் நன்கொடியாகக் காட்டி, வரிச்சலுகைக்கு முயன்றிருப்பது மிகப்பெரிய மோசடியாகும். ஒருபக்கம் வரிச்சலுகைக்கு சிறு தொகையைக் காட்டுவதோடு, பெரும்தொகையைக் கணக்கிலேயே காட்டாமல் மறைக்கிறார்கள்" என்று குற்றம்சாட்டினார். இந்த 'காவேரி கூக்குரல்' திட்டத்தின்மூலம் காவிரிப் படுகையில் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபடுவது சட்டத்துக்குப் புறம்பானது என்று பெங்களூருவைச் சேர்ந்த வழக்கறிஞர் அமர்நாத் என்பவர், கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

2014ஆம் ஆண்டில், யோகா வகுப்பில் சேர்வதற்கான மோசடியால் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவளிப்பெண் ஜெயா பாலு ஏமாற்றப்பட்டிருக்கிறார். இவர், கோவையிலுள்ள ஈஷாவில் 'யந்திரா' நிகழ்ச்சியில் யோகா வகுப்பில் கலந்துகொள்வதற்காக 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தியிருக்கிறார். அந்தக் கட்டணத்துக்கு ரசீது தராமல், நன்கொடையாகக் கணக்கில் காட்டி ரசீது அனுப்பியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், யோகா வகுப்புகளில் கலந்துகொள்வதற்கும், அப்போது தரப்படும் ஒரு மந்திரித்த கல்லுக்கும் சேர்த்துதான் 4.5 லட்சம் ரூபாய் வாங்கப்பட்டிருக்கிறது. ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர், அந்தக் கல்லுக்கு மட்டுமே தனியாக 1.5 லட்சம் ரூபாய் கட்டினால்தான் கொரியரில் அனுப்பப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

 

Isha Foundation involved in tax evasion!

 

கட்டணம் என வசூலித்துவிட்டு, அதனை நன்கொடை என்று கணக்கில் காட்டுவது, கூடுதலாக 1.5 லட்சம் ரூபாய் கேட்பது என ஈஷா மையத்தின் மோசடிகளால் மனம் வெதும்பி, தான் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டிருக்கிறார். ஆனால் ஈஷா தரப்பில் அதற்கு மறுத்திருக்கிறார்கள். அதன்பின்னர் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து அப்பணத்தை மீட்டிருக்கிறார் ஜெயா பாலு. 

 

இந்த ஈஷா ஃபவுண்டேஷன், ஆன்மீகச் சுற்றுலா என்ற பெயரில் கைலாஷ் மானசரோவருக்கு சுற்றுலா ஏற்பாடு செய்கிறார்கள். இதற்கு 2,75,000 ரூபாயிலிருந்து, 50 லட்சம் ரூபாய்வரை பேக்கேஜிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 50 லட்ச ரூபாய் கட்டணத்தில் சுற்றுலா செல்பவர்கள், ஜக்கி வாசுதேவுடன் இணைந்தே பயணிக்கலாம். இப்படியான பயணத்திட்டங்களின் மூலமாகவே ஆண்டுக்கு சுமார் 60 கோடிவரை இந்த ஃபவுண்டேஷனுக்கு வருமானம் வரக்கூடும் என்று கணிக்கப்படுகிறது. 

 

முன்னாள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஆச்சிமுத்து சங்கர், இஷா ஃபவுண்டேஷனின் வரி ஏய்ப்பு மோசடி குறித்து 2018ஆம் ஆண்டில் மாநில வருமான வரித்துறை ஆணையரிடம் புகாரளித்திருக்கிறார். பல்வேறு ஆன்மீக வியாபாரக் கட்டணங்களையும் நன்கொடை கணக்கில் காட்டுவதைப் புகாரில் சுட்டிக்காட்டியிருக்கிறார். அவரே நேரடியாகவும் அந்த ஃபவுண்டேஷனில் அனுபவப்பட்டிருக்கிறார். இவர் சேர்ந்த ஒரு வார யோகா வகுப்புக்கான கட்டணத்தையும் நன்கொடையாகவே ரசீது கொடுத்திருக்கிறார்கள். ஒருவார வகுப்பின் இறுதி நாளில், பல்வேறு பொருட்களை வியாபாரம் செய்வதற்காகக் கடை விரித்திருக்கிறார்கள். இப்படி ஈஷா ஃபவுண்டெஷன், ஆன்மீகத்துடன், வணிக நோக்கையும் சேர்த்தே செயல்படுகிறது. அந்த மையத்தின் சார்பில் நடத்தப்படும் நவராத்திரி நிகழ்ச்சியே இதற்கு சாட்சி என்கிறார் இவர்.

 

Isha Foundation involved in tax evasion!

 

இப்படி தொடர்ச்சியாக வரி ஏய்ப்பில் ஈடுபடும் ஜக்கி வாசுதேவ், தனது அரசியல் செல்வாக்கைக் காட்டித்தான் அனைத்தையும் சரிக்கட்டிவருகிறார். அவ்வப்போது, ‘காவேரி கூக்குரல்’, ‘நதிகளை மீட்போம்’, ‘கோவில் அடிமை நிறுத்து’ என்று பல்வேறு விளம்பர ப்ராஜெக்ட்களையும் கோஷங்களையும் எழுப்புவதன்மூலம், சமூக சேவகராகவும், தேச பக்தராகவும் தன்னைக் காட்டிக்கொள்கிறார். ஈஷா ஃபவுண்டேஷனின் வரி ஏய்ப்பு மோசடி, அனைவருக்கும் தெரியவரும்போதுதான் அந்நிறுவனத்தின் செயல்பாடுகள் மீதான போலி பிம்பங்கள் உடையும்.

 

- கௌதமன்

 

 

Next Story

ஈஷா யோகா மையம் தொடர்பான விவகாரம்; வெளியான பகீர் தகவல்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Matter relating to Isha Yoga Centre; Released information

தென்காசி மாவட்டம் குலசேகரப்பட்டியைச் சேர்ந்த விவசாயியான திருமலை என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘தன் சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா தன்னார்வலராக கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இத்தகைய சூழலில் கடந்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில் இருந்து தொடர்பு கொண்டவர்கள் கணேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்களா என்று கேட்டதுடன் கடந்த 3 நாட்களாக கணேசன் ஈஷா யோகா மையத்திற்கு வரவில்லை என கூறினர்.

இது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி  ஈஷா யோகா மைய பொறுப்பாளர் தினேஷ் ராஜா கோவை மாவட்டம் பாரந்துறை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்த பாரந்துறை காவல் நிலைய போலீசார் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் இருக்கின்றனர். எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி காணாமல் போன தனது சகோதரர் கணேசனை மீட்டுத் தர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.

Matter relating to Isha Yoga Centre; Released information

இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள், எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு முன்பு இன்று (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜதிலக், “கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஈஷா மையத்தில் பணியாற்றியவர்களில் வெவ்வேறு தேதிகளில் தற்போது வரை 6 பேர் மாயமாகியுள்ளனர்” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “காணாமல் போனவர்கள் பற்றிய வழக்கை துரிதப்படுத்தி விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது. மேலும் இந்த வழக்கு ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தனர். 

Next Story

“அவர் இல்லையென்றால் சூரியன் கூட உதிக்காது...” - கங்கனா ரனாவத் உருக்கம்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Kangana Ranaut Meltdown about sathguru

கோவையில் ஈஷா யோகா மைய அறக்கட்டளையை நிறுவி இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சீடர்களைக் கொண்டுள்ளவர் ஜக்கி வாசுதேவ். ஈஷாவை தொடங்கிய நாள் தொட்டு இன்றுவரை பல்வேறு சர்ச்சைகளில் ஜக்கி வாசுதேவும் அவரது ஈஷா மையமும் சிக்கி வருகிறது. அதேபோல, ஈஷா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி, பிரதமர், தொழில் துறை, விளையாட்டுத் துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்வது வழக்கம்.

இந்த நிலையில், ஜக்கி வாசுதேவ் சமீபத்தில் உயிருக்கு ஆபத்தான மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 17 ஆம் தேதி கடும் தலைவலி காரணமாக சத்குரு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டதில், மூளைப் பகுதியில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 

இதனையடுத்து, டாக்டர்கள் குழுவால் கண்காணிக்கப்பட்ட அவர், மூளையில் ஏற்பட்ட இரத்தப்போக்கை சரிசெய்ய, அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். தற்போது அவர் நலமாக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மருத்துவமனை சிகிச்சையில் இருந்தபடி ஜக்கி வாசுதேவ் பேசும் வீடியோ வெளியாகி வைரலானது. 

Kangana Ranaut Meltdown about sathguru

இந்த நிலையில், சத்குரு விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “இன்று சத்குரு ஐசியூ படுக்கையில் படுத்திருப்பதைப் பார்த்தபோது, திடீரென்று அவருடைய இருப்பின் மரணத் தன்மை என்னைத் தாக்கியது. இதற்கு முன் அவர் நம்மைப் போலவே எலும்பும், ரத்தமும், சதையும் உள்ள நபர் என்று எனக்குத் தோன்றவில்லை. கடவுள் நிலைகுலைந்து போனதை உணர்ந்தேன். பூமி மாறியதை உணர்ந்தேன். வானம் என்னை கைவிட்டதாக உணர்ந்தேன். இந்த யதார்த்தத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

எனது வலியை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அவர் நன்றாக இருந்தால் நல்லது. அப்படியில்லை என்றால், சூரியன் உதிக்காது; பூமி நகராது. இதைப் பற்றி நான் அறிந்ததிலிருந்து நான் உணர்ச்சியற்றவளாக இருக்கிறேன். அந்த வேதனையில் சத்குரு ஜி, பிரமாண்டமான சிவராத்திரி நிகழ்வை தொகுத்து வழங்கியது மட்டுமல்லாமல், எந்த ஒரு கூட்டத்தையும் அல்லது சந்திப்பையும் கூட தவிர்க்கவில்லை. விரைவில் குணமடையுங்கள். நீங்கள் இல்லாமல் நாங்கள் ஒன்றுமில்லை” என்று பதிவிட்டுள்ளார்.