Skip to main content

முதல்வர் பார்வை எங்கள் பக்கம் திரும்புமா? - ஏக்கத்தில் தி.மு.க தொண்டர்கள்!

Published on 28/08/2021 | Edited on 28/08/2021

 

dmk workers longing to convey their issues to party leaders stalin

 

100 நாட்களைக் கடந்துள்ள தி.மு.க ஆட்சி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தபடியே இருக்கிறது. நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகள் ஒருபக்கம், நிறைவேற்றிய வாக்குறுதிகளால் மக்களிடம் கிடைத்துள்ள வரவேற்பு மறுபக்கம், கட்சி எல்லைகளைக் கடந்து பொதுமக்களிடம் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. மக்களிடம் பாஸ் மார்க் வாங்கியிருக்கும் தி.மு.க. ஆட்சியை சொந்தக் கட்சிக்காரர்கள் எப்படி பார்க்கிறார்கள்?

 

“10 வருஷம் ஆட்சியில் இல்லை, எதிர்க்கட்சியாக பல போராட்டங்கள் நடத்தியது தலைமை. 2014 நாடாளுமன்றம், 2016 சட்டமன்றம், 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் செலவுகள் செய்தோம், கட்சி கரைந்து போகாமல் தொண்டர்களை ஊக்கப்படுத்திக்கொண்டேயிருந்தோம். தேர்தல் களத்தில் கடுமையா உழைச்சோம். செலவு செய்தோம். வெற்றி பெற்ற பிறகு, வெற்றிவிழாவோ நன்றி அறிவிப்பு கூட்டமோ நடத்த முடியலை. தலைவரை சந்திக்கும் வாய்ப்பும் அமையலை. தலைமைக்கும் தொண்டர்களுக்கும் இடைவெளி விழுந்திருக்கு'' என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

 

"புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு மா.செ.வாக இருப்பவர் அமைச்சர் ரகுபதி, வடக்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் கே.கே. செல்லப்பாண்டியன். ஆலங்குடி எம்.எல்.ஏ.வான அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை எம்.எல்.ஏ முத்து ராஜா இப்படி நான்கு அணிகள் செயல்படுது. புதுக்கோட்டை நகரத்தில் எந்த பணியாக இருந்தாலும் என்னைக் கேட்காம அதிகாரிகள் செய்யக்கூடாது என உத்தரவு போட்டுள்ளார் எம்.எல்.ஏ. இரண்டு வாரத்துக்கு முன்பு நகர நிர்வாகி வீரமணி, டெண்டர் படிவம் கேட்டப்ப, எம்.எல்.ஏ. சொன்னால்தான் தருவோம்ன்னு சொல்ல, அவர் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். அதிகாரிகள் தரப்பிலும் அமைச்சர்களைவிட எம்.எல்.ஏ. தரப்புதான் செல்வாக்கு காட்டுது.

 

வடக்கு மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை தனித் தொகுதி வருது. அங்கு சி.பி.எம். எம்.எல்.ஏ. ஆனால், அந்த தொகுதியில் எந்த அரசு நிகழ்ச்சி நடந்தாலும் மா.செ.வான என்னை அழைக்கணும் அப்படின்னு உத்தரவு போடறார் செல்லப்பாண்டியன். அவரோட மாவட்டத்துக்குள்ளதான் விராலிமலை தொகுதி வருது. அங்க என்னைக் கூப்பிடணும் அப்படின்னு எந்த உத்தரவும் போடல. காரணம், அங்க எம்.எல்.ஏ.வா இருக்கறது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். இப்பவும் அவருக்குப் பயந்துக்கிட்டு இருக்காங்க. கட்சிக்காரங்க எந்தப் பிரச்சனையையும் இந்த 4 பேரில் யாருகிட்ட கொண்டு போனாலும் மற்றவர்கள் எங்களை விரோதியா பார்க்கறாங்க. இதுபற்றி கட்சித் தலைமையின் கவனத்துக்கு கொண்டு போக நினைக்கிறோம். வாய்ப்பே அமையலை” என்கிறார்கள் புதுக்கோட்டை நிர்வாகிகள்.

 

