Skip to main content

இனிதான் நிஜ விஸ்வரூபம்! எம்.ஜி.ஆர். இமேஜில் களமிறங்கிய கமல்

ddd

 

2021 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை அதிகாரப் பூர்வமாக மதுரையில் ஆரம் பித்துள்ளார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன். வாரம் தோறும் சனி, ஞாயிறுகளில் "பிக்பாஸ்' ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் கமல், தைப் பொங்கலுக்குப் பிறகு, தனது "ராஜ்கமல் பிலிம்ஸ்' தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் நடிக்கப்போகும் "விக்ரம்'’ படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பிக்கப் போவதால், ம.நீ.ம.வை ஆரம்பித்த மதுரையிலிருந்தே பிரச்சாரத்தைத் தொடங்க முடிவுசெய்தார்.

 

கமலின் பிறந்தநாளான நவ. 07-ஆம் தேதி சென்னையில் நடந்த கட்சி மா.செ.க்களின் ஆலோசனைக் கூட்டத்தில் டிச. 13-16 வரை முதல்கட்டப் பிரச்சாரத்தை தொடங்குவதென முடிவு செய்தார் கமல். கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் ஏற்பாடு செய்திருந்த சிவப்புக் கலர் ஸ்பெஷல் பிரச்சார வேனும் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிறுத்தப்பட்டது. இந்த வேனில் இருந்துதான் பிரச்சாரத்தைத் துவக்கக் கமலும் நினைத்தார்.

 

கமல் பகுத்தறிவுவாதி என்றாலும் அவரது குடும்பத்தில் உள்ள பெரியவர்களுக்கு, கட்சியில் உள்ள ஆத்திகவாதிகளுக்கு சிவப்புக்கலர் செண்டிமெண்டாக ஒத்துவரவில்லை. "சிவப்பு என்பது கம்யூனிஸ்டுகளின் கலர், மேலும் இந்த வேனில் நின்றபடி பிரச்சாரம் செய்து கொண்டு போகும்போது, இந்த வெறிப்புத் தன்மை கலர் மக்களிடம் ஒருவித வெறுப்புத்தன்மையை ஏற்படுத்தும்' என கமலின் நட்பு வட்டமும் சொன்னதால், வேறு கலரில் வேனை தயார் பண்ணும்படி சொல்லிவிட்டாராம் கமல்.

 

"சீரமைப்போம் தமிழகத்தை'’என்ற முழக்கத்துடன் மக்கள் நீதி மய்யத்தின் பிரச்சாரத்தை ஆரம்பிக்க 13-ஆம் தேதி பகல் சென்னையிலிருந்து விமானத்தில் மதுரை வந்தார் கமல். கட்சி நிர்வாகிகளின் விமானநிலைய வரவேற்புக்குப் பின், பசுமலையில் உள்ள ஸ்டார் ஓட்டலுக்குப் புறப்பட்ட கமலுக்கு வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கமலின் மதுரை வருகைக்கு மூன்றுநாட்களுக்கு முன்பே எந்தெந்த இடங்களில் மைக் பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம், வேனில் நின்றபடி பிரச்சாரம் என்பதைத் தெளிவாகச் சொல்லி போலீசிடம் அனுமதி வாங்கும்படி அறிவுறுத்தியிருந்தார் அமைப்பு மற்றும் சார்பு அணிகளின் பொதுச்செயலாளர் திருச்சி முருகானந்தம். அதன்படியே அனுமதியும் வாங்கியிருந்தனர் மதுரை மாவட்ட நிர்வாகிகள்.

 

ஓட்டலுக்குச் சென்ற கமல், சிறிதுநேர ஓய்வுக்குப் பிறகு, பிரச்சாரத்திற்குக் கிளம்ப ரெடியானபோது, அவசர அவசரமாக வந்த மதுரை நிர்வாகிகள், கடைசி நேரத்தில் பெர்மிஷனை போலீஸ் ரத்து பண்ணிய தகவலைச் சொன்னபோதும் பதட்டமடையாத கமல், "பரவால்ல, வேன்ல நின்னபடியே மக்களைச் சந்திப்போம்'' எனச் சொன்னதும், பிரச்சாரத் திட்டத்தில் லேசான மாற்றம் செய்யப்பட்டது.

