தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனின் பதவி பறிக்கப்பட்டதில் முதல்வர் எடப்பாடியை கலவரமாக பார்க்கத் துவங்கியுள்ளனர் ஜூனியர் அமைச்சர்கள். தமிழக அரசியல் களமும் இந்த நடவடிக்கையை அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பார்க்கிறது. சீனியர் அமைச்சர்களுக்கு நெருக்கமான அ.தி.மு.க.வினரிடம் விசாரித்தபோது, "தகவல் தொழில்நுட்பத் துறையின் அமைச்சரான மணிகண்டன், ஜூனியர் அமைச்சர் என்பதால் துறையின் உயரதி காரிகள் இவரை மதிப்பதே இல்லை. துறையின் டெண்டர்களில் குறைந்தபட்ச தொகை மட்டுமே மணிகண்டனுக்கு தரப்பட்டு, பெருந்தொகை அதிகாரிகளால் பிரித்துக் கொள்ளப்படும். தோதான அதிகாரிகள் வேண்டுமென எடப்பாடியிடம் மணிகண்டன் புலம்பியும் நடக்கவில்லை.
இந்த நிலையில்தான், தனது துறையின் கட்டுப்பாட்டி லுள்ள அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேசனின் சேர்மன் பதவியில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணனை நியமித்தார் எடப்பாடி. அதுவரையில் அந்த பதவி மணிகண்டனின் துறைச் செயலாளர் சந்தோஷ்பாபுவிடம் இருந்தது. தன்னிடம் கலந்தா லோசிக்காமல் தனது கட்டுப் பாட்டிலுள்ள ஒரு நிறுவனத்துக்கு மற்றொரு அமைச்சரை தலைவராக நியமிப்பதா? என எடப்பாடி மீது கோபப்பட்டார் மணிகண்டன். அதற்கேற்ப அவரது உதவியாளர்களும் தூண்டிவிட்டனர்.
சேர்மன் பதவியில் உடுமலை ராதாகிருஷ்ணன் நிய மிக்கப்பட்டபிறகு, எடப்பாடியை சந்தித்த மணிகண்டன் இது குறித்து முறையிட்டுள்ளார். "அரசு ஆபரேட்டர்கள் பலரும் அரசின் இலவச செட்டாப் பாக்ஸ்களை வாங்கி வைத்துக் கொண்டு தனியார் சேனல்களின் வர்த்தகத்துக்குத்தான் உதவியாக இருக்கிறார்கள். அரசுக்கு இதனால் நட்டம். அதனால் நிறுவனத்தை ஒழுங்குபடுத்த வேண்டியிருக்கிறது. ஏற்கனவே இந்த நிறுவனத்துக்கு சேர்மனாக இருந்த உடுமலைக்கு அனுபவம் இருப்பதால் அவரை நியமிக்க வேண்டியிருந்தது' என தெளிவு படுத்தியிருக்கிறார் எடப்பாடி. அப்போது, குரலை உயர்த்திப் பேசிய மணிகண்டன், சில தடித்த வார்த்தைகளை முணுமுணுத்துக் கொண்டே கோபத்துடன் வெளியேறினார். இதன் பிறகு, "கேபிள் விவகாரம் குறித்து என்னிடம் மட்டுமே விவாதிக்க வேண்டும், அமைச்சர் மணி கண்டனிடம் விவாதம் நடத்தக் கூடாது' என்றும், "கேபிள் கார்ப்பரேசனை பொறுத்தவரை நான்தான் அமைச்சர்' என தகவல் தொழில்நுட்ப அதிகாரி களை எச்சரித்திருக்கிறார் உடுமலை ராதாகிருஷ்ணன். தனது துறைக்கு அமைச்சர் மணிகண்டன் என்றபோதும், அவரிடம் எதையும் விவாதிக்க வில்லை. உடுமலை சொல் வதையே ஏற்கிறார் எடப்பாடி.
பெண் அமைச்சர்கள் உள்பட செயல்படாத ஜூனியர் அமைச்சர்கள் சிலரை நீக்க வேண்டும் என திட்டமிட்டு அவர்களுக்கு எதிரான பல விசயங்களை சேகரித்து வைத்திருக்கிறார் எடப்பாடி. அதில் மணிகண்டனுக்கு எதிரான பல விசயங்கள் அவரிடம் இருக்கிறது. இவை குறித்து, மணிகண்டனிடம் கடுமையாக கோபம் காட்டிய எடப்பாடி, "இப்படியே போனால் அமைச்சர் பதவியிலிருந்து தூக்கிடுவேன்' என எச்சரித்துள்ளார். எடப்பாடியின் அந்த கோபத்தை மணிகண்டன் எதிர்பார்க்கவில்லை. இதற்கெல்லாம் உடுமலைதான் காரணம் என நினைத்து ஆத்திரத்தை தேக்கி வைத்திருந்த மணிகண்டன், தேசிய கைத்தறி விழாவில் கலந்துகொண்டுவிட்டு வெளியே வந்தபோது பத்திரிகையாளர்கள் கேபிள் குறித்து கேள்விகள் கேட்க, எடப்பாடியையும் உடுமலையையும் குற்றம்சாட்டி வெளிப்படையாக பேட்டி தர, அது பரபரப்பாகிவிட்டது. அதே சமயம், எடப்பாடியிடம் வருத்தப்பட்டு கடுமையாக பேசியிருக்கிறார் உடுமலை. இதன் பின்னணியிலேயே முதல் விக்கெட்டாக அவரது பதவி பறிக்கப்பட்டது' என விரிவாக சுட்டிக்காட்டினார்கள்.
"மணிகண்டனிடம் பறிக்கப்பட்ட இலாகா, வருவாய்த் துறை அமைச்சர் உதய குமாரிடம் கூடுதலாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பதவி பறிப்பு விவகாரத்தை துணை முதல்வர் ஓ.பி. எஸ். உள்பட மூத்த அமைச்சர்கள் யாரிடமும் விவாதிக்காமலே தன்னிச்சையாக எடுத்துள்ளார் எடப்பாடி. இதனால் ஜூனியர் அமைச்சர்களிடம் பதட்டம் இருக்கிறது. அதேசமயம், ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளைக் கொண்டுள்ளவர்களும் 8 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் உள்ளவர்களும் அமைச்சராக நீடிக்கும் நிலையில், இளம் அமைச்சரின் பதவியைப் பறித்து, அதை இன்னொரு அமைச்ச ரிடம் கூடுதலாகக் கொடுத்தது எடப்பாடிக்கு எதிரானதாகவும் மாற வாய்ப்புள்ளது'' என்கிறார்கள்.