Skip to main content

அணு ஆயுதமும், ஆதிக்க அரசியலும்... அமெரிக்கா - ஈரான் கடந்துவந்த பாதை...

Published on 21/09/2019 | Edited on 04/01/2020

2011 ஆம் ஆண்டில் உலகின் விஞ்ஞான வளர்ச்சியில் முதலிடத்தில் இருந்த ஒரு நாடு, தொலைத்தொடர்பு துறை வளர்ச்சியில் மிக விரைவான வளர்ச்சி விகிதங்களை பதிவு செய்து உலகையே தன்பக்கம் திரும்பி பார்க்கவைத்த ஒரு நாடு, தனது எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை மிகச்சிறப்பாக கையாண்டு மிகவேகமாக வளரும் ஒரு நாடாக உலக அரங்கில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்ட ஒரு நாடு, இப்படி உலக பார்வையில் பல சிறப்புகளை கொண்டிருந்த ஈரான், இன்று தனது பொருளாதார கட்டமைப்பையே இழந்து, பகைமையை மட்டுமே தன்னகத்தே கொண்டு தத்தளித்து வருகிறது எனலாம்.

 

history of america and iran relationship

 

 

எண்ணெய் மற்றும் எரிவாயு வணிகம் மூலம் உலகின் மிகமுக்கிய பொருளாதார நாடாக இருந்த ஈரான், இன்று கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது. 2012 ஆம் ஆண்டில் ஈரானின் மொத்த வருவாயில் 80% எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியிலிருந்து பெறப்பட்டதே ஆகும். அதேபோல 2017 ஆம் ஆண்டின் கணக்கின்படி எண்ணெய் ஏற்றுமதி வருவாய் மூலம் ஈரானுக்கு 135 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி இருப்பு இருந்துள்ளது. இப்படி எண்ணெய் வணிகத்தில் உச்சம்தொட்ட ஈரான் இன்று சந்தித்திருக்கும் இந்த மிகப்பெரிய சரிவிற்கான முக்கிய காரணம் வியாபார போட்டியும், அதனுடன் பிணைந்த அரசியலும் என்றே கூறலாம். 

ஈரானின் இன்றைய பொருளாதார சூழலுக்கான முக்கிய காரணமாக இருப்பது அமெரிக்கா என்பது பலரும் அறிந்ததே. ஆனால் ஈரான் மீதான அமெரிக்காவின் அரசியல் தலையீடு என்பது இன்றோ, நேற்றோ ஆரம்பித்ததல்ல. 1953 ஆண்டு முதல் ஈரான் அரசியலில் அமெரிக்கா தலையிட்டு வருகிறது.  1953ஆம் ஆண்டு ஈரான் நாட்டில் ஜனநாயக முறைப்படி ஆட்சி நடத்திவந்த பிரதமர் முகமது மோசாதக், ஈரான் நாட்டில் இருந்த எண்ணெய் கிணறுகளை அரசுடைமையாக்க முயற்சிகள் மேற்கொண்டார். இதனை பிடிக்காத அமெரிக்காவும், பிரிட்டனும் சேர்ந்து அவரது ஆட்சியை கவிழ்த்து, தங்களுக்கு சாதகமான முகமது ராசா பெஹல்வியை முழு அதிகாரத்துடன் ஆட்சியில் அமர்த்தியது.  

மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான இந்த ஆட்சி, மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்திய நிலையில், 1979 ஆம் ஆண்டு வெடித்த மக்கள் புரட்சி ஈரான் நாட்டில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவந்தது. ஈரானின் மதத் தலைவரான ஹையத்துல்லா காமெனி அந்நாட்டின் முக்கிய தலைவரானார். ஈரான் வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த மக்கள் புரட்சி அமெரிக்க ஈரான் உறவில் மிகப்பெரிய திருப்பத்தை கொண்டு வந்தது என்றே கூறலாம். அதற்கான முக்கிய காரணம், இந்த மக்கள் புரட்சியின் போது 50 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டு ஈரான் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் அடைக்கப்பட்டதுதான். 

