Skip to main content

"பாம்பு வித்தை காட்டுறவனுக்கும்தான் கூட்டம் சேரும்; ஆனா எடப்பாடி மாதிரி அவன் முதலமைச்சர் கனவு காண மாட்டான்..." - காந்தராஜ் தடாலடி

Published on 17/12/2022 | Edited on 17/12/2022

 

jkl

 

சில நாட்களுக்கு முன்பு ஆத்தூர் பொதுக்கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை திமுக உடைக்கப் பார்க்கிறது. அவர்கள் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. ஒரு ஸ்டாலின் அல்ல, ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். இதுதொடர்பாக அரசியல் விமர்சகர் காந்தராஜ் அவர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது, " எடப்பாடி சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. அதிமுகவில் இதற்கு மேல் உடைக்க என்ன இருக்கிறது. அவர்களே நான்கு துண்டுகளாகச் சிதறிக் கிடக்கிறார்கள். இதற்கு மேல் அவர்களை உடைக்க என்ன தேவை திமுகவுக்கு ஏற்பட்டு விடப்போகிறது.

 

இதற்கு மேல் உடைக்க வேண்டுமென்றால் 40 துண்டுகளாக வேண்டுமானால் உடைக்கலாம். எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் உருவாக்கிய கட்சியில் இன்றைக்கு யாரை வைத்திருக்கிறார். எல்லாத் தலைவர்களையும் நீக்கிவிட்டார். தானே ஒன் மேன் ஆர்மியாக உள்ளார். இத்தனை துண்டுகளாக உள்ள அதிமுகவை இதற்கு மேல் உடைத்து திமுக என்ன செய்யப் போகிறது. இப்போது இருப்பவர்கள் எல்லாம் சமூக ரீதியாக அவருடன் இருப்பவர்கள். கட்சிக்காரர்கள் யாரும் அவருடன் இல்லை. புலிக்குப் பயந்தவன் எல்லாம் என் மேல் அமர்ந்து கொள்ளுங்கள் என்பதைப்போல் என்போர்ஸ்மெண்ட் டிபார்மெண்ட் கண்காணிப்பில் உள்ள அனைவரும் எடப்பாடி பக்கம் பாதுகாப்பாக உள்ளார்கள். இதைத் தவிர மக்கள் செல்வாக்கு உடைய யாராவது அவரிடம் இருக்கிறார்களா என்றால் அப்படி ஒருவரும் இல்லை என்பதே உண்மை. 

 

பழனிசாமிக்கு கூட்டம் வருகிறது என்று சொல்கிறீர்கள், அந்தக் கூட்டம் எதற்கு வருகிறதென்றால் இவர் இன்னுமா அரசியலில் இருக்கிறார் என்று பார்ப்பதற்கு வருகின்ற கூட்டம், அதை எல்லாம் இவர் தனக்கு வாக்களிப்பார்கள் என்று நினைத்து முதல்வர் கனவு காணக்கூடாது. பாம்பு வித்தை காட்டுபவர்களுக்குக் கூட அதிகமான மக்கள் கூட்டம் சேரும். அவர்கள் எல்லாருமே முதல்வர் ஆவோம் என்று நினைக்கக் கூடாது. அதுபோல எடப்பாடி இதையெல்லாம் நம்பி மனக்கோட்டை கட்டி வருவதை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. எனவே அவருக்கு அதைத்தவிர வேறு வழியும் இல்லை. கட்சி நான்காகச் சிதறிக்கிடக்கின்ற போது அவர் இதைத்தவிர வேறு என்ன செய்ய முடியும். பேசியே காலத்தை ஓட்டவேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்" என்றார்.