Skip to main content

கடும் நெருக்கடி நிலையில் இந்தியா... அதிருப்தியில் இருக்கும் மோடி... மத்திய உள்துறை எடுத்த அதிரடி முடிவு!


கரோனா பரவலில் மூன்றாம் நிலைக்கு இந்தியா நகர்ந்து விட்டதாக அபாய சங்கினை ஊதுகிறது உலக சுகாதார நிறுவனம். மத்திய சுகாதாரத் துறையும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் பிரதமர் அலுவலகத்துக்கு எச்சரிக்கை செய்தபடியே இருக்கின்றன.

இந்த இரு துறைகளின் வல்லுநர்களிடமும் உயரதிகாரிகளிடமும் விவாதித்த பிரதமர் மோடி, கரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், மூன்றாம் நிலை பரவுதலைக் கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான வழிமுறைகளில் முன்னேற்றம் காணப்படவில்லை எனத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். அப்போது, தேசிய ஊரடங்கை குறைந்தபட்சம் இன்னும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்பதைத் தவிர வேறு வழியில்லை.
 

 

 

admkகண்காணிக்கப்படுபவர்களில் 100 பேரின் ரத்த மாதிரிகளைப் பரிசோதித்தால் குறைந்தபட்சம் 23 பேருக்குத் தொற்று உறுதி என்னும் ரிசல்ட் வருகிறது. அதனையடுத்து அந்த நபர்கள் எங்கெல்லாம் சென்று வந்துள்ளார்கள் என ஆராயும்போது அவர்களுடன் தொடர்புள்ளவர்களையும், அந்த நபர்களோடு தொடர்பில் இருந்தவர்களையும், அவர்கள் பயணித்த இடங்களில் அவர்களுக்குத் தொடர்பில்லாதவர்கள் யார் யார் இருந்தார்கள் என்பதையும் கண்டறிவது மிகக் கடினமாக இருக்கிறது. வெளிநாட்டுப் பயணர்களுடன் நேரடி தொடர்பில்லாதவர்களுக்கும் தொற்று உள்ளது என விவரித்துள்ளனர் மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தினர். மேலும், தனிமைப் படுத்திக்கொள்வதைத் தவிர வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்த முடியாது என்பதால், உயிரிழப்புகள் அதிகரித்தப் பிறகே இந்த கரோனா அமைதியாகும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதனால்தான் அனைத்துக் கட்சி கூட்டத்தில், சமூக நெருக்கடி நிலையில் தேசம் சிக்கியிருப்பதால் கடினமான முடிவுகளையும் எடுக்க வேண்டியதிருக்கிறது என்பதைத் தெரிவித்தார்‘ என்கின்றன டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள்.

ஏப்ரல் 11-ந்தேதி மாநில முதல்வர்களுடன் மீண்டும் விவாதித்துவிட்டு தனது முடிவுகளை அறிவிக்கவிருக்கிறார் மோடி. இதற்கிடையே, பொருளாதார நெருக்கடியும் அதிகரித்துள்ள நிலையில் அரசுகளுக்கு எதிராக மக்களின் கிளர்ச்சி உருவாகிவிடமால் இருக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது மத்திய உள்துறை.

 

bjpமத்திய அரசிடமிருந்து தினந்தோறும் வரும் உத்தரவுகளுக்கேற்ப அதிகாரிகளுடன் தொடர்ச்சியான ஆலோசனைகளை நடத்தி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஒவ்வொரு பணிகளையும் கவனிக்கத் தலைமைச் செயலாளர் சண்முகத்தின் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய 12 குழுக்களுடன் 9-ந்தேதி விரிவாக விவாதித்தார் எடப்பாடி. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் உள்பட 12 குழுவிலுள்ள உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். அந்த ஆலோசனையின்போது, தமிழகத்தில் கரோனா தொற்று பற்றிய முழு விவரங்களையும் விவரித்தார் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்.

