Skip to main content

CBI வலையில் 12 அமைச்சர்கள்! - பிரதமரிடம் பேச எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்!

 

dddd

 

‘அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.விற்கும் இடையேயான சண்டை தற்காலிகமாக முடிவுக்கு வந்ததைப்போல தோற்றமளிக்கிறது. ஆனால் அது நீறுபூத்த நெருப்பாகத்தான் நீடிக்கிறது' என்கிறார்கள் அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள்.

 

தமிழகத்தின் பா.ஜ.க. பொறுப்பாளரான ரவி, "தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மிகப்பெரிய கட்சி அ.தி.மு.க.தான். அதன் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என பேட்டியளித்தபோதே அ.தி.மு.க. - பா.ஜ.க. மோதல் முடிவுக்கு வந்துவிட்டது என அனைவரும் எதிர்பார்த்தார்கள். அதே நேரத்தில், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் சமூக வலைத்தளங்களில் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக ‘வெற்றி பெறும் தமிழகம்' என எடப்பாடி பழனிசாமிக்குப் போட்டியாக விளம்பரங்களை வெளியிட்டார். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக பா.ஜ.க. ஏற்றுக்கொண்டாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுபோல ஓ.பி.எஸ் தரப்பின் விளம்பரங்கள் அமைந்திருந்தன.

 

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அ.தி.மு.க. மாணவரணி நகரச் செயலாளரான ‘பார்' அருளானந்தத்துக்கு நெருக்கமான நகரச் செயலாளர் கிருஷ்ணக்குமார், சி.பி.ஐ.யால் தேடப்படும் லிஸ்ட்டில் உள்ள ஜேம்ஸ்ராஜா மற்றும் பொள்ளாச்சி விவகாரத்திற்கு முழுமுதற் காரணம் என விமர்சிக்கப்படும் பொள்ளாச்சி வி.ஐ.பி. ஆகியோர் பங்குபெற்ற ஒரு ஆர்ப்பாட்டத்தை அமைச்சர் வேலுமணி நடத்தியிருக்கிறார். தி.மு.க.வின் கனிமொழியும் தோழமைக் கட்சியினரும் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்குப் போட்டியாக இந்த ஆர்ப்பாட்டம் எனச் சொல்லப்பட்டாலும், மத்திய அரசின் ஏஜென்சியான சி.பி.ஐ.க்கு சவால்விடும் விதத்திலேயே அ.தி.மு.க.வின் நடவடிக்கை அமைந்தது.

 

அ.தி.மு.க.வை மிரட்டி அதிக சீட், கூட்டணி ஆட்சியில் பங்கு ஆகியவற்றைப் பெற பொள்ளாச்சி விஷயத்தை பா.ஜ.க. கையிலெடுத்தது. அதனைத் தொடர்ந்து குட்கா ஊழலில் சி.பி.ஐ.யிடம் சிக்கிய விஜயபாஸ்கர், அறப்போர் இயக்கத்தின் தொடர் ஊழல் புகார்களால் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கும் அமைச்சர் வேலுமணி மற்றும் மின்சாரத்துறையில் ஊழல் செய்ததாக மத்திய அரசின் நேரடி விசாரணையில் சிக்கியுள்ள தங்கமணி, இவர்களைத் தவிர அமைச்சர்கள் வீரமணி, காமராஜ், செல்லூர் ராஜு, ஆர்.வி.உதயக்குமார், கடம்பூர் ராஜு, ஜெயக்குமார் உள்ளிட்ட 12 அமைச்சர்கள் மீதான மத்திய அரசின் நடவடிக்கைகள் அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகியவற்றிற்கு இடையே ஏற்பட்டுள்ள தற்காலிக உடன்பாட்டால் தள்ளிப் போகுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

 

இதுபற்றி மத்திய அரசு வட்டாரங்களிடம் கேட்டபோது, "முதல்வர் வேட்பாளர் யார் என்பதைப் பற்றி தமிழக பா.ஜ.க. தலைவர்கள் வித்தியாசமாக கருத்து தெரிவித்தார்கள். அவர்களைக் கூப்பிட்டு பேசிய பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா, ‘முதல்வர் விவகாரத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் தேவையில்லாமல் கருத்து எதுவும் தெரிவிக்க வேண்டாம்' என கூறியுள்ளார். அதனால்தான் பா.ஜ.க.வின் தேசியச் செயலாளர் ரவி, இந்த முறை மாற்றிப் பேசியுள்ளார். மற்றப்படி அ.தி.மு.க. விஷயத்தில் எங்களது அணுகுமுறை மாறவில்லை. பொள்ளாச்சி விவகாரத்தில் அ.தி.மு.க.வினரை சி.பி.ஐ. கைது செய்தது, கிட்டதட்ட பாதி கிணறு தாண்டிய கதை.

 

அந்த விவகாரத்தில் தொடர்புடைய பொள்ளாச்சி வி.ஐ.பி. உள்பட மற்றவர்களைக் கைது செய்யாமல் விட்டால், மக்கள் மத்தியில் மத்திய அரசுக்கு கெட்டபெயர் ஏற்படும். அதேபோல் விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா ஊழல் வழக்கில், மத்திய அரசு நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளும். தமிழகத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான அமைச்சர்கள் மீது மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கையும் நிற்காது.

 

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், அண்ணா அறிவாலயத்தில் சி.பி.ஐ. ரெய்டு நடத்திக் கொண்டிருக்கும்போதே இன்னொரு அறையில் தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளை காங்கிரஸ் நடத்தியது. அதுபோலத்தான் பா.ஜ.க. இந்தமுறை தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்துக்கொண்டே அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையையும் நடத்தும். ஜனவரி மாதத்தின் இறுதியில் தமிழக அமைச்சர்கள் மீதான நடவடிக்கைகள் வேகம் பெறும்'' என்கிறது மத்திய அரசு வட்டாரம்.

 

இதற்கிடையே ஜனவரி 27-ஆம் தேதி காலை 9:30 மணிக்கு சசிகலா சிறையில் இருந்து வெளியே வருகிறார். நேராக சென்னை வரும் அவர், அ.தி.மு.க. தலைமைக் கழகத்திற்கு விசிட் அடிக்க உள்ளார் என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது. அவரை வரவேற்க அ.ம.மு.க.வினர் மட்டுமின்றி அ.தி.மு.க.வினரும் தயாராகி வருகிறார்கள்.

 

ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இடையே நிலவும் பனிப்போர் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. 12-ஆம் தேதி ஜெயலலிதாவின் நினைவிடத்தைப் பார்த்து, அங்கு நடந்துகொண்டிருக்கும் கட்டுமான வேலைகளை இறுதி செய்ய ஓ.பன்னீர்செல்வத்தின் துணையில்லாமல் எடப்பாடி பழனிசாமி, தனியாகச் சென்றுள்ளார். 

 

இந்த நிலையில்... சசிகலா விஜயம், ஓ.பி.எஸ். சண்டை, அ.தி.மு.க.-பா.ஜ.க. தொகுதி பங்கீடு மற்றும் ஜெ. நினைவகம் திறப்பு ஆகியவற்றைப் பற்றி பிரதமரிடம் பேச இன்று (18 ஜன.) டெல்லிக்குச் செல்லும் எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரங்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பணி நீட்டிப்பு பற்றியும் பேசி, ஒட்டுமொத்தமாக ஒரு சமாதான உடன்படிக்கையை மேற்கொள்வார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.