Skip to main content

எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்... சசிகலா தரிசனம்! - தேர்தல் சடுகுடு!

Published on 29/03/2021 | Edited on 29/03/2021

 

ddd

 

அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார் என்பதை உளவுத்துறை மூலம் கண்காணித்தே வருகிறது எடப்பாடி பழனிசாமி அரசு.

 

மார்ச் 17ஆம் தேதி மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு தஞ்சாவூருக்கு வந்தார் சசிகலா. தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள நடராஜனின் வீட்டில் தங்கியவர், 18ஆம் தேதி காலை தனது கணவர் நடராஜனின் சொந்த ஊரான விளாருக்குச் சென்றார். அங்கு நடராஜனின் சகோதரர் பழனிவேலுவின் பேரக்குழந்தைகளுக்கு, குலதெய்வ கோயிலான வீரனார் கோயிலில் காதுகுத்து விழாவை தலைமை ஏற்று நடத்திவைத்தார்.

 

சிறையிருப்புக்குப் பிறகு அவர் கலந்துகொண்ட உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சி என்பதால் தன்னுடைய உறவினர்களோடு சிறிதுநேரம் மனம்விட்டு பேசியிருந்திருக்கிறார். வழக்கத்தைவிட அவருடைய பேச்சு கலகலப்பாக இருந்துள்ளது. ஆனால், உடல் சோர்வும் மனச்சோர்வும் இருந்ததால், ஜெ. போலவே ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்று புத்துணர்வு பெற நினைத்திருக்கிறார் சசி. அதேநாளில், டெல்டா மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்வது தெரியவந்ததும், சசியின் தரிசன ப்ளான், ரூட் மாறியது.

ddd

 

திருவிடைமருதூர் மகாலிங்கம்சுவாமி கோயிலுக்குச் செல்வதாக உறவினர்களிடம் கூறிவிட்டு புறப்பட்டார். கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் 27 நட்சத்திர லிங்கங்களுக்கு சன்னதி கொண்ட தலமாகவும், பிரம்மஹத்தி தோஷம் போக்கும் தலமாகவும் விளங்கிவருகிறது. அந்தக் கோயிலுக்கு சசிகலா பகல் 11 மணிக்கு வந்தார். அவருக்கு கோயில் நிர்வாகத்தினர் வரவேற்பளித்தனர். விநாயகரை வழிபட்டுவிட்டு பின்னர் கோயிலுக்குள் வந்த சசிகலா 27 நட்சத்திர லிங்க சன்னதிக்குள் சென்று ரேவதி நட்சத்திர லிங்கத்துக்கு சிறப்பு ஹோமத்துடன் பூஜை செய்து வழிபட்டார்.

 

தொடர்ந்து மகாலிங்கசுவாமி, சுந்தர குஜாம்பாள், மூகாம்பிகை அம்பாள் சன்னதிக்கு சென்று வழிபட்டார். சுமார் 1 மணி நேரம் அமைதியாக சாமி தரிசனம் செய்துவிட்டு கோயிலுக்கு வெளியே வந்தவர், அப்போது அங்கு நின்றிருந்த பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்களையும் குடைகளையும் தானமாக வழங்கினார். அவரிடம் செய்தியாளர்கள் பேட்டியெடுக்க முயன்றபோது, "நான் அரசியலுக்காக வரவில்லை, கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய மட்டுமே வந்தேன்'' என கூறிவிட்டு காரில் ஏறிச் சென்றுவிட்டார்.

 

டெல்டா மாவட்டத்தில் சசிகலா மேற்கொண்ட சாமி தரிசனம் பற்றி எடப்பாடி பழனிசாமிக்கும் உளவுத்துறை மூலமாக ரிப்போர்ட் போயுள்ளது. அதன்பிறகு, சசிகலா ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்றார். அங்கு 15 நிமிடம் மனம் உருகி வேண்டியுள்ளார். சசிகலாவோடு டாக்டர் வெங்கடேசன் மற்றும் அவருடைய நண்பர் ரமணி, மனைவி மற்றும் அகஸ்தியர் கோவில் ஆஸ்தான அய்யர் தேவாதி உள்ளிட்டோர் உடன் வந்திருந்தனர்.