 

http://onelink.to/nknapp

 

admkஅப்போது, வெண்டிலேட்டர், உடல் பாதுகாப்பு ஆடைகள், காய்ச்சல் மருந்துகள், ஆன்ட்டிபயாடிக் மருந்துகள், ஐ.வி. திரவங்கள், பி.சி.ஆர்.கிட்ஸ் உள்ளிட்டவைகளில் தட்டுப்பாடு இருப்பதாகத் தனக்கு வரும் புகார்களை எடப்பாடி தெரிவித்தபோது, மருந்துகளும் பாதுகாப்புக் கவசங்களும் போதுமான அளவில் இருப்பதை எண்ணிக்கையின் அடிப்படையில் விவரித்த பீலாராஜேஷ், வெண்டிலேட்டர்கள் கொள்முதல் செய்வதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதையும் விவரித்தார்.

குறிப்பாக, மாநில அரசின் சார்பில் 2,500 வெண்டிலேட்டர்கள் பர்சேஸ் செய்ய உத்தரவிடப்பட்டிருப்பதையும், மத்திய அரசும் தங்களிடம் இருக்கும் வெண்டிலேட்டர்களில் 20,000 கொடுத்து உதவ முன்வந்திருப்பதையும் இவை ஓரிரு நாளில் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிடும் என்பதையும் தெரிவித்திருக்கிறார். தவிர, 50,000 ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் வந்துள்ளதையும் உறுதிப்படுத்தியிருக்கிறார் பீலா ராஜேஷ்.

இந்தச் சூழலில், அத்யாவசியப் பொருட்களின் உற்பத்தியைக் கண்காணிக்கும் குழுவின் அதிகாரிகள், உற்பத்தி நிறுவனங்களில் ஆட்கள் பற்றாக் குறை இருப்பதை நிறுவனங்களின் உரிமையாளர்கள் தெரிவித்திருப்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். அப்போது, பாதுகாப்பு கவசங்களுடன் குறைவான ஆட்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யுமாறு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டார் எடப்பாடி. மக்களுக்கான நிவாரண உதவிகள் குறித்து எடப்பாடி கேள்வி எழுப்ப, அரிசி கார்டுதாரர்களில் 96 சதவீதம் அரசு அறிவித்த 1000 ரூபாய் நிதி உதவியும் இலவசப் பொருட்களும் கொடுக்கப்பட்டுவிட்டன. வீடுகளுக்கே சென்று பணம் கொடுக்கப்பட்டதை மக்கள் வரவேற்கின்றனர். தமிழக கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்களிலும் 80 சதவீதம் பேருக்கு நிவாரண பொருட்கள் தரப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களுக்கு இன்னும் 2 நாட்களில் கொடுக்கப்பட்டு விடும் எனப் பல்வேறு புள்ளிவிபரங்களுடன் விவரித்த உணவுத்துறை அதிகாரிகள், ரேசன் அட்டைதாரர்களுக்கு மீண்டும் ஒருமுறை நிதி உதவியும் நிவாரண உதவியும் செய்வது அவசியம் என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். அதே போல, சட்டம் ஒழுங்கு, தனியார் மருத்துவமனைகளின் ஒருங்கிணைப்பு, மத்திய அரசுடன் ஆலோசனை, தகவல் தொழில் நுட்பத் துறை மூலம் மக்களுடன் நெருக்கம் ஏற்படுத்திக் கொள்ளுதல் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார் எடப்பாடி. அனைத்துக் குழுக்களும் ஒரே குரலில், ’மத்திய அரசிடமிருந்து அதிக நிதி பெறுங்கள்; நிதியில்லாமல் சமாளிப்பது கடினம் என உரத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

வைரஸ் கட்டுப்படுத்துவதன் தன்மை குறித்து விசாரித்த எடப்பாடியிடம், மூன்றாம் நிலைக்கு தமிழகமும் தள்ளப்பட்டிருக்கிறது. முழுமையாக அவை ஆக்கிரமிக்காமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்து வருகிறோம் எனத் தெரிவித்திருக்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

 

இதை படிக்காம போயிடாதீங்க !