Skip to main content

கோகுல்ராஜ் கொலை வழக்கு! நெருங்கி வரும் தீர்ப்பு!

Published on 05/12/2020 | Edited on 05/12/2020
ssss

 

 

திருச்செங்கோடு என்றாலே ஆண்டவன் அர்த்தநாரீஸ்வரர் நினைவுக்கு வருவார். இதற்கடுத்து நினைவுக்கு வருவது இளைஞர் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தான்.

 

சேலம் ஓமலூரைச் சேர்ந்த பட்டியல் சமூக கோகுல்ராஜும் நாமக்கல்லைச் சேர்ந்த கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தின் சுவாதியும் கல்லூரிக் காதலர்களாக வண்ணமயமான எண்ணங்களுடன் வானில் சிறகடித்துப் பறந்தனர். கல்லூரிப் படிப்பு முடிந்ததும் இந்த பூமியில் புன்னகையுடன் வாழ முடிவு செய்திருந்தனர். சாதியில் பாகுபாடு உள்ள இவர்கள் முடிவு செய்தால், அதை சாதீய ஆணவம் அவ்வளவு எளிதில் அனுமதித்துவிடுமா?

 

2015-ஆம் ஆண்டு ஜூன்-23-ஆம் தேதி கல்லூரிக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற கோகுல்ராஜ், இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அவரின் பெற்றோர் தேட ஆரம்பித்தனர். மறுநாள், நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக பிணமாகக் கிடந்த கோகுல்ராஜின் நாக்கும் துண்டிக்கப்பட்டிருந்தது.

 

சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேருக்கு இந்தக் கொலை யில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர். (கோர்ட் விசாரணைக்கு வரும் போது யுவராஜ் கோஷ்டி பண்ணிய அலப்பரையை தொடர்ந்து எழுதியுள்ளோம்) சாதி ஆணவப் படுகொலையான இதை தீவிரமாக விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி.விஷ்ணுப்ரியா, திடீரென தற்கொலை செய்தது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன்பின் கோகுல்ராஜ் கொலை வழக்கு நாமக்கல் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, விசாரிக்கப்பட்டு, நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2018 ஆகஸ்ட்.30-ஆம் தேதி விசாரணையும் ஆரம்ப மாகியது. அரசு வக்கீலாக சேலத்தைச் சேர்ந்த கருணாநிதியும் யுவராஜ் தரப்பின் வக்கீலாக மதுரை ஜி.கே. என்ற கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜுவும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி வந்தனர். இந்த வழக்கில் மொத்தம் 116 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தன. அதில் முக்கியமான சாட்சி, கோகுல்ராஜின் காதலியான சுவாதி.

 

இவரும் கோகுல்ராஜும் திருச்செங்கோடு கோவில் மலையடிவாரத்தில் பேசிக் கொண்டிருந்த போதுதான், யுவராஜ் மற்றும் அவரது ஆட்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் கோகுல்ராஜ். வழக்கு விசாரணையின் ஆரம்பத்தில் இதை சாட்சியாக சொன்ன சுவாதி, வாழ்க்கைப் போக்கை நினைத்தாரோ என்னவோ, திடீரென பிறழ் சாட்சியானார். இதேபோல் பல அரசு தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி, வழக்கின் போக்கையே மாற்றின.

 

அரசு வழக்கறிஞரான கருணாநிதியின் போக்குதான் இதற்குக் காரணம் என மனம் வெதும்பிய கோகுல்ராஜின் தாய் சித்ரா, அரசு தரப்பு வழக்கறிஞராக, சீனியர் வழக்கறிஞர் ப.பா.மோகனை நியமிக்க வேண்டும் என அப்போதைய நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியத்திடம், சந்தியூர் வக்கீல் பார்த்திபன் மூலமாக மனு கொடுத்தார். அந்த மனு கிடப்பில் போடப்பட்டதால், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் சித்ரா.

 

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கருணாநிதியை விடுவித்து விட்டு, அரசு வழக்கறிஞராக ப.பா.மோகனை நியமித்து உத்தர விட்டது. இதை தமிழக உள்துறைச் செயலாளரும் அரசாணை மூலம் உறுதிப்படுத்தினார். இந்த உத்தரவு வந்த போது நாமக்கல் நீதிமன்றத் தில் 72 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டிருந்தது.

