Skip to main content

தமிழ்நாட்டில் தமிழ் பேச தடை!!! தொடரும் அடக்குமுறை...

Published on 14/06/2019 | Edited on 14/06/2019

இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. அதை நாடு என்று சொல்வதைவிட துணைக்கண்டம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். இங்கிருக்கும் ஒவ்வொரு மாநிலமும் தனக்கென ஒரு அடையாளத்தைக்கொண்டுள்ளது என்று நமக்கு சிறுவயதில் சொல்லிக்கொடுத்தனர். ஆனால் இப்போதிருக்கும் அரசோ அந்த பன்முகத்தன்மையை அழித்து ஒற்றை கலாச்சாரத்தை கொண்டுவர நினைக்கிறது.
 

india map


ஏற்கனவே மும்மொழிக் கொள்கை என்ற பெயரில், ‘இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் வேறேதும் ஒரு மொழி’ என்று இந்தியை திணிக்கப் பார்த்தார்கள். அது நடக்காத நிலையில், வேறு ஒரு முறையை தற்போது எடுத்துள்ளனர். அதுதான் தெற்கு ரயில்வேயின் பணியில் உள்ள ஊழியர்கள் தமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கை.  (தற்போது இந்த அறிவிப்பு பின்வாங்கப்பட்டுள்ளது) இந்த அறிவிப்புக்கு பின்னணியில் ஒரு நிகழ்ச்சி இருக்கிறது. 

மதுரை, திருமங்கலத்தில் மே 9ம் தேதி காலையில் ஒரே ரயில்வே ட்ராக்கில் இரண்டு ரயில்கள் எதிரெதிரே வந்தது. இதற்கு காரணம் இரண்டு ரயில்வே நிலைய அதிகாரிகளுக்குள் ஏற்பட்ட மொழிப்பிரச்சனை. ஒருவர் கூறியது இன்னொருவருக்கு புரியவில்லை. அதனால்தான் கட்டளை தவறாக பிறப்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வு வெறும் ஒரு காரணம் மட்டுமே. 

இந்தி இருந்தால் இங்கு என்ன கெட்டுவிடப்போகிறது, உங்களுக்கு என்ன நட்டம், தமிழ், தமிழ் என்று கூறி ஏன் எங்கள் வாழ்க்கையையும் கெடுக்கிறீர்கள் என கேட்பவர்களுக்கு ஒரு சிறிய செய்தி... இந்தியாவின் தேசிய மொழி இந்தி இல்லை, இந்தியாவின் அலுவல்மொழி என்று 22 மொழிகள் உள்ளன. அனைத்தையும் ஒரே அளவில் வைத்துப்பார்ப்போம். 22 அலுவல் மொழிகளும் இங்கு ஒன்றுதான். இந்தியா முழுமைக்குமான தொடர்பு மொழி (linking language) ஆங்கிலம் அவ்வளவுதான். 

இந்திய அரசியலமைப்புச் சட்டமும், பிற சட்டங்களும் இந்தியாவின் தேசியமொழி என்று எதையும் வரையறுக்கவில்லை. அலுவல் மொழியாக மட்டுமே குறிப்பிடுகிறது. மேலும் அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும், தத்தமது அலுவல் மொழிகளை தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றுள்ளது எனவும் கூறியுள்ளது. இவையனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

சிலரின் கருத்துப்படி, இந்தியைவிட தமிழுக்கு எந்தப் பெருமையும் இல்லை என்றே வைத்துக்கொள்வோம். அப்படி பார்த்தாலும் இரண்டும் அலுவல் மொழிதான் தமிழ் இருக்கக்கூடாது என்றால், அங்கு இந்தியும் இருக்கக்கூடாது. இந்தி ஒரு இடத்தில் இருக்கிறதென்றால் அங்கு தமிழ் இருப்பதில் எந்தவிதமான தடையும் இல்லை. இதற்குமுன் அறிவித்த மும்மொழிக் கொள்கையிலும் இதே பிரச்சனைதான், பிராந்திய மொழிகள் யாவும் கட்டாயம் என்றோ அந்தந்த பிராந்திய மொழிகளை அவரவர் கற்கலாம் என்றோ அதில் சொல்லப்படவில்லை. மாறாக ஒரு பகுதியின் பிராந்திய மொழியான இந்தியை கட்டாயப்படுத்துகிறார்கள். அதனால்தான் இங்கு போராட்டம் வெடித்தது, இதுதான் 1937லும், 1965லும் நடந்தது. 
 

