Skip to main content

‘கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும்..’ -எம்.ஜி.ஆர். சொன்னதும்.. அமைச்சர்கள் செய்வதும்.. 

Published on 23/09/2020 | Edited on 23/09/2020

 

Happiness and Satisfaction- in Giving- MGR -saying -what the ministers- do

 

‘வாழும் கர்ணன்’ என, அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரைப் புகழ்ந்து மதுரையில் போஸ்டர் ஒட்டியிருந்தனர். காரணம் – மதுரை மாவட்டத்தில், கரோனா நோய்க் காலத்தில், மாநகர், புறநகர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்கு, 68 நாட்களாக, தினமும் மூன்று வேளை உணவளித்து வருகிறாராம். 


அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியும் அப்படித்தான்! சொந்த நிதியிலிருந்து, வறுமையில் வாடும் அ.தி.மு.க நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு, தொடர்ந்து லட்ச லட்சமாக வழங்கி வருகிறார். இதன் நீட்சியாக, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும், தலைமைக் கழகப் பேச்சாளர்களான சிவகாசி தீப்பொறி சின்னத்தம்பி, அருப்புக்கோட்டை சரவெடி சம்ஸ்கனி, விருதுநகர் இளந்தளிர் பழனிகுமார், சங்கரன்கோவில் சங்கை கணபதி, தீக்கனல் லட்சுமணன் ஆகியோருக்கு, தனது சொந்த நிதியிலிருந்து, தலா ரூ1 லட்சம் வீதம், மொத்தம் ரூ.5 லட்சம் நிதி வழங்கியிருக்கிறார்.


‘கட்சி நிர்வாகிகளோ, தொண்டர்களோ, பொதுமக்களோ, எத்தனை பேருக்குத்தான், இப்படி நிதி வழங்கி உதவிட முடியும்? கஷ்டப்படும் மக்கள் எங்கெங்கும் இருக்கிறார்களே? இது தேர்தல் நேரத்து அரசியல் என்றும் விமர்சிக்கப்படுகிறதே?’ என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பிடம் கேட்டோம். 


“பத்து வருடங்களுக்கு முன், அவர் அமைச்சராவதற்கு முன்பிருந்தே, நலிந்தோருக்கு உதவத்தானே செய்கிறார். தேர்தல் நேரத்து அரசியலென்றால், எதிர்க்கட்சிகளும், தாராளமாக இதைச் செய்ய வேண்டியதுதானே? யார் செய்தால் என்ன? எளியோருக்கு உதவி போய்ச் சேர்ந்தால், மகிழ்ச்சிதானே!

 

rajendra balaji family


புரட்சித்தலைவரின் பேட்டி ஒன்றை ராஜேந்திரபாலாஜி அடிக்கடி நினைவுகூர்வார். எம்.ஜி.ஆரை அப்போது பேட்டி கண்டபோது, ‘உங்களைப் போல மற்ற நடிகர்கள் ஏழைகளுக்கு வாரி வழங்குவது இல்லையே?’ என்பதுதான் கேள்வி. அதற்கு எம்.ஜி.ஆர். “வாரியெல்லாம் நான் வழங்குவது இல்லை. தேவைகளைப் பார்த்துக் கொடுக்கிறேன். அதிலும், உதவி கேட்ட எல்லோருக்கும் செய்ய முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு. மற்ற நடிகர்கள் செய்யவில்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அவரவர் வசதிக்கேற்ப கொடுத்துக்கொண்டுதான் இருப்பார்கள். வெளியே தெரியாமல் இருக்கலாம். கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும் அவர்களுக்குத் தெரியாமலா இருக்கும்?” என்று பேட்டி கண்டவரையே திருப்பிக் கேட்டார்.   