 

history of america and iran relationship

 

ஈரானின் இந்த செயலால் கோபமடைந்த அமெரிக்க அரசு, ஈரானின் எண்ணெய் வணிகத்திற்கு தடை விதிக்கும் முயற்சிகளை மேற்கொண்டது. அமெரிக்காவின் இந்த வணிக ரீதியிலான மிரட்டலுக்கு பணிந்த ஈரான், சுமார் 400 நாட்களுக்கு பிறகு அந்த கைதிகளை விடுவித்தது. 1979 போராட்டத்திற்கு பிறகு ஈரானுக்கு அமெரிக்காவை கடந்து புதிய எதிரி ஒன்றும் உருவாகியிருந்தது. அதுதான் சவுதி அரேபியா. 

ஈரானில் நடந்த மக்கள் புரட்சி சவுதி அரேபியாவின் ஆட்சியாளர்களை சற்றே கலக்கத்தில் ஆழ்த்தியிருந்தது. தங்கள் நாட்டிலும் இதுபோன்ற மக்கள் புரட்சி ஏற்படுமோ என்ற சவுதியின் அச்சம், ஈரான் உடனான உறவில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தியது. பிந்தைய காலங்களில் இந்த பிரச்சனை மதரீதியிலானதாக மாற்றமடைந்து என்றே கூறலாம். அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதார தடைகள் விதித்து பொருளாதாரத்தை சிதைத்துவந்த நிலையில், சவுதி உடனான பனிப்போர் ஈரானின் பொருளாதாரத்தை மேலும் மோசமாக்கியது. ஈராக், ஏமன், சிரியா, லெபனான் என அந்த பிராந்தியத்தில் நடந்த உள்நாட்டு போர்களில் ஈரான், சவூதி ஆகிய நாடுகள் எதிரெதிர் துருவங்களாகவே செயல்பட்டன. இவற்றின் விளைவாக ஈரான் நாட்டின் பொருளாதாரம் மாபெரும் சரிவை சந்தித்தது. 

1979 ஆம் ஆண்டுக்கு முந்தைய முகமது ராசா பெஹல்வி ஆட்சிகாலத்தில் அணுஆயுதங்கள், அணுமின் நிலையங்கள் அமைப்பது, அணுச்செறிவுட்டும் தொழில்நுட்பங்களை பகிர்ந்துகொள்வது உள்ளிட்ட ஒப்பந்தங்களை ஈரானுடன் மேற்கொண்டது அமெரிக்கா. அமெரிக்கா, ஈரான் இடையிலான உறவில் ஒரு மைல்கல்லாக பார்க்கப்பட்ட  இந்த ஒப்பந்தங்களே, பிற்காலத்தில் இரு நாடுகளுக்குமிடையே மோசமான பகையை உண்டாக்கியது என கூறலாம். மக்கள்புரட்சியால் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு செறிவூட்டப்பட்ட அணுக்களை கொண்டு ஈரான் அதிக அளவில் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதனையடுத்து மீண்டும் ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது.  

இதனையடுத்து மீண்டும் பாதாளத்திற்கு தள்ளப்பட்டது ஈரானின் பொருளாதாரம். இப்படிப்பட்ட ஒரு சூழலில் தான் அமெரிக்க அதிபரான ஒபாமா கடந்த 2015 ஆம் ஆண்டு ஈரானுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டார். அதன்படி தங்கள் தேவை போக மீதமுள்ள செறிவூட்டப்பட்ட அணுக்களை ஈரான் மற்ற நாடுகளிடம் விற்க வேண்டும் எனவும், இதன் மூலம் அவர்கள் அணு ஆயுதங்கள் தயாரிக்காமல் இருப்பது உறுதிசெய்யப்படும் எனவும் கூறப்பட்டது. மேலும் ஈரான் நாட்டிற்கு விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் நீக்கப்பட்டு, உலகநாடுகளிடமிருந்து முதலீடுகள் கொண்டுவர வழிவகைகள் செய்யப்படும் என்றும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் கையெழுத்திட்டன. இதனையடுத்து ஈரான் பொருளாதாரம் சற்று வளர்ச்சியடைய ஆரம்பித்தது. 

