Skip to main content

பசி!.. தொற்றல்ல, தொன்றுதொட்டு…

Published on 09/05/2020 | Edited on 09/05/2020
Hungry! .. not infectious,

 

கட்டுரை : சாக்லா

 

"வாடிய பயிரை கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்”


என்று பசியால் வாடும் மக்களின் நிலை குறித்து உள்ளம் பதைத்து பாடினார் வள்ளலார். இந்தியாவில் பசி, பட்டினி என்ற பிச்சை பாத்திரம் ஒவ்வொரு ஆட்சிக்காலத்தில் உண்டாக்கப்படும் சாத்திரமாகும். சுதந்திர இந்தியாவில் தொடர்ந்து வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. அந்த நிலையை மாற்றவும் ஆளும் மன்னர்களுக்கு மனம் வந்ததாயில்லை. உலக அளவில் கரோனா தொற்று நோயின் வீரியம் அதிகரித்து வரும் அதே சூழலில், பசியால் துடிதுடிக்கும் மக்களின் அறியப்படாத சாவும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஊரடங்கு தொடங்கி 40 நாட்களுக்கு மேலாக இருண்டோடிவிட்டது. ஆனாலும், இந்த ஊரடங்கை மக்களுக்குப் பயனுள்ளதாக பயன்படுத்தும் அளவிற்கான எந்தத் திட்டமும் மத்திய அரசிடம் இல்லாமல், மக்களை அல்லல் பட வைத்திருப்பது வேதனை. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சரியான பாதுகாப்பு வசதிகளைக்கூட சரிவர செய்து கொடுக்காததால் தொழிலாளர்களின் நிலை சீரழிந்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஏழை மக்களின் நிலைமை சொல்லொணாத்துயரமாக நிழலாடுகிறது. இப்படி ஊரடங்கு காலத்தில் மக்களை பஞ்சப்பராரிகளாக அலையவைத்திருப்பதுதான் மத்திய அரசின் சாதனையாக உள்ளது. உலகம் முழுவதும் கரோனா தொற்று காரணமாக மக்கள் பட்டினிச் சாவிற்கு தள்ளப்படுவார்கள் என்று ஐ.நா. உணவு பாதுகாப்பு திட்ட கழகம் எச்சரிக்கை மணி அடித்திருப்பது ஏழை மக்களின் அடிநாதத்தை குலை நடுங்க வைத்துள்ளது.

 

 


பட்டினிச்சாவிற்கு தள்ளப்படும் மக்கள்:

கோவிட்-19 தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, காரணமாக தனிமனித பொருளாதாரம் பெரும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. தினக்கூலிகளின் அடிப்படை வாழ்வாதாரம் பசி பட்டினியோடு கழிக்கக் கூடியதாகவே மாறியுள்ளது. ஊரடங்கு காரணமாக அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் குழந்தைகள் பள்ளிகளில் பெறும் சத்துணவை இழந்துள்ளனர். இதனால் குழந்தைகளுக்கு கிடைக்கப்பெற்ற ஊட்டச்சத்துகளிலும் குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களின் குழந்தைகளே சத்துணவை நாடியுள்ளவர்கள். இந்நிலையில் தற்போது உள்ள நெருக்கடி சூழலில், இந்தியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 368 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பள்ளியில் சாதாரணமாக பெறும் சத்தான உணவு மற்றும் சிற்றுண்டிகளை இழந்துள்ளதாக அமெரிக்க பத்திரிகை நியூயார்க் டைம்ஸ் புள்ளிவிவரம் தெரிவித்திருக்கிறது. பொது விநியோகத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் உணவு தானியங்களை மக்கள் நாடியுள்ள சூழலில், இந்தியாவின் வட மாநிலங்களில் இதன் தட்டுப்பாடு மக்கள் மத்தியில் தலைவிரித்தாடுகிறது. தமிழகத்திலும் வேலையை இழந்து வருமானம் இல்லாமல் தத்தளிக்கும் குடும்பங்கள் இலவச உணவுகளை வாங்க நடுங்கிக்கொண்டு பசியால் மூர்ச்சையாகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ் ஊடகத்தில் நடைபெற்ற சாமானியர்களுக்கான விவாதத்தில் பங்கேற்ற பெயிண்ட் காண்ட்ரக்டர் “நாங்கள் ஒவ்வொரு நாளும் கதவை திறந்து வைத்து காத்திருக்கிறோம் யாராவது உதவி செய்ய வருவார்களா” என்று கண்ணை துடைத்தவாறு பேசுகையில் வேடிக்கை பார்க்கும் அரசின் மீதான ஆத்திரக்கடல் கொந்தளிக்கிறது.