 

ஸ்ரீரங்கம் கோவில் தரிசனத்திற்குப் பிறகு, சசிகலா அங்கிருந்து புறப்படத் தயாரான நிலையில், அ.ம.மு.க. ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவரைத் தொடர்ந்து ஒரத்தநாடு அ.ம.மு.க. வேட்பாளர் சேகர் உள்ளிட்ட ஒரு சில வேட்பாளர்கள் சசிகலாவை நேரில் சந்தித்துள்ளனர். திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் பலர் சசிகலாவை சந்திக்க ஆர்வம் காட்டியபோதும், 'இப்போதைக்கு வெளிப்படையாக வேண்டாம்' என சசிகலா தரப்பிலிருந்து அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

ஸ்ரீரங்கத்தில் இருந்து சென்னைக்குப் புறப்பட்ட சசிகலாவுக்கு திருச்சி சமயபுரம் டோல் பிளாசா பகுதியில் அவருடைய ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்ததுடன், சமயபுரம் மாரியம்மன் உருவப்படத்தை பரிசாகக் கொடுத்தனர். காரை விட்டு இறங்காமல் அவர்களுடைய மரியாதையைப் பெற்றுக்கொண்டு சென்னை நோக்கிச் சென்றார் சசிகலா.

 

இதுகுறித்து டெல்டா மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகளிடம் விசாரித்தோம். "இது தேர்தல் நேர சடுகுடு ஆட்டம். சசிகலா அரசியலில் இருந்து முழுமையாக விலகிடவில்லை, நிச்சயமாக வருவார், வரும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான துரோக கூட்டம் வீழ்ந்ததும், தாயில்லா பிள்ளைகளாக அ.தி.மு.கவினர் சின்னம்மாவைத் தேடி வருவார்கள், அதற்கான நேரத்திற்காக சசிகலா காத்திருக்கிறார்.

 

எடப்பாடி பழனிசாமி தஞ்சை, திருவாரூர், நாகையில் பிரச்சாரம் செய்ததையறிந்தே, தனது கோவில் தரிசன ட்ரிப்பை அதற்கேற்றபடி சசிகலா அமைத்துக்கொண்டார். டெல்டாவில் சசிகலா வலம் வந்தது ஒருவகை அரசியல் நடவடிக்கைதான். நடராஜனின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளையொட்டி சிலர் சசிகலாவை சந்தித்துள்ளனர். அதில் அ.ம.மு.க.வினரும் பிற கட்சி அரசியல் பிரபலங்களும் உண்டு. எல்லாவற்றையும் உள்ளடக்கிய அரசியல் மூவ்களை மேற்கொண்டு வருகிறார் சசிகலா'' என்கின்றனர்.

 

 

 

Next Story

'அப்போதே சீப் ஏஜென்ட் ஓபிஎஸ்தான்' - எடப்பாடி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
'That's when the cheap agent became an ops' - Interesting information shared by Edappadi

'ஓபிஎஸ் எந்தக் காலத்திலும் அதிமுகவிற்கு விசுவாசமாக இருந்ததில்லை' என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''78.67 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்கள். ஆனால் அதில் 24.50 கோடி தொகை மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ஒதுக்கி இருக்கிறார்கள். இது இரண்டையும் சேர்த்துதான் 78.67 கோடி ரூபாய். அதை வைத்து பார்த்தால் குறுவை தொகுப்புக்கு 54.17 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கிடைக்கும். இது போதாது. ஏனென்றால் குறுவை சாகுபடிக்கும் முழுமையாக தண்ணீர் கிடைக்கவில்லை''என்றார்.

