Skip to main content

ஈவிகேஎஸ்சுக்கு ஆதரவு எப்படி இருக்கிறது?

Published on 12/04/2019 | Edited on 12/04/2019

உள்ளூர் ஆட்கள் முட்டி மோதிக் கொண்டிருக்கும் தேனி மக்களவைத் தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் திமுக கூட்டணி வேட்பாளராக களம் இறங்கிக் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவரை வெளியூர் வேட்பாளர் என்று விமர்சனம் செய்தாலும், தன்னை தமிழகத்தின் பொதுவேட்பாளராக அறிவித்துக்கொண்டு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார்.

 

evks elangovanஅதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார், அமமுக சார்பில் தங்கதமிழ்செல்வன் ஆகியோர் அதிமுகவின் வாக்குகளை யார் அதிகமாக கூறுபோடுவது என்று பணத்தை வாரி இரைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தன்னிடம் பணம் இல்லை என்று அறிவிக்கும் ஈவிகேஎஸ், அதிமுக, அமமுகவிடம் 500 ஆயிரம் 1000 ரூபாய் வாங்காதீர்கள் என்றும் 5 ஆயிரம் 10 ஆயிரம் ரூபாய் வாங்குங்கள் என்றும், வாக்குகளை தனக்கு போடும்படியும் வித்தியாசமாக பிரச்சாரம் செய்கிறார்.


அவருடைய போல்டான பேச்சு ஏற்கெனவே தமிழக மக்களுக்கு அறிமுகமானதுதான். ஆனாலும், தேனித் தொகுதியில் கிராமப்புற வாக்காளர்கள் பெரியாரின் பேரன் பேசும் பேச்சை கேட்க அதிக அளவில் கூடுகிறார்கள். ஈவிகேஎஸ் வெற்றிபெற்றால் நிச்சயமாக மத்திய அமைச்சராகும் வாய்ப்பு இருப்பதால் தங்கள் தொகுதிக்கு நல்லது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.


மிக லேட்டாக பிரச்சாரத்தை தொடங்கிய ஈவிகேஎஸ் தொகுதி முழுவதும் முக்கியமான இடங்களைத் தேர்வு செய்து பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். அவருக்குத் துணையாக தொகுதி முழுவதும் ஈவிகேஎஸ்சின் மனைவி, மகன் திருமகன் ஈவெரா ஆகியோர் தனித்தனியாக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கேட்கிறார்கள்.


ஈவிகேஎஸ் பிரச்சாரத்துக்கு போகிற இடங்களில் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன் அலங்காநல்லூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது பெரும்பிடுகு முத்தரையர் சிலை, தீரன்சின்னமலைக் கவுண்டர் சிலை, காமராஜர் சிலை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை, அம்பேத்கர் சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 

evks elangovan


அவருடைய பிரச்சாரத்தை மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தி, வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், ஒன்றியச் செயலாளர் இரா.கென்னடி, தலைமை செயற்குழு உறுப்பினர் தனராஜ் உள்ளிட்டோர் ஒருங்கிணைக்கிறார்கள்.


பிரச்சாரத்தில் ஒபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை ஒரு பிடிபிடிக்கிறார். மோடியை தெறிக்கவிடுகிறார். இவருக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்துவிட்டார். அப்போது மிகப்பெரிய மக்கள் எழுச்சியை பார்க்க முடிந்தது. இவருக்கு ஆதரவாக முதல்கட்டமாக உசிலம்பட்டி பகுதியில் பிரச்சாரம் செய்த குஷ்பூ, இன்று அலங்காநல்லூர் பகுதியில் பிரச்சாரம் செய்கிறார்.


அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இரைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அவரைப் பின்னுக்குத் தள்ளி அதிமுக வாக்குகளை பிரித்து மேய்கிறார் தங்கதமிழ்செல்வன். இப்போதைய நிலையில் தங்கதமிழ்செல்வனுக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் இடையில்தான் போட்டி என்ற நிலை உருவாகி இருக்கிறது. ரவீந்திரநாத் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். அதிமுகவினரால் பிரிக்கமுடியாத சில சாதியினரின் வாக்குகளுடன் மத்தியா மாநில அரசுகளுக்கு எதிரான வாக்குகள் மொத்தமாக ஈவிகேஎஸ்சுக்கு கிடைக்கும் என்பதால், தேனி தொகுதி மத்திய அமைச்சரின் தொகுதியாக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.


 

 

 

Next Story

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; திமுக முன்னிலை!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
DMK lead in Vikravandi by-election!

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக்குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர். அதோடு 11 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேட்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அதிமுக, தேமுதிக ஆகிய இருகட்சிகளும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்திருந்தது. தவெக தலைவரும், நடிகருமான விஜய் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் சூழலில் ஜூலை 10 ஆம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. சரியாகக் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டத்தில் திமுக வேட்பாளர் 470 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.  பாமக வேட்பாளர் அன்புமணி 450 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 47 வாக்குகளும் பெற்றுள்ளார்.

Next Story

காவிரி விவகாரம்; கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
Edappadi Palaniswami condemns Karnataka Congress government!

தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தலைமையில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து, தமிழகத்திற்குத் தண்ணீர் தரவே முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, “காவிரி பாசனப் பகுதியில் 28 சதவீதம் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. கர்நாடகாவின் வலியுறுத்தலை மீறி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் பற்றாக்குறை இருப்பதால் தற்போதைக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட  முடியாது” என்று தெரிவித்தார். மேலும் இது குறித்து ஆலோசனை நடத்தக் கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சியினருக்கும் முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். 

தமிழகத்திற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் நாளொன்றுக்கு ஒரு டி.எம்.சி வீதம் ஜூலை 31 வரை தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை ஏற்க மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. காவிரி ஆறு பாயும் மாநிலங்களின் எண்ணங்களை கருத்திற்கொண்டு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை கர்நாடக அரசு ஏற்காமல் முரண்டு பிடிப்பது ஏற்கத்தக்கதல்ல.

விளம்பர போட்டோ ஷூட்டில் மட்டுமே கவனம் செலுத்தும் திமுக முதல்வர், காங்கிரசின் தயவிற்காக தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமையை விட்டுக்கொடுப்பது அவரின் தொடர் செயலற்றத்தன்மை மூலம் தெளிவாகத் தெரிகிறது. மேடையில் மட்டும் மாநில உரிமை பற்றி வாய் கிழிய பேசும் திமுக அரசின் முதல்வர் தன்னுடைய செயலற்ற தன்மையால், தமிழக மக்களின் வாழ்வோடு விளையாடி வருவது கடும் கண்டனத்திற்குரியது.

டெல்டா விவசாயிகள் நலனைக் கருத்திற்கொண்டு உடனடியாக காவிரி விவகாரத்தில் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழ்நாட்டிற்கு உரித்தான நீரைப் பெறுமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.