‘இருப்பதையெல்லாம் கொடுத்துவிட்டால்  என்னாவது?  உங்களுக்குத்தானே இழப்பு? எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையே இல்லையா?’  என்று அமைச்சரிடம் உரிமையுடன் கேட்பவர்கள் உண்டு. அதற்கு அவர் ‘இழப்பா? எனக்கா? கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும், கொடுப்பதைவிட பல மடங்கு திரும்பக் கிடைக்கிறதே?’ என அன்று எம்.ஜி.ஆர். சொன்னதை ‘ரிபீட்’ செய்வார்.
 

Ad

 

ராஜேந்திரபாலாஜி பாசக்காரர் என்பது பலருக்கும் தெரியாது. தொகுதிக்கு வந்துவிட்டால், காலை மற்றும் இரவு உணவை அம்மா கையால்தான் சாப்பிடுவார். தற்போது, அவருடைய தந்தை தவசிலிங்கமும், தாயார் கிருஷ்ணம்மாளும், கரோனா தொற்றுக்கு ஆளாகி, மதுரையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதனால், அவர் வீட்டுக்கே செல்வதில்லை. இங்கே தனியார் கெஸ்ட் ஹவுஸில்தான், சாப்பாடு, தூக்கமெல்லாம்.” என்றனர்.

 
குடும்பப் பாசத்தோடு, தொகுதிப் பாசமும் இருந்துவிட்டால், நல்லதுதானே!

 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சூரியன் மக்களை வதைக்கிறது!” - வெயில் சூட்டை ஒப்பிட்ட ராஜேந்திர பாலாஜி!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024

 

 "The sun oppresses the people!" -Rajendra Balaji who compared the heat!

விருதுநகர் மாவட்டம் – சிவகாசியில், விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்குவது, ரத்ததான முகாம் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி “மேடைக்கு முன்பாக வெயிலில் நீங்கள் காய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்.  

சூரியன் மக்களை வதைக்கிறது. அதனால்தான், நாங்களும் திறந்தவெளி மேடையில் நின்று வெயிலின் கொடுமையை அனுபவிக்கிறோம். சூரியன் ஏற்படுத்தும் கஷ்டத்தை உணர்ந்தால்தானே, அதிலிருந்து விடுபடுவதற்கு உரிய ஆயத்தப்பணிகளை, நாங்களும் செய்ய முடியும்? இந்தத் துன்பத்திலிருந்து மக்களை மீட்க வேண்டும். திமுக ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். அரசு ஊழியர்கள் தினந்தோறும் போராட்டம் நடத்துகிறார்கள்.

அதிமுக, மக்களை நம்பியே தேர்தலில் களம் காண்கிறது.  திமுகவோ, கூட்டணியை நம்பி தேர்தலில் நிற்கிறது. மக்கள் மத்தியில் அதிமுகவுக்கு மதிப்பு உயர்ந்துள்ளது. வெற்றி அருகில் வந்துவிட்டது. அதைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியின் சீர்கேடுகளைச் சொல்லியே வாக்கு சேகரிக்கவேண்டும். அப்போது, பட்டாசுத் தொழில் பிரச்சனை, நெசவாளிகள் பிரச்சனை, அரசு ஊழியர்கள் பிரச்சனை என்று பல்வேறு பிரச்சனைகளையும் சுட்டிக்காட்ட வேண்டும். 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி. அதனால்,  டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமியின் கரம் ஓங்கும். தமிழ்நாட்டின்  நலன் காக்க, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் போராடுவார்கள்.அடுத்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக, நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார். 

Next Story

“எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவிற்கு நாம்தான் வாரிசு” - எடப்பாடி பழனிசாமி

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
We are Jayalalitha  M.G.R. heir says Edappadi Palaniswami

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னையில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நெய்வேலி நகர அ.தி.மு.க மற்றும் என்எல்சி அண்ணா தொழிற் தொழிலாளர்கள் ஊழியர்கள் சங்கம் சார்பில் நெய்வேலி டவுன்ஷிப் செவ்வாய் சந்தை அருகே ஜெயலலிதா முழு உருவ வெங்கல சிலை ரூபாய் 10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை ஒன்பது அடி உயரம் கொண்டது. பீடம் ஏழு அடியில் அமைந்துள்ளது. 