 

 

Hungry! .. not infectious, palpable…


கரோனா தொற்று நோயால், 2020ஆம் ஆண்டில் 130 மில்லியனுக்கும் அதிகமானோர் பசியுடன் இருக்கக்கூடும் என்று ஐக்கிய நாடுகளின் நிறுவனமான உலக உணவு திட்டத்தின் தலைமை பொருளாதார நிபுணர் ஆரிஃப் ஹுசைன் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக, ஆண்டு இறுதிக்குள் 265 மில்லியன் மக்கள் பட்டினியின் விளிம்பிற்கு தள்ளப்படலாம் என்றும், ஏற்கனவே 135 மில்லியன் மக்கள் கடுமையான உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டிருந்த நிலையில் தற்போது அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், "இதற்கு முன்பு இது போன்ற சூழலை எதிர்கொண்டதில்லை” என்று ஹுசைன் குறிப்பிட்டிருப்பது பெரும் அச்சத்தையும், பட்டினியால் மனித இழப்புகளுக்கான முன்னெச்சரிக்கையாக இருக்க கூடும் என்று பொருளாதார அறிஞர்களின் கணிப்பாக இருக்கிறது.  


உணவு பாதுகாப்புடன் மக்களின் பசி:

உலகளவில் உணவுப் பொருட்களுக்கு தற்போது வரை பஞ்சமில்லாமல் இருக்கிறது. ஆனால் வரும் மாதங்களில் ஏற்படும் போக்குவரத்து சிக்கல் காரணமாக இறக்குமதியை நம்பியிருக்கும் நாடுகள் உணவுத் தட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கும் என்று வாஷிங்டனில் உள்ள சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் ஜோஹன் ஸ்வின்னென் தெரிவித்துள்ளார். பணக்கார நாடுகளில் உணவு விநியோகம் மற்றும் சில்லறை விற்பனை முறை ஒழுங்கமைக்கப்பட்டு தானியங்குபடுத்தப்பட்டாலும், வளரும் நாடுகளில் உள்ள அமைப்புகள் உழைப்பு மிகுந்தவை. இந்த விநியோகச் சங்கிலிகள் கோவிட் -19 மற்றும் சமூக தொலைதூர விதிமுறைகளுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியவை என்று ஜெனரல் ஜோஹன் கூறியுள்ளார். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை இன்றளவில் 524.5 மெட்ரிக் டன் அளவு உணவு தானியங்கள் உள்ளதாகவும், இதில் 289.5 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் 235 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை என்று மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். மேலும்,  287 லட்சம் மெட்ரிக் டன் நெல்லும் இருப்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

 

 


உணவு தானிய உற்பத்தியில் இந்தியா அந்நிய நாட்டை சார்ந்திருக்கவில்லை. மேலாக, அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு உற்பத்தி திறனை பெருக்கியிருக்கிறது. ஆனால், உள்நாட்டு மக்களின் பசியை போக்கிட எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றியாகவில்லை.

செவி சாய்க்குமா?

