Skip to main content

வெட்டுக்கிளிகளின் திடீர் வருகை ஏன்..? பதிலளிக்கிறார் ஜியோ டாமின்!

Published on 28/05/2020 | Edited on 28/05/2020

 

ல



சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா நடித்த 'காப்பான்' திரைப்படம் வெளிவந்து பரபரப்பைக் கிளப்பியது. அந்தப் படத்தில் எதிரிகள் விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகளைப் பரப்பி நிலங்களில் உள்ள பயிர்கள் முழுவதும் அழிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.
 


சினிமாவில் இடம்பெற்ற அந்தக் காட்சிகளைப் போலவே தற்போது வட மாநிலங்களில் நேரடியாக நடந்து வரும் சம்பவங்கள் வியப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபை பயிர்களைச் சேதப்படுத்தும் வெட்டுக்கிளிகள் இந்தியாவிற்கு வர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. ஏற்கனவே ஆப்பிரிக்க நாடுகளான சோமாலியா, கென்யா நாடுகளைப் பாதித்த அந்த வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் வழியாகத் தற்போது இந்தியா வந்துள்ளன. இந்நிலையில் இந்த வெட்டுக்கிளிகள் ஏன் கூட்டம் கூட்டமாக வருகின்றது, எதிர்காலத்தில் அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற நம்முடைய கேள்விக்கு பதிலளிக்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜியோ. டாமின். கேள்வி பதில் பின்வருமாறு,

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தியாவில் ஆரம்பமாகியுள்ளது. இந்தியாவில் இதற்கு முன்பு ராஜஸ்தான் பகுதிகளில் இது நடந்திருப்பதாகவும் கூறுகிறார்கள். ஆப்பிரிக்க நாடுகளில் ஆரம்பித்து பாகிஸ்தான் வழியாகத் தற்போது இந்தியாவில் வெட்டுக்கிளிகள் புகுந்துள்ளன. வட மாநிலங்களில் குறிப்பாக ராஜஸ்தான், உத்திர பிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் அதன் தாக்கம் அதிகம் இருப்பதாகவும் கூறுகிறார்கள். இந்த வெட்டுகிளிகளின் திடீர் படையெடுப்புக்கு என்ன காரணம், எதனால் இது ஏற்படுகின்றது? 
 

 


பெரும்பாலும் வெட்டுக்கிளிகளின் இடப்பெயர்ச்சி என்று பார்த்தால் அது உணவுக்காகவே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும். வெட்டுக்கிளிகள் ஏன் இப்படி ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் கூட்டம் கூட்டமாகச் செல்கிறது என்றால் அதற்கு முதலில் வெட்டுக்கிளிகளின் வாழ்க்கை முறையைத் தெரிந்து கொள்ள வேண்டும். இப்போது நாம் பார்க்கின்ற வெட்டுக்கிளிகள் 'லோகஸ்ட்' என்று அழைக்க கூடிய வகையைச் சார்ந்தது. அதாவது நம்முடைய வீடுகளில் பார்க்கக் கூடிய வெட்டுக்கிளிகளைப் போல் இதுவும் ஒரு வகையான வெட்டுக்கிளிகள். 22 வகையான வெட்டுக்கிளிகள் இந்த 'லோகஸ்ட்' என்று சொல்லக்கூடிய வெட்டுக்கிளி வகைகளில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த வகை வெட்டுக்கிளிகள் தான் தோட்டங்கள், வீடுகளைத் தாக்கக்கூடியதாக நாம் பார்த்து வருகின்றோம். 

வெட்டுக்கிளிகளின் பூர்விகம் என்று பார்த்தால் வட கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளைச் சொல்லலாம். இந்த வெட்டுக்கிளிகள் எல்லாம் நம்முடைய விளை நிலங்களில் எப்படி நான்கு ஐந்து வெட்டுக்கிளிகள் நிலத்தைச் சேதப்படுத்துமோ அந்த வகையான வெட்டுக்கிளிகள் தான் இவை. இது அனைத்தும் எப்போது அதிரடியாக ஒன்று கூடுகிறது என்றால் கடுமையான வறட்சி ஏற்படுகின்ற போது பசுமையான பகுதிகளை நோக்கி தனிதனியாக இருக்கும் அந்த வெட்டுக்கிளிகள் ஒன்று சேர்கின்றன. இதனால் அவைகள் கூட்டம் கூட்டமாக நமக்குத் தெரிகின்றன. அப்படி அவைகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து தாவரங்களைச் சேதப்படுத்துகின்ற போது 'செரட்டோனின்' என்ற வேதிப்பொருள் வெட்டுக்கிளிகளில் உற்பத்தி ஆகின்றது. 
 