இந்த சிலை திறப்பு விழா நேற்று இரவு நடைபெற்றது. இதற்கு தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி கலந்துகொண்டு ஜெயலலிதா சிலையை திறந்து வைத்து பேசுகையில், “அ.தி.மு.கவை நிறுவிய எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கு வாரிசுகள் கிடையாது; நாம்தான் அவர்களுக்கு வாரிசு. நாட்டு மக்களுக்காக அவர்கள் உழைத்தார்கள். அதனால் தான் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அ.தி.மு.க உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் இயக்கம். அதனால் தான் இந்த இயக்கத்தை யாராலும் உடைக்க முடியாது.  

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. அதில் நாம் வெற்றி பெறுவதற்கு இங்கு கூடி உள்ளவர்களே சாட்சி. இதில் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என கூறுவார்கள்; இங்குள்ளவர்களின் முகத்தில் தெரியும் பிரகாசத்தை பார்க்கும் போது அது தெரிகிறது. எனவே கடலூர் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் வெற்றி பெறுவார் என தெரிகிறது.

நாங்கள் மக்களை நம்பி இருக்கிறோம்; மக்கள் சக்தி பெற்ற இயக்கம் அ.தி.மு.க.  இந்த இயக்கத்தை உடைக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எவ்வளவோ முயற்சி செய்தார். எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை நீதிமன்றத்தில் சந்தித்து வெற்றி காண்போம். ஆனால் தி.மு.க அமைச்சர்கள் பலர் வழக்கைக் கண்டு நடுங்கி கொண்டு இருக்கிறார்கள். அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியில் வாய்தா வாங்கிய இவர்கள் ஆட்சிக்கு வந்த பின் அவசர அவசரமாக வழக்கை நடத்தினார்கள்.

அ.தி.மு.க என்ற இயக்கத்துக்கு யார் துரோகம் செய்கிறார்களோ அவர்களுக்கு சிறை தான் தண்டனை; அதற்கு செந்தில் பாலாஜியே உதாரணம். சாதாரண செந்தில் பாலாஜியை அடையாளம் காட்டியது அ.தி.மு.க தான்,  நன்றி உள்ளவராக இருந்தால் கட்சிக்கு பணி செய்திருக்க வேண்டும். ஆனால் தீய சக்தியோடு சேர்ந்து மீண்டும் அமைச்சரானார். அவருக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரண்டு தெய்வங்கள் இன்று வரை தக்க தண்டனையை கொடுத்துள்ளது. எனவே அ.தி.மு.க.வை உடைக்க நினைத்தாலும், துரோகம் விளைவித்தாலும் அவர்களுக்கு கிடைக்கும் தண்டனை சிறை தண்டனையாக தான் இருக்கும். 

கடலூர் மாவட்டத்தில் புயல் வெள்ளம் என்ற இயற்கை பேரிடர் காலத்தில் விவசாயிகளின் துன்பத்தை உடனடியாக போக்கியது அ.தி.மு.க அரசு.  விவசாயிகள் வாழ்க்கையில் ஏற்றம் பெற ஏராளமான திட்டத்தை கொண்டு வந்தோம். விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இந்த ஆட்சியில் இல்லை. எனவே கடலூர் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை காட்டுங்கள். தேர்தல் என்ற போர்வையில் எதிரிகளை ஓட ஓட விரட்டி வெற்றி காண்போம். வடலூர் வள்ளலார் பெருவெளியை தைப்பூசத்தின் போது 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்துகிறார்கள். இதில் தற்போது தி.மு.க அரசு அந்த நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து சர்வதேச மையம் அமைக்க உள்ளது. இதற்கு இப்பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மக்களின் கோபத்திற்கு தி.மு.க அரசு ஆளாகியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதே பகுதியில் உள்ள புறம்போக்கு இடத்தில் சர்வதேச மையத்தை அமைக்க வேண்டும்” என்றார்.