Skip to main content

எதிர்பார்த்த எதிர்க்கட்சிகள்! ட்விஸ்ட் வைத்த ஒன்றிய அரசு! 

Published on 22/09/2023 | Edited on 22/09/2023

 

Expected opposition parties! The Union government put a twist!

 

நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசை வீழ்த்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து தீவிரமாகப் பணியாற்றி வரும் நிலையில், நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டினார் பிரதமர் மோடி. இந்த கூட்டம் 18-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடக்க இருந்த நிலையில், ஒரு நாள் முன்னதாகவே அதாவது 21ம் தேதியே முடிவடைந்தது. 

 

நாடாளுமன்றத்தின் ஒரு கூட்டம் முடிந்து 6 மாதங்களுக்குப் பிறகே அடுத்த கூட்டம் அல்லது சிறப்புக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என நாடாளுமன்ற விதிகள் சொல்லப்பட்டாலும், அசாதாரணமான சூழலில் சிறப்புக் கூட்டம் கூட்டுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. அந்த வகையில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் முடிந்து ஒரு மாதமே கடந்த நிலையில், சிறப்புக் கூட்டம் நடப்பதுதான் எதிர்க்கட்சிகளை அதிர வைத்திருக்கிறது. எந்த ஒரு அசாதாரண சூழலும் நாட்டில் இல்லாதபோது சிறப்புக் கூட்டத்துக்கு அவசியம் என்ன? என்பதுதான் எதிர்க்கட்சிகளின் அதிர்ச்சிக்குக் காரணம்.

 

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடக்கும் இந்த சிறப்புக் கூட்டத்தில் பல்வேறு சட்ட மசோதாக்களை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது மோடி அரசு எனச் சொல்லப்பட்டது. குறிப்பாக, தலைமைத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்களை நியமிப்பது, பத்திரிகைகள் மற்றும் இதழ்கள் பதிவு செய்வது, வழக்கறிஞர்கள் நியமனம் உள்ளிட்ட சட்டத் திருத்த மசோதாக்கள் விவாதங்களுக்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கின்றன எனப் பேசப்பட்டது.

 

இந்த சிறப்புக் கூட்டத்தில் சர்ச்சைக்குரிய மசோதாக்களைச் சத்தமின்றி நிறைவேற்ற மோடி அரசு திட்டமிட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் சந்தேகிக்கும் நிலையில், சர்ச்சை மசோதாக்களைச் சூழல்களுக்கேற்ப ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீர்மானித்தன.

 

இதுகுறித்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ் தரப்பில் நாம் விசாரித்தபோது, “எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணியை எதிர்க்கத் துணிச்சல் இல்லாத பிரதமர் மோடி, ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற சட்ட மசோதாவைக் கொண்டு வரலாம். ஆனால், உறுதியாக வெளிப்படையாக, நேர்மையாக இதனை பா.ஜ.க. வெளிப்படுத்தவில்லை. ஒருவேளை அதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டால் அதனைக் கடுமையாக எதிர்க்க வேண்டும் என இந்தியா கூட்டணி முடிவு செய்திருக்கிறது.

 

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கருத்துருவை ஆராய, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் ஆலோசனைக் கூட்டமே 23-ந் தேதிதான் நடக்கிறது. பல கட்ட ஆய்வுகளை நடத்திய பிறகே அந்த குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்யும். குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்படாதபோது, ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவை இந்த சிறப்புக் கூட்டத்தில் கொண்டுவர மோடி துணியமாட்டார் என இந்தியா கூட்டணியின் தலைவர்கள் மத்தியில் பேச்சு இருந்தது. அதுபோலவே இந்தச் சிறப்புக் கூட்டத்தில் அந்த மசோதா தாக்கல் செய்யப்படவில்லை. 

