Skip to main content

790 ஆண்டுகள் பழமையான கமலைக் கிணற்றுடன் கல்வெட்டு! 

Published on 04/01/2024 | Edited on 04/01/2024
Inscription with 790 year old

தூத்துக்குடி மாவட்டம், மடத்தூர் நெடுஞ்சாலை அருகே “பங்கய மலராள் கேழ்வன்…..’’ என்று தொடங்கும், பாண்டியர் காலத்தைச் சேர்ந்த 790 ஆண்டுகள் பழமையானக் கிணறு மங்கலச் சொற்களுடன், பாடல் அமைப்பில் உள்ள கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.  பி.ராஜேஷ் மடத்தூரில் பழமையானக் கமலைக் கிணறு இருப்பதாகக் கூறியதன் பேரில் தொல்லியல் ஆராய்ச்சியாளர் முனைவர் தவசிமுத்து மாறன் நேரில் அதனைப்பார்த்த பின்பு கூறியதாவது; தமிழகம் முழுவதும் உள்ள கல்வெட்டுகளில், பல்வேறு வணிகக் குழுவினர் பெயர்கள் காணப்படுகின்றன. இவற்றில் நானாதேசி என்போர் எல்லா நாடுகளுக்கும் கடல் வழி மற்றும் தரைவழியாகச்சென்று வணிகம் செய்பவர்கள். இவ்வூரின் பழைய பெயர் நானாதேசி நல்லூர் ஆகும். இப்பெயர் மருவி தற்போது மடத்தூர் என ஆகிவிட்டது. இத்தகைய வணிகக் குழுவினர் தங்களுக்கென பாதுகாப்பு வீரர்களையும் வைத்திருந்தனர். அதேபோல், பிராமணர்களுக்கு தானமாக ஒரு ஊரினை மங்கலம் என்ற பெயரில் உருவாக்கிக் கொடுத்து அதன் காவல் பொறுப்பினையும் ஏற்றுக் கொண்டுள்ளதை அறிய முடிகிறது. 

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தைச் சேர்ந்த (கி.பி.1234) இந்தக் கல்வெட்டு இருபது வரிகளைக் கொண்டுள்ளது. 7 அடி உயரமும் 1½ அடி அகலமும் உள்ள செவ்வக வடிவிலான இதன் மேற்பகுதி குறுகலாக அமைந்துள்ளது. இந்த ஊர் நானா தேசிநல்லூர் என்றழைக்கப்பட்டதைக் குறிப்பிடும் விதத்தில், தாமரைப்பூவில் வாசம் செய்யும் லட்சுமியின் மணாளன் பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாள், மென் பாதராமன் சிவந்த சூரியனாக ஒளிவிடும், ராசன் நானாதேசி நல்லூரின் அரசன் ஆண்டு 1234 இல் கங்கை நீர் போல வற்றாத கிணற்றை, அமைத்திட உலகம் போற்ற உத்தரவிட்டான். என்றென்றும் மக்களுக்கு தண்ணீர் தருவதை இனிமையான தமிழால் கூறு என்ற பொருள்பட இக்கல்வெட்டு அமைந்துள்ளது.

Inscription with 790 year old

கிணற்றிலிருந்து நீர் இறைக்கப் பயன்படும் ஒருவகை நெம்புகோல் அமைப்பு  துலாக்கல் அல்லது ஏற்றம் என்றழைக்கப்படுகிறது. மக்களுக்குத் தேவையான மழைநீர் கிடைக்காமல் கண்மாய், குளங்கள் வறண்டு போகும் காலங்களில் கிணறுகள் தோண்டப்பட்டு பயன்படுத்தப்படுவது வழக்கம். இத்தகைய கிணறுகளை நடைமுறையில் அப்பகுதிகளின் அரசனும் அவரது சார்பில் நிர்வாகிகளும் வணிகர்களும் உருவாக்கியுள்ளனர். கோயில் அருகில் வெட்டப்பட்டுள்ளவை திருமஞ்சனக் கிணறுகள் என்றும், வழிப்பாதைகளில் உள்ளவை பொது குடிநீர்க் கிணறுகள் என்றும் அறியமுடிகிறது. அரசன், கமலைக் கிணற்றையும், அமைத்துக் கொடுத்துள்ளார். இங்கு கிணறு தற்போதும் பயன்பாட்டில் உள்ளது. சிறப்புமிக்க இந்த கல்வெட்டை சுற்றிலும் வேலி அமைத்துப் பாதுகாப்பது அந்த ஊருக்கு பெருமை தரும். இவ்வாறு கூறினார். 

