work from home

Advertisment

வீட்டிலிருந்து வேலை பார்க்கும் ஐ.டி. தொழிலாளர்கள் படும் துயரங்கள் குறித்து, கடந்த வாரம் நக்கீரன் இணையத்தில் ஒரு கட்டுரை வெளியானது. அது தொழில்நுட்பத் துறையினர் மத்தியில் பரவலான வரவேற்பைப் பெற்றது. மேலும் அந்தக் கட்டுரையை படித்த வாசகர்கள் பலரும், தங்களின் அழுத்தமான கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். உலகையே புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா காலத்தில், அது எளிய மக்களை எப்படியெல்லாம் வதைக்கிறது, வலிமையான சக்திகள் எப்படியெல்லாம் அதனைப் பயன்படுத்திக் கொள்கின்றன என்பதையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டனர்.

தொழில் நிறுவனங்கள் எவ்வாறெல்லாம் கொரோனா மூலம் லாபம் பார்க்கின்றன என்று விவரிக்கும் ஏ.ஐ.சி.சி.டி.யு. கணேஷ், ""ஐ.டி ஊழியர்களுக்கும் இது சோதனைக் காலம். அலுவலகத்தில் வேலை பார்க்கும்பொழுது பதவி உயர்வு, சம்பள உயர்வு வேண்டும் என்பதற்காக அதிகமாக வேலை செய்வார்கள். ஆனால் தற்போது இந்த ஊரடங்கில் தங்களின் வேலையை நிலைநிறுத்திக் கொள்ளவே அதிகநேரம் அவர்கள் வேலைபார்க்க வேண்டியிருக்கிறது. தொழிலாளர் நல சட்டம் ஒரு மனிதன் 8 மணி நேரம்தான் வேலை பார்க்கவேண்டும் என்று கூறுகிறது. ஆனால் இந்த கொரோனா காலத்தில் இரவு, பகல் பாராது உழைக்கிறார்கள். வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறையால், ஒவ்வொரு மணி நேரமும் உயர்அதிகாரி தொலைபேசியில் "என்ன நடக்கிறது? வேலை முடிந்ததா?' என்று சோதனை செய்துகொண்டே இருப்பார். இதனால் அவர்கள் பயந்து கண்கொத்திப் பாம்பைப் போல கணினியின் திரையைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.

திடீர் திடீரென மீட்டிங் போடுவார் உயர் அதிகாரி. அதனால் அவர்களால் சரியான நேரத்தில் உணவுகூட உண்ண முடிவதில்லை. அலுவலகத்தில் வேலை பார்ப்பதைவிட வீட்டில் இருமடங்கு வேலையைச் செய்கிறார்கள். குறிப்பாக டார்கெட் முடிக்கவில்லை என்பதால் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட அவர்கள் வேலைபார்க்க வேண்டியிருக்கிறது. மேலும், வீட்டில் 8 மணி நேரத்திற்கு மேலாக மடிக்கணினியை இயக்கு வதால் உடலும் அவர்கள் இருப்பிடமும் அதிக வெப்பமடைகிறது. இதைத் தவிர்க்க வீட்டில் குளிர்சாதனக் கருவி பொருத்தவேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பெரும்பாலான நிறுவனங்களில் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதற்கான மின்சார கட்டணம், இணைய சேவைக் கட்டணம் போன்றவற்றை தரும் வழக்கமில்லை. ஆனால் ஊழியர்களுக்காக நிறுவனம் அளிக்கும் வாகன சேவை, அலுவலக கட்டிட வாடகை, மின்சாரம் போன்ற பல செலவுகள் நிறுவனத் தரப்புக்கு குறைந்துள்ளது. அதே நேரத்தில் லாபமும் அதிகரித்துள்ளது'' என்று பட்டியலிடுகிறார்.

Advertisment

wfhஇந்த நிலை குறித்து தனியார் நிறுவன மனிதவள அதிகாரி ராஜராஜன் சொல்லும் போது...“""தற்போது அரசாங்கம் தளர்வுகளை அறிவித்தாலும் எங்களது நிறுவனம் அடுத்த வருடம் முதல், வீட்டில் இருந்து வேலை பார்க்கும் முறையைக் கையாளுவது என்று திட்டமிட்டுள்ளோம் கொரோனா காலத்தில் எங்கள் ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு போன்ற திட்டங்களை நாங்கள் அளித்து வருகிறோம். அதே நேரத்தில் வீட்டிலிருந்து எங்கள் ஊழியர்கள் வேலை பார்ப்பதால் பல தனிப்பட்ட சிக்கல்கள் அவர்களுக்கு ஏற்படுகிறது. குறிப்பாக குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது, மின்சாரத் துண்டிப்பு, உடல் ரீதியான பிரச்சனைகள் என. குறிப்பாக, ஊழியர்கள் அவர்களின் சொந்த ஊரிலிருந்து வேலை பார்ப்பதால் இணைய சேவை சரியாக கிடைப்பதில்லை. எனவே அவர்களால் வேலையைக் குறித்த நேரத்தில் முடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இப்படியான தனிப்பட்ட காரணங்களை எங்களின் உயர் அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்ல முடியவில்லை. ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை பார்க்கும் போது தான் இப்படியான பிரச்சினைகளுக்கு முற்றுபுள்ளி வைக்க முடியும்''’என்கிறார் ஆன்லைன் வேலைகளின் எதார்த்தத்தை உணர்ந்தவராய்.

சமீபத்தில் "லிங்க் டு இன்' சார்பாக ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் சுமார் 16,000 இந்திய ப்ரொபஷனல் பணியாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 60 சதவீதத்தினர் "வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதால் தனிமையில் வாடுவதாக'த் தெரிவித்துள்ளனர். மேலும், 41 சதவீதத்தினர் "இந்த நடைமுறையால் தங்களது திறன் மற்றும் எதிர்கால முன்னேற்றத்தில் பாதிப்பு ஏற்படும்' என்று கூறியுள்ளனர். "வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதால், பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுவதாக' 46 சதவீதத்தினர் கூறியுள்ளனர். அதேபோல, "இந்த நடைமுறையால் மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக' 39 சதவீதத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

தற்போது வீட்டிலிருந்து வேலை பார்ப்பதை (ஒர்க் ஃப்ரம் ஹோம்) விட அலுவலகத்துக்குச் சென்று வேலை பார்ப்பதையே பலரும் விரும்புகின்றனர். எவ்வித இடையூறுகளும் இல்லாமல் வேலை பார்ப்பது, முழுமனதுடன் முழுவீச்சுடன் வேலைபார்ப்பது போன்றவை அலுவலகச் சூழலிலேயே ஊழியர்களுக்கு சாத்தியப்படுகிறதாம். அவரவர் வீடுகளில் தனித்தனியே வேலை பார்ப்பதால் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான தகவல் தொடர்பில் இடைவெளி இருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. இப்படி பல காரணங்களால், "போதுமடா சாமி வொர்க் ஃப்ரம் ஹோம்' என்று பலரும் அலுவலகத்திற்குச் செல்லும் விருப்பத்தோடு காத்திருக்கின்றனர்.

Advertisment

இவர்களின் கவலைகலந்த எதிர்பார்ப்பிற்கு எப்போது கொரோனா முற்றுப்புள்ளி வைக்கப் போகிறதோ?

-சேகுவேரா