ஏப்ரல் 6-ஆம் தேதி பரபரப்பாக நடந்த வாக்குப்பதிவில், வாக்காளர்கள் மத்தியில் புதிய மாற்றத்தையும் எழுச்சியையும் தெளிவாகவே பார்க்க முடிந்தது. கிட்டத்தட்ட 73% வாக்குப்பதிவு நடந்தது. மதியம் ஒரு மணிக்குள் 40 சதவீத பேர் ஆர்வமாக வந்து வாக்களித்திருக்கிறார்கள்.
வாக்குப்பதிவு நேரத்தில் தமிழக அரசின் செய்தித்துறையிடமே, அதிரடி மாற்றத்தைப் பார்க்க முடிந்தது. செய்தி மக்கள் தொடர்புத் துறை, பல ஆண்டுகளாகவே அ.தி.மு.க.வின் பிரச்சார சாதனமாகவே செயல்பட்டு வந்தது. அது வெளியிடும் செய்திகளிலும் படங்களிலும் அரசின் திட்டங்களோடு, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மட்டும்தான் இடம்பெறுவார்கள். இந்த 10 ஆண்டுகளில் உலகமகா அதிசயமாக முதல்முறையாக, செய்தி மக்கள் தொடர்புத் துறை, எதிர்க்கட்சித் தலைவரான தி.மு.க. ஸ்டாலின் வாக்களித்ததை, செய்தி அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இதையே, வாக்குப்பதிவின் போக்கைக் காட்டுவதாக, அரசியல் நோக்கர்களும் அதிகாரிகளும் பார்க்கிறார்கள்.
அதே சமயம், எடப்பாடி தரப்பும் கடைசி வரை நம்பிக்கையூட்டும் கணக்குகளைப் போட்டு வைத்துள்ளது. நக்கீரன் உள்ளிட்ட ஊடகங்கள் எடுத்த கருத்துக் கணிப்புகள், எடப்பாடி தரப்புக்கு தொடர்ந்து பலத்த அதிர்ச்சியைத் தந்ததால், உளவுத்துறை மற்றும் முக்கியப் புள்ளிகள் மூலமாக, கொஞ்சம் பூஸ்ட் தரும்படியான சர்வே ஒன்றைக் கொடுங்கள் என்று எடப்பாடி தரப்பு கேட்டு வாங்கியுள்ளது.
அவர்கள் குழம்பிக் குழம்பி பல்வேறு கணக்குகளைப் போட்டுப் பார்த்துட்டு, அ.தி.மு.க. 85, பா.ம.க. 9, பா.ஜ.க. 8, த.மா.கா. 2 -என்றெல்லாம் கணக்குப் போட்டு, கடைசிக் கட்டத்திலும் பண விநியோகம் நடந்தால், அ.தி.மு.க. கூட்டணி 100-ல் இருந்து 110 தொகுதிகள் வரை பிடித்து, ஆட்சியில் அமரலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
இதைக் கையில் வைத்துக்கொண்டுதான், பல தொகுதிகளிலும் வைட்டமின் 'ப' மூலம் தெம்பு ஏற்றியது எடப்பாடி தரப்பு. எல்லோருமே பெரிய அதிகாரிகளாக இருந்ததால் அவர்களின் வாகனங்கள் சோதனைக்கு ஆளாகாமல் சென்றுள்ளது. இப்படி தமிழகம் முழுக்க, அதிகாரிகள் மூலமாகவே டிஸ்ட்ரிபியூஷன் நடந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. காவல்துறையின் உதவியோடு பணம் அனுப்பப்பட்டுவிட்டதால், அது தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக மாயங்கள் செய்யும்னு எடப்பாடி நம்பறார்.