 

பெரியார் பஸ்நிலையம், வடக்குமாசி வீதி, மேலமாசி வீதி ஆகிய இடங்களில் மைக் மூலம் பேசாமல் வெள்ளைக் கலர் வேனில் நின்று மக்களை நோக்கிக் கைகூப்பிய படியே சென்றார் கமல். காமராஜர் சாலையில் உள்ள தொழில்வர்த்தக சங்கத்தில் மாணவர்கள்-பெண்கள் ஆகியோருடன் கலந்துரையாடியபோது, "எம்.ஜி.ஆரின் தொடர்ச்சி நான். மதுரையைத் தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் விருப்பம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை நிறைவேற்றுவோம்'' என்றார்.

 

இதைக் கேட்ட வர்த்தக சங்க நிர்வாகிகளும் பொதுமக்களும், “எம்.ஜி.ஆர். திருச்சியை தானே இரண்டாவது தலைநகரமாக்கனும்னு முடிவு செஞ்சிருந்தார். இவர் என்னடான்னா மதுரைங்கிறாரே'’ என முணுமுணுப்பு கிளம்பியது. கலந்துரையாடலை முடித்துக் கொண்ட கமல், கருப்பாயூரணியில் உள்ள திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகளிடையே "மக்கள் பிரச்சனைகளைக் கையிலெடுங்கள்'' என ஆலோசனை கூறிவிட்டு, இரவு பசுமலை ஓட்டலுக்குத் திரும்பினார் .

 

மறுநாள் 14-ஆம் தேதி அழகர்கோவில் ரோட்டில் உள்ள ஓட்டலில் தொழிலதிபர்கள், வக்கீல்களுடன் கலந்துரையாடிய பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். இந்த சந்திப்புக்குச் சிலமணி நேரங்கள் முன்பாக, “தலைவரிடம் என்னென்ன கேள்விகளைக் கேட்பீர்கள், யாரெல்லாம் கேட்பார்கள், அவர்களின் பெயர்களைக் கொடுங்கள்'’என சில நிர்வாகிகள் கேட்டதற்கு... மீடியாக்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பி, சலசலப்பு ஆரம்பமானபோது வந்து சேர்ந்தார் கமல்.

 

"ஆளும்கட்சிக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் கிளம்புவதாலும் எங்களுக்கு ஆதரவு பெருகுவதாலும் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கிறார்கள். தடைகள் எங்களுக்குப் புதிதல்ல'' என ஆரம்பத்திலேயே ஆவேசமானார் கமல். "ரஜினியின் ஆன்மிக அரசியலும் மக்கள் நீதி மய்யமும் கூட்டணி சேருமா?' என்ற கேள்விக்கு, “அணி கள் பிளவுபடும், அணிகள் சேரும்'' எனத் தனது பாணியில் பதில் சொன்னார் கமல். "ஒண்ணும் புரியலையே சார்..."என மீடியாக்கள் மீண்டும் கொக்கி போட, “போகப்போக புரியும்'' என்றார் கமல்.

 

"நீங்க பி.ஜே.பி.யின் பி டீமா? கமலை டைரக்ட் பண்ணுவது கார்ப்பரேட்டுகளா?' என்ற கேள்விகள் வந்து விழுந்ததும், ""நான் காந்தியாரின் பி டீம். தனியார் டிவி சேனலில் பிக்பாஸுக்கு மட்டும்தான் என்னை டைரக்ட் பண்ண முடியும். அதே நாடு, நகரம், பெருநகரமாக நாடாக மாற வேண்டு மானால் கார்ப்பரேட்டுகள் கண்டிப்பாக வேண்டும். சிறுகுறு தொழிலும் கார்ப்பரேட்டுகளும் சம அளவில் இருக்க வேண்டும்''’’ என சற்றே கோபத்துடன் கூறிவிட்டு ரூமிற்குள் சென்றுவிட்டார் கமல்.

 

கொஞ்சம் ரெஃப்ரெஷ்ஷான பின் திண்டுக் கல், தேனி மாவட்டங்களின் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் கமல். ம.நீ.ம. கொள்கை பற்றி நிருபர்கள் கேட்டபோது, "கொள்கையை வெளியே சொன்னால், அதை மற்றவர்கள் காப்பி அடித்து விடுவார்கள்'' என்று சொல்லித் திடுக்கிட வைத்தார்.

