Skip to main content

இதே பழைய ராமதாசாக இருந்தால்... விஜய்க்கு ராமதாஸ் எச்சரிக்கை

Published on 30/06/2018 | Edited on 30/06/2018
ramadoss


இதே பழைய ராமதாசாக இருந்தால் விஜய் நடிக்கும் சர்கார் படத்தை ஒரு சினிமா தியேட்டரிலும் ஓட விட்டிருக்கமாட்டோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்து பேசினார்.
 

2018-ஆம் ஆண்டை ஊழல் ஒழிப்பு ஆண்டாக பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இதனையொட்டி கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் பாமக சார்பில் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.
 

அப்போது அவர், 
 

என்னைப் பற்றி தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்து இருக்கிறார். அவருக்கு சமூகம், அரசியல், பொருளாதாரம்,  இட ஒதுக்கீடு இவைகள் பற்றி எதுவும் தெரியாது. இட ஒதுக்கீடு என்றால் சினிமா கொட்டகையில் இடம் பிடிப்பது என்று நினைத்து கொண்டிருக்கிறார்.  வன்னியர் சங்கம் நடத்திய இட ஒதுக்கீடு போராட்டம் ஒரு சமூக நீதி போராட்டம். அப்போராட்டத்தில் 21 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். போராட்டத்தின் போது மரங்களை வெட்டவில்லை. மரக்கிளைகளைத்தான் பொதுமக்களே வெட்டினார்கள். 

 

 

 

யாரு வைத்த மரம். எங்கள் முன்னோர்கள் வைத்த மரம். இப்போது எங்கள் பிள்ளைகள் பல மடங்கு மரங்களை வைக்கிறார்கள். உரிமை போராட்டத்தை கொச்சைபப்டுத்துகிறார். என்னை போராளி என்றழைப்பதையே பெருமையாக கருதுகிறேன். என்னுடைய வாழ்நாளை மக்களுக்காக போராடுவதற்காக அர்ப்பணித்துள்ளேன். 
 

என்னுடைய போராட்ட வாழ்வு பற்றி அவருக்கு (தமிழிசை) தெரியவில்லை. குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் அங்குள்ள சமுதாய மக்கள் இட ஒதுக்கீட்டுக்காக போராடி இருக்கிறார்கள். அப்போது பஸ்களை சிறைபிடித்துள்ளனர், பஸ் கண்ணாடிகளை உடைத்து இருக்கிறார்கள். இது தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஏன் தெரியவில்லை. 

 

 

 

புகையிலா இல்லா நாட்டை உருவாக்க முன்னாள் அமைச்சர் அன்புமணி இராமதாசும், நாங்களும் போராடி வருகிறோம். 51 சதவீத இளைஞர்கள் சினிமா பார்த்து தான் புகை பிடிக்க கற்றுக்கொள்கிறார்கள்.  அதனால்தான் நடிகர்கள் சிகரெட் பிடிக்க கூடாது என்று தொடர்ந்து போராடி வருகிறோம். நடிகர் ரஜினிகாந்த் கூட எங்களின் வேண்டுகோளை ஏற்று புகைபிடிக்கமாட்டேன் என அறிவித்துள்ளார். 
 

இப்போது ஒரு நடிகர் (விஜய்) அவர் நடிக்கும் சர்கார் என்ற படத்திற்கான விளம்பரத்தில் புகை பிடிப்பது போல் விளம்பரம் செய்துள்ளார்கள். அதை பார்க்க பார்க்க கோபம் கோபமாக வருகிறது. அதன் மூலம் இளைஞர்களுக்கு நடிகர்களும், தயாரிப்பாளர்களும் என்ன சொல்ல வருகிறார்கள்? புகை பிடிப்பது போன்ற காட்சியை விளம்பரப்படுத்த அந்த படத்தின் தயாரிப்பாளரும், நடிகரும் சிகரெட் கம்பெனிகளிடம் காசு வாங்கி இருப்பார்களோ? 

 

 

 

இதே பழைய ராமதாசாக இருந்தால் அந்த படத்தை ஒரு சினிமா தியேட்டரிலும் ஓட விட்டிருக்கமாட்டோம். இப்போது வேண்டுகோளாக வைக்கிறோம். ஒரு நாட்டின் சொத்து இளைஞர்கள். அவர்கள் சீரழிவதை பார்த்து கொண்டிருக்க முடியாது.  சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகளை  ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு பேசினார்.