 

அதேசமயம், தெலுங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கும் இந்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும். எதிர்க்கட்சிகளின் கூட்டணி வலிமையாக இருப்பதால் இந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தோற்றுப்போக வாய்ப்புகள் அதிகம். மோடிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் உளவுத்துறை அறிக்கைகளும் இதனைத்தான் சொல்கிறதாம். ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அடி வாங்கினால் நாடாளுமன்றத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என உணர்ந்து, அந்த 5 மாநில தேர்தலையும் நாடாளுமன்றத் தேர்தலோடு இணைந்து நடத்துவதற்கான சட்ட மசோதாவைக் கொண்டு வர பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாகப் பேசப்பட்டது. அப்படிக் கொண்டு வந்தால் அதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கும். மேலும், இந்தியாவின் பெயரைப் பாரதம் என மாற்றும் மசோதாவும் கொண்டு வரப்படலாம்” என திமுக மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் வட்டாரத்தில் பேசப்பட்டது.

 

இதற்கிடையே, நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை எதிர்கொள்வது குறித்து தி.மு.க. எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார் முதல்வர் மு.க. ஸ்டாலின். அப்போது, “இந்த கூட்டத்தொடரில் சனாதனம் பற்றி பா.ஜ.க. பேசினால் அதற்குச் சரியான முறையில் பதிலளிக்க வேண்டும். கவனமாகக் கையாளுங்கள்” என்று அறிவுறுத்தியிருந்தார் மு.க. ஸ்டாலின்.

 

அயோத்தியில் கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவிலை ஜனவரி 27-ந் தேதி மிக விமரிசையாகத் திறக்க பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ்.ஸும் திட்டமிட்டுள்ளன. இதில் கலந்துகொள்வதற்காக உலக நாடுகளின் முக்கிய தலைவர்கள் 125 பேரை இந்தியாவுக்கு அழைக்கத் திட்டமிட்டுள்ளனர். ராமர் கோவில் திறப்பு விழாவில் உலகத் தலைவர்களைக் கலந்துகொள்ள வைத்து இந்தியாவை ஆன்மீக பூமியாக உலகுக்கு அறிவிக்க வேண்டும் என்பதே உண்மையான நோக்கம்.

 

அதனால் ராமர் கோவில் திறப்பு குறித்தும் இந்த கூட்டத்தொடரில் பதிவு செய்யப்படலாம் என்றும் பேசப்பட்டன. நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தில் கூட்டப்படும் சிறப்புக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி எந்த மாதிரியான அதிர்ச்சியைத் தரப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பில் இருந்தது இந்தியா கூட்டணி. 

 

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டு மசோதாவைக் கொண்டுவந்து நிறைவேற்றியது மத்திய அரசு. இதற்கு அனைத்துக் கட்சியினரும் ஆதரவு தெரிவித்தபோதும், இது அரசியல் உள்நோக்கத்தோடு கொண்டு வந்த மசோதா. இந்த மசோதா தற்போது நிறைவேற்றப்பட்டிருந்தாலும், இதன் அடிப்படையில் வரவிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கோ அல்லது இந்த வருடம் இறுதியில் வரவிருக்கும் ஐந்து மாநிலத் தேர்தலுக்கோ இது பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து தொகுதி மறுவரையறை செய்த பிறகே இந்த இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா கூட்டணிக் கட்சியினர் இது அரசியல் உள்நோக்கத்தோடு கொண்டு வந்த மசோதா என்று தெரிவிக்கின்றனர். 

 

 

Next Story

சோனியா காந்தி எம்.பி.யாக பதவியேற்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Sonia Gandhi sworn in as MP