ஊரடங்கு காலத்தில் பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை வெளியாகவில்லை. ஆனால் நடைமுறையில் மக்கள் உணவிற்காக  தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகளை நம்பியே கையேந்தி நிற்கும் அவலம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. மக்களிடம் பணம் இல்லாததால் குறைவான உணவை உண்டு வருவதாக பாதிக்கப்பட்ட மக்களின் குரல் செய்தி ஊடங்களில் மௌனமாய் ஒலிக்கிறது. “நாங்கள் பசியோடு குடி கொண்டிருக்கிறோம் ஆனால் எங்கள் குழந்தைகள் உணவு கேட்கிறார்கள்” என்று பீகாரை சேர்ந்த சிவ் குமார் என்பவர் தனியார் ஆங்கில ஏட்டிற்கு அளித்த பேட்டியை கேட்கும் பொழுது கண்ணெல்லாம் குளமாகிறது. "நாங்கள் நோயினால் பாதிக்கப்படவில்லை, பசியால் தான் வாடிக்கொண்டிருக்கிறோம்” என்று பீகாரில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலையில்லாமல் அறைக்குள் அடைபட்டு பசியால் அலறும் சப்தம் அரசை அச்சுறுத்தவில்லை. இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு இலவச உணவு தானிய பொருட்களை வழங்க அரசு உடனடியாக ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஊரடங்கு காலத்தில் ஏற்படும் பட்டினி சாவிலிருந்து மக்களை பாதுகாப்பது அரசின் கடமையாகும். வறுமையிலும், பசியாலும் சிக்கித்தவிக்கும் இந்திய ஏழை மக்களுக்கு உதவிட, தோராயமாக 65 ஆயிரம் கோடி தேவைப்படும். நமது உள்நாட்டு மொத்த உற்பத்தி 200 லட்சம் கோடி ரூபாயாகும். இதில் 65 ஆயிரம் கோடி ரூபாய் பெரிய தொகை அல்ல. ஏழைகளை காப்பாற்ற வேண்டியது நம் கடமை. என்று முன்னாள் ஆர்.பி.ஐ. கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்திருக்கிறார். இதை நிவர்த்தி செய்ய பாஜக அரசு செவி சாய்க்குமா?

 


"கவனம்!
என் பசியை
அஞ்சிக் கவனமாய் இருங்கள்
என் சினத்தை
அஞ்சிக் கவனமாய் இருங்கள்"


என்ற பாலஸ்தீன கவிஞர் மஹ்மூத் தர்வீஸின் வரிகள் பசியின் பிணியில் ஒடுங்கும் ஏழை மக்களின் குரலாக எதிரொலிக்கிறது. பாரெல்லாம் நோய் பகைமை, நாடெல்லாம் மக்கள் தனிமை, பாமரன் பாத்திரத்தில் நிறைந்திருப்பதோ பசியின் வறுமை.
 

 

 

 

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியா உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக மாறும்” - ஜெ.பி.நட்டா பேச்சு!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
India will become the 3rd largest economy in the world JP Natta speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பாஜக சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நாடு, வளர்ச்சியில் நீண்ட பாய்ச்சலைப் பெற்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தியா உலகின் 11வது பொருளாதார சக்தியாக இருந்தது. ஆனால் கோவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போருக்குப் பிறகும், பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், 200 ஆண்டுகள் நம்மை ஆண்ட பிரிட்டனை இந்தியா தோற்கடித்துள்ளது. இப்போது இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. 2024 இல், பிரதமர் மூன்றாவது முறையாக பிரதமராகும் போது, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்.

இந்தியா கூட்டணியின் தலைவர்கள் ஜாமீனில் இருக்கிறார்கள். ஒரு சிலர் சிறையில் இருக்கிறார்கள். ராகுல் காந்தி, சோனியா காந்தி, ப. சிதம்பரம் ஆகியோர் ஜாமீனில் இருக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் உள்ளனர். திமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளது. தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க திமுக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்ட விவகாரத்திலும் தமிழர்களின் பண்பாட்டை காங்கிரஸ் மற்றும் திமுக எதிர்த்தது. தமிழர்களின் பண்பாடு, சனாதனத்தை பாஜகதான் காத்து வருகிறது. தமிழ் இலக்கியம், மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு பாஜக உறுதியாக துணை நிற்கிறது” எனத் தெரிவித்தார்.

அதே சமயம் திருச்சியில் ஜே.பி.நட்டா இன்று ரோடு ஷோ செல்வதற்கு காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக இன்னும் சற்று நேரத்தில் விசாரிக்கப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.