ு

 

http://onelink.to/nknapp


அந்த வேதிப்பொருட்கள்தான் இந்த வெட்டுக்கிளிகளின் மாற்றத்திற்கு காரணமாக இருக்கின்றது. இந்த வேதிப்பொருட்கள் எப்போது உற்பத்தி ஆகின்றதோ அப்போதிலிருந்து அந்த வெட்டுகிளிகளின் நடை, உணவுப் பழக்க வழங்கங்கள், வேகம் உள்ளிட்ட அனைத்தும் மாறிப்போகின்றது. இந்த வெட்டுக்கிளிகள் பொதுவாகவே 100-க்கும் மேற்பட்ட முட்டைகளைப் போடக்கூடியவை. ஒரு வறட்சி காலத்தில் இருக்கும் போது, அந்த வெட்டுக்கிளிகளுக்கு ஒரு மழைக்கான சிக்னல் கிடைக்கின்ற போது, நாம் இந்த இடத்தில் பல்கிப்பெருகலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்கின்றது.

அப்போது அந்த வெட்டுக்கிளிகள் போடுகின்ற முட்டைகள் அவர்களின் பெற்றோரைச் சார்ந்து இருக்காது முற்றிலும் வடிவமைப்பிலும், நிறத்திலும், மூளை அளவுகளில் கூட வித்தியாசமாக இருக்கும். பறக்கும் திறனும், உணவு உண்ணும் திறனும் கூட தன் பெற்றோரை விட அந்த வெட்டுக்கிளிகளுக்கு அதிகமாக இருக்கும். இவ்வாறு ஒரே நேரத்தில் உருவாகும் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் உணவுக்காகத் தொடர்ந்து பசுமையான இடத்தை நோக்கிச் செல்கின்றது,என்றார்.



 

Next Story

மனிதாபிமான அடிப்படையில் செய்த உதவி; எதிர்பாராத விதமாக நடந்த சோகம்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Airborne tragedy in gaza by america

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். 

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது. 

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. 30க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை 22,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 57,614 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் ஒரு பத்திரிகையாளரின் குடும்பமே உயிரிழந்தது. அதனை அவரே செய்தி சேகரிப்பின் நேரலையில் கூறியது பலரையும் கலங்க வைத்தது. 

இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பின் கடைசி நபரை கொல்லும் வரை தங்களின் தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்திருந்தார். அதன் காரணமாக காசாவை சுற்றி வளைத்த இஸ்ரேலிய படை தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 

இந்த போர் குறித்து ஐ.நா கூறுகையில், ‘இஸ்ரேல் - காசா இடையே நடைபெறும் போரினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஒருபுறம் இருக்க, பட்டினியால் ஏற்படும் உயிரிழப்புகள் நடப்பது கொடுமையாக இருக்கிறது. காசா பகுதியில் 4இல் ஒருவர் பசியால் வாடுகிறார்கள்’ என்று கூறி கவலை தெரிவித்தது. இதனைக் கருத்தில் கொண்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு, காசா மக்களுக்கு வான்வழி உணவு மற்றும் உதவி பொருட்கள் வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்திருந்தது. 

Airborne tragedy in gaza by america

அந்த வகையில், நேற்று (09-03-24) காசாவின் வடக்கு பகுதியில் உள்ள ஷாதி என்ற இடத்தில் உள்ள மக்களுக்கு பாராசூட் மூலம் உணவுப் பொருட்களை அமெரிக்கா விநியோகம் செய்து கொண்டிருந்தது. அப்போது, ஒரு பாராசூட் விரியாமல் திடீரென பழுதானது. இதனால் அந்த பாராசூட், உணவுப் பொருட்களுடன் மக்கள் கூடியிருந்த பகுதியில் விழுந்தது. இந்த விபத்தில் பரிதாபமாக 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். 

இந்த சம்பவம் குறித்து காசா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இது குறித்து, காசா செய்தித் தொடர்புத்துறை கூறுகையில், ‘இந்த திட்டத்தை பற்றி முன்கூட்டியே எச்சரித்தும் அமெரிக்க அரசு அலட்சியமாக செயல்பட்டுள்ளது. மனிதாபிமான உதவிகள் என்ற பெயரில் எங்கள் மக்களை மேலும் கொல்லாதீர்கள்’ என்று தெரிவித்துள்ளது. 

Next Story

சென்னை - புனே ரயில் பயணம்; 40 பயணிகளுக்கு உடல்நலக் குறைவு

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

Chennai - Pune Train Travel; 40 passengers fell ill

 

சென்னை - புனே ரயிலில் பயணம் செய்த பயணிகளில் 40 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னையிலிருந்து புனேவுக்கு பாரத் கவுரவ் என்ற சுற்றுலா ரயில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது ரயிலில் பயணித்த பயணிகளுக்கு ரயில்வே சார்பில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. அதன்படி ரயிலில் வழங்கப்பட்ட இரவு உணவை சாப்பிட்ட 40 பயணிகளுக்கு ஒரே நேரத்தில் ஒவ்வாமை பாதிப்பு காரணமாக வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

 

ஒரே நேரத்தில் 40 பேருக்கும் உணவு ஒவ்வாமை ஏற்பட்டது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ரயில் பூனே சென்றவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.