தி.மு.க. வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த நிர்வாகியும், மூத்த வழக்கறிஞருமானவர் நம்மிடம், "வழக்கறிஞர்களின் சீனியாரிட்டி, உழைப்பு போன்றவற்றைக் கவனத்தில் கொள்ளாமல், மாவட்ட அரசு வழக்கறிஞருக்கு (பி.பி) சிபாரிசு செய்ய 10 லட்சம், கவர்மென்ட் ப்ளீடருக்கு (ஜி.பி) 5 லட்சம், அடிஷனல் பி.பி, ஜீ.பிக்கு 5 முதல் 3 லட்சம்வரை கேட்கிறார்கள். தென் மாவட்டங்களில் பி.பிக்கு 25 லட்சம், ஜீ.பிக்கு 15 லட்சம் வரை கேட்கறாங்க, அமைச்சர்கள் - மா.செ.க்கள்னு டீல் பேசுறாங்க. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மீது போடப்பட்ட பல வழக்குகளில் ஆஜராகி வாதாடியது, தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்தவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளில் ஆஜரானது, தேர்தல் வழக்குகளில் ஆஜரானது, இதெற்கெல்லாம் கட்சி வக்கீல்கள் ஃபீஸ்கூட வாங்கவில்லை. அப்படி உழைத்தவர்களுக்குப் பதவி கொடுங்கன்னு கேட்டால், டீல் பேசுனா எப்படி? இதை, புகார்களைக் கவனிக்கும் கட்சியின் முதன்மைச் செயலாளர் அமைச்சர் நேரு, அமைப்புச் செயலாளர் பாரதி ஆகியோர் பிஸியா இருக்காங்க. கழக சட்டத்துறையிலும் சொல்ல முடியல. தலைவர் கவனத்துக்கு இதை யாராவது கொண்டு போய் முற்றுப்புள்ளி வைக்கணும்'' என்றார்.

 

நம்மிடம் பேசிய திமுகவின் முக்கிய நிர்வாகியொருவர், "எங்க மாவட்டத்தில் ஒரு காண்ட்ராக்ட்டுக்கான டெண்டர் படிவம் வாங்கப் போனேன். தகவல் தெரிந்து சம்பந்தபட்ட துறையோட அமைச்சரின் பி.ஏ. என்னோட லைன்ல வந்து 10% பேசினார். சின்ன வேலைதானே என்றால், எல்லாத்துக்கும் ஃபிக்சட் ரேட் என்கிறார். கட்சியைப் பலமா வளர்த்து வச்சிருக்கிற சீனியர் ஒன்றிய நிர்வாகியான எங்கிட்ட இப்படி சொல்றீங்களேன்னு கேட்டதுக்கு, எதுக்கு டெண்டர் எடுக்கறிங்க, கட்சி வேலையை மட்டும் பார்க்க வேண்டியதுதானேன்னு கேட்டார். வந்த கோபத்தை அடக்கிக்கிட்டேன். அந்த டெண்டரில் வேற சிலரையும் கலந்துக்குங்கன்னு அமைச்சர் தரப்பே சொல்லியிருக்கு. அவுங்கள பின்வாங்க வைக்க 3 லட்ச ரூபாய் செலவாச்சி. இது என்ன நியாயம்?

 

dmk workers longing to convey their issues to party leaders stalin

 

அதிமுக ஆட்சியில யாருக்கு டெண்டர்ங்கறதை அமைச்சர் முடிவுசெய்து, அதிகாரிகளுக்குத் தகவல் சொல்லிடுவார். அதுக்கப்பறம் எத்தனை பேர் கேட்டாலும் சம்பந்தபட்டவங்களுக்கே தரப்படும். அமைச்சர், அதிகாரிகளுக்கான கமிஷனோட முடிஞ்சிடும். இப்போ கட்சிக்காரன் டெண்டர் போட்டான்னா அவனுக்கு எதிரான ஒப்பந்தக்காரங்களைத் தூண்டிவிடறாங்க. கட்சிக்காரனைவிட காண்ட்ராக்டர்களுக்குத்தான் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் எல்லாரும் முக்கியத்துவம் தர்றாங்க. 10 வருஷம் கஷ்டப்பட்டு, போராட்டம் நடத்தி, சிறை சென்று, தேர்தல் வேலை பார்த்து, பூத்துல உட்கார்ந்து சண்டை போட்டு, அடிவாங்குன, வழக்குகள் வாங்கி கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலையற என்னையப் போய் ஒ.செ, ந.செ, கி.செ.க்கள் வேண்டாம்னு புறக்கணிக்கறது எந்தவிதத்திலங்க நியாயம்?

 

அமைச்சர்களைத் தேடி அலுவலகத்துக்கோ, வீட்டுக்கோ போனால், இப்ப அவங்களைச் சுற்றி இருப்பவங்க துரத்துறாங்க. ஒன்றிய - நகர நிர்வாகிகளுக்கே இந்த நிலைமைன்னா, சாதாரண தொண்டர்களோட நிலைமை என்னன்னு யோசிச்சிக்குங்க. இதையெல்லாம் வெளிப்படையா சொல்ல முடியலை'' என்றவரிடம், கட்சித் தலைவரிடம் முறையிட முடியவில்லையா என்றோம்.

 

"முதல்வர் முழு நேரமும் மக்களுக்காக உழைக்கிறார். கட்சிக்காரங்களை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்க முடியாமல் இருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கொஞ்சம் முயற்சி செய்தால் சந்திக்க முடிஞ்சது, நாலு வார்த்தையாவது பேச முடிஞ்சது. அறிவாலயத்துக்குப் புகார் மனு அனுப்பினால், யார் மீது புகார் அனுப்புறோமோ, அவுங்களே அந்தக் கடிதத்தைக் கொண்டு வந்து நம்ம மூஞ்சி மேல வீசியதைக் கடந்த காலத்தில் அனுபவிச்சிட்டேன். இப்ப என்ன நிலைமைன்னு தெரியாததால புகார் மனு அனுப்பவில்லை'' என்றார் வருத்தமாக.

