Skip to main content

மலையாளம் பேசுவீங்களா? பழங்குடி மக்களை அதிரவைக்கும் அதிகாரிகள்! -வாழ்வுரிமை போராட்டம்!

ங்க முப்பாட்டன் காலத்தில் இருந்து மலையில் வசிக்கற நாங்க பழங்குடி இல்லைன்னு சொல்லி திடீர்னு சாதி சர்டிபிகெட் தரமாட்டோம்னு அதிகாரிங்க நிறுத்திட்டாங்க. கடந்த 2 வருடமாக சாதி சான்றிதழ் இல்லாததால், எங்க பிள்ளைங்கள ஸ்கூல், காலேஜ் சேர்க்க முடியல, வேலைக்கு போக முடியல. எங்கள் பிரச்சனை தீரும்வரை அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் செய்ய முடிவு செய்திருக்கோம்'' என அறிவித்துள்ளார்கள் மலைவாழ் மக்கள்.

ssc

ஜவ்வாது மலையின் தென்மேற்கு பகுதியில் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்டது புதூர்நாடு, நெல்லிவாசல் நாடு, புங்கம்பட்டு நாடு. இந்த மூன்று நாடுகளுக்கு உட்பட்டு 32 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் மலையாளி என்கிற சாதியை சேர்ந்த தமிழகப் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இந்த 32 கிராம மலைமக்களும், ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 14 கிராமங்களை சேர்ந்த பழங்குடியின மக்கள் அரசுக்கு எதிராக போராட துவங்கியுள்ளனர்.

போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நம்மிடம், ""இந்த மலையில் பழங்குடியினரான நாங்கள் மட்டுமே வசிக்கிறோம். நாங்கள் மலையாளி என்கிற சாதியை சேர்ந்தவர்கள். அதாவது, மலைப் பகுதியைச் சார்ந்து வாழும் ஆட்கள் என்ற அடிப்படையில் இந்த பெயர் அமைந்துள்ளது. இந்த சாதி திருப்பத்தூர் மாவட்ட ஜவ்வாதுமலையில் மட்டுமல்லாமல் வேலூர், திரு வண்ணாமலை மாவட்ட ஜவ்வாதுமலை, ஏற்காடு, கல்வராயன்மலை, கொல்லிமலையிலும் வசிக்கின்றனர், நாங்கள் எல்லாம் உறவுக்காரர்கள். நாங்கள் பல ஆண்டுகாலமாக மலையாளி என சாதி சான்றிதழ் வாங்கி எங்கள் பிள்ளைகளை படிக்க வைத்தோம், எங்கள் சாதியை சேர்ந்த பலர் அரசு வேலைக்கும் சென்றுள்ளனர்.
 

scaa

இந்நிலையில் எங்களுக்கு கடந்த 2 வருடமாக எஸ்.டி சான்றிதழ் அதிகாரிகள் தருவதில்லை. ஏன் என நாங்கள் கேட்டதற்கு, நீங்கள் கவுண்டர் சாதி எனச் சொல்லி, பழங்குடி சான்றிதழ் தர மறுக்கிறார்கள். எங்கள் கிராமங்களில் மக்கள் சேவைக்காக ஒருவரை தலைவராக தேர்வு செய்வோம், அவர் கிராமத்தின் நல்லது, கெட்டதுகளை முன்னின்று நடத்துவார். அவர் பேச்சுக்கு அனைவரும் கட்டுப்படுவோம், அவரை கவுண்டர் என அழைப்போம். பொதுவாக இதுபோல பழங்குடி மக்களின் தலைவர்களை மூப்பர், கவுண்டர் என்று கூப்பிடுவது தமிழக வழக்கம். அதேபோல் 5 கிராமங்களுக்கு ஒருவரை நியமனம் செய்வோம், அவரை நாட்டாமை என அழைப்போம். இந்த நாட்டாமை என்பவர் மலையை பற்றி, பிற கிராம மக்களைப்பற்றி, ஊர் கவுண்டர்களைப்பற்றி நன்கு அறிந்தவராக இருப்பார், கிராமங்களுக்கு இடையிலான பிரச்சனைகளை அவர் scaaதீர்த்துவைப்பார். ஊர் கவுண்டருக்கு தரப்படும் மரியாதையை பார்த்து காலப்போக்கில் தங்களை பலரும் கவுண்டர் என அழைத்துக்கொண்டனர், அதுவே மலையாளி சாதியினருக்கு பட்டமாகிவிட்டது.

கடந்த காலங்களில் மலையில் வசிக்கும் மக்கள் தங்களது நிலத்தையோ, வீட்டையோ விற்பனை செய்யும்போதோ, வாங்கும்போதோ பெருமைக்காக பெயருக்கு பின்னால் கவுண்டர் என சிலர் போட்டுக் கொண்டார்கள். அதனை கணக்கில்கொண்டு ஆவணத்தில் கவுண்டர் என உள்ளது. "நீங்கள் பி.சி பட்டியலில் வருகிறீர்கள் உங்களுக்கு எஸ்.டி சான்றிதழ் தரமுடியாது, இதுவரை நீங்க அதிகாரிகளை ஏமாத்தி சர்டிபிகேட் வாங்கியிருக்கீங்க'ன்னு அதிகாரிகள் சொல்றாங்க. திருப்பத்தூரில் ஒரு அதிகாரி "மலையாளின்னு சொல்றீங்களே, உங்களுக்கு மலையாளம் பேசத் தெரியுமா'ன்னு கேட்குறாரு. ‘மலையாளிங்கறது ஒரு சாதின்னு அவருக்கு சொன்னா, அவர் புரிஞ்சிக்கவே யில்லை. இப்படிப்பட்ட அதிகாரிகள்தான் எங்களை நீங்க பழங்குடி சாதியில்லைன்னு சொல்றாங்க'' என்றார் வேதனையுடன்.

போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சாந்தசிவம் நம்மிடம், ""ஏலகிரியை சேர்ந்த கார்த்திகேயன் என்கிற இளைஞருக்கு வங்கியில் உதவி மேலாளர் வேலை கிடைத்துள்ளது, அதேபோல் இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன் நிறுவனத்தில் மகேஸ்வரி என்கிற பெண்ணுக்கு வேலை கிடைத்துள்ளது, இளமதி என்கிற பெண்ணுக்கும் மத்திய அரசு வேலை கிடைத்துள்ளது. இவர்கள் கல்லூரியில் படிக்கும்போதே எஸ்.டி என சாதி சான்றிதழ் வாங்கி வைத்துள்ளார்கள். இந்த 3 பேரும் அந்த அலுவலகம் தந்த ஒரு படிவத்தில் இவர்கள் எஸ்.டி தான் என தாசில்தார் கையெழுத்திட்டு தரவேண்டும், அதையும் தர மறுக்கிறார்கள். ஏற்கனவே சாதி சான்றிதழ் தந்ததையும் ஆய்வு செய்யப் போகிறோம் எனச் சொல் கிறார்கள். அந்த ஆய் வையும் செய்ய மறுக் கிறார்கள்'' என்றார். அரசு அதிகாரியாக உள்ள மலை வாசி ஒருவர் நம்மிடம், ""1895 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் வெளியிட்ட அரசு ஆவணத் தில் இந்த ஜவ்வாதுமலையில் வசிப்பவர்கள் மலையாளி என்கிற பழங்குடியின சாதி யினர் என பதிவு உள்ளது. சுதந்திர'த்துக்கு பிறகு 1976ல் தமிழக அரசு வெளியிட்டுள்ள கெஜட்டில் புதூர்நாடு, புங்கம் பட்டு, நெல்லிவாசல் நாடு களுக்கு உட்பட்ட கிராமங்கள் பழங்குடியின மக்கள் மட்டுமே வசிக்கும் கிராமங்கள் என பட்டியலிட்டுள்ளது. 2016லும் பழங்குடியின மேம்பாட்டு நல அமைச்சகமும் வெளியிட்ட பட்டியலில் பழங்குடியின மக்கள் மலையாளி சாதியை சேர்ந்தவர்கள் வசிக்கும் கிராமங்கள் இவையிவை என பட்டியலிட்டுள்ளன. இந்த கிராமங்களில் வேறு சாதியை சேர்ந்தவர்கள் இடமோ, நிலமோ வாங்க முடியாது. இதனால் முழுக்க முழுக்க மலையாளி என்கிற பழங்குடியின மக்கள் மட்டுமே வசிக்கிறார்கள் என அரசு ஆவணங்கள் கூறுகிறது. அது பற்றி தெரிந்தும் என்ன காரணம் என தெரியவில்லை, அதிகாரிகள் சாதி சான்று தர மறுக்கிறார்கள்'' என்றார்.

மலை மக்களின் அறிவிப்புக்குப் பிறகு திருப்பத்தூர் கோட்டாச்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இது குறித்து இந்து மலையாளி எஸ்.டி. பேரவையின் மாநில ஆலோசகர் மோகன் கூறும்போது, ""சாதி சான்றிதழ் தருவதாக எந்த உத்தரவாதமும் தரவில்லை, எங்கள் கோரிக்கையை புறக்கணிப்பது போலவே பேசினார். இதனால் அரசு ஆவணங்களை scaaதிருப்பி தருதல், சாலைமறியல், வீடுகளில் கறுப்புக்கொடி காட்டுதல், பள்ளி பிள்ளைகளை ஆடு, மாடு மேய்க்க அனுப்புதல், தேர்தல் புறக்கணிப்பு என்கிற வழிகளில் எங்கள் போராட்டம் தொடரும்'' என்றார்.

வருவாய்த்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ""மலையாளிகள் பழங்குடியின மக்கள்தான். அதேநேரத்தில் மற்றொரு சாதியினர், "நாங்களும் பழங்குடியினர்தான்' என எஸ்.டி சான்றிதழ் வாங்கி வந்தனர். அவர்கள் எஸ்.டி. இல்லை என பழங்குடி மலையாளி அமைப்பு ஒன்று எதிர்ப்பு தெரிவித்து மனு தந்தார்கள். பதிலுக்கு அந்த சாதியினர், இவர்கள் மலையாளிகள் இல்லை, கவுண்டர்கள் எனச் சொல்லி சில ஆவணங்களைக் காட்டி நீதிமன்றத்துக்கு சென்றனர். இதனால் இரண்டு சாதிக்கும் சான்றிதழ் தராமல் நிறுத்திவைக்கச் சொல்லி அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவால் வழங்குவதில்லை. "அந்த சாதிக்கும் எஸ்.டி. சான்றிதழ் தர்றோம், நீங்க அதை தடுக்கக்கூடாது. அப்படிச் செய்தால் உங்களுக்கு வழக்கம்போல் எஸ்.டி. சான்றிதழ் தர்றோம்' என டீல் பேசப்படுகிறது, இதனை ஒப்புக்கொள்ள மலையாளிகள் மறுக்கின்றனர்'' என்றார்.

இதுபற்றி கருத்தறிய திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன்அருள் செல்போன் எண்ணை தொடர்புகொண்டபோது... அது, "தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார்" என்றே கூறுகிறது.

அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்களின் வாரிசுகளின் கல்வி, வேலை, வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.
 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்