Skip to main content

தமிழக எம்.பிக்களின் மரியாதையை இவர்கள் கெடுக்கிறார்கள் - இள. புகழேந்தி

Published on 31/07/2023 | Edited on 31/07/2023

 

  Ela Pugazhenthi Interview

 

மணிப்பூர் விவகாரம் மற்றும் தற்கால அரசியல் குறித்துப் பல்வேறு கருத்துக்களை நம்மோடு திமுக தேர்தல் பணிக்குழுச் செயலாளர் கடலூர் இள.புகழேந்தி பகிர்ந்துகொள்கிறார்

 

பாஜகவினர் முழுமையாக ஊழலில் திளைத்தவர்கள். அதற்கான உதாரணமாக கமிஷன் வாங்கிக்கொண்டு கர்நாடகாவில் அவர்கள் கட்டிய பாலங்கள் இருக்கின்றன. மற்ற மாநிலங்களில் இவர்கள் அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் பணிகள் இன்னும் தொடங்கவே இல்லை. பாசிச பாஜக அரசின் கொடூரமான சுயரூபங்கள் இப்போது வெளிப்படுகின்றன. வட மாநிலங்களில் பாலமே கட்டாமல் கட்டியதாகக் கூறி இவர்கள் கமிஷன் அடிக்கிறார்கள். 

 

அண்ணாமலை தன்னைப் பெரிய மேதாவி போல் நினைத்துக்கொண்டு உளறுகிறார். 'இந்தியா' என்று எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குப் பெயர் வைத்தது பாஜகவுக்கு உறுத்துகிறது. அதனால்தான் இதை கிழக்கிந்தியக் கம்பெனியோடு மோடி ஒப்பிடுகிறார். தங்களுடைய திட்டங்களுக்கு இந்தியா என்கிற பெயரை வைத்து இதை ஆரம்பித்து வைத்தது பாஜக தான். இந்தியா கூட்டணியைப் பார்த்து மோடி பயத்தில் அங்கு உளறிக் கொண்டிருக்கிறார், அதையே அண்ணாமலை இங்கு செய்கிறார். 

 

கிழக்கிந்தியக் கம்பெனியோடு தொடர்பு வைத்திருந்தவர்கள் இவர்கள்தான். இரட்டை எஞ்சின் ஆட்சியில்தான் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது என்று அனைத்து ஊர்களுக்கும் சென்று பேசி வந்தார் மோடி. ஆனால் உங்கள் இரட்டை எஞ்சின் ஆட்சியின் லட்சணத்தை மணிப்பூரில் நாங்கள் பார்த்துவிட்டோம். மோடிக்கு மணிப்பூர் மக்களின் பிரச்சனையை விட அமெரிக்கா செல்வதுதான் முக்கியமாக இருக்கிறது என்று பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரே பேட்டி கொடுத்துள்ளார். மோடியின் தாமதத்தால்தான் பல்வேறு கொடூரங்கள் மணிப்பூரில் அரங்கேறின.

 

மணிப்பூர் பிரச்சனை குறித்து மோடி நாடாளுமன்றத்தில் பேச மறுக்கிறார். அதனால்தான் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன் மீதான விவாதத்தின் போது மோடி நிச்சயம் பாராளுமன்றத்திற்கு வந்தாக வேண்டும். ஏற்கனவே அண்ணாமலை DMK Files என்கிற முதல் பாகத்தை வெளியிட்டார். இப்போது அதன் இரண்டாம் பாகத்தை வெளியிட்டுள்ளார். முதல் பாகத்தில் அவர் என்ன கிழித்தார்? ஊழல் பட்டியல் என்று சொல்லி பொதுவெளியில் இருக்கும் சொத்துப் பட்டியலைத்தான் அவர் வெளியிடுகிறார்.

 

தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எப்போதும் டெல்லியில் ஒரு மரியாதை உண்டு. அதையெல்லாம் கெடுக்கும் வகையில் அதிமுகவின் சி.வி.சண்முகம், மணிப்பூர் பற்றி எரியும் நிலையில் தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு குறித்துப் புகார் கொடுக்கிறார். எதையாவது பேச வேண்டும் என்று இவர்கள் பேசுகிறார்கள். முதலமைச்சர் சுற்றிச் சுழன்று பணியாற்றி வருகிறார். எந்தவிதமான குழப்பமும் இங்கு இல்லை. பாஜக மட்டுமல்லாமல் அதிமுகவினரும் இங்கு மதக்கலவரம் ஏற்பட வேண்டும் என்று நினைக்கின்றனர். இப்போது அதிமுக என்பது அமித்ஷா திமுகவாகத் தான் இருக்கிறது.