Next Story

தாது பஞ்சகால ஜமீன்தார் கல்வெட்டு கண்டுபிடிப்பு‌!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
discovery of the Zamindar inscription of the Ore Pancha period

கல்லலை அடுத்த அரண்மனை சிறுவயலில் 148 ஆண்டுகள் பழமையான தாது பஞ்சகால ஜமீன்தார்  கல்வெட்டு கண்டுபிடிப்பு.

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகில் உள்ள அரண்மனை சிறுவயலில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர், புலவர் கா. காளிராசா, கள ஆய்வாளர், கா. சரவணன் ஆகியோர் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் 148 ஆண்டுகள் பழமையான தாது பஞ்சகால ஜமீன்தார் கல்வெட்டை கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா‌. காளிராசா, செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது. கல்லலை அடுத்துள்ள அரண்மனை சிறுவயல் நீர் நிலைகளும், வயல்வெளிகளும் நிறைந்த  ஊராகும். இங்குள்ள மும்முடீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலாகும், மேலும் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் அரண்மனை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் இங்குள்ள சீனக்கண்மாயில் கலுங்குமடையில் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனக்கண்மாய்;

அரண்மனை சிறுவயலிலிருந்து களத்தி அய்யனார் கோவிலுக்குச் செல்லும் வழியில் தொடர்வண்டிப் பாதையை ஒட்டிய ஒரு பகுதியில் சீனக் கண்மாய் அமைந்துள்ளது. கண்மாயின் நடுவில் காணப்படும் குமிழி மடைத் தூண்களைக் கொண்டு இது பழமையான கண்மாய் என்பதை அறிய முடிகிறது.

அரண்மனை சிறுவயல் ஜமீன்தார்;

சிவகங்கைச் சீமை இராமநாதபுரத்தில் இருந்து 1729 இல் பிரிக்கப் பெற்று சசிவர்ணதேவர் அவர்களால் 1730 இல் தெப்பக்குளம், அரண்மனை மற்றும் நகரம், உருவாக்கி முறையான அமைப்பாக ஆளப்பெற்றது. 03.09.1801ல் இருந்து இஸ்திமிரிங் ஜமீன்தாராக கௌரி வல்லவருக்கு அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்களால் முடி சூட்டப் பெற்று, அன்று முதல் ஜமீன்தாரி முறைக்கு சிவகங்கை வந்தது. கௌரி வல்லவர் அறந்தாங்கி காட்டில் வாழ்ந்த போது மாணிக்க ஆத்தாள் என்பவரை விரும்பி மணந்தார். இவர் வேறு சமூகத்தை சார்ந்தவர். அவர் வழிவந்த வாரிசுகளே தற்போது சிறுவயல் ஜமீன்தாராக இருந்து வருகின்றனர். இங்கிருந்த முத்துராமலிங்க ஜமீன்தார் பற்றி தமிழ்த் தாத்தா உ.வே.சா என் சரித்திரம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவர்களது வாரிசுதாரர்கள் இன்றும் காளையார்கோவில் வைகாசி விசாகத் திருவிழாவில் ஐந்தாம் மண்டகப் படியை நடத்திவருவதோடு, காளையார் கோவில் தேரோட்டம், மற்றும் தெப்பத் திருவிழாவிற்கு தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். கல்லல் சிவன் கோவிலிலும் எட்டாம் திருநாள் மண்டகப்படி இவர்களுடையதாக உள்ளது. இவர்கள் முன்னோர்கள் வாழ்ந்த அரண்மனை தற்போது மிகவும் இடிந்த நிலையில் இருந்தாலும் அதில் ஒரு பகுதியில் வேல், வாள், கம்பு, வளரி போன்ற ஆயுதங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கல்வெட்டு அமைப்பு;

