Skip to main content

ஜெயிக்க வச்சா இன்னும் எத்தனை பொண்ணுங்க குடிய கெடுக்கப் போறானுகளோ - பொள்ளாச்சி அரசியல் 

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

கொங்கு பெல்ட்டின் இப்போதைய அ.தி.மு.க. எம்.பி.க்களில் பலர், இந்தத் தேர்தலில் போட்டியிடத் தயங்கிய நிலையில், பொள்ளாச்சி எம்.பி. மகேந்திரன் மட்டும் தில்லாக களத்தில் குதித்திருக்கிறார். ஆனாலும் அவரை திகிலடிக்க வைத்துக்கொண்டிருக்கிறார் துணை சபா பொள்ளாச்சி ஜெயராமன். கடந்த ஐந்து வருடங்களில் தொகுதிக்கு எதுவுமே செய்யாமல் எப்படி ஓட்டுக் கேட்டுப் போவது என்ற தயக்கம் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு இருப்பதை பல இடங்களில் காணமுடிந்தது. இதேபோல் இஸ்லாமிய, கிறிஸ்தவ சமூக ஏரியாக்களில் ஓட்டுக் கேட்டுப் போவதும், அ.தி.மு.க.வினருக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. 

 

dmk candidates



இதையெல்லாம் சமாளித்துப் போய்க் கொண்டிருந்தாலும் மகேந்திரனின் பிரச்சார வேனில் பொள்ளாச்சி ஜெயராமன் ஏறி நின்று பயமுறுத்துகிறார். பாலியல் கொடூரத்தால் பொள்ளாச்சியே எரிமலையாய் இருக்கும் போது,  கட்சியின் சீனியரான இவரை, பிரச்சார வேனிலிருந்து எப்படி இறங்கச் சொல்வது என தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார் மகேந்திரன். ஆனால் பொள்ளாச்சி ஜெயராமனோ, பிரச்சார வேனுக்கு முன்னும் பின்னும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பவனி வந்து கொண்டிருக்கிறார். 

 

admk



இந்த பாதுகாப்புடன் கிணத்துக்கடவு தொகுதியில் ஓட்டுக் கேட்டுப் போன போது ஏக களேபரமாகிவிட்டது. கிணத்துக்கடவு ஒன்றியத்தில் இருக்கும் குளத்துப்பாளையத்தில் பொள்ளாச்சி ஜெயராமனும் மகேந்திரனும் ஓட்டுக் கேட்டுக் கொண்டிருந்தபோது, நடராஜ் என்கிற ரத்தத்தின் ரத்தம், "காலம் காலமாக நாங்க ரெட்டை இலைக்குத்தான் ஓட்டுப் போட்டுக்கிட்டிருக்கோம். அப்படியெல்லாம் நாங்க ஓட்டுப் போட்டு உங்களை ஜெயிக்க வச்சதுக்குப் பரிசுதான் உன்னோட ரெண்டு பசங்களும் பல சின்னப் பொண்ணுங்களை நாசம் பண்ணிருக்கானுங்க. இப்பவும் ஜெயிக்க வச்சா இன்னும் எத்தனை  பொண்ணுங்க குடிய கெடுக்கப் போறானுகளோ''’என சகட்டுமேனிக்கு ஒருமையில் விளாசியதும் வேனிலிருந்து இறங்கி, காருக்குள் போய் உட்கார்ந்துகொண்டார் பொள்ளாச்சி ஜெயராமன்.   

 

ammk



அப்போதும் விடாத நடராஜ், கார் கண்ணாடியைத் தட்டியபடி சவுண்ட் விட... காரைக் கிளப்பிக் கொண்டு, ஜெயராமன் பறக்க, பிரச்சார வேனைக் கிளப்பிக்கொண்டு பறந்துவிட்டார் மகேந்திரன். சொந்தக் கட்சிக்காரர்களின் கோபத்தால் ரொம்பவே தத்தளித்துக் கொண்டிருக்கிறார் மகேந்திரன். இது போதாதென்று, முதல்வர் எடப்பாடி பிரச்சாரத்திற்கு வருவதற்கு முன்னால், "பச்சைக்கிளி முத்துச்சரம்' என்ற எம்.ஜி.ஆர்.பாடலுக்கு படுகவர்ச்சியாக டான்ஸ் ஆடி மக்களை முகம் சுழிக்க வைத்தது கலைநிகழ்ச்சி குரூப். 

இப்படி பல வழிகளில் அ.தி.மு.க. தத்தளிப்பது, தி.மு.க. வேட்பாளர் சண்முகசுந்தரத்திற்கு சாதகமாகத்தான் இருக்கிறது. ஆனால் இங்கும் சொந்தக் கட்சி நிர்வாகிகளின் சொதப்பலால், பல இடங்களில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது தி.மு.க. "ஆனைமலை மற்றும்  பொள்ளாச்சி வடக்கு ஒன்றியங்கள்தான் தி.மு.க. வீக்காக இருக்கும் ஏரியா. ஆனைமலை ஒ.செ. தேவ சேனாதிபதியும் பொள்ளாச்சி வடக்கு ஒ.செ. மருதவேலுவும் களப்பணிகளில் மந்தகதியாக இருப்பதுடன், அ.தி.மு.க.வினரின் பணப்பட்டுவாடாவையும் கண்டுகொள்வதேயில்லையாம். இதே ஸ்டைலில்தான் வால்பாறை ந.செ. கோழிக்கடை கணேசனும் இருக்கிறார். இதையெல்லாம் தலைமை சரிபண்ணலைன்னா சிக்கல்தான்' என்கிறார்கள் உ.பி.க்கள். 

இரு கட்சிகளின் தத்தளிப்பு, தள்ளாட்டத்திற்கிடையிலும் மக்கள் நீதி மய்யம் மூகாம்பிகாவும் நாம் தமிழர் சனுஜாவும் தீவிரமாக வாக்கு கேட்டுவருகிறார்கள். 

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.