Skip to main content

"நம்ம உடம்பு பத்தி கேட்டா சயின்ஸ் உங்களுக்கு புரியாது அதான் ஆபரேஷன்னு சொல்லிட்டோமேன்னு அசால்டா.." - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #18

Published on 11/01/2020 | Edited on 11/01/2020

கல்யாணமாகி முழுசா ஒருவருஷம் கூட ஆகலை ஆனா அதுக்குள்ளே டைவர்ஸ்க்கு அப்ளை செய்ய வந்திருக்காங்க என்று என் தோழி கையிலிருந்த பானத்தைக் காட்டிலும் மனம் சுட்டது. என்ன பிரச்சனை என்று யோசித்தபடியே நான் அவர்களைப் பார்த்தேன். நல்ல ஜோடிப் பொருத்தம். ஆனால் மனப்பொருத்தம் இல்லாமல் போய்விட்டதே, இளமையின் தொடக்கத்தில் வாழ்க்கையை அனுபவிக்காமல் இப்படி கோர்ட் படியேறி நிற்கிறார்களே என்று மனது வருத்தமாக இருந்தது. அவன் முகத்தில் இருந்த இறுக்கம் குற்றவுணர்ச்சியா அல்லது இந்த கவுன்சிலிங் எல்லாம் என் மனதை மாற்றாது என்ற எண்ணமா?! என அனுமானிக்க முடியவில்லை. அந்த யுவதியோ கணவனின் கண நேரப் பிரிவைக் கூட தாங்க முடியாதவளைப் போல் தவித்தாள். அவளின் கண்களில் வழிந்த கண்ணீர் நொடிக்கொருமுறை எதையோ கணவனுக்கு உணர்த்திட கண்களில் தழும்பி கன்னங்களில் வழிந்தது

 

sdfx



யார் இவங்க....?!

போன வருஷம்தான் கல்யாணமாச்சி இப்போ டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணியிருக்காங்க, பையன் சைடு எனக்கு சொந்தம். ஒருவருடம் ஆகாததால் குடும்ப நல கோர்ட்டில் கவுன்சிலிங் அனுப்பியிருக்காங்க நேத்துதான் எனக்கு விஷயமே தெரியும். இத்தனை சில்லியான காரணங்கள் கூட டைவர்ஸ்க்கு இருக்குமான்னு! அப்படியென்ன சில்லியான காரணம் ஏதாவது காதல் பிரச்சனையா? அது கூட பரவாயில்லையே? இந்த டைவர்ஸ்க்கு காரணம் எதையும் சரியாக கணிக்க முடியாத அலட்சியம் , பயம் ஒரு சின்ன விஷயம் அது இத்தனை பெரிசா பூதாகரமா மாறிடுன்னு நான் மட்டுமில்லை யாருமே எதிர்பார்க்கலை. என்னாச்சு தெளிவாக சொல்லுங்க அப்படியென்ன அலட்சியம்?! யாருடையது. எல்லாம் நம்ம மருத்துவர்களின் அலட்சியம் தான். முன்னெல்லாம் ஒரு நோயாளியை டீரிட் பண்ணனும்மின்னா வசதியானவங்கன்னா வீட்டுக்கே வருவாங்க, இல்லேன்னா மருத்துவமனையின் வராண்டாவில் மணிக்கணிக்கில் காத்திருந்து, கலர் கலரா மாத்திரைகளை பைக்குள் அடைத்து வைத்திருப்பார்கள்.

இந்த கலர் காச்சலுக்கு, இது சளிக்கு, இது வயிற்று வலிக்குன்னு மாத்திரைப் பட்டைகைள் கலரை மட்டுமே வைத்து பார்த்திருந்த காலமுண்டு. இப்போ ஒரு சாதாரண வியாதிக்கு கூட மாத்திரைப் பட்டையின் பின்புறம் உள்ள மூலக்கூறுகளை கூகுளில் ஆராய்ந்து பார்த்து அதை சாப்பிடுவதால் வேற ஏதாவது வியாதி வருமான்னு படிக்கிற வரைக்கும் மக்கள் உஷாராயிட்டாங்க. ஆனா இப்போ நோய்கள் எவ்வளோ பெருகிடுச்சோ அத்தனை பெருகிடுச்சி மருத்துவமனைகளும் மருத்துவர்களும். தெருவுக்கு நாலு டாக்டர் அவங்க டிஸ்பன்ஸரி முன்னாடி நோயாளிகள் குவியனுன்னு டிஸ்கவுண்ட் மருந்துகள் மட்டுமில்லை டிஸ்கவுண்டில் மருத்துவர்களும் கூட கிடைக்கிறாங்க. ஆடித்தள்ளுபடி மாதிரி இந்த மாதம் முழுக்க உடல் பரிசோதனை இலவசம் மஞ்சகாமாலை ஊசி நாலு பேரு போட்டா ஒருத்தருக்கு இலவசன்னு எத்தனையோ விளம்பரங்கள். என்ன வியாதின்னு வாட்ஸ் அப்பிலே கேட்டு டீரிட்மெண்ட் பண்ற அளவுக்கு மருத்துவம் வளர்ந்திருச்சி. ஆனா அதனால் நன்மைகள் வளருதான்னுதான் தெரியலை. சிலர் தங்களோட அனுமானங்களை வைத்து மேலும் நோயாளிகளை பயமுறுத்தி தேவையில்லாத சிக்கலில் மாட்டிவிட்டுடறாங்க. கடவுளுக்கு அடுத்த படியா மருத்துவர்களைத்தான் கும்பிடறோம். இவனோட விஷயமும் அப்படித்தான்.

