Skip to main content

மருது சகோதரர்களை ஊர்காவலனாக வணங்கும்  மக்கள்; பழமையான  கல்வெட்டு கண்டெடுப்பு!

Published on 18/03/2025 | Edited on 18/03/2025

 

Inscription discovered in which villagers offer Maruthu brothers home guards

இராமநாதபுரம் இராஜசிங்கமங்கலம் அருகில் காவானூரில் 174 ஆண்டுகள் பழமையான இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

சிவகங்கை தொல்நடைக் குழுவைச் சேர்ந்த பணிநிறைவு பெற்ற தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பா. இளங்கோவன் இராமநாதபுரம் இராஜசிங்கமங்கலம் காவானூரில் அவர்களது குலசாமி கோவிலில் கல்வெட்டு ஒன்று இருப்பதாக கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா ஆய்வு மேற்கொண்டார்.

இது குறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர், புலவர் கா. காளிராசா செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது: இராமநாதபுரம் இராஜசிங்கமங்கலம் அருகில் உள்ள காவானூரில் மதுரைவீரன் சாமி கோவிலில் கல்வெட்டு ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு கல்வெட்டை வாசித்ததில் 174 ஆண்டுகள் பழமையான இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி காலத்திய அவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள கல்வெட்டு என்பது தெரிய வந்தது. நடப்பட்டிருந்த கல்வெட்டில்   எழுத்து உள்ள பகுதி மட்டும் துண்டாக உடைந்து கிடக்கிறது.  பின்பகுதியும் அதன் அருகிலேயே கிடக்கிறது. இக்கல்வெட்டில் ஒன்றரை அடி உயரத்தில் ஒரு அடி அகலத்தில் 16 வரிகள் இடம் பெற்றுள்ளன. முதல் இரண்டு வரிகளும் இறுதி வரியும் கிரந்தத்தில் எழுதப்பட்டுள்ளன.

கல்வெட்டு வாசகம்;

‘ஸ்வஸ்தி ஸ்ரீ சாலி வாகன சகாப்தம் 1 773ல் விரோத கிருது வருஷம் தை மீ 4 சோமவாரமும் கூடிய சுப திந காவானூர் மதுரவீர உளி -தூகுபயசிலாக்களும் பிரதிஷ்டை செய்தார் சந் -----கம் விளங்கும்படி சூடியூரம்பலம் வயிரான் -த்த பேறன் கனகு சேமம் பேத்தி மகமாயியும் ட சே மம்பெற்றபடி நயினார்கோ வில் முத்துகாத்தபதிசெல் வதாக’

Inscription discovered in which villagers offer Maruthu brothers home guards

கல்வெட்டுச் செய்தி;

ஸ்வஸ்தி ஸ்ரீ என தொடங்கும் இக்கல்வெட்டில் 1851 வது ஆண்டு, விரோத கிருது வருஷம்  தை மாதம் நான்காம் நாள் திங்கள் கிழமை உத்திரட்டாதி நட்சத்திரமும் கூடிய நன்னாளில் காவனூர் மதுரை வீரன் உள்ளிட்டவைக்கு உபயமாக சிலைகளை பிரதிஷ்டை செய்து சந்திரன் சூரியக்காலம் விளங்கும்படி சூடியூர் அம்பலம் வைரான் காத்த பேரன் கனகு பேத்தி மகமாயி சேமம் பெற்றபடி நயினார் கோவில் முத்துகாத்தபதி செல்வதாக என்று எழுதப்பட்டுள்ளது.

இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி;

கல்வெட்டின் இறுதியில் நயினார் கோவில் முத்துக்காத்தப்பதி என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன, முத்துக்காத்தபதி என்பது இராமநாதபுர ஜமீந்தார் இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதியை குறிப்பிடுகிறது, இவர் இராணி பர்வத நாச்சியாரால் தன் வாரிசாக நியமிக்கப்பட்டவர் ஆவார். பெரும் புலவராகவும் தமிழ்ப் புரவலராகவும் விளங்கியவர், இவரது மகன் பாஸ்கர சேதுபதியே விவேகானந்தரை சிகாகோவிற்கு அனுப்பி வைத்த பெருமைக்குரியவர் ஆவார்.

மருது சகோதரர்கள்;

இரண்டு  கழுமரம் போன்ற தூண்கள் இக்கோவிலில் மதுரை வீரனாக வணங்கப்பட்டாலும் ஒரே வடிவில் இரண்டு தூண்கள் நடப்பட்டு இரண்டின் கீழ் பகுதியில் மதுரைவீரன் சிற்பம் புடைப்பு சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. ஒரு தூணில் உள்ள சிலை நளினமாகவும் மற்றொரு தூணில் உள்ள சிலை நேராகவும் வடிக்கப்பட்டுள்ளது. ஒரு தூணை மட்டும் நட்டு வணங்காமல் இரண்டும் ஒரே வடிவில் நடப்பட்டு வணங்கப்படுவதால்  அன்றைய சூழலில் நேரடியாக மருது சகோதரர்களை வணங்க முடியாமல் இவ்வாறான ஏற்பாட்டை செய்திருக்கலாம் என்று கருத இடமுண்டு. ஊர் மக்கள் இக்கோவிலை ஊர்க்காவலன் என்று வணங்குகின்றனர். ஊர் முழுக்க ஒரே சமூகத்தார் இருந்தாலும் இக்கோவிலை பராமரித்து வரும் குடும்பத்தினர் மருதின் வழியினராக உள்ளனர்.  இக்கோவில் சிவகங்கை மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பா.மனோகரன் அவர்களது குலதெய்வமாகவும் விளங்குகிறது, இதுகுறித்த மேலான தகவலைப் பெற ஊர்மக்களிடம் விசாரித்த போது ஊர் பொது நிகழ்வுகளுக்கு இக்கோவிலில் தேங்காய் உடைத்து வழிபடுவது மரபாக உள்ளதை அறியமுடிந்தது என்று கூறினார்.
 

சார்ந்த செய்திகள்