 

2019 மே.05-ஆம் தேதி முதல் இந்த வழக்கு, மதுரை எஸ்.சி./எஸ்.டி. சிறப்பு தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இப்போது திடீர் திருப்பமாக அரசு தரப்புக்கு வலுவான சாட்சிகள் கிடைத்துள்ளன.

 

வழக்கின் இப்போதைய நிலை குறித்து அரசு வழக்கறிஞர் ப.பா.மோகனிடம் கேட்டோம். "தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ன்படி செல்போன் உரையாடல், சிசிடிவி பதிவுகள் இவற்றை ஒரு வழக்கில் ஆதாரங்களாக சேர்க்கும்போது ஆவண சாட்சியமாக குறியீடு செய்ய வேண்டும். ஆனால் போலீசோ, திருச்செங்கோடு மலையில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமராவை மெட்டீரியல் ஆப்ஜெக்ட் என்று குறிப்பிட்டுள்ளனர். இதை அரசு தரப்பு கவனிக்காமல் விட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இதை சிறப்பு நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதால், கோகுல்ராஜ் யாரென்றே தெரியாது என முதலில் சொன்ன சிசிடிவி கேமரா மதன்குமார், கடந்த நவ.27-ஆம் தேதி நடந்த விசாரணையில் உண்மையைச் சொல்லிவிட்டார். அதுவும் கோவில் உதவி ஆணையர் சூரிய நாராயண னின் சாட்சியத்திற்குப் பிறகு. இதனை இந்த வழக்கின் முக்கிய திருப்புமுனையாக கருதுகிறோம்'' என்றார்.

 

"இப்போதுதான் இந்த வழக்கு விசாரணையில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது'' என்கிறார் வக்கீல் பார்த்திபன்.

 

டிச.02-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது கோகுல்ராஜ் கொலை வழக்கு. கூடிய விரைவில் தீர்ப்பை எதிர்பார்க்கலாம்.

 

 

Next Story

அனுமதி இன்றி நடந்த ஜல்லிக்கட்டு; 10 பேர் மீது பாய்ந்த வழக்கு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Case against 10 people who conducted Jallikattu without permission

ஜல்லிக்கட்டு, வடமாடு போன்ற விளையாட்டுகள் நடத்த தமிழ்நாடு அரசு பல்வேறு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி அளித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் அதிக ஜல்லிக்கட்டுகள் நடக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த கட்டுப்பாடுகள், விதிமுறைகளால் ஜல்லிக்கட்டு நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு விதிமுறைகளை கடைபிடித்து நூறுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(17.3.2024) புதுக்கோட்டை மாவட்டம் வானக்கண்காடு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் நிகழ்ச்சியை முன்னிட்டு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல், அரசு அனுமதியும் பெறாமல் 50 க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு நடப்பதாக வடகாடு போலீசாருக்கு தகவல் கிடைத்து சென்று பார்த்த போது ஜல்லிக்கட்டு நடந்துள்ளது.

இதனையடுத்து வடகாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமுகமது கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி ஒன்றியம் வானக்கண்காடு கிராமத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை (எ) சுந்தராஜ், ராஜேஷ், ராம்குமார், அஜித், ஸ்ரீதரன், வீரையா கருக்காகுறிச்சி தெற்கு தெரு கிராமத்தைச் சேர்ந்த குணா, பாலு, பாஸ்கர், தியாகராஜன் ஆகிய 10 பேர் மீதும் வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'இன்னும் நாங்கள் மூன்று பேர் மிச்சம் இருக்கிறோம்'- மனம் திறந்த இராபர்ட் பயஸ் 

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
 'There are still three of us left' - open-minded Robert Pius

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இலங்கையைச் சேர்ந்த முருகன், சாந்தன், இராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரும் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சாந்தன் உடலநலக் குறைவு காரணமாக உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தனது தாயாரை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்த சாந்தன் உயிரிழந்தது அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சிறப்பு முகாமில் மருத்துவ வசதிகள் இல்லாததாலேயே அவர் உயிரிழந்தார் எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் 'சிறப்பு முகாம் எனும் சித்திரவதை முகாமில் இருந்து ஓர் திறந்த மடல்' என்ற தலைப்பில் தற்பொழுது திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இராபர்ட் பயஸ் கடிதம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 

அந்த கடிதத்தில்

'உலகத் தமிழர்களுக்கு....