 

jl



இந்த பையனுக்கு சேல்ஸ் மேனேஜர் வேலை அடிக்கடி வெளியூர் போகணும். கல்யாணத்திற்கு முன்னாடியே அவனுக்கு கிட்னியில் ஸ்டோன்ஸ் இருந்திருக்கு, கல்யாணம் ஆனபிறகு திடீர்னு ஒரு நாள் அவனோட வயிற்றுப் பகுதியில் வலி அதிகமாகி யூரின் அடிக்கடி போக ஆரம்பித்து இருக்கு அவன் மருத்துவரை சந்தித்திருக்கிறான். அந்த யூரியாலஜி டாக்டர் அல்ட்ரா சவுண்ட், கல்ச்சர் ரிப்போர்ட் எடுக்கச் சொல்லியிருக்கிறார். அதிலே கல் இருக்கிறது தெரியலை, உடனே உங்களுக்கு சிறுநீர் தொற்று உருவாகியிருக்குன்னு சொல்லியிருக்கார். இதை இப்படியே விட்டா அடுத்து யூரின் போகும் போது இரத்தம் வரவும் வாய்ப்பிருக்குன்னு சொல்லியிருக்கிறார். திடீர்னு இப்படி வர காரணம் என்னவாயிருக்கும் என்று இந்த பையனும் கேட்டு இருக்கான் அதுக்கு அவர் சொன்ன காரணம் கணவனும் மனைவியும் பிரியவே காரணமாயிடுச்சி! நீங்கள் அப்பப்போ வெளியூர் போறீங்க அங்கே தவறான அணுகுமுறையினால கூட இந்த நோய்தொற்று வந்திருக்கலாம். அல்லது உங்கள் மனைவியுடன் நீங்கள் சேரும் போது அவர்களுக்கு உறுப்பு ரீதியாக ஏதாவது நோய்தொற்று இருக்கலாம் அடிக்கடி உங்க மனைவிக்கு வெள்ளைப்படுதல், உறுப்பில் இருந்து துர்நாற்றம் அந்த மாதிரி ஏதாவது இருந்திருக்கும் அவங்களோட நீங்க சேரும் போது இந்த மாதிரி கோளாறுகள் வரும்ன்னு சொல்லியிருக்கிறார்.

இந்த மக்கும் அதை நம்பி அவகூட சேராமயே இருந்திருக்கு. கொஞ்சநாளுக்கு பிறகு வலியும் சீறுநீர் கல்லும் வெளியானதும் வலி குறைஞ்சி போச்சு. ஆனா இவனோட சந்தேகம் மட்டும் நிக்கலை, அவளா நெருங்கி வரும்போதெல்லாம் இவளாலதான் அந்த கடுமையான வலி நமக்கு ஏற்பட்டதுன்னு ஒரு எண்ணம் உருவாகி சகஜமான திருமண வாழ்க்கையைப் பாதிச்சது. யார் மேல குற்றன்னு தெரியாமலே சின்ன சின்ன வாக்குவாதங்கள் பெரிசா முற்றிப் போய் இரண்டு வீட்டாருக்கும் விஷயம் தெரிந்து பிரச்சனை பெரிசாயிடுச்சி, தன்னோட இயல்பான வாழ்க்கை முறையில் கணவன் ஈடுபடலைன்னு சொன்னதும் அவனை தரக்குறைவா பெண் வீட்டார் பேச, உங்க பொண்ணுக்கு ஏதோ வியாதி இருக்கு அதனாலதான் என் பையன் உடல் நலம் கெட்டுப் போயிருந்தது. இரண்டு வீட்டுக்காரங்களும் ஒருத்தர் மேல ஒருத்தர் சேத்தைப் பூசிகிட்டாங்க. கடைசியிலே காலங்காலமா வாழவேண்டிய இரண்டுபேர் இப்போ கோர்ட் வாசலில்!

 

lk



அடக்கடவுளே இப்போ நீ என்ன சொல்லியனுப்பினே?!

