Skip to main content

"கைது செய்யப்பட்டாலும் மோடிக்கு கருப்புக் கொடி உறுதி..." - கருணாஸ் (EXCLUSIVE)

Published on 11/04/2018 | Edited on 11/04/2018


 

Karunas


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்தக் கூடாது என்று நேற்று பிற்பகல் அணி அணியாக பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அண்ணா சாலையில் திரண்டனர். இதனால், சென்னை அண்ணா சாலை ஸ்தம்பித்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சீமான், கருணாஸ், தமிமுன் அன்சாரி, பாரதி ராஜா, அமீர், தங்கர் பச்சான், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட 780 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்து கொண்டார் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், திருவாடானை எம்எல்ஏவுமான கருணாஸ்.
 

நேற்றைய போராட்டத்தில் ஈடுபட்டதாக 780 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்களே?
 

காவிரி ஒவ்வொரு தமிழனுக்கான உரிமை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க குரல் கொடுக்க வேண்டும் என்பது ஒவ்வொரு தமிழனின் கடைமை. தமிழக மக்களின் உரிமைக்காக போராடினோம். குரல் கொடுத்து வருகிறோம். மத்திய அரசை கண்டித்து போராடியதால் வழக்கு போடுகிறார்கள். வழக்கு போடுவார்கள் என்று எதிர்பார்த்ததுதான். இந்த வழக்கு போடுவதால் போராட்டம் பின்வாங்கப் போவதில்லை. மேலும் மேலும் வலுப்பெறும்.
 

இந்தப் போராட்டத்தின்போது சீருடையில் இருந்த காவலர் ஒருவரை தாக்கும் வீடியோ காட்சி வைரலாக பரவுகிறதே?
 

போராட்டத்தில் நமது கோரிக்கைகளை முன் வைத்து முழக்கங்களை எழுப்பலாம். ஆனால் பாதுகாப்புக்காக நின்றிருந்த, சீருடையில் இருந்த போலீஸ்காரரை தாக்கியது தவறு. அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? யாரை கண்டித்து போராட்டம் நடத்துகிறோமோ அவர்களுக்கும் போலீசார் பாதுகாப்பு அளிக்கின்றனர். போராட்டம் நடத்துபவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கின்றனர். யாரோ ஒருவர் செய்த தவறுக்கு போராட்டக் குழுவினருக்கே களங்கம் ஏற்படுத்துகிறது. இதை கண்டிக்கிறோம். இதுபோல் செய்யக்கூடாது.
 

பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார்...
 

கருப்பு கொடி காட்டுவோம்.

 

Karunas


 

கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ள தலைவர்கள் முன்கூட்டியே கைது செய்யப்படுவார்கள் என்ற தகவல் பரவுகிறதே?
 

ராணுவ தளவாடங்கள் கண்காட்சிக்கு பிரதமர் வருகிறார். வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்களும் வர வாய்ப்பு உள்ளது. தலைவர்களை முன்கூட்டியே கைது செய்ய வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். எங்களை கைது செய்தாலும் மக்கள் இந்தப்  போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். பெண்களும், குழந்தைகளும் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். மக்கள் தானாகவே வீடுகளில் கருப்புக் கொடியை கட்டியுள்ளனர்.
 

தமிழக மக்களை மத்திய அரசு இந்தியர்களாக பார்க்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாக எல்லாருக்கும் தெரிந்துவிட்டது. எங்களையும் தாண்டி இந்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, மீத்தேன் திட்டத்திற்கான எதிர்ப்பு, ஸ்டெர்லைட் ஆலைக்கான எதிர்ப்பு போன்றவற்றை மக்கள் கையில் எடுத்துள்ளனர். மத்திய அரசு தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனை என்பதை கருத்தில் கொண்டு நன்மை செய்ய வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்.
 

போராட்டத்தால் உணர்ச்சிக் கொந்தளிப்பை கொண்டு வர முடியும், ஆனால் காவிரியை கொண்டு வர முடியாது. பா.ஜ.,வும் மத்திய அரசும் தான் காவிரியை கொண்டு வர முடியும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளாரே?
 

பாஜக சார்பில் பதில் சொல்ல நியமிக்கப்பட்ட ஒரு நிர்வாகி தமிழிசை சவுந்தரராஜன். நாளை அவர்களை வரலாறு மன்னிக்காது. மக்களுக்கான குடிநீரிலும், விவசாயிகளுடைய வாழ்வாதாரத்திலும் அரசியல் செய்வதைவிட ஒரு கேவலம் எதுவும் கிடையாது.
 

சார்ந்த செய்திகள்