வணக்கம். நான் இராபர்ட் பயஸ் பேசுகிறேன். உங்களை உங்களோடு உங்களில் ஒருவனாக சுதந்திர மனிதனாக இல்லாமல் எங்களில் ஒருவரான சாந்தனை இழந்து இதோ இந்த கம்பிகளுக்கு பின்னால் இருந்து இப்படி உங்களை சந்திக்க நேர்ந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது. 32 வருட நீண்ட சிறைக் கொட்டடிக்கு பிறகு கடந்த 11-11- 2022 அன்று உச்சநீதிமன்றம் விடுதலை செய்த ஆறுபேரில் நானும் ஒருவன். அந்த ஆறுபேரில் நான், ஜெயக்குமார், முருகன் மற்றும் சாந்தன் ஆகிய நால்வரையும் இலங்கைத் தமிழர் எனக் காரணம் கூறி இந்திய வெளியுறத்துறை நாட்டைவிட்டு வெளியே அனுப்பும் வரை சிறப்பு முகாமில் அடைத்து வைக்க உத்தரவிட்டது.

 'There are still three of us left' - open-minded Robert Pius

தொலைந்து போன வாழ்க்கையை எதிர்நோக்கி 32 வருட நீண்ட காத்திருப்பு முற்றுபெறும் தருவாயில் கூட விடுதலையை ருசிக்க முடியாமல், சிறிது நேரம் கூட விடுதலைக் காற்றை சுவாசிக்க முடியாமல் புழல் சிறையிலிருந்து நானும் ஜெயக்குமாரும் வேலூர் சிறையிலிருந்து சாந்தனும் முருகனும் திருச்சி சிறப்பு முகாமிற்கு கொண்டு வந்து அடைக்கப்பட்டோம். இதோ முடியப்போகுது 32 ஆண்டுக்கால சிறைக் காத்திருப்பு என்று எண்ணிய எங்களுக்கு அப்பொழுது விளங்கவில்லை நாங்கள் சிறை மாற்றப்படுகிறோம் என்று. ஆம், அன்று நடந்தேறியது அப்பட்டமான சிறை மாறுதல் தான் என்பதை எங்களுக்கு காலம் தான் விளக்கியது. இது சிறையல்ல சிறப்பு முகாம் தானே என்று எண்ணிய எங்களுக்கு இது சிறையல்ல சிறையை விட கொடுஞ்சிறை என்பதும் எங்களுக்கு போகப்போகத் தான் விளங்கியது.

நாட்டைவிட்டு அனுப்பும்வரை எங்களை சிறப்பு முகாமில் வைக்கிறோம் என்றவர்கள் இன்றைய தேதிவரை நாட்டைவிட்டு அனுப்புவதற்கு எடுத்த முன்னெடுப்புகள் என்னவென்று கேட்டால் மிகப்பெரிய கேள்விக்குறியும் ஆச்சரியக்குறியும் தான் மிஞ்சும். "சிறப்பு முகாமா..? அது ஜெயில் மாதிரிலாம் இல்லைங்க சார். எல்லா வசதிகளும் செய்து கொடுப்போம்" என்று பேசி சமாளிக்கும் அரசும் நிர்வாகமும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. கடந்த ஜனவரி 28 ஆம் தேதி ஒரு வார காலமாக மருந்து மாத்திரை கிடைக்காமல் ஒருவர் இறந்து போனார். இப்பொழுது சாந்தன் கல்லீரல் முழுவதும் செயலிழந்து, எழுந்து நிற்கக் கூட முடியாமல் மிக மோசமடைந்து பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவம் ஏதும் பலனளிக்காத நிலையில் இறந்து போயிருக்கிறார். இந்த மரணத்திற்கு யார் பொறுப்பேற்பது..? யாரை நாங்கள் நொந்துகொள்வது..?