 

hindi imposition



இப்படி அப்போது நடந்ததையும், இப்போது நடப்பதையும் ஒன்றாக பார்க்காதீர்கள் என்று நீங்கள் நினைத்தால், இதோ அண்மையில் நிகழ்ந்த இன்னொரு நிகழ்வு... பிப்ரவரி 2 2018 அன்று தமிழ்நாடு அரசு ஒரு அரசாணை வெளியிட்டது. அதில் டெல்லியில் அந்தந்த மாநில முதல்வர்கள், ஆட்சிப்பணி அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் தங்குவதற்கு அந்தந்த மாநிலத்தின் சார்பில் தனித்தனி இல்லங்கள் உள்ளன. தமிழ்நாடு சார்பில் உள்ள இரு இல்லங்களில் ஒரு இல்லத்தின் பெயர் தமிழ்நாடு இல்லம், மற்றொன்றின் பெயர் தமிழ்நாடு விருந்தினர் மாளிகை. இரண்டு கட்டிடங்கள் இருப்பதால் முதலில் கட்டப்பட்ட தமிழ்நாடு இல்லத்தின் பெயர் பழைய தமிழ்நாடு இல்லம் என பேச்சுவழக்கில் மாறியது. இந்த பேச்சுவழக்கில் உள்ள பழைய என்பது அங்குசெல்லும் அதிகாரிகளுக்கு மன உளைச்சலை தருகிறது என்று கூறி அந்த பெயர்கள் மாற்றியமைக்கப்படும் என அறிவித்தது. பின்னர் கடும் எதிர்ப்புக்கு பிறகு மீண்டும் பெயர்மாற்றப்பட்டது. இப்படியாக அவர்கள் திணிப்பதற்கு கூறும் காரணம்கூட சிறுபிள்ளைத்தனமாகத்தான் இருக்கிறது.
 

tamilnadu house



இப்படியாக ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்தியை திணிக்கவோ அல்லது தமிழ்நாடு, தமிழ் என்பவற்றை ஒழிக்கவோ முயற்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இங்கு எந்த மொழியையும் தாராளமாக கற்றுக்கொள்ளலாம். அதற்கு யாரும் தடைவிதிக்கவில்லை, முக்கியமாக தமிழ்நாட்டில் யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்பதன் அடிப்படையில்தான் அன்றுமுதல் இன்றுவரை இருந்துவருகிறது. திணிக்கப்படும்போதுதான் தமிழ்நாடு அதை எதிர்க்கிறது. இன்று பல மாநிலங்கள் எங்களின் தாய்மொழியை இழந்துவிட்டோம் என புலம்புகின்றன. பல நாடுகளும், மாநிலங்களும் தாய்மொழி தினத்தை மட்டுமே கொண்டாடி வருகின்றன, அது நாளை தமிழ்நாட்டிலும் நடக்கக்கூடாது என்றுதான் போராடுகிறார்கள், அதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். 

இந்திதான் இந்தியாவை வளர்ச்சியடையச் செய்யும், இந்திதான் இந்தியாவை வலுப்படுத்தும், இந்திதான் இந்தியாவை மேன்மைப்படுத்தும் என பொய் பிரச்சாரங்களும், புரளிகளும் பரப்பப்படுகின்றன. இந்தி இல்லாமல்தான் நாம் இதுவரை வளர்ந்துள்ளோம், தமிழ்நாடு பல பிரிவுகளில் முன்னணியில் உள்ளது என்பதையும் புரிந்துகொள்வோம். தற்போதுள்ள ஆட்சியாளர்களுக்கும் இதில் முக்கிய பங்கு இருக்கிறது. அரசியல் இலாபங்களை, அரசியல் காரணங்களை விடுத்து அவர்களும் தமிழை பாதுகாக்க முயற்சி செய்யவேண்டும். 

தமிழ்நாட்டில் தமிழுக்கு முக்கியத்துவம் தரப்படாமல் விடப்பட்டால், வேறெங்கு அது முக்கியத்துவம் பெறும்... தமிழ் நமக்கு கிடைத்த பெரும் பேறு, காலத்திற்கேற்றாற் போல் அது மேம்பட்டுக்கொண்டே வந்துள்ளது, காலத்திற்கேற்ப மாறியுள்ளது. அதை தொடர்வது நம் கடமை. 

 

 

 

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.