Skip to main content

25 வயதைத் தொட்ட கூகுள்; நீண்ட பயணத்தின் நினைவுகள்!

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

Google turned 25!

 

உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான 'கூகுள்'. தனது 'கூகுள் டூடுல்' சேவையின் 25வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறது. 

 

முனைவர் பட்ட மாணவர்களான செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் இருவரும் 1990-களின் பிற்பகுதியில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பயிலும் போது நண்பர்களானவர்கள். இருவருக்குள்ளும் உலகளாவிய வலைதள சேவையை மேம்படுத்தும் சிந்தனை இருந்து கொண்டே இருந்தது.

 

கல்லூரியின் ஹாஸ்டலில் இருந்தே இரவு பகலாக உழைத்து சிறந்த முன்மாதிரி தேடுபொறியினை வடிவமைத்தனர். நாட்கள் செல்லச் செல்ல அவர்கள் எடுத்துக் கொண்ட செயல்களில் முன்னேற்றம் அதிகரித்தது. இதனால், ஆராய்ச்சியை தொடர்ந்து மேற்கொள்ள  வாடகைக்கு ஒரு அலுவலகத்தை தேடி வந்தனர். அப்போது, இருவரின் நண்பர்களில் ஒருவரான சூசனின் கார் ஷெட்டில் இடம் கிடைத்ததால் அங்கேயே அலுவலகத்தை அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 27, 1998-ல் துவங்கியுள்ளனர். .அதுதான், பின்னாளில் கூகுளின் முதல் அலுவலகம் என பெயர் பெற்றது. 

 

கூகுளின் வளர்ச்சி எந்த மாதிரி பரிணமித்துள்ளது என்பதனை 1998 ஆம் ஆண்டு தொடங்கியது முதல் இன்று வரை அதன் லோகோ உட்பட, டூடுலிலும் நாம் உணர முடியும். கூகுள் கண்டுபிடிப்பின் பிரதான நோக்கம் உலகத்தின் அனைத்து தகவல்களையும் ஒழுங்காக ஒருங்கிணைத்து. அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும்படி உறுதி செய்வதே ஆகும். இப்படி ஆரம்பமான கூகுளின் பயணம் தான் இன்று, உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்கள் இணையத்தில் தேடவும், சக மக்களுடன் இணைப்பில் இருக்கவும், வேலை செய்யவும், விளையாடவும் மற்றும் எண்ணற்ற பல விஷயங்களுக்கும் கூகுளின் சேவையை நம்பியுள்ளனர். 

 

மேலும், தமிழ்நாட்டின் மதுரையில் இருந்து புறப்பட்ட சுந்தர் பிச்சை போன்றவர்களால் கூகுள் நிறுவனம் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்ததும் குறிப்பிடத்தக்கது தான். இவரைத் தொடர்ந்து பல உலக கார்ப்பரேட் நிறுவனங்களில் இந்தியர்கள் தலைமை வகிக்க தொடங்கினர். கூகுள் 1998 துவங்கிய பொழுது, கூகுள் டூடுல் (கேலி சித்திரமும்) தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் கூகுள் விடுமுறை தினங்கள், சில முக்கிய நிகழ்வுகள், சாதனைகள் மற்றும் குறிப்பிடத்தக்க வரலாற்று நபர்களை நினைவுகூரும் வகையில் கூகுளின் வலைத்தள முகப்புப் பக்கங்களில் உள்ள லோகோ வடிவமைப்பை மாற்றுவார்கள். 

 

உதாரணத்திற்கு, இன்றைக்கு அமெரிக்க சுதந்திர தினம் என்றால் அதற்கேற்றவாறு அமெரிக்க கொடிகளுடன் கூகுளின் லோகோ வடிவமைக்கப்படும். இந்த நிலையில் தான் கூகுள் டூடுலின் 25வது வருடத்தை இன்று கொண்டாடுகிறது. இதனையொட்டி தனது வலைத்தள முகப்பில், இந்த 25வருடங்களில் வெளிவந்த கூகிளின் சிறந்த டூடுல்களை வரிசைப்படுத்தி காட்டிவருகின்றனர். 

 

இந்த டூடுல் தொடங்கியதில் இருந்து பல மாற்றங்களை, வினோதமான சில முயற்சிகளையும் அவ்வப்போது கூகுள் நிறுவனம் செய்து வந்தது. ஆனால், இதன் முதல் டூடுல் 1998 ஆம் ஆண்டில் " அமெரிக்கா பிளாக் ராக் நகரில்  பர்னிங் மேன் எனப்படும் கலை விழா நடைபெறும். அதன் பிரதிபலிப்பாக கூகுள் லோகோவின் மீது ஒரு குச்சி மனிதர் இருப்பது போன்று லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் வடிவமைத்தனர். இந்த டூடுல்கள் ரஷ்யா உட்பட சில பகுதிகளைத் தவிர உலகம் முழுவதும் தெரியும். மேலும், தரவுகளின் படி இதுவரை 5000 டூடுல்களை கூகிள் நிறுவனம் வெளியிட்டுள்ளதாகவும் தனது வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது. 

