Skip to main content

உள்ளடி வேலைகளால் அதிர்ந்துபோன எடப்பாடி!

Published on 16/05/2019 | Edited on 16/05/2019

4 தொகுதிகளில் அ.தி.மு.க.வின் உள்ளடி வேலைகள் எடப்பாடியை அதிர வைத்துள்ளன.  சூலூர் தொகுதிக்கான தேர்தல் பணிகளை கவனிக்க 16 மாவட்ட நிர்வாகிகளையும், அரவக்குறிச்சிக்கு 14 மாவட்ட நிர்வாகிகளையும், திருப்பரங்குன்றத்துக்கு 17 மாவட்ட நிர்வாகிகளையும், ஒட்டப்பிடாரத்துக்கு 11 மாவட்ட நிர்வாகிகளையும் தேர்தல் பொறுப்பாளர்களாக இ.பி.எஸ்.சும், ஓ.பி.எஸ்.சும் நியமித்திருந்தனர். அதன்படி அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்களின் தலைமையில் தேர்தல் பணிகள் பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

 

eps



தேர்தல் பிரச்சாரத்தில் சுழன்று வரும் எடப்பாடி, எந்த தொகுதியில் பிரச்சாரத்தை முடிக்கிறாரோ அந்த தொகுதியின் கள நிலவரத்தை ஒவ்வொரு நாள் இரவும் உளவுத்துறையினரிடம் கேட்டறிந்து கொள்கிறார். திருப்பரங்குன்றம் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு மதுரையில் தங்கிய எடப்பாடி, தொகுதி பொறுப்பாளர்களிடம் நடத்திய ஆலோசனை அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

 

ops



இதுகுறித்து விசாரித்தபோது, வேட்பாளர் தேர்வில் நடந்த மனக்கசப்பால் தொகுதியில் அக்கறை காட்டவில்லை அமைச்சர் உதயகுமாரும் ஆதரவாளர்களும். மற்ற தொகுதிகளைக் காட்டிலும் இந்த தொகுதியில் நடக்கும் உள்ளடி வேலைகள் எடப்பாடிக்கு கூடுதல் கவலையைத் தந்துள்ளது. மீதமுள்ள 2 வருசமும் ஆட்சி நீடிக்க வேண்டும்ங்கிற அக்கறை உங்களுக்கு வேண்டும். ஆனா, தி.மு.க.வோடும் தினகரனோடும் கள்ள உறவு வைத்துக்கொண்டு அ.தி.மு.க.வுக்கு எதிராக செயல்படுவது அம்மாவுக்கு செய்கிற துரோகம்' என கோபம் காட்டினார். 
 

admk



நிர்வாகிகள் சிலர், தினகரனோடு கை குலுக்குகிறோம்னு சொல்லுங்கள். ஒரு வகையில் அது நடக்கத்தான் செய்கிறது. தி.மு.க.வோடு கள்ள உறவுன்னு சொல்லாதீங்க. அப்படி எதுவும் கிடையாது'ன்னு மறுத்தனர். மேலும் சிலர், "ஓட்டுக்கு 4000-ம்னு ஃபிக்ஸ் செய்யப்பட்டது. இது முழுமையாக நம்ம கட்சிக்காரங்களுக்குப் போய்ச் சேரலை. அதிருப்தியடைந்திருக்கும் அவர்களைத்தான் தி.மு.க.வும் தினகரனும் வளைக்கின்றனர். இதைச் சரி செய்யாமல், நீங்கள் எவ்வளவு கோபப்பட்டாலும் பலனில்லை' என விளக்கமளித்தனர். இதனையடுத்து, பணப்பட்டுவாடா விசயத்தில் கடைசிக்கட்ட விநியோகத்தை செயல்படுத்துவது குறித்து சில உத்தரவுகளைப் பிறப்பித்தார் எடப்பாடி''  என விவரித்தனர் அ.தி.மு.க. பொறுப்பாளர்கள் சிலர்.

மற்ற மூன்று தொகுதிகளிலும் இதைவிட சலசலப்புகளும் சச்சரவுகளும் அதிகமாகவே இருக்கின்றன. தவறான தகவல்களையும் பரப்பி வருகிறார்கள். நம்பிக்கைக்குரிய நிர்வாகிகள் மூலம் அதனை விசாரிக்கச் சொல்லி, உண்மை நிலவரத்தை அறிந்துள்ளார் எடப்பாடி. வாக்குப்பதிவின்போது நடக்கவேண்டிய சில பணிகள் குறித்தும் காய்கள் நகர்த்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, வாக்குப் பதிவு மையத்தில் பணியாற்றும் பூத் தலைமை அதிகாரி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் அ.தி.மு.க. அனுதாபிகளாக இருக்க வேண்டும் என ஆலோசித்து, அதற்கேற்ப அ.தி.மு.க. ஆதரவு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை பட்டியலிட்டு அதனை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ளனர். இதனை செயல்படுத்துவதற்கான ரகசிய ஏற்பாடுகளும் நடந்து முடிந்திருக்கின்றன என்கிற தகவல் தேர்தல் ஆணைய வட்டாரங்களில் பரவிக்கிடக்கிறது. 

இதற்கிடையே, நான்கு தொகுதிகளிலுமுள்ள பூத்துகளில் உட்காரவைக்கப்படும் பிரதான கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் பட்டியலையும் எடுத்துள்ள அ.தி.மு.க. தலைமை, அவர்களை வளைப்பதற்கான முயற்சிகளை தொடங்கியுள்ளது. இதற்கான அசைன்மெண்டுகளை மூத்த அமைச்சர்கள் கண்காணித்து வருகின்றனர். "அ.தி.மு.க. ஆதரவு அரசு அதிகாரிகள் மற்றும் பூத் ஏஜெண்ட்டுகளின் ஒத்துழைப்புடன், ஒவ்வொரு பூத்திலும் பதிவாகாத வாக்குகளில் கணிசமான வாக்குகளை கடைசி நேரத்தில் பதிவு செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்' என்கின்றனர் அரசு ஊழியர்கள்.  எதைச் செய்தாவது இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வெற்றியை தடுத்து, தனது ஆட்சியை தக்கவைப்பதே எடப்பாடியின் ஒன்-லைன் அஜென்டாவாக இருக்கிறது!