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 54 பேர் நேற்றுடன் (03.04.2024) ஓய்வு பெற்றனர். அவர்களில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒருவர் ஆவார். இதன் மூலம் மன்மோகன் சிங்கின் 33 ஆண்டுகால அரசியல் பயணம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இவருடன் 9 மத்திய அமைச்சர்களும் ஓய்வு பெற்றனர். அதே சமயம் இந்த காலியிடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி இன்று (04.04.2024) பதவியேற்றார். சோனியா காந்திக்கு மாநிலங்களவை தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜெகதீப் தங்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதே போன்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி குமார் வைஷ்ணவ் உள்ளிட்ட 14 பேர் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டனர். கடந்த 1999 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி, கர்நாடக மாநிலம் பெல்லாரி தொகுதியில் இருந்து முதன் முதலாக சோனியா காந்தி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 5 முறை மக்களவைத் தேர்தலில் வென்ற சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது பதவியேற்றுள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சோனியா காந்தியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இது குறித்து மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “இன்று ராஜ்யசபாவில் பதவியேற்று, தனது புதிய இன்னிங்ஸைத் தொடங்கும் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எழுச்சி மிக்க எனது நல்வாழ்த்துகள். பாராளுமன்ற உத்தியை தொடர்ந்து வழிநடத்தும் அவர்,  மக்களவையில் 25 ஆண்டுகள் பணியாற்றி முடித்துள்ளார். இப்போது நானும் எனது சக உறுப்பினர்களும் ராஜ்யசபையில் அவரது வரவை எதிர்பார்க்கிறோம். அவரது பதவிக் காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“பச்சை துரோகம்” - விஜய் சேதுபதியின் விழிப்புணர்வு வீடியோ

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
vijay sethupathi election video

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் அன்றே நடைபெறும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. தி.மு.க, காங்கிரஸ், இடது சாரிகள், வி.சி.க, உள்ளிட்ட சில கட்சிகள் இந்தியா கூட்டணியிலும் அ.தி.மு.க, தே.மு.தி.க தனி கூட்டணியிலும் பா.ஜ.க, பா.ம.க தேசிய ஜனநாயக கூடணியிலும் தேர்தலை எதிர்கொள்கின்றனர். இதையொட்டி தங்கள் கட்சி வேட்பாளர்களுடன் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.  

இந்த நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என விஜய் சேதுபதி வலியுறுத்தும் தேர்தல் விழிப்புணர்வு வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் விஜய் சேதுபதி பேசியதாவது, “நாம எல்லாரும் ஆசையா எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த தேர்தல் வந்துவிட்டது. வழக்கமாக தேர்தல் வரும்போது எல்லாருக்கும் ஒரு மனப்பான்மை இருக்கும். யார் வந்தா நமக்கென்ன... இல்லை யார் காசு கொடுக்கிறாங்களோ அவங்களுக்கு ஓட்டு போடுவோம்... ஒட்டு போட்டு ஒன்னும் ஆகப் போறதில்லை... இது போன்ற மனநிலையை தூக்கி ஓரம் வைச்சிடுங்க. நாம, நமக்காக இல்லைன்னாலும் நம்ம குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நம்ம அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும்.   

காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்ளோ பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது. உங்களுக்கு புடிச்சவங்க புடிக்காதவங்க யாராக இருந்தாலும் சரி, அவுங்க யார் என்னன்னு தெரிந்து கொள்ளுங்கள். அவங்களால நமக்கு என்ன பயன் என்பதை விட இந்த நாட்டிற்கு என்ன பயன் என்பதை யோசித்து பாருங்க. அதில் நம்முடைய சுயநலமும் இருக்கு. நாமெல்லாம் சேர்ந்தது தானே நாடு. 

நாம் என்பது இன்றைக்கும் மட்டும் பார்ப்பதா, அல்லது நாளைக்கு நம்முடைய குழந்தைகள் வாழப்போகிற எதிர்காலைத் பற்றியும் சிந்திக்கிறதா. நம்முடைய குழந்தைகளுடைய எதிர்காலம் ரொம்ப முக்கியம். நம்மை ஆளப்போவது யார். ஆட்சியை யார்கிட்ட கொடுக்கப் போறோம். அவங்களுக்கு என்ன தகுதி இருக்கு. இதுக்கு முன்னாடி அவுங்க என்ன செஞ்சிருக்காங்க, என்ன சொல்றாங்க என்பதை அலசி ஆராஞ்சி ஓட்டு போடுங்க. இதுவரை அரசியல் செய்திகளை கேட்கவில்லை என்றாலும் பேசவில்லைன்றாலும் பார்க்கவில்லை என்றாலும் சரி, இன்றையிலிருந்து ஓட்டு போடுகிற நாள் வரை அரசியல் பற்றி பேசுங்க. தெளிவா, சிந்தித்து செயல்பட்டு வாக்களியுங்க” என்றார்.