 


 

 

Next Story

‘சிபிஐ விசாரணை வேண்டும்’ - எடப்பாடி பழனிசாமி!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
'CBI should investigate' - Edappadi Palaniswami

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டத்தின் மூன்றாம் நாள் அமர்வு இன்று (22.06.2024) காலை 10 மணிக்கு தொடங்கியது. அதன்படி மூன்றாம் நாளான இன்று (22.06.2024) பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது. அதே சமயம் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இரண்டாவது நாளாக இன்றும் கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வருகை தந்தனர். அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் 2 வது நாளாக இன்றும் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது கேள்வி நேரத்தில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்கக் கோரி கேள்வி நேரத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில் சபாநாயகர் அனுமதி அளிக்காததால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது ‘நீதி வேண்டும்’ என முழக்கமிட்டும், ‘தமிழ்நாட்டு முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்’ என முழக்கமிட்டும் அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

'CBI should investigate' - Edappadi Palaniswami

அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து பேசுகையில், “மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். மக்களின் பிரச்சனைகள் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட வேண்டும் எனப் பல முறை குரல் கொடுத்தோம். கள்ளச் சாராயம் மக்களின் உயிருடன் தொடர்புடைய பிரச்சனை ஆகும். இதனால் தினந்தோறும் மக்கள் உயிரிழக்கிறார்கள்.

கள்ளக்குறிச்சி மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இன்று சட்டப்பேரவையில் பேச வேண்டும் என அனுமதி கேட்டும், கொடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் இதுவரை எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள், சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலை குறித்து கேள்வி எழுப்பினோம். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மெத்தனப் போக்கில் செயல்படுகிறது. இந்த விவகாரத்தில் தினந்தோறும் மக்களின் உயிர் பறிபோகிறது, இதில் அரசின் செயல்பாடு என்ன?. 

'CBI should investigate' - Edappadi Palaniswami

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் 183 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. மேலும் இந்த விவகாரத்தில் 118 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வருகின்றன. கள்ளச்சாராய விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரே தவறான தகவல் தருவதால் ஒரு நபர்  ஆணைய விசாரணை சரியாக இருக்காது. மாநில அரசு விசாரித்தால் மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதால் சிபிஐ விசாரணை வேண்டும் என கோருகிறோம். நீதியை நிலை நாட்ட, உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய சிபிஐ விசாரணை அவசியமாகிறது. ஒரு நபர் ஆணையத்தால் உண்மை வெளிவராது.

சாராய விஷ முறிவுக்கு செலுத்தும் மருந்தின் பெயரை மாற்றி அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். தடை செய்யப்பட்டுள்ள அந்த மருந்தை ஆபத்தான காலங்களில் பயன்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் காலதாமதமாக சிகிச்சை எடுத்துக் கொண்டதால் தான் உயிரிழப்பு ஏற்பட காரணம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ஆனால் முன்னாள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் வெவ்வேறு காரணங்களுக்காக உயிரிழந்துவிட்டதாக அறிவித்தார். இந்த விவகாரத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டமிட்டு பேசி உள்ளார். அரசு மெத்தன போக்கில் செயல்பட்டு வருகிறது; துரிதமாக செயல்பட்டு இருந்தால் மக்களை காப்பாற்றி இருக்கலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு (படங்கள்)

Published on 22/06/2024 | Edited on 22/06/2024

 

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டத் தொடரின் மூன்றாவது நாள் இன்று (22.06.2024) தொடங்கியது. சட்டப்பேரவையில், கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் 2 வது நாளாக இன்றும் அ.தி.மு.கவினர்  அமளியில் ஈடுபட்டனர். மேலும், கேள்வி நேரத்தில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அ.தி.மு.க உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர். அதற்கு அனுமதி கிடைக்காததால், தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.கவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.