 

இந்த டூடுல்களை யார் வடிவமைப்பது? எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள்? என்ற கேள்வி எழுவது இயல்பு தான். இது குறித்து கூகுள் கூறுகையில், " கூகுளுக்கு என்று குழு ஒன்று கூடி திட்டமிட்டு எந்தெந்த நிகழ்வுகளை டூடுல் மூலம் கொண்டாடுவது என்பதை முடிவு செய்வார்கள். மேலும், கூகுள் பயனர்கள் மூலமாகவும் பல சமயங்களில் டூடுல்களுக்கான யோசனைகள் வரும். அதனையும் குழு தேர்வு செய்துள்ளது. 

 

டூடுலின் தேர்வு முறையானது, ஆளுமைகள் மற்றும் புதுமைக்கான விருப்பத்தை பிரதிபலிக்கும் வண்ணம் உள்ள சுவாரஸ்யமான நிகழ்வுகளை, ஆண்டுவிழாக்களை கொண்டாடுவதே ஆகும். நீங்கள் அவ்வப்போது ரசித்துப் பார்க்கும் ஒவ்வொரு டூடுலுக்குப் பின்னாலும் இல்லஸ்ட்ரேட்டர்கள் (டூடுலர்கள்) மற்றும் பொறியாளர்கள் குழு இயங்கி வருகிறது." என்று கூறியுள்ளனர். இன்று கூகுள் டூடுல் தனது 25வது பிறந்த நாளைக் கொண்டாடிவருகிறது. இது குறித்து இந்திய கூகுள் டூடுல் ட்விட்டரில், இந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளை நினைவு கூர்ந்து நெகிழ்வுடன் பதிவிட்டுள்ளது.

 

- மருதுபாண்டி

 


 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

தீபாவளிக்கு மக்கள் கூகுளில் தேடியது என்ன? 

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

What did people search on Google for Diwali?

 

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கடந்த 12 மற்றும் 13ம் தேதி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மக்கள் ஒருவருக்கு ஒருவர் இனிப்பு வழங்கி, புத்தாடைகள் உடுத்தி, பட்டாசுகளை கொளுத்தி தீபாவளியைக் கொண்டாடினர். அதேசமயம், உ.பி. மாநிலம் அயோத்தியில் சுமார் 24 இலட்சம் அகல் விளக்கை ஒரே சமயத்தில் ஒளிரவிட்டு, கின்னஸ் சாதனை நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அங்கு ஏழ்மை நிலையில் இருக்கும் சிறுவர்கள் அந்த விளக்கில் இருந்து எண்ணெய்களை எடுத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இது உ.பி. மட்டுமின்றி இதே ஏழ்மை நிலையில் நாடு முழுக்க பலர் தங்கள் தீபாவளியைக் கழித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

இது ஒருபுறம் இருக்க, பண்டிகை அல்லது ஏதாவது ஒரு முக்கிய நிகழ்வுகள் நடக்கும்போதும் நமது மக்கள் கூகுளை நாடுவது மரபாகவே மாறிவிட்டது. இந்நிலையில், இந்த தீபாவளிக்கு மக்கள் அதிகளவில் கூகுளில் என்ன தேடினர் என்பதை கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர்பிச்சை வெளியிட்டுள்ளார். 

 

What did people search on Google for Diwali?

 

கூகுளில் அதிகம் தேடப்பட்டத்தில் முதல் 5 இடத்தைப் பிடித்த தேடலை அவர் வெளியிட்டுள்ளார். அதிலும், ஏன் எனும் கேள்வியுடன் தேடப்பட்டதை அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி, கூகுளில் இந்த தீபாவளிக்கு மக்களால் அதிகம் தேடப்பட்டவை; 

 

1. இந்தியர்கள் ஏன் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்?


2. தீபாவளிக்கு ஏன் ரங்கோலி வரைகிறோம்?


3. தீபாவளி அன்று ஏன் விளக்கு ஏற்றுகிறோம்?


4. தீபாவளி அன்று ஏன் இலட்சுமி பூஜை செய்கிறோம்?


5. தீபாவளி அன்று ஏன் எண்ணெய் குளியில் எடுக்கிறோம்?


எனும் ஐந்து விஷயங்களை மக்கள் அதிகளவில் தேடியுள்ளனர். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

உப்புச்சத்து குறித்து கூகுளில் தேடிய இளைஞர்; அடுத்த நாளே எடுத்த விபரீத முடிவு

Published on 03/09/2023 | Edited on 03/09/2023

 

 The youth searched on Google about salt content; A disastrous decision taken the very next day

 

உடலில் உப்புச் சத்து அதிகமானால் விரைவில் உயிரிழக்க நேரிடும் என இணையத்தில் பார்த்த தகவலை பார்த்து அதிர்ச்சியடைந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்துள்ள பசுமலை அன்னை மீனாட்சி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (30) பொறியியல் பட்டதாரியான இவர் வெளிநாட்டு நாய்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். திடீரென அவருக்கு உடல்நிலை சரியில்லை என மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்பொழுது அவரது உடலில் அதிகமாக உப்புச் சத்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

வீட்டிற்கு வந்த விஜயகுமார் உப்புச்சத்து அதிகரிப்பால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பது குறித்து கூகுளில் தேடியுள்ளார். அப்பொழுது உப்புச்சத்து அதிகமானால் விரைவில் உயிரிழக்க நேரிடும் என்ற தகவலை பார்த்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டின் மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்