 

"கட்சிப் பேச்சாளர்களுக்கு கரோனா முதல் அலையிலிருந்தே பெரும் பாதிப்பு வந்துவிட்டது. பொதுக் கூட்டங்கள் இல்லை. தேர்தல் நேரத்திலும் முன்புபோல கூட்டங்கள் நடக்கவில்லை. இப்போது ஜூம் மீட்டிங்குகளுக்கு கூட வழியில்லை. பட்ஜெட் விளக்கப் பொதுக் கூட்டங்களை ஆன்லைனில் நடத்தினாலாவது தங்களுக்கு உதவியாக இருக்கும். தலைமைதான் ஆலோசிக்கணும்'' என்கிறார்கள்.

 

"கலைஞர் முதல்வராக இருந்தபோது அறிவாலயத்தில் கட்சிக்காரர்களை சந்திப்பார். கட்சி வில்லங்கங்கள் அவரது கவனத்துக்குப் போகும். பேராசிரியர், ஆற்காடு வீராசாமி போன்ற சீனியர்களும் பிரச்சனைகளைக் கவனிப்பாங்க. அப்ப தளபதி மூலமாகவும் கலைஞரிடம் பிரச்சனைகளைக் கொண்டு போகலாம். இப்போது, முதல்வர் ஸ்டாலினுக்கு அதுபோன்ற சீனியர்கள் இல்லை. அவரே ஆட்சியையும் கட்சியையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. கட்சி நிலவரத்தை விரிவா சொல்ல முடியவில்லை. அமைச்சர்களிடமும் அதிகாரிகள் வட்டம்தான் சுற்றி வருது. கட்சிக்காரங்க நெருங்க முடியலை. அதிகாரிகளோ அ.தி.மு.க ஆளுங்களாகவே செயல்படுறாங்க. அதிகாரிகள் வட்டத்தைத் தாண்டி அவுங்க சாதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் வட்டம், குடும்ப வட்டம் சுத்துது. இதெல்லாம் ஆட்சி வந்த பிறகு உருவாகியிருக்கிற வட்டம். அவர்களுக்கு கட்சிக்காரர்களின் அருமை தெரியலை. ஏதோ அவங்க வீட்டு வேலைக்காரங்க மாதிரி நினைக்கிறாங்க. என்னங்க பண்ணுறது'' என்றார்கள்.

 

வேட்டி என்பது கட்சி. பதவி என்பது தோளில் போடும் துண்டு. துண்டைவிட வேட்டி முக்கியம். வேட்டியில் உள்ள ஒவ்வொரு இழையும்தான் தொண்டர்கள். மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் முதல்வரான மு.க. ஸ்டாலின், கட்சித் தலைவராக நிர்வாகிகள் - தொண்டர்களின் ஏக்கத்தைப் போக்கும் நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் முதல்வரின் சுமையைப் பகிர்ந்துகொண்டு வெற்றிக்கு உதவியதுடன், தன்னுடைய சேப்பாக்கம் தொகுதியில் மக்கள் குறைகளை நிவர்த்தி செய்யவும், கட்சி நிர்வாகிகள் - தொண்டர்களின் பிரச்சினையை உணர்ந்து செயல்படும் இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில் ஒரு டீம் அமைத்தாவது கட்சித் தொண்டர்களின் கோரிக்கையை கேட்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் உள்ளது.

 

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்பதுபோல ‘உடன்பிறப்புகளுடன் தலைவர்’ என்ற வகையில் சந்திப்பு அமைந்தால் தலைமைக்கும் தொண்டர்களுக்குமான இடைவெளி குறையும்.

 

- தமிழ், செம்பருத்தி

 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

“இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
India alliance will take action to increase reservation CM MK Stalin

டெல்லியில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வரும் சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அதில், “இந்தியாவிற்குள் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, இட ஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி உள்ளிட்டோருக்கு 69% இடஒதுக்கீடு வழங்கி, தன்னிச்சையான 50% இடஒதுக்கீடு வரம்பை விட கூடுதலாக இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிதியுதவியுடன், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவருக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் பல கொள்கைகள் எதிரொலிப்பது என் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஓபிசி மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டியினரை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை நமது வரவிருக்கும் அரசாங்கம் ஆர்வத்துடன் நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பது என்பது நீதிக்கட்சி காலத்திலிருந்தே இருக்கும் தமிழ்நாட்டின் மரபு ஆகும். சம்ருத்த பாரத் அறக்கட்டளையின் மாநாட்டில் சமூக நீதி பற்றிய எனது செய்தியை எங்கள் கட்சியின் எம்.பி.யான வில்சன் மூலம் பகிர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் உள்ளடக்கிய இந்தியாவை நோக்கி நமது பயணத்தைத் தொடர்வோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.