 

history of america and iran relationship

 

சொல்லத்தகுந்த அளவிலான ஒரு வளர்ச்சியை சந்தித்திருந்த ஈரான் பொருளாதாரம், கடந்த 2018 ஆம் ஆண்டு மீண்டும் அமெரிக்காவின் அரசியலில் சிக்கியது. ஈரான் எதிர்ப்பால் சவுதியை நண்பனாக்கிக்கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தீவிரம் காட்டினார். ஈரானும், சவுதியும் மறைமுகமாக மோதிவந்த சிரியா, ஏமன் உள்ளிட்ட உள்ளிட்ட உள்நாட்டு போர்களில், அமெரிக்கா, சவுதிக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது. இந்தநிலையில் ஈரானை அடக்கிவைப்பதற்கு அமெரிக்கா மீண்டும் கையிலெடுத்த ஆயுதம் தான் பொருளாதார தடை. 2015 ஆம் ஆண்டு ஈரானுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக 2018 ஆம் ஆண்டு டிரம்ப் அறிவித்தார். மேலும் ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார தடைகளையும் விதித்தார். 

முன்னேற்றத்தை சந்தித்து  வந்த ஈரானின் பொருளாதாரம் மீண்டும் முடங்க தொடங்கியது. உலகநாடுகள் அமெரிக்காவின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், டிரம்ப் தனது நிலைப்பாட்டிலிருந்து சற்றும் விலகவில்லை. இதன் விளைவாக ஈரானில் நிலவும் வறுமை, மக்கள் தங்கள் உடலுறுப்புகளை விற்று வாழ்க்கை நடத்தும் அளவுக்கு அவர்களை தள்ளியுள்ளது. கண்கள் முதல் சிறுநீரகம், கல்லீரல், எலும்பு மஜ்ஜை என உடல் பாகங்கள் அனைத்தும் பொதுவெளியிலேயே விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை தங்களது உடல்பாகங்களை விற்பதற்கான விளம்பரங்களை, அங்குள்ள தெருக்களில் விளம்பர போஸ்டர்களாகவே ஒட்டுகின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது ஈரான். 

 

iran

 

ஈரானின் இன்றைய மோசமான இந்த பொருளாதார சூழல் என்பது மதவாதம், மோசமான பொருளாதார கொள்கைகள், பிராந்திய அரசியல் ஆகியவற்றால் ஏற்பட்டது என்பதை கடந்து வளர்ந்த நாடு ஒன்றின் வணிக நோக்கத்தாலும், ஆதிக்க எண்ணத்தாலும் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்றே என்பது தான் பலரின் கருத்தாகவும் உள்ளது. அதேபோல ஏமன், சிரியா உள்ளிட்ட நாடுகளின் உள்நாட்டு போரில் ஈரானின் தலையீடு, அதற்கான உலக நாடுகளின் ஆதரவை பெருவாரியாக குறைத்துள்ளதும் அதன் பொருளாதார சிக்கலுக்கான அடிப்படை காரணமாக பார்க்கப்படுகிறது. இவை அனைத்தையும் தற்போதுள்ள ஈரான் அரசு கவனத்தில் கொள்ளும்பட்சத்தில் மட்டுமே மீண்டும் சீரான ஒரு வளர்ச்சியை நோக்கி அந்நாடு பயணிக்க முடியும் என நம்புகின்றனர் அரசியல் நோக்கர்கள். 

 

 

Next Story

இஸ்ரேல் மீது தாக்குதல்; ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
America announced action against Iran to incident on Israel

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படையைச் சேர்ந்த மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஆனால், ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சிரியா, லெபனான் எல்லைப் பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

ஈரான் தாக்குதலுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதற்காக அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை, அமெரிக்காவோடு பிரிட்டனும் கைகோர்த்து அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஜேனட் யெல்லன் கூறுகையில், “வரும் நாட்களில் ஈரானுக்கு எதிராகக் கூடுதல் பொருளாதாரத் தடைகள் நடவடிக்கை எடுப்போம். எந்த மாதிரியான தடைகள் விதிக்கப்படும் என்பது குறித்து விரைவில் விவரங்கள் வெளியிடப்படும்” என்று கூறினார்.

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.