incident

நரபலியா என்ற பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது அந்தச்சிறுமியின் படுகொலை. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தில் கடந்த மாதம் 18 ஆம்தேதி குடிதண்ணீர் எடுக்க குளத்திற்குச் சென்ற 13 வயது சிறுமி வித்தியா வீடு திரும்பவில்லை. தாய் மற்றும் சகோதரிகள் தேடிச் சென்றபோது அரை கி.மீ தூரத்திற்கு அந்தப்பக்கம் தைலமரக்காட்டில் கழுத்து நெரிக்கப்பட்டு வாய்ப்பேச முடியாத நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி இறந்தார்.

Advertisment

Advertisment

சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்ற புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார், விசாரணையைத் தீவிரமாக்கினார். மகளின் கொலைக்கு காரணமானவர்களைக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறுமியின் தாய் இந்திரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்த நிலையில் சந்தேகப்பட்ட அனைவரையும் போலீசார் பிடித்து வந்து விசாரணை செய்தனர். ஆனாலும் மகள் இறந்த வருத்தம் இல்லாமல் சகஜமாக இருந்த தந்தை பன்னீர்மீது உறவினர்கள் முதல் போலீசார் வரை அனைவருக்கும் சந்தேகம் ஏற்பட்டது.

அனைத்துச் சடங்குகளும் முடியும்வரை காத்திருந்த போலீசார் தாய் இந்திராவிடம் நடத்திய விசாரணையில்.வித்தியாவை காணவில்லை என்று வெளியூரில் வேலை செய்து கொண்டிருந்த தன் கணவரிடம் சொன்ன போது அவர்தான் தைலமரக்காட்டில் கிடக்கலாம் என்று சொன்னார் என்று உளறிவிட்டார். அதன் பிறகு பன்னீரை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்த போது தான் அதிர்ச்சிக் காத்திருந்தது.

incident

சொத்து நிறைய சேர வேண்டும் என்றால் மகளைப் பலி கொடுத்து பூஜை செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை பெண் மந்திரவாதி வசந்தி சொன்னதால் தனது இரண்டாவது மனைவி மூக்காயி மற்றும் உறவினர் குமாருடன் இணைந்து மகளை கொல்ல திட்டமிட்டதுடன் முதல் நாள் இரவு பிடாரி கோயில் அருகில் உள்ள குளத்தில் பெண் மந்திரவாதி பூஜைகள் செய்துள்ளார். அவர்களுக்குத் துணையாக முருகாயி என்ற பெண்ணும் இருந்துள்ளார்.

பூஜை நடந்து முடிந்த மறுநாள் குடிதண்ணீர் எடுக்க தனியாகச் சென்ற மகளை தைலமரக்காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்ற பன்னீர், குமார் மற்றும் தனது இரண்டாவது மனைவியுடன் இணைந்து சிறுமியின் கழுத்தைத் துண்டு மற்றும் சேலையால் நெரிக்க துடிதுடிக்க மயங்கி கீழே சரிந்த பிறகு மற்றவர்களைப் போகச் சொல்லிவிட்டு சந்தேகம் வராமல் இருக்க மயங்கிக் கிடந்த மகளின் உள்ளாடைகளைக் கழற்றிவிட்டு இறந்துவிட்டதாக நினைத்து அங்கிருந்து சென்றுவிட்டார். அதன் பிறகே தாய் இந்திரா தேடிச் சென்று உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மகளை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த 30 ஆம்தேதி இரண்டாவது மனைவி மூக்காயியும் உடல்நலமின்றி இறந்துவிட்டார்.

பன்னீர் மற்றும் குமார் ஆகிய இரு வரையும் கைது செய்த போலீசார் கொலைக்குப் பயன்படுத்திய துண்டு, சேலை, செல்போன்கள், மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து புதுக்கோட்டை மாலையிடு பகுதியைச் சேர்ந்த பெண் மந்திரவாதி வசந்தி மற்றும் அவரது உதவியாளர் முருகாயி ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை செய்துள்ளனர்.

இது குறித்து கந்தர்வகோட்டை பகுதியைச் சேர்ந்த பன்னீரின் உறவினர்கள் கூறும் போது.. "பன்னீர் 7க்கும் மேற்பட்ட பெண்களுடன் வசிக்கிறார். தான் மேஸ்திரி வேலைக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் பெண்களை வசியம் செய்துவிடுவார். அப்படித்தான் 15 வருடங்களுக்கு முன்பு மந்திரவாதி வசந்தி வீட்டுக்கு வேலை செய்ய சென்றதில் இருந்து அவருடன் பழக்கம் இருந்துள்ளது. அந்தப் பழக்கத்தில்தான் தற்போது தான் பெற்ற குழந்தையையே கொல்லும் அளவிற்குச் சென்றுள்ளார் பன்னீர். போலீஸ் விசாரணைக்குப் பயந்து பன்னீரின் இரண்டாவது மனைவி தற்கொலை செய்து கொண்டாரா? மாரடைப்பா? அல்லது அதுவும் கொலையா? என சந்தேகம் கிளப்புகிறார்கள்.

incident

இது வழக்கமான நரபலி அல்ல. பூஜை முதல் நாள் நடந்து முடிந்த பிறகு சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டுள்ளார். அவரது உடலில் இருந்து ரத்தமும் எடுக்கப்படவில்லை. வேறு காரணங்களுக்காகக் கொல்லப்பட்டிருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றனர்.

http://onelink.to/nknapp

போலீசார் தரப்பிலோ.. தான் திடீர் பணக்காரன் ஆகணும் என்பதற்காக மந்திரவாதி வசந்தியை வைத்து, தான் பெற்ற மகளையே கொன்று பூஜை செய்திருக்கிறான். பாலியல் பிரச்சினையாக திசை திருப்பும் முயற்சியும் நடந்திருக்கிறது. ஆனால் போலீசார் விசாரணையில் எல்லாம் வெளிப்பட்டுவிட்டது. அதனால்தான் உடனடியாக விசாரணை செய்து கொலையாளிகளைக் கைது செய்த போலிசாருக்கும் எஸ்.பி. அருண்சக்திகுமார் பாராட்டுச்சான்றிதழ் கொடுத்திருக்கிறார் என்றனர்.