சீனக் கண்மாயில் நீர் நிறைந்து வெளியேறும் கலுங்கு மடை கரைப்பகுதிகள் செம்புராங்கல்லாலும்.. நீர் வெளியேறும் இடங்கள் வெள்ளைக் கற்களாலும் கட்டப்பட்டுள்ளன. இதில் கரையை ஒட்டியுள்ள கட்டுமான பகுதியில் சுமார் 2.5 அடி நீளமும் ஒன்றரை அடி  அகலமும் உடையதாகக் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டுச் செய்தி;

உ 1876 ஆம் வருஷம் மே மாதம் எட்டாம் தேதி தாது வருஷம் சித்திரை மாதம் 28ஆம் தேதி சிவ- சப்-கட்டணூர் ஜமீன்தார் முத்து வடுகு முத்துராமலிங்க தேவர்வர்கள்.என்று எழுதப்பட்டுள்ளது. சிவ - சப் என்பது சிவகங்கை சார்பு என பொருள் படுவதாகக் கொள்ளலாம். கண்மாய்க் கல்வெட்டின் வழி கண்மாயை முத்து வடுகு என்ற முத்துராமலிங்க  ஜமீன்தார் அவர்கள் கண்மாய், மற்றும் கலுங்கை சீர் செய்தமையை அறிய முடிகிறது.

தாது பஞ்சம் காலம்;

1876 ஆம் ஆண்டு தொடங்கி 1878 வரை தாது பஞ்ச காலம் என்று சொன்னாலும் இதற்கு முன்னும் பின்னும் சேர்த்து ஏழு ஆண்டுகள் மழை இல்லாமல் மிகுந்த வறட்சியாக இருந்ததாக பெரியவர்கள் கூறுகின்றனர்.இந்த தாது பஞ்சம், மிகப்பெரிய பஞ்சமாக ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பஞ்ச காலத்தில் மக்கள் பட்டினியால் இலட்சக்கணக்கில் இறந்ததாகவும் தெரிகிறது. இதை சென்னை மாகாணப் பஞ்சம் என்றும் அழைக்கின்றனர். சென்னை மட்டுமல்லாது கர்நாடகா மகாராஷ்டிரா வரை இப்பஞ்சம் பரவி இருந்ததாக கூறப்படுகிறது.

தாது பஞ்சம் பற்றி பல இலக்கியங்கள் குறிப்பிட்டாலும் சிவகங்கை பகுதியில் கண்மாய்களை தூர்வாரி பராமரிப்பு பணியை செய்து இருப்பதன் மூலம் அடுத்த மழைக்கு தயாராக இருந்ததை அறிய முடிகிறது.

பஞ்ச லட்சண திருமுக விலாசம்;

சென்னை மாகாண தாது பஞ்சத்தை கருப்பொருளாகக் கொண்டு சிவகங்கை அரசவைப் புலவரும், மிராசு கணக்காளருமான பிரமனூர் வில்லியப்ப பிள்ளை பாடிய எள்ளல் சுவை மிகுந்த நூல் பஞ்சலட்சன திருமுக விலாசம் ஆகும். இந்நூலில், மதுரை சொக்கநாதரிடம் பஞ்சத்தின் பாட்டை மக்கள் முறையிட, அவரோ சிவகங்கை ஜமீன்தார் துரைசிங்கம் அவர்களிடம் முறையிட அனுப்பி வைத்ததாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழி சிவகங்கை தாது பஞ்ச நேரத்தில் ஓரளவு செழிப்பாக இருந்ததாகவும் கருத முடிகிறது.

சிவகங்கை தொல்நடைக் குழு சில ஆண்டுகளுக்கு முன்னர், தாது பஞ்ச காலத்தில் இலங்கையில் தொழில் செய்த தனிநபர் ஒருவர், குளம் மற்றும் வரத்துக் காலை சீர் செய்து உள்ளுர் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிய கல்வெட்டை சிவகங்கை அருகே உள்ள இடைய மேலூரில் கண்டுபிடித்தது, குறிப்பிடத்தக்கது.

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.