அனைத்து அடிப்படை உரிமைகளையும் மறுத்து, உடல்நலன் குன்றி 'விடுதலை ஆகிவிடுவோம். விடுதலை ஆகிவிடுவோம்.' என்று கனவு கண்டு விடுதலை ஆகிவிட்டோம் என்று பூரிப்பு கிடைத்த தருவாயில் மீண்டும் ஏமாற்றப்பட்டு சிறைமாற்றப்பட்டு இதனால் மனநலனும் பாதிக்கப்பட்டு இறந்து போன சாந்தனுக்கு சிறை வாழ்வு முடிந்தது. இன்னும் மீதம் மூன்று பேர் இருக்கிறோம். நாங்கள் மீண்டும் காத்திருக்க தொடங்குகிறோம் இந்த சிறப்பு முகாமில்.

சிறையில் கூட சிறை நிர்வாகத்திற்கு சிறை விதிகள் கையேடு இருக்கிறது. அதன்படி கைதிகளுக்கு இருக்கக்கூடிய மற்றும் இல்லாத உரிமைகள் கடமைகள் வரையறுக்கப்பட்டு இருக்கும். ஆனால் சிறப்பு முகாமோ சிறையை விட கொடுமையானது, இங்கு எந்த சட்டத்திட்டங்களோ வரையறைகளோ கிடையாது. அரசும், மாவட்ட ஆட்சியரும், முகாம் நிர்வாகமும் என்ன நினைக்கிறதோ அவையெல்லாம் விதிமுறைகளாகவும் சட்டத்திட்டங்களாகவும் ஆக்குகின்றன. மருத்துவம் கிடையாது என்று இவர்கள் முடிவெடுத்தால் முகாம்வாசிகளுக்கு மருத்துவம் கிடையாது. தனிமைச் சிறை என்று இவர்கள் முடிவெடுத்தால் தனிமைச் சிறை, யாரும் மனு பார்க்கக்கூடாது என்று இவர்கள் முடிவெடுத்தால் யாரும் மனுப்பார்க்க முடியாது. இப்படியான நிர்வாகம் தான் நாட்டைவிட்டு வெளியில் அனுப்புவதற்காக என்று காரணம் கூறி சிறப்பு முகாமில் அடைக்கப்படுபவர்கள் அதற்கான எவ்வித முயற்சிகளும் எடுக்கப்படாமல் வருடக்கணக்கில் அப்படியே கிடப்பில் போடப்பட்டு இன்னொரு சிறைவாசத்தை அனுபவித்து வருகின்றனர். நாங்கள் சிறு சிறு அடிப்படைத் தேவைகளையும் மற்றும் அடிப்படை உரிமைகளையும் கூட போராடி, உயிரைக் கொடுத்து பெறவேண்டிய சூழலே இருக்கிறது.

எங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியான 32 வருடங்கள் ராஜீவ்காந்தி பெயரைச் சொல்லியே சிறையில் கடத்தப்பட்டது. இறுதியில் உச்சநீதிமன்றத்தின் விடுதலை ஆணைக்கு பின்னும் எங்களை எங்கள் குடும்பங்களோடு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்காமல் காலங்கடத்தி காலங்கடத்தி இறுதியில் சாந்தனை இழந்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மீதமுள்ள நாங்களும் எங்களுக்கான ஒவ்வொரு அடிப்படை உரிமையையும் பெறுவதற்கு இதுவரை எண்ணற்ற மனுக்களையும், வழக்குகளையும், உண்ணாநிலை போராட்டங்களையும் மேற்கொண்டே பெற்று வருகின்றோம். அதில் பெரும்பான்மையான வாக்குறுதிகள் காற்றிலே போகும். மீதி, கேட்கப்படாமலே மக்கிப் போகும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், இந்த மாத தொடக்கத்தில் இலங்கை துணைத் தூதரகம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று நானும் முருகனும் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்ட பொழுது ஒரு வாரத்தில் அழைத்துச் செல்கிறோம் என்று எங்களுக்கு வாக்குறுதி கொடுக்கப்பட்டு 20 நாட்களை கடந்தும் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இவ்வாறில்லாமல் உரிய அரசு நெறிமுறைகள், அவர்கள் கடமையை முறையே செய்திருந்தால் இன்று சாந்தன் உயிருடன் அவருடைய தாயாருடனும் குடும்பத்தினருடனும் மகிழ்ச்சியாக இன்னும் ஓரிரு வருடங்களாவது இருந்திருப்பார்.