அதனைத் தொடர்ந்து 'சசிகலா மீண்டும் அரசியலில் ரீஎன்ட்ரி கொடுத்திருப்பதாகக் கூறியுள்ளார். அதிமுகவை காப்பாற்றப் போகிறேன் என்று சொல்கிறாரே' என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, ''இத்தனை நாள் அதிமுகவை யார் காப்பாற்றிக் கொண்டிருந்தார். இப்பதான் காப்பாற்ற வந்திருக்கிறார்களா? இது என்ன வேலையா ரீஎன்ட்ரி கொடுக்க. ஒரு வேலைக்கு சென்று விட்டு மூன்று வருஷம் நின்று விட்டு மறுபடியும் வேலைக்கு சேர்வதா ரீஎன்ட்ரி. 2021-இல் என்ன சொன்னார்கள் நான் பொதுவாழ்க்கையில் இருந்து விலகி விட்டேன் என்று சொன்னார்கள். இப்பொழுது ரீ என்ட்ரி  என்கிறார்கள். இத்தனை நாட்கள் கட்சியைக் காப்பாற்றியது யாரு? தொண்டன்'' என்றார்.

இறுதியாக செய்தியாளர் சந்திப்பை முடித்துவிட்டு எழ முயன்றபோது எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள், 'ஓபிஎஸ்-ஐ மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வீர்களா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ''அவரை எப்படி அதிமுகவில் சேர்த்துக்கொள்ள முடியும். அவர்தான் அதிமுகவுக்கு எதிராக, இரட்டை இலைக்கு எதிராக போட்டியிட்டுள்ளார். ஒரு தொண்டன் கூட அவரை மதிக்க மாட்டான். ஒவ்வொரு தொண்டனும் ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைத்து அதிமுகவை வெற்றி பெற வைக்க வேண்டும் எனச் செயல்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் அவர் போய் பலாப்பழத்தை வைத்து பூஜை செய்கிறார். ஏற்கெனவே ஒருமுறை இதே தவறை செய்தார். அதிமுக ஆட்சியில் நான் முதலமைச்சராக இருந்தபோது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அறிவித்து வாக்கெடுப்பு நடந்த பொழுது, எதிர்த்து ஓட்டு போட்டார்.

ஓபிஎஸ் கட்சிக்கு விசுவாசமாக எப்பொழுதுமே இருந்ததில்லை. சுயநலமாகத்தான் செயல்படுவார். 1989 ஆம் ஆண்டு ஜெயலலிதா தன்னந்தனியாக சேவல் சின்னத்தில் போட்டியிட்டபோது நானும் நின்றேன். அப்பொழுது வெண்ணிற ஆடை நிர்மலா, ஜானகி அணி சார்பாக போட்டியிட்டார். அப்பொழுது அவருக்கு சீப் ஏஜென்டாக இருந்தவர் இதே ஓபிஎஸ். அப்பொழுதே ஜெயலலிதாவிற்கு எதிராக இருந்தவர் ஓபிஎஸ். எப்பொழுதும் ஜெயலலிதாவுக்கும், அதிமுகவுக்கும் விசுவாசமாக இருந்ததில்லை. சுயநலம்தான் அவரிடம் உண்டு. இப்பொழுது கூட சுயநலத்தில்தானே அங்கே போய் போட்டியிட்டார். ஜெயிச்சா மத்திய மந்திரி ஆகலாம் என்று, ஆனால் நாட்டு மக்கள் சரியான தண்டனையைக் கொடுத்துள்ளார்கள். பலாப்பழத்தை வைத்து பூஜை போடுபவரை எப்படி தொண்டன் ஏற்றுக் கொள்வான். இந்தக் கட்சிக்கு எவர் ஒருவர் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ் நிலைதான் வரும்'' என்றார்.

Next Story

'இத்தனை நாட்கள் கட்சியைக் காப்பாற்றியது யாரு?' - சசிகலாவுக்கு எடப்பாடி கேள்வி

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
 'Who has saved the party for so many days?'- Sasikala asked the question

இத்தனை நாட்கள் அதிமுகவை காப்பாற்றியது யார் என எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''இயற்கை சீற்றத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டபோது, விவசாயிகளின் பயிர்கள் பாதிக்கப்பட்ட போது காப்பீட்டு திட்டத்தின் மூலமாக இந்தியாவிலேயே அதிக காப்பீடு இழப்பீடு பெற்றுத் தந்த அரசு அதிமுக அரசு. விவசாயிகளின் நலன்கருதி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த ஏரி குளங்களை தூர்வாரச் செய்து மழைக்காலத்தில் நீர் சேகரித்து வைக்கப்பட்டது. கோடைகாலத்தில் விவசாயிகள் நிலத்திற்கு அந்த தண்ணீரை பயன்படுத்தினார்கள். குடிநீர் பஞ்சமும் இல்லாமல் இருந்தது.

அதோடு மேட்டூரில் இருந்து திறக்கப்படுகின்ற நீர் கடைக்கோடியில் இருக்கும் விவசாயிகளுக்கும் தங்குதடை இல்லாமல் செல்ல வேண்டும் என்பதற்காக அனைத்து கால்வாய்களும் தூர்வாரப்பட்டது. இப்படி பல திட்டங்களை விவசாயிகளுக்காக அதிமுக அரசு செய்தது. ஆனால் இப்பொழுது திமுக அரசு குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு இழப்பீடு தரவில்லை. 78.67 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்கள். ஆனால் அதில் 24.50 கோடி தொகை மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஒதுக்கி இருக்கிறார்கள். இது இரண்டையும் சேர்த்துதான் 78.67 கோடி ரூபாய். அதை வைத்து பார்த்தால் குறுவை தொகுப்புக்கு 54.17 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கிடைக்கும். இது போதாது. ஏனென்றால் குறுவை சாகுபடிக்கும் முழுமையாக தண்ணீர் கிடைக்கவில்லை.

இன்றைய தினம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி சம்பவ இடத்திலேயே மூன்று பேர் இறந்ததாகவும் செய்தி ஊடகத்தில் வந்திருக்கிறது. இன்னும் சில பேர் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வருகிறது. கிட்டத்தட்ட 40 பேர் கள்ளச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக தகவல் வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ந்து கள்ளச்சாராய சாவுகள் நடந்த வண்ணம் இருக்கிறது. சட்டமன்றத்திலும் பலமுறை சொல்லியிருக்கிறேன் போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்க வேண்டும்; கள்ளச்சாராயத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று, ஆனால் இன்றைய தினம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அப்பாவி மக்கள், ஏழை மக்கள் கள்ளச்சாராயம் அருந்தி விலை மதிக்க முடியாத உயிரை இழந்து இருக்கிறார்கள்'' என்றார்.

அதனைத் தொடர்ந்து 'சசிகலா மீண்டும் அரசியலில் ரீஎன்ட்ரி கொடுத்திருப்பதாகக் கூறியுள்ளார். அதிமுகவை காப்பாற்றப் போகிறேன் என்று சொல்கிறாரே' என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, ''இத்தனை நாள் அதிமுகவை யார் காப்பாற்றிக் கொண்டிருந்தார். இப்பதான் காப்பாற்ற வந்திருக்கிறார்களா? இது என்ன வேலையா  ரீஎன்ட்ரி கொடுக்க. ஒரு வேலைக்கு சென்று விட்டு மூன்று வருஷம் நின்று விட்டு மறுபடியும் வேலைக்கு சேர்வதா ரீஎன்ட்ரி. 2021-ல் என்ன சொன்னார்கள் நான் பொதுவாழ்க்கையில் இருந்து விலகி விட்டேன் என்று சொன்னார்கள். இப்பொழுது ரீ என்ட்ரி  என்கிறார்கள். இத்தனை நாட்கள் கட்சியைக் காப்பாற்றியது யாரு? தொண்டன்'' என்றார்.