 

தேனி மாவட்ட எல்லையான ஆண்டிப்பட்டியில் சிறப்பான வரவேற்பை ஏற்றுக் கொண்டு புறப்பட்ட போதுதான், மக்கள் நீதி மய்யத்திற்கு வரும் தேர்தலில் ‘டார்ச் லைட்’ சின்னம் இல்லையென்ற இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு கமல் காதுக்கு வந்தது. அத்துடன் விட்டாலும் பரவாயில்லை, சென்னை ஆவடியில் எம்.ஜி.ஆர். பெயரில் கட்சி நடத்தும் ஒருவருக்கு டார்ச் லைட் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியதுதான் கமலை மேலும் டென்ஷனாக்கியது. “டார்ச் லைட் ஒதுக்காவிட்டால், கலங்கரை விளக்கம் சின்னத்தில் போட்டியிடுவோம்''என்றார் சற்று குரலை அழுத்தி.

 

ஆளுந்தரப்பும் தேர்தல் ஆணையமும் ஆட்டத்தை ஆரம்பித்ததை உணர்ந்த கமல், பரப்புரைப் பயணத்தில் எம்.ஜி.ஆர். பெயரைப் பயன்படுத்த ஆரம்பித்தார். மீடியாக்களில் இது விவாதமாக மாறிய நிலையில், அ.தி.மு.க. தரப்பு டென்ஷனானது. "கமலுக்கு எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்லத் தகுதியில்லை' என அமைச்சர்கள் வரை அ.தி.மு.கவில் பொளந்து கட்ட, கமலும் சளைக்கவில்லை.

 

"எம்.ஜி.ஆர்., தி.மு.க.வின் திலகமும் இல்லை. அ.தி.மு.க.வின் திலகமும் இல்லை. அவர் மக்கள் திலகம். நான் எம்.ஜி.ஆர். மடியில் வளர்ந்தவன்'' என்று பரப்புரை செய்ததுடன், "தன்னை விமர்சிக்கும் ஆளுந்தரப்பினருக்கு, எம்.ஜி.ஆரை தெரியாது என்றும், தனக்கும் எம்.ஜி.ஆருக்குமான பாசம் புரியாது' என்றும் கமல் பேசினார்.

 

தூத்துக்குடி-நெல்லை மாவட்டங்களிலும் கமலின் பிரச்சாரம் தொடர்ந்தது. ரஜினியின் புதிய கட்சி பற்றிய அறிவிப்பு எதிர்பார்க்கப்படும் நிலையில், “மக்களுக்காக ரஜினியுடன் கூட்டணி வைப்பதில் எந்த ஈகோவும் இல்லை'' என்றும் கமல் தனது பிரச்சாரத்தில் சொல்லத் தவறவில்லை.

 

ஊழலுக்கு எதிரான அமைப்பாகத் தொடங்கி, ஆட்சியைப் பிடித்தது அ.தி.முக. இன்று அதன்மீதே ஊழல் குற்றச்சாட்டுகள். நீதிமன்றத் தீர்ப்புகள். தண்டனைகள் எனத் தொடர்கின்றன. இந்நிலையில், இந்திய அளவில் ஊழல் எதிர்ப்பு இயக்கமாக வளர்ந்து, டெல்லியில் ஆட்சியைப் பிடித்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் "ஆம் ஆத்மி' பாணியில், கமலும் வெளிப்படையான நிர்வாகம், வெளிப்படையான டெண்டர், மக்களின் ஆலோசனை கேட்டு நிர்வாகம் என அறிவித்து வருகிறார்.

 

எம்.ஜி.ஆர் பெயரை முன்னிறுத்தி கமல் தனது பிரச்சாரத்தைக் கையில் எடுத்திருப்பதும், கமலின் சினிமா புகழும் ஆளுங்கட்சியினரை உற்றுப் பார்க்க வைத்துள்ளது.

 

-பரமசிவன், ஈ.பா.பரமேஷ்வரன், அண்ணல்
படங்கள்: ராம்குமார்