33 வருடங்களாக தனது மகனை பிரிந்து கண்பார்வை குன்றி வயது முதிர்ச்சியடைந்து கடைசியாக ஒருமுறையாவது தனது மகனை பார்த்துவிடவேண்டும் என்று ஏங்கிய ஒரு தாயின் கையில் அந்த மகனின் உயிரற்ற உடலைத்தான் கொண்டுபோய் சேர்க்கப் போகிறோம். கடைசியாக தனது கையால் தன்மகனுக்கு ஒருபிடி உணவு கொடுக்க மாட்டோமா என்று ஏங்கிய அந்த தாய் அந்தமகனுக்கு கடைசியாகக் வாய்க்கரிசி கொடுக்கத்தான் வாய்க்கப்பட்டிருக்கிறார். இதோ இன்று தன் மகன் வந்துவிடுவான், என்று எதிர்பார்த்து காத்திருந்த அந்தத் தாயிடம் 'உன் மகன் வரவில்லை. அவனின் உயிரற்ற உடல்தான் வருகிறது' என்கிற செய்தியை அந்தத் தாயிடம் யாரால் சொல்லியிருக்க முடியும். அத்தகைய கல்நெஞ்சம் படைத்த மனிதர்களும் இவ்வுலகில் வாழ்கிறார்களா என்ன.!? 33 வருடங்கள் கழித்து தன் மகனின் வருகைக்காக மகிழ்ச்சியாக காத்திருந்திருக்கும் அந்த வீட்டில் இந்த செய்தி ஏற்படுத்திய மயான அமைதியின் பேரிரைச்சலை தாங்கிக் கொள்ளும் கனத்த இதயம் கொண்ட மனிதர்களும் இவ்வுலகில் இருக்கிறார்களா என்ன?!

இதோ கடந்த மாதம் என்னுடன் நடந்து மருத்துவ பரிசோதனைக்கு வந்த சாந்தன் இன்று எங்களோடு இல்லை. ஒரு மாதத்தில், எங்களோடு உறவாடி, பேசி உலாவிய சாந்தன் இன்று உயிரோடு இல்லை.

மீதமிருக்கிற, ஜெயக்குமாரும் முருகனும் 33 வருடங்களாக தங்கள் குடும்பங்களை பிரிந்து வாடும் நிலையில் நானோ, மனைவி ஒரு நாட்டில் மகன் ஒரு நாட்டில் தாய், சகோதர சகோதரிகள் வேறு நாட்டில் என சிதறுண்டுக் சிதைந்துக் கிடக்கும் குடும்பத்தை ஒன்றுசேர்த்து ஒரு நாளேனும் வாழ்ந்து விட மாட்டோமா?! பச்சிளம் பாலகனாக பார்த்த எனது மகன் எவ்வளவு உயரம் இருப்பான்? அவன் என்னைவிட உயரமா? அல்ல உயரம் குறைவா? அவனுக்கு திருமணம் ஆகி எனக்கு பேரன் பிறந்திருக்கிறானாம்.! நான் எந்த வயதில் என் மகனை பிரிந்தேனோ அந்த வயதில் எனக்கு இப்பொழுது பேரன் இருக்கிறான். அவனதுப் பஞ்சு பாதங்களை அள்ளியெடுத்து ஒருமுறையேனும் என் முத்தங்களை காணிக்கையாக்கிவிட மாட்டேனா..?!

அன்பார்ந்த உலகத் தமிழ் சமூகமே இன்னும் நாங்கள் மூன்று பேர் மிச்சம் இருக்கிறோம். எங்கள் நிலைமை? நீண்டகால சிறைவாசமும், குடும்பங்களை பிரிந்த துயரமும் எங்களை முழுமையான நோயாளிகளாக்கியுள்ளது. சாந்தனைப் போலல்லாமல் எங்களையாவது எங்கள் கடைசி காலத்தில் மிஞ்சியிருக்கிற கொஞ்ச காலம் எங்கள் தாயார், மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகளுடன் வாழ்ந்து விட்டுப் போக இந்த அரசு இனியாவது நடவடிக்கை எடுக்குமா..?

எங்கள் குடும்பங்களை பிரிந்து வாழ்க்கையை இழந்து வாடும் இப்பெருந்துன்பங்கள் முடிவுக்கு வருமா..?' என உருக்கமாக தெரிவித்துள்ளார்.