அந்தப் பொண்ணு கிளியரா இருக்கா நடந்த எல்லாம் அவளுக்கு எடுத்து சொல்லியாச்சு அவனோட மனசஞ்சலத்தை புரிஞ்சிகிட்டு சில டெஸ்ட்க்கு ஒப்புகிட்டா அந்த ரிப்போர்ட்டும், அவனையும் மீண்டும் பரிசோதித்து அந்த ரிப்போர்ட்டும் எடுத்துகிட்டு ஒரு சீனியர் யூரியாலஜகிக்கிட்டே போனோம். அவனின் வலிக்கு காரணம் என்னவாயிருக்குன்னு கண்டுபிடிச்சி சொல்லிட்டார். வலியைக் குறைக்க போட்ட நரம்பு ஊசியினால் ஏற்படும் அபாயத்தையும் அவனுக்கு விளக்கினார். அவனுக்கு மருத்துவம் பார்த்த டாக்டரைப் பற்றி விசாரித்தபோது அவர் இப்போதுதான் படிப்பை முடித்து விட்டு பிராக்டிஸ் பண்ணுவது தெரிந்தது.எல்லா வியாதிக்கும் மருந்துமாத்திரைகளைத் தேடிப் போகாதீங்க இந்த சிறுநீர் கல்லடைப்புக்கு வாழைத்தண்டு சாறு சிறந்த மருந்து ஐந்து ரூபாயில் சரியாக வேண்டிய விஷயத்திற்காக உங்க வாழ்க்கையையே இழக்கத் தயாராயிட்டீங்க உங்க மனைவிக்கு எடுத்த டெஸ்ட்டில் அவங்களுக்கு எந்த நோய்தொற்றும் இல்லை, வெள்ளைப்படுதல் என்பது எல்லாருக்கும் அளவுக்கு அதிகமான உடல் சூடு, அல்லது ஹெவியான மாத்திரைகள், மற்றும் ரத்தபோக்கு தினங்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்படுவது சகஜம் என்று புரியவைத்தார்.

இப்போ அவனுக்கு குற்ற உணர்ச்சி அதிகமாயிட்டது. மருத்துவர் ஒருவரின் தவறான வழிகாட்டுதலால் நடந்திட்ட இந்த தப்பினால் தன் மனைவியை சந்தேகப்பட்டதும் அவளைத் தள்ளிவைக்க நினைத்ததையும் நினைச்சி குற்றவுணர்ச்சி. அந்த பொண்ணு பிரச்சனையைப் புரிஞ்சிகிட்டதால இரண்டு பக்கமும் பேசி டைவர்ஸ்ஸை கேன்சல் பண்ணற முயற்சியில் இருக்கா. நல்லவேளை இந்த மருத்துவர் மட்டும் சரியான முறையில் கையாளகாம இருந்திருந்தால் ஒரு மணமுறிவு ஏற்பட்டு இருந்திருக்கும். உண்மைதான். மருத்துவர்கள் கடவுளுக்கு அடுத்தபடியாகத்தான் பார்க்கிறோம் ஆனா சில நேரங்களில் அவங்க ரொம்பவும் அதிகப்படியான தவறுகள் செய்திடறாங்க. வலின்னு போனாலே ஏன் அவஸ்தைப் படணும் உடனே ஆபரேஷன் செய்திடலான்னு சொல்லி மனதை மாற்றிடறாங்க. என் மனைவிக்கு வலிக்காம புள்ளை பெத்துக்கணும் அதுக்கு ஏதாவது ஊசியிருந்தா போடுங்க என்ன செலவானாலும் பரவாயில்லைன்னு கணவன்கள் சொல்றதும், குாந்தை வயிற்றில் உருவானது கன்பார்ம் ஆனதும் நல்ல நேரத்திலே நல்ல நாள்ல குழந்தையை பிறக்க வைக்கிறோன்னு குறைபிரசவத்தில் ஆபரேஷனுக்கு பேஷண்டை மனம் மாற்றச் செய்யறதும்தான் இங்கே அநேகம் நடக்குது. நம்மோட பயத்தை பணமாக்கிடறாங்க.

 

hjk



அவள் சொன்னதுக்கு ஆம் என்று தலையசைத்துவிட்டு நகர்ந்தேன். ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்து பயத்தோடு அமர்ந்திருக்கும் நோயாளியின் முன்னால் புரியாத பாஷையில் பேசிவிட்டு ஒண்ணுமில்லை, ஒரு அபார்ஷன் பண்ணிடலாம் என்று கூலாக சொன்ன மருத்துவர் நினைவுக்கு வந்தது. பணம் தருகிறோம் ரிப்போர்ட் பார்த்து தெளிவா சொல்லக் கூட கஷ்டப்படறாங்க. நம்ம உடம்பு பத்தி கேட்டா சயின்ஸ் உங்களுக்கு புரியாது அதான் ஆபரேஷன்னு சொல்லிட்டோமேன்னு அசால்டா சொல்லிட்டு கடக்கும் மருத்துவர்கள் கண்முன் வந்து போனார்கள்.