கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் உச்சகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு அமலில் இருந்தும் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகின்றது. இதனை குறைக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை தமிழகத்தில் 67 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இந்நிலையில் இதுதொடர்பாக டான் அசோக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், " இந்த 21 நாள் ஊரடங்கு என்பது அனைவருக்கும் சிரமமானது என்றாலும் அதனை கடைபிடிக்க வேண்டிய சூழ்நிலையில் நாம் அனைவரும் இருக்கின்றோம். ஏனென்றால் அந்த வைரஸின் தாக்கம் அப்படி இருக்கின்றது. மற்ற நோய்களை விட அதன் பரவும் வீச்சு அதிகமாக இருக்கின்றது. அதனால் தான் தனித்து இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். வீட்டில் வயதானவர்கள் இருந்தால் அவர்களுக்கும் எடுத்து சொல்லுங்கள். உங்களுக்கு வந்தால் அது மற்றவர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது என்று. அனைவரும் கைகளை சுத்தமாக கழுவுவதை ஒரு பழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். உணவு பொருட்கள் வாங்குவதை தாண்டி தேவையில்லாமல் அலைய தேவையில்லை. நமது நாக்கு சுவையை கேட்கும். பசிக்காக சாப்பிடுங்கள், ருசிக்காக சாப்பிடுவதை சிறிது காலம் தவிர்த்து விடுங்கள். இது நம்முடைய சுய கட்டுப்பாட்டுக்கு வைத்துக்கொண்ட சோதனை தான். எனவே அதில் இருந்து வெல்வோம